சின்னஞ்சிறு விஷயங்கள், கடிதம்

ஒரு சிறு சிலந்தி

கோவை கட்டண உரைக்கு வந்த அனைவருக்கும் ‘வாழ்விலே ஒரு முறை’ புத்தகம் வழங்கப்பட்டது. இது உங்கள் அனுபவக்குறிப்பு சார்ந்த கட்டுரைகள் என்பது  உடனடி ஆர்வத்தை அளித்தது. வீடு திரும்பியதும் படிக்கத் தொடங்கிவிட்டேன். இதே போன்ற கதை-கட்டுரை வடிவத்தில் எழுதிய ‘புறப்பாடு’ எனக்கு மிகவும் பிடித்த படைப்பு.  ‘அறம்’ படித்தவுடன் அடுத்ததாக நான் படித்தது அது. வடிவம் பற்றிய எந்த பிரக்ஞையும்  இல்லாமல் நான் அதை வாசித்தேன்..    அதில் நீங்கள் முதல் முறை வீட்டை விட்டு கிளம்பி அலைந்த போது பரிதவிப்புடன் பின்தொடர்ந்தேன். இரண்டாவது முறை கிளம்பிச் சென்ற போது நானும் உங்களுடன் ரயில் ஏறி இந்தியா முழுவதும் பயணித்தேன்.

நாம் விரும்பும் புனைவாசிரியரிடம் மிகுந்த அணுக்கத்தை தருகிறது இந்த எழுத்து வடிவம். இதை படிக்கும் போது புனைவம்சதை நாம் எதிர்பார்ப்பதில்லை.

ஆனால் ஒரு சிறந்த புனைவாசியிரியர் மட்டுமே இதை எழுத முடியும் என்று தோன்றுகிறது;ஆசிரியரின் பிரத்யேகமான கண்கள் ஓர் அனுபவத்தை உள்வாங்கி, அது அவரது மனதில் விரிந்து, படிமங்களாக உருவங்களாக உயர்ந்து  ஒரு பீடத்தில் சென்று நிலைக்கிறது. அவரது புனைவுலகதின் வாசலாகவும் கூட அமைகிறது. இந்தத் தொகுப்பும் அவ்வாறே.

‘மூக்குத்தியும் கடலும்’ கட்டுரையில் வரும் உங்கள் அம்மாவின் சித்திரம், ‘ஆதி’ யில் மேலாங்கோட்டு அம்மன் சந்நிதியில் புஷ்கலா அக்காவுக்கு நிகழும்  சன்னதம், ‘பாதையில் ஒரு கூழாங்கலில்’ போத்தியின் சமநிலை குலைவு உங்களில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை பெண்களின் ஆழத்தை, ஒரு பெரும் பித்தை உணர்த்தியது. ‘புதுப்புனலில்’ வெள்ளம் ஆற்றில் நிரம்பி திளைக்கும் அதேவேளையில் கிணற்றின் ஊற்றிலும் ஊறி வரும் ஒரு சித்திரம் இருக்கும். இரண்டு விதமான சூழ்நிலையில் வாழும் இளம்பெண்களை குறிப்பதாக இருக்கும் அது ஒரு பெரும் சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

கட்டண உரையில், வெண்முரசு எழுதும் சமயத்தில் உங்களுக்கு ஜேஷ்டாதேவியின் சந்நிதியில் ஏற்பட்ட அனுபவம் குறித்து கூறினீர்கள். மூன்று அறிதல்களில் ஒன்றாக ‘Deity is there’ என்று உணர்ந்ததாகவும் குறிப்பிட்டீர்கள். அஜியிடம் அதை சொல்லிக்கொண்டிருந்தேன். மறுபிறப்பு, தெய்வம் போன்றவை பற்றி சில கருத்துகளை கூறி இது தத்துவத்தில் எளிதில் விளக்கி விட முடியாத ஒன்று என்று கூறினான் . அதை தொடர்ந்து நான் வாசித்தது, ‘ அவதாரம்’. அதன் இறுதி பத்தி ‘தெய்வம் உண்டு’ என்று முடிந்தது! இலக்கியம், மனித மனம் உணரும் அனைத்தும் இருப்பதாக நம்புகிறது; ஏனெனில், இங்கு தொடர்புபடுத்தி கொள்ளுதலே ஒரே அளவுகோல் என்று படுகிறது. மாறாக, தத்துவம் உணர்வுகளை ஒரு வரையறைக்குள் கொண்டு வந்து தர்க்கத்தின் வாயிலாக அதை நிறுவ முயல்கிறது; உணர்வுச்சத்தை தொட முயற்சித்து வழுக்கிக் கொண்டே இருக்கும் கரங்களாக அது தோன்றுகிறது.  ‘உலகெலாம்’ கட்டுரையிலும் ‘பெரியபுராணம்’ போன்ற அனைத்து புராணங்களும் ‘அருவம்-உருவம்’ என்ற இரு நிலைகளை எப்படி கையாள்கிறது என்ற விளக்கத்தை உங்களின் இந்த உரையுடன் தொடர்புபடுத்திக்கொண்டேன்.  உங்கள் உரைகள், கதைகள், கட்டுரைகள், வகுப்புகள் என்று அனைத்தையும் படிக்கும் ஒருவருக்கு ஏற்படும் மன விரிவு எப்போதும் போல என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.

‘யோகி’ யில் வரும் குட்டப்பன் நாய்க்குட்டியின் அர்த்தம் ஏற்றப்படாத தூய அதன் மனவிழிகள்; ‘பாலையில்’ சவுதியில் இருக்கும் கோபாலன் தம்பிக்கு இருபது வருடம் கழித்தும் உலர்ந்த அட்டை பூச்சியின் சித்திரம் அவரது உள்ளத்தில் நீடித்த தா(க்)கம்; ‘லாவா’ வின்- ‘வெம்மை-குளுமை’;’பித்து-சமநிலை’;’பாறை-ஊற்று’;’பகல்-இரவு’;’கூட்டம்-தனிமை’ என்று பல்வேறு விதமான உருவகங்கள், படிமங்கள்  ஒரு பெரும் திரட்டாக மனதில் குவிந்தது.

இந்த தொகுப்பிற்கு நன்றி.

அன்புடன்,
தன்யா .

வாழ்விலே ஒருமுறை வாங்க

வாழ்விலே ஒருமுறை மின்னூல் வாங்க 

முந்தைய கட்டுரைஇரா.முருகன், வாழ்த்துக்கள்
அடுத்த கட்டுரைசெந்தில் ஜெகந்நாதன்