விஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – தமிழ் விக்கி

விஷ்ணுபுரம் இலக்கிய விருது

இரா. முருகன்

2024 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது எழுத்தாளர் இரா. முருகன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சென்னை விஷ்ணுபுரம் நண்பர்கள் இரா.முருகன் அவர்களை அவர் இல்லத்திற்குச் சென்று சந்தித்து மலர்க்கொத்து வழங்கி இச்செய்தியை அறிவித்தார்கள்.

வரும் டிசம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கோவை ராஜஸ்தானி பவன் அரங்கில் வழக்கம்போல் விழா நடைபெறும். இளம்படைப்பாளிகளுடன் உரையாடல் அரங்குகளும், சிறப்பு விருந்தினர் அரங்குகளும் அமைக்கப்படும். அனைவரையும் வரவேற்கிறோம்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் 2010 ல் என் நண்பர்களால் உருவாக்கப்பட்டது. முறையான அமைப்பு, நிர்வாகிகள் என எவருமில்லாமல் சென்ற பதினைந்தாண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பெரும்பாலும் ஆண்டில் எல்லா நாட்களிலும் இலக்கியச் செயல்பாடுகள் கொண்டிருக்கும் தனியார் அமைப்பு இந்தியாவிலேயே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் மட்டுமே.

2010 முதல் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் விஷ்ணுபுரம் விருதுகளை வழங்கத் தொடங்கியது. தமிழின் முதன்மைப் படைப்பாளிகள் எந்த வகையான விருது மற்றும் அங்கிகாரங்களும் இல்லாமல் இருப்பதை தொடர்ச்சியாக சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் நாமே அவர்களுக்கான விருதை உருவாக்கலாம் என்னும் எண்ணம் வந்தது. அவ்வாறுதான் 2010 இவ்விருது உருவாக்கப்பட்டது.

முதல் விருது ஆ.மாதவனுக்கு அளிக்கப்பட்டது. அப்போது ஆ.மாதவன் பெற்ற ஒரே விருது அதுதான். அவருக்காக நிகழ்ந்த முதல் இலக்கியக் கூட்டமும் அதுவே என அவர் மேடையில் சொன்னார். அதன்பின் பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப், ஞானக்கூத்தன், தேவதச்சன், வண்ணதாசன், சீ.முத்துசாமி, ராஜ் கௌதமன், அபி, சுரேஷ்குமார இந்திரஜித், விக்ரமாதித்யன், சாரு நிவேதிதா, யுவன் சந்திரசேகர் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

எங்கள் விழா முழுக்க முழுக்க விருதுபெறுபவரை கொண்டாடுவதாகவே அமையும். விருது பெறுபவர் பற்றிய ஒரு நூல் வெளியிடப்படும். ஓர் ஆவணப்படமும் தயாரிக்கப்படும்.

பரிசு பெறும் இரா.முருகன் தமிழிலக்கியத்தின் முக்கியமான படைப்பாளியாக அறியப்படுபவர். எழுத்தாளர் சுஜாதாவால் முன்வைக்கப்பட்டவர். அங்கதம் கலந்த நடையுடன் மாய யதார்த்தவாதச் சாயல்கொண்ட படைப்புகளை எழுதியவர். இவர் எழுதிய அரசூர் வம்சம், ராமோஜியம், விஸ்வரூபம், மிளகு போன்ற நாவல்கள் தமிழில் முக்கியமானவை. வரலாற்றையும் தனிநபர்களின் வாழ்க்கையையும் விமர்சனநோக்கில் கலந்து உருவாக்கப்பட்டவை இப்படைப்புகள்.

முருகன் தொடர்புக்கு [email protected]  9677003570

அரசூர் நாவல்கள்

ராமோஜியம்

மிளகு  

முந்தைய கட்டுரைசென்னிமலை நூற்பு விழாவில் பேசுகிறேன்
அடுத்த கட்டுரைBliss and ignorance