பசுமையும் மழையும் – கடிதம்

 

காடு சினிமாவாக?

காடும் விடுதலையும்
காடும் விடுதலையும்

 

அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன்,

வணக்கம். காடு நூலை வாசித்தேன். இலைவெளியில் தொலைந்தேன் என்று சொல்லலாம்.

அதிகாலைக்கு நான்கு மணிக்கு எழுந்து வாசித்தேன். பரீட்சைக்கும் கூட அப்படி படித்ததில்லை. இரண்டு நாட்களில் வாசித்து முடித்தேன். பக்கங்கள் குறைய குறைய இது முடியக்கூடாதென பதைபதைப்பு.

எல்லா கதாபாத்திரங்களையும் நிஜத்தில் கண்டு அவர்களோடு காட்டில் நானும் வாழ்ந்தது போன்று உணர்வு. ஒவ்வொரு முறையும் குட்டப்பன் கஞ்சி காய்ச்சும் போதும், நானும் இங்கே பசியோடு கைநீட்டிக் காத்திருந்தேன்.

காட்டின் வசீகரம் பயங்கரம் என இரண்டு பக்கங்கள் வாழ்க்கையின் இரண்டு பகுதிகளை காட்டியது போல் இருந்தது. இரண்டையுமே எடுத்து மழை சேரு போல உடலெங்கும் பூசிக் கொள்ள ஆசை.

காமம் மனிதனின் தீராத வேட்கையாக இருப்பதையும் அது ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு மனிதனிடமும் எப்படி மாறுகிறது என்பதையும் உணர்ந்தேன். பெண்களின் மெய் தொட்டு ரசிக்கும் அய்யரின் மெய்யான ரசிகராகவே நான் மாறி விட்டேன். ஐயர் வரும் இடங்களெல்லாம் அத்தனை ரசனை. கபிலர் குறுந்தொகை பாட்டு என நாவல் முழுக்க தொல் இலக்கியத்தை ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஐயர் ரசித்த சுருள் முடி, சினேகம்மையும் பின் கழுத்து, இனி எப்போதும் நினைவில் இருக்கும்

கை உடைந்து மருத்துவமனையில் படுத்திருக்கும் ஐயர் திருந்தி ஏதோ தத்துவம் பேசப்போகிறார் என்று பார்த்தால் , “மனுஷன்னா பலதுண்டு” என்று சொல்லும் அந்த இரண்டு வார்த்தைகளிலேயே எல்லா விளக்கங்களையும் பொதிந்து வைத்தது மிக்க சுவாரஸ்யமாக இருந்தது.

பல இடங்களில் தனியே படித்துக் கொண்டே புன்னகையும் சிரிப்புமாக சென்றது. உதாரணம் “தேவாங்கு வெடுக்கு சிடுக்காக இருக்கிறது, அதை அரசு பணியில் சேர்த்து விடலாம்”வலிமை, பொறுமை, உக்கிரம், எதையும் செய்து முடிக்கும் வல்லமை என குட்டப்பனின் கதாபாத்திரம் ஆச்சரியப்படவும், காட்டுக்கே உரிய மனிதன் என்று தோன்றச் செய்தது.

“காட்டை அழித்து நாகரீகத்தை வரவழைப்பது, எதெல்லாம் அழிந்தது என்று கணக்கெடுப்பது” அரசின் செயல்களை இரண்டே வரிகளில் சுட்டிக்காட்டியது- ஆழம்.

மலையத்தி வந்து விடுவாள் வந்து வடுவாள் என்று கிரியுடன் நானும்காட்டில் வேங்கை மரத்தடியில் காத்திருந்தேன். பெண்ணிற்காக காத்திருப்பது நிச்சயம் ஏமாற்றத்தில் தான் முடியும் என்பது நாவலிலும் இருந்தது. ஆனால் நீலி  மறைந்திருந்து அவனை கண்காணித்து இருக்கிறாள் என்றுதெரிந்த போது அவளின் காதல் அதற்கான சோதனை இரண்டும் புரிந்தது.

40 நெருங்கும் இந்த வேளையிலும் கிரியும் நீலியும் பேசிக்கொள்ளும் அந்த காட்சிகள் இரண்டு புறாக்கள் கொஞ்சிக் கொள்வது போலவே தோன்றியது. என்னுடைய பழைய காதலையும் கண் முன்னே நிறுத்தியது.

நீலியும் கிரியும் சேரவில்லை என்று முன்பே தெரிந்திருந்தாலும், அவர்களுக்குள் என்ன ஆனது என்று தெரிந்து கொள்ளும் சுவாரஸ்யம் பக்கங்களை வெகுவேகமாய் புரட்டிக்கொண்டு ஓடச் செய்வது.

இனி நீலியும் கிரியும் எதுவும் பேசிக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்து கொள்ளும் அந்த சமயத்தில் உடைந்து போனது கிரி மட்டுமல்ல. எல்லோரையும் சாகடித்து விட்டு நீலியை மட்டும் பிழைக்க வைத்திருக்கலாம் என்ற அபத்தமான எண்ணம் கூட தோன்றியது.

எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள மனம் எப்போதுமே மறுத்துக் கொண்டே  இருக்கும். அதனுடன் போராடுவதற்கு நமது வாழ்நாள் சரியாக இருக்கும்.

அழகில்லாத பெண்களின் ஏகப்பிரதிநிதியாக வேணியின் கதாபாத்திரம் அழுவதும் ஆற்றாமையில் திளைப்பதும் மனதை நெருடச் செய்தது.இறுதியில் கதவிற்கு அந்தப் பக்கமாக நின்று கொண்டு நீலி அழுவதைப் போலவே நானும் இங்கே மனதிற்குள் அழுது கொண்டிருந்தேன். நீலிக்காக அல்ல, காட்டை விட்டு பிரியும் நேரம் வந்துவிட்டது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பழகிய எல்லாரையும் பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமென்று ஆசை இருந்தாலும், இத்துடன் காட்டிலிருந்து விடை பெற்றுக் கொள்கிறேன், அவர்களின் நீங்காத நினைவுகளோடு.

நன்றி

சு. திருமுருகன்.

காடு வாங்க

காடு மின்னூல் வாங்க

முந்தைய கட்டுரைகோவைமணி- வாழ்த்துக்கள்
அடுத்த கட்டுரைஇர.திருச்செல்வம்