மழையும் முகிலும்

அன்புள்ள ஜெ ஐயா,

வணக்கம்.நலம் நலம் அறிய அவா. தங்களின் கதாநாயகி நாவலை சமீபத்தில் வாசித்தேன்.இந்த நாவலை பற்றிய அறிமுகம் எனக்கு தங்களின் நேர்காணலை காணும் போது அறிந்து கொண்டேன்.அந்த புத்தகத்தை இணையத்தில் பதிவிறக்கம் செய்தேன் இரண்டு வரி படித்தேன்.ஒன்னும் புரியவில்லை பிறகு தங்களின் கதாநாயகி நாவலை வாசிக்க தொடங்கினேன்.முதலில் தங்களின் இந்த வகையான நாவலின் தொடக்கத்திற்கு மிகவும் நன்றி

கதாநாயகி நாவலை ஒரு மிகச் சிறந்த உளவியல் நாவலாக நான் காண்கிறேன்.ஒவ்வொரு பகுதியையும் வாசிக்கும் போது அதற்கான உளவியல் காரணிகளோடு

ஒப்பிட்டு கொண்டேன்.ஒரு அற்புதமான நாவல்.எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.மிகச்சிறந்த உளவியல் அணுகுமுறை இந்த நாவலை நான் தொடங்கிய போது என்னால் இரவில் சரியாக தூங்க இயலவில்லை.கனவில் கூட அதை பற்றிய நினைப்புதான்.அந்த நாவலை முடித்த போது தான் எனக்கு சரியான உறக்கம் வந்தது.

இதில் கூறப்படும் schizophrenia என்ற மனநோய் குறித்து படித்துள்ளேன் உளவியல் துறை என்பதால்.இந்த நோய்க்கான ஒரு மிகச்சிறந்த அணுகுமுறையாக இந்த நாவல் இருக்கிறது.இந்த நாவலின் ஆளுமை என்னை மிகவும் பாதித்து உள்ளது. தாங்களின் இதுபோன்ற படைப்பை இன்னும் எதிர்பார்க்கிறேன்.மிகவும் நன்றி ஐயா.வாழ்த்துகள் தொடருங்கள்.

நன்றி.

 

அன்புடன்

க. அட்சயா

அன்புள்ள ஆசிரியருக்கு

அந்தமுகில் இந்த முகில் நாவலை சற்றுமுன்புதான் வாசித்து முடித்தேன். உங்களுடைய பிற நாவல்களில் உள்ள சிக்கலான கதையோட்டமோ தத்துவமோ ஏதும் இல்லாத நேரடியான நாவல். ஆனால் அதிலுள்ள உணர்ச்சிகள் நேரடியானவை. ஆழமானவை. ஆகவே அந்நாவலை ஒரு பெருமூச்சுடன் மட்டுமே படித்து முடிக்க முடிந்தது

இந்நாவலின் சிறப்பு இதிலுள்ள கதைக்களம் வெறும் பின்னணியாக இல்லாமல் அந்தக் கதையின் உணர்வுநிலைக்கு கவித்துவமாகப் பங்களிப்பாற்றுகிறது என்பதுதான். முகில்களைப் பற்றிய பேச்சு வந்துகொண்டே இருக்கிறது. மெல்லி இரானி முகில்களை படம் எடுத்துக்கொண்டே இருக்கிறார். அந்தக் கவிதை நெஞ்சை கசக்கிப்பிழிவதுபோலிருந்தது. முகில்கள் ஒன்றாகச் சேர்ந்து பிரிக்கமுடியாதபடி ஆகிவிடலாம். ஆனால் முகில்கள் இணைவதே இல்லை. அவை சென்றுகொண்டேதான் இருக்கின்றன

இந்நாவலின் கதையில் எதிர்பாராதது ஏதுமில்லை. திருப்பங்கள் இல்லை. கதை நேரடியாகச் செல்கிறது. முடிவும் நினைத்ததுதான். ஆனால் இதுதான் விதி. அந்த நம்பகத்தன்மையால்தான் இது நெஞ்சுக்கு நெருக்கமானதாக ஆகிறது

இந்நாவல் வாசிப்பதற்கு முன்பு கதாநாயகி வாசித்தேன். அதன் மையம் மழை என்றால் இந்நாவலின் மையம் முகில். அது பெய்து ஓய்கிறது. இந்நாவல் முகில் போல ஓசையே இல்லாமல் ஒழுகிச்சென்றுகொண்டே இருக்கிறது.

சபரி சங்கர்

முந்தைய கட்டுரைஇரா முருகன், நெருக்கடிநிலை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநரன்