இரா.முருகனுக்கு விஷ்ணுபுரம், கடிதங்கள்

அன்பின் ஜெ!

சுஜாதா (1935 – 2008)-வைவிட இரா.முருகன் ( 1953…) இருபதாண்டுகள் இளையவர்.  1990-களில் சுஜாதா எழுதிக் கொண்டிருந்த கம்ப்யூட்டர், அறிவியல் போன்ற விஷயங்களை இலக்கியத்தில் கையாண்டவர் இரா.முருகன். சிலிக்கான்  வாசலில், லாசரஸ் போன்றவை – கணையாழியில், வேறு இலக்கிய இதழ்களில் வெளியானதை படித்துக் கொண்டிருந்தேன்.

“அரசூர் வம்சம்” நாவலை இருபதாண்டுகளுக்கு முன்பு சௌதி அரேபியாவுக்கு எடுத்துச் சென்று படித்த நினைவுகள் வருகிறது. ஏராளமாக எழுதியவர், ஒரு சாகித்ய அகாடமி விருதுகூட தரப்படவில்லை என்னும் போதுதான் ”விஷ்ணுபுரம்” விருத்திற்கான  தேவையும், இருப்பும், முக்கியத்துவமும் உருவாகிறது. வாழ்த்துக்கள் முருகன் சார்!  திரும்பவும் வரக்கூடிய மாதங்களில் அவர் எழுதியவற்றை படிப்பதற்கு தேடி எடுக்க வேண்டும், பொருத்தமான தேர்வு, விழாவில் சந்திப்போம்,

 

மகிழ்ச்சி ஜெ!

கொள்ளு நதீம்,ஆம்பூர்

அன்புள்ள ஜெ

நலம்தானே?

என் அபிமான எழுத்தாளர் இரா முருகனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பது மிகுந்த நிறைவை அளிக்கிறது. நான் அவருடைய கதைகளை கணையாழிக்காலத்தில் இருந்து வாசித்துக்கொண்டு வருபவன் அவருடைய உரையாடல் போன்ற மொழிநடை, மென்மையாகச் சுழற்றிச் சுழற்றிச் செல்லும் கதை போக்கு ஆகியவை எனக்கு மிகவும் பிடிக்கும்.

அவருடைய எழுத்துமுறை என்பது ஏராளமான சிறுதகவல்களை தந்துகொண்டே இருப்பது. அது பாலக்காடு மலையாள- ஐயர் வாழ்க்கையானாலும் சரி, பாண்டிச்சேரி அரசியலானாலும் சரி, மிளகுராணியின் வாழ்க்கையானாலும் சரி தகவல்கள் கொட்டிக்கொண்டே இருக்கும். ஆனால் அந்தத் தகவல்களை அவர் சலிப்பூட்டும்படி அடுக்குவதில்லை. அங்கதமும் சிரிப்புமாகவே அவற்றை சொல்வார். சில தகவல்கள் தூக்கிவாரிப்போடும். ஒரு கதையில் துருக்கிய சுல்தான்கள் அபானவாயுவை வெளியேற்றும்போது இசையுடன் அவை வெளிப்படுவதற்கு கொம்பால் செய்யப்பட்ட இசைக்கருவிகள் இருந்ததைச் சொல்லிச் செல்வார்.

தமிழில் மிக முக்கியமான எழுத்தாளர். மிக அருமையாகவும் நுணுக்கமாகவும் எழுதுபவர். அவருக்கு இந்த விருது ஒரு பெரிய அங்கிகாரம்

ராஜேஷ் பெரியசாமி

முந்தைய கட்டுரைஐந்து தரிசனங்கள்    கடிதம்
அடுத்த கட்டுரைஸ்ரீ பார்சுவநாதர் அம்மானை