மதுரையின் சித்திரம்

அன்புள்ள ஜெ

நான் மதுரைக்காரன். ஆனால் மதுரையை விட்டு வெளிவந்து 29 ஆண்டுகளாகிறது. வட இந்தியாவுக்கு வேலைக்கு வந்தவன் இன்று தமிழ் சரியாக நாவில் வராதவனாகவே ஆகிவிட்டேன். அண்மையில் கிண்டில் அன்லிமிட்டடில் நா.பார்த்தசாரதியின் குறிஞ்சிமலர் நாவல் வாசித்தேன். அதில் வரும் மதுரைக் காட்சிகள் என்னை கண்கலங்க வைத்தன. மிகுந்த பிரியத்துடன் படித்தேன். அதன்பிறகு அவருடைய சமுதாயவீதி போன்ற நாவல்களையும் வாசித்தேன்.

இந்நாவல்களை நான் 28 ஆண்டுக்களுக்கு முன்பு வாசித்திருக்கிறேன். அன்று இவையெல்லாம் ஜூவனைல் ரீடிங் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் இன்று இவை ஒரு வாழ்க்கையின் பதிவுகள் என்று படுகிறது. நாஸ்டால்ஜியாவாக இருக்கலாம். ஆனால் அதுவும்தானே வாழ்க்கைக்கு வேண்டியிருக்கிறது. என் கேள்வி எல்லாம் இன்று நான் வாசிப்பதென்றால் மதுரை பற்றிய நல்ல நாவல்கள் என்னென்ன?

ஸ்ரீதர் கிருஷ்ணன்

அன்புள்ள் ஸ்ரீதர்

நான் அண்மைக்கால நாவல்கள் அனைத்தையும் வாசித்தவன் அல்ல. அப்படி எல்லாவற்றையும் வாசிப்பதும் சாத்தியமல்ல. அத்துடன் நான் இப்போதெல்லாம் புனைகதைகள் வாசிப்பதும் குறைந்துவிட்டது. என் ஆர்வம் ஆன்மிகம், மதம், தத்துவம் என திசைமாறிக் குவிந்துவிட்டிருக்கிறது.

உங்கள் கேள்வியை மதுரை நகரை களமாகக் கொண்ட நாவல்கள் என வகுத்துக் கொள்கிறேன். முதன்மையாகச் சொல்லப்படவேண்டியவர் ப.சிங்காரம். அவருடைய புயலிலே ஒரு தோணி நாவல் பெரும்பாலும் இந்தோனேசியா, மலாயாவில் நடைபெற்றாலும் கதையின் ஒரு பகுதியில் நினைவோட்டப்பெருக்காக மதுரை வருகிறது. மதுரையின் நவீன இலக்கியப் பதிவுகளில் அதுவே தலைசிறந்தது

அடுத்ததாகச் சொல்லப்படவேண்டியவர்கள் இருவர். ஒருவர் சு.வெங்கடேசன். அவருடைய காவல்கோட்டம் மதுரையின் முந்நூறாண்டுகால வரலாற்றினூடாக வரும் பெருநாவல். நாயக்கர் படையெடுப்புக் காலம் முதல் குற்றப்பரம்பரை ஒழிப்புக் காலகட்டம் வரை நீளும் படைப்பு.

அந்நாவலில் பல இடங்கள் காவியத்தன்மை கொண்டவை, இரண்டு உதாரணங்கள். ஒன்று, மதுரைக்குள் நாடக்கர் படைகள் நுழையும்போது முதலில் கூர்மூக்கு கொண்ட கன்னி வகை நாய்கள் பெருந்திரளாக வரும் காட்சி. இரண்டு, மதுரையின் தொன்மையான கோட்டை வெள்ளையரால் இடிக்கப்படுகையில் தெய்வங்கள் நிலைகுலையும் காட்சி.

இரண்டாவதாக முக்கியமான நாவல் சாம்ராஜ் எழுதிய கொடைமடம். இந்நாவல் மதுரையைப் பற்றியதல்ல. 1980 முதல் 1990 வரை தீவிர இடதுசாரிக் குழுக்களின் நிலைகுலைவும் வீழ்ச்சியும்தான் இந்நாவலின் கதை. ஒருபக்கம் பகடியுடன் அரசியலை சித்தரித்துக்கொண்டு, மறுபக்கம் கதைசொல்லி என கருதத்தக்க கதைநாயகனின் தனிவாழ்க்கையை உணர்ச்சிகரமாகச் சொல்லும் நாவல் இது.

ஆனால் இந்நாவலில் மதுரையின் மெஸ் சாப்பாடு, மதுரைத் தெருக்களின் ஓசையும் புழுதியும், மதுரையின் வெவ்வேறு ஊடுவழிகள் என விரிவான ஒரு மதுரைச்சித்திரம் உள்ளது. மதுரைக்கு நான் அடிக்கடிச் செல்பவன் அல்ல. மதுரை எனக்குத் தெரியாத ஊர்தான். ஆனால் மதுரை இந்நாவலின் வழியாக மிக அணுக்கமான ஓர் நிலப்பரப்பாக ஆகிறது.

எஸ்.அர்ஷியா எழுதிய பொய்கைக்கரைப்பட்டி என்னும் நாவல் மதுரையின் அண்மைக்கால மாற்றங்களைச் சித்தரிப்பது. ஆனால் இந்நாவலில் ஒரு புனைவுக்குண்டான நுணுக்கமான அவதானிப்புகள் இல்லை. மதுரையின் மேல் ஆர்வமிருந்தால் வாசிக்கலாம். இவருடைய ஏழரைப்பங்காளி வகையறா என்னும் நாவலை சிலர் எனக்குப் பரிந்துரைத்துள்ளனர். நான் வாசித்ததில்லை

ஆலவாய் என்னும் தலைப்பில் நரசய்யா ஒரு நூல் எழுதியுள்ளார். மதுரையின் நீண்ட வரலாற்றுப் பயணத்தைச் சொல்லும் நூல் இது. பொதுவாசகர்கள் சுவாரசியமாக வாசிக்கும்படி எழுதப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தின் பண்பாட்டுத்தலைநகர் என்று சொல்லத்தக்கதும், குறைந்தது மூவாயிரம் ஆண்டு வரலாறு கொண்டதுமான இப்பெருநகர் பற்றி மிகக்குறைவாகவே நவீன இலக்கியத்தில் எழுதப்பட்டுள்ளது என்பதே உண்மை.

சித்திரவீதிக்காரன் என்பவர் ஓர் இணையப்பக்கத்தை எழுதிக்கொண்டிருக்கிறார். மதுரைபற்றி ஆர்வம் கொண்டவர்களுக்கு பிடிக்கும் எழுத்து. மதுரை பற்றிய தகவல்கள், வாசிப்புக்குறிப்புகள் என்று விரிவாக எழுதிக்கொண்டே இருக்கிறார்.  சித்திரவீதிக்காரன், வலைப்பூ. 

ஜெ

முந்தைய கட்டுரைஅழகிய சிங்கர்
அடுத்த கட்டுரைஇரா.முருகன் நூல்கள், சிறப்புத் தள்ளுபடி