இரா.முருகன், அசல் மாய யதார்த்தவாதம்

அன்புள்ள ஜெ

நலம்தானே?

இரா. முருகனுக்கு விஷ்ணுபுரம் விருது பற்றிய செய்தி அறிந்தேன். இரா முருகன் எனக்கு மிக முக்கியமான ஒருவர். ஏன் என்று சொல்கிறேன்.

நான் ஆங்கிலம் வழியாக 1998லேயே கப்ரியேல் கர்ஸியா மார்க்யூஸ் போன்றவர்களை வாசித்துவிட்டிருந்தேன். தமிழில் அப்படி எவராவது எழுதியிருக்கிறார்களா என்று பார்த்தேன். தமிழில் அதைப்பற்றியெல்லாம் பேசியிருந்த ஒருவரின் இரண்டு நாவல்களை வாசித்தேன். மணலைத் தின்றதுபோல் இருந்தது. அதன்பிறகுதான் நான் தமிழிலே மட்டுமே உள்ள ஒரு பழக்கத்தை கண்டுபிடித்தேன். ஆங்கில ஆசிரியராக எனக்கு இலக்கியவிமர்சனம் கொஞ்சம் தெரியும். இதைப்போன்ற ஒரு விஷயம் உலகத்தில் வேறெங்கும் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லமுடியும்.

அது இதுதான். கல்வித்துறைசார்ந்தோ அல்லது சுயமுயற்சியாலோ கொஞ்சம் இலக்கியக்கொள்கைகளை கொஞ்சம் அறிந்தவர்கள் அவர்களே எதையாவது புனைவு என்று எழுதுகிறார்கள். அவர்களுக்கு க்ரியேட்டிவிட்டி என்பதே கிடையாது. அனுபவங்களே கிடையாது. ஆனால் தமிழில் வாசகர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்பதனால் துணிச்சலாக எழுதி வெளியிடுகிறார்கள். ஆங்கிலத்தில் என்றால் பதிப்பகங்களின் எடிட்டர்களே இவற்றை தள்ளிவிடுவார்கள். சொந்தமாகத்தான் பதிப்பிக்கவேண்டும். இங்கே அந்த வேறுபாடே இல்லை. ஆகவே இவற்றை எழுதிவிடுகிறர்கள். அதன்பிறகு தங்கள் எழுத்தை பிரமோட் செய்ய இலக்கியப்போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். க்ரியேட்டிவான எழுத்தை மட்டம் தட்டுகிறார்கள். அது புதியதாக இல்லை, தாங்கள் எழுதுவதே புதிய எழுத்து என்று சொல்கிறார்கள். இவர்களின் ஒட்டுமொத்த போராட்டமே இலக்கியத்திற்கு எதிரானதாக ஆகிவிடுகிறது. இந்த சூடோஅகடமிக்குகளின் அழிவு தமிழிலே மிக அதிகம்.

நான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நீங்கள் எழுதியதனால் மிளகு வாசித்தேன். தமிழிலே எழுதப்பட்ட அசலான மேஜிக்கல் ரியலிஸ நாவல்களில் ஒன்று அது. அதன்பிறகுதான் அரசூர் வம்சம் வரிசை நாவல்களை வாசித்தேன். அவற்றிலுள்ள வரலாற்றுதிரிப்பும் பகடியும்தான் அவை சிறந்த மேஜிக்கல் ரியலிஸ நாவல்கள் ஆக மாற்றுகின்றன. வரலாற்றில் எங்கெல்லாம் உள்நுழைய முடியுமோ அங்கெல்லாம் அந்த நையாண்டி உள்ளே நுழைந்திருக்கிறது. பல இடங்களில் புன்னகையுடன் புத்தகத்தை மூடிவைக்கவேண்டியிருந்தது.

ஆனால் இங்கே இரா.முருகனைப் பற்றி எவருமே பேசியதில்லை. மொத்தமாகப் புறக்கணிக்கிறார்கள். அவருக்கு முக்கியத்துவமும் வாசகர்களும் அமைந்திருந்தால் வசைபாடி அவரை அழிக்க முயன்றிருப்பார்கள். நான் தமிழ்ச்சூழலைப் பற்றி பெரிய அதிருப்தியை அடைந்தது இரா முருகனின் எழுத்துக்களை தமிழ்வாசகர்கள் எதிர்கொண்டவிதம் பற்றித்தான்.

 

கி.நாகராஜன்

அன்புள்ள ஜெயமோகன்

 

வணக்கம்.

2024 விஷ்ணுபுரம் விருதுக்கு இரா.முருகனை தேர்வு  செய்தமைக்கு மிக்க நன்றி.

தங்கள் எழுத்துக்களை போலவே இரா.முருகனின் எழுத்துக்ளும் என்னை மிக கவர்ந்தவை. அவருடைய நாவல்கள் சிலவற்றை  படிக்கும் போது அவரை சுஜாதாவுக்கும் தாங்களுக்குமான ஒரு ஹைபிரிடாக உணர்வேன். மிளகு நாவலில்  அவருடைய நூற்றாண்டுகளுக்கு இடையிலான பாய்ச்சலை கண்டு வியந்து உள்ளேன்.அம்பலப்புளை சம்பந்தமான பகுதியில் அவருடைய மலையாளத் தமிழ் மொழிநடை  அபாரம். அவருடைய  தொழில்நுட்ப மற்றும் புராதன விஷயங்களில் உள்ள அறிவை மிளகு நாவலின் பல பகுதியில் அள்ளித் தெளித்திருப்பார்.தமிழில் மரியாதை செய்யப்படவேண்டிய எழுத்தாளர்களில் அவரும் ஒருவர்.தாங்கள் அதை விஷ்ணுபுரம் விருது மூலமாக  நிறைவேற்றியதில் மிக்க மகிழ்ச்சி.

நன்றி.

பேரா.துரைராஜ் சுகுமார்

நாகர்கோவில்
இரா.முருகன், கடிதங்கள்
இரா முருகன், கடிதங்கள்
இரா முருகன், விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்
இரா.முருகனுக்கு விஷ்ணுபுரம், கடிதங்கள்
முந்தைய கட்டுரைகொட்டுக்காளி: அஜிதன்
அடுத்த கட்டுரைவையவன்