இரா.முருகன், கடிதங்கள்

அன்புள்ள ஜெ

இரா முருகனுக்கு அளிக்கப்பட்டுள்ள விஷ்ணுபுரம் விருது மகிழ்ச்சியளிப்பது. இந்த வரிசையில் மிகமிகத் தகுதியான ஆசிரியர் அவர். அவருடைய எழுத்துக்கள் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவை ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டு பரவலாகக் கவனிக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழில் வாசிக்கப்படவில்லை. அவற்றை எளிமையாக வாசிக்கமுடியாது. அவற்றிலுள்ள விளையாட்டுத்தனம் ஆழமான ஒரு சரித்திரப்பிரக்ஞ்சையில் இருந்து உருவாவது. அதை விளங்கிக்கொள்ளாமல் அவருடைய நாவல்களுக்குள் நுழைய முடியாது. ஆகவே அதை அதிகம்பேர் வாசிக்கவில்லை. இந்த விருதை ஒட்டி அவர்மேல் ஒரு கவனிப்பு உருவாகி, அவருடைய படைப்புகள் பற்றிய கட்டுரைகள் வருமென்றால் அந்தக்குறை தீரும் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்

மா.முருகேஷ்

 

அன்புள்ள ஜெ

இரா முருகன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விஷ்ணுபுரம் விருது முக முக்கியமான ஒரு படைப்பாளிக்கு இந்த ஆண்டு அளிக்கப்பட்டுள்ளது. நான் அவருடைய அரசூர் வம்சம் நாவல்களை மட்டுமே வாசித்திருக்கிறேன். மிளகு இன்னும் ஆரம்பிக்கவில்லை. அரசூர் வம்சம் ஒரு டிரையாலஜி. பொதுவாக இந்தவகையான தொடர்நாவல்களை எழுதுவதற்கு அபாரமான படைப்புசக்தி தேவை. கதைச்சூழல் கதாபாத்திரங்களெல்லாம் படிப்படியாக வளர்ந்துகொண்டே இருக்கவேண்டும். திருபத்திரும்ப வந்துவிடக்கூடாது. அந்த கலையை மிக அற்புதமாகக் கையாண்டிருந்தார் முருகன். அரசூர் வம்சம் நாவ்ல்கள் தமிழில் ஓர் இலக்கியச்சாதனை என்பதில் ஐயமில்லை. விருதுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஸ்ரீனிவாஸ்

முந்தைய கட்டுரைஆக்ரமிப்புத்தாவரங்கள்- மூடுதிரைக்கொடி
அடுத்த கட்டுரைபுருஷன்