வேதசகாயகுமார்- ஆய்வாளனும் ரசனையாளனும்-2

வேதசகாயகுமார்- ஆய்வாளனும் ரசனையாளனும் (முன் தொடர்ச்சி)

நவீன தமிழிலக்கிய விமர்சனத்தில் வேதசகாயகுமாரின் இடம்

பொதுவாக இலக்கிய சூழலில் வேதசகாயகுமார், ராஜமார்த்தாண்டன் இருவரையும் சுந்தர ராமசாமி பள்ளியை சேர்ந்தவர்களாகவே சொல்வதுண்டு. ஆனால் ஒரு சிந்தனையாளன் ஒரு குறிப்பிட்ட சிந்தனைப் பள்ளியில் இருந்து வந்திருந்தால் அவன் அப்படியே அதன் வாரிசாக மட்டும் இருக்கமாட்டான். ஏதோ சில தனிப்பட்ட கூறுகள் அவனிடம் வளர்ந்திருக்கும். வேதசகாயகுமாரிடமும் அவ்வாறான தனித்தன்மை உள்ளது. அவரிடம் உள்ள தனித்தன்மை அவருக்கு முந்தைய விமர்சகர்களிடம் இருந்ததில்லை. அவர் மிகச்சரியான அளவில் சி.சு.செல்லப்பாவையும் ஆ.முத்துசிவனையும் கலந்ததுபோல என்று சொல்லலாம்.  வேதசகாயகுமார் ஒரு கல்வியாளர், மேலும் ரசனை விமர்சகரும்கூட.

பொதுவாக கல்வியாளர்களுக்கு ரசனை இருக்கக்கூடாது என்பதுதான் உண்மை. கல்வியியல் ஆய்வுகளின் பணி என்பது வகைப்படுத்துவது மட்டும்தான். இவையிவை இன்னின்ன தரப்பை சார்ந்தவை, இன்னின்ன அம்சங்களை கொண்டவை என்று பகுத்துக்கொடுப்பதுதான் அதன் முக்கியமான பணி. ஆனால் ரசனை சார்ந்த விமர்சனத்துக்கு முறைமை என்பதே கிடையாது. தனக்கு தோன்றுகிறது என்பதுதான் முக்கியம். தனக்கு இவ்வளவு வாசிப்பும் வாழ்க்கை அனுபவமும் உள்ளது, அதனால் இவ்வாறு தோன்றுகிறது என்பதுதான் ரசனை விமர்சனம். எவ்விதமான புறவயமான முறைமைகளையும் வெங்கட் சாமிநாதனோ சுந்தர ராமசாமியோ பிரமிளோ கடைப்பிடித்ததில்லை. ஆனால் வேதசகாயகுமாருக்கு கல்வித்துறை சார்ந்த தெளிவான புறவயமான ஆய்வு முறைமை உண்டு. அது ஒருவித பகுப்பாய்வு தன்மை.

உதாரணமாக, வெங்கட் சாமிநாதனுக்கு லா.ச.ரா பற்றி ஒரு விஷயம் தோன்றுகிறதென்றால் ஏன் தோன்றுகிறது என்பதற்கான உதாரணமெல்லாம் கொடுக்கமாட்டார். அவருக்கு அது தோன்றுகிறது, அவ்வளவுதான். நாம் படித்தால் நமக்கும் அது சரி என்றுதான் தோன்றும். ஆனால் வேதசகாயகுமார் அப்படியல்ல. அவர் ஏன் என்பதற்கான ஆதாரங்களை கொடுப்பார். அவையெல்லாமே கல்வித்துறை சார்ந்த ஓர் ஆய்வேட்டின் தன்மையுடன்தான் இருக்கும். அதேவேளை, கல்வித்துறை சார்ந்த ஆய்வாளர்களுக்கு இருக்கும் ஒருவித ரசனையற்ற தன்மை, இயந்திரத்தன்மை அவரிடம் இருக்காது. ஒரு தேர்ந்த சுவைஞராகத்தான் அவர் வெளிப்படுவார். இப்படியொரு கலவைதான் வேதசகாயகுமார்.

வேதசகாயகுமாரின் ஆய்வின் தனித்தன்மைகள் 

(1) பிரதியை சேகரித்தல் (Collection of Text)

பொதுவாக, ஓர் இலக்கிய படைப்பை ஆய்வு செய்பவர்களோ விமர்சகர்களோ செய்யாத ஒன்றை வேதசகாயகுமார் செய்வார். அது ஓர் இலக்கிய படைப்பின் அனைத்து பிரதிகளையும் சேகரிப்பது. அதன் முதல் வடிவத்தை கண்டடைவது. தூயபிரதி என்ற சொல்லை அவர் பயன்படுத்துவார். உதாரணமாக, சுந்தர ராமசாமி சிறுகதைகள் என்று ஒரு தொகுதி இருக்கிறதென்றால் அதைமட்டும் எடுத்து வைத்துக்கொண்டு விமர்சனம் செய்யமாட்டார். அந்த தொகுப்பின் முதல் பதிப்பு என்ன, அதற்கும் இதற்கும் வேறுபாடு இருக்கிறதா என்று பார்ப்பார். அந்த தேடுதலுக்காக கணிசமான காலத்தையும் எடுத்துக்கொள்வார். அவரை ஒரு நூலகப்புழு என்று சொல்லலாம். நூலகங்களில் நூல்களை கண்டறிவதில் ஒரு தனி ருசியும் தேர்ச்சியும் அவருக்கு உண்டு. முதல் பதிப்பை கண்டுபிடிப்பது, பல்வேறு பதிப்புகளுக்கு இடையேயான பாடபேதங்களை கண்டறிவது உள்ளிட்ட விஷயங்களை செய்யாமல் எந்தவொரு படைப்பையும் விமர்சனம் செய்யமாட்டார்.

இந்த சித்தூர் கல்லூரியில் ஜேசுதாசன் பேராசிரியராக இருக்கும்போது ஆய்வுக்கு மாணவர்கள் இல்லை என்பதற்காக ஆங்காங்கிருந்து மாணவர்களை இங்கு வரவழைத்து ஆய்வை செய்யவைத்தார். அவ்வாறுதான் வேதசகாயகுமார். ‘புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ஓர் ஒப்பாய்வு’ என்ற தலைப்பில் முனைவர்பட்ட ஆய்வை மேற்கொண்டார். அன்றைக்கு புதுமைப்பித்தனின் எழுபத்திரண்டு கதைகள் கிடைத்திருக்கின்றன. அவருக்கு முன் ஆய்வுசெய்த ஒருவர் அந்த எழுபத்திரண்டு கதைகளை வைத்து ஆய்வை முடித்துவிட்டார். ஆனால் இவர் முதலில் புதுமைப்பித்தனுடைய எல்லா கதைகளையும் சேகரிக்கவேண்டும் என்று முடிவு செய்தார். பொதுவாக அவ்வாறெல்லாம் யாரும் முனைவர்பட்ட ஆய்வுகளை செய்வதில்லை. ஏனெனில் ஆய்வு செய்வதென்பதே அடுத்து வேலைக்கு செல்லத்தான். ஆனால் இவர் அப்படியல்ல. செய்தால் அதை முழுமையாக செய்துமுடிக்கவேண்டும் என்ற எண்ணமுடையவர். அதனால் புதுமைப்பித்தனுடைய அனைத்து கதைகளையும் சேகரிக்க தொடங்கினார். அப்போது எழுபத்திரண்டு கதைகள் மட்டுமே இருந்த நிலையில் இவர் தொண்ணூற்றொரு கதைகளை கண்டுபிடித்தார். எங்கெல்லாம் எப்படியெல்லாம் கண்டுபிடித்தார் என்பதெல்லாம் கிட்டத்தட்ட ஷெர்லாக் ஹோம்ஸ் கதையைப் போன்றதே.

அதன்பொருட்டு பி.எஸ்.ராமையா, புதுமைப்பித்தனுடைய மனைவி கமலா விருத்தாசலம் போன்றோரை சென்று சந்தித்தார். ஆண்டிப்பட்டியில் ஒரு ரெட்டியார் பழைய நூல்களை சேகரித்து வைத்திருப்பதை அறிந்து அங்கு சென்று பார்த்தார். தேவகோட்டையில் ரோஜா முத்தையா செட்டியாரிடம் சென்று அங்கு மாதக்கணக்கில் தங்கி அவரிடம் இருந்த பழைய நூல்களையெல்லாம் ஆராய்ந்தார். புதுமைப்பித்தன் உயிரோடு இருந்தபோது என்னென்ன பெயர்களில் எழுதியிருக்கிறார், அவரது புனைப்பெயர்கள் என்னென்ன என்பதையெல்லாம் ஆராய்ந்தார். புதுமைப்பித்தன் பத்திரிகையில் வேலை செய்தவர். ஒரு பத்திரிகை அச்சுக்கு செல்லும்போது அதில் ஒரு பகுதி காலியாக இருக்கும். அதை நிரப்புவதற்கு அப்போதைக்கே ஒரு கதையை எழுதிக்கொடுத்துவிடுவார். ஏற்கெனவே அதில் அவருடைய கதை ஒன்று இருக்குமெனில் இக்கதைக்கு அதே பெயரை போடமுடியாது. அதனால் விருத்தாசலம் என்றோ அல்லது வேறு ஏதேனும் புனைபெயரையோ போட்டு அச்சுக்கு கொடுத்துவிடுவார். இவ்வாறு இந்தப் பெயரில் புதுமைப்பித்தன் எழுதியிருக்கக்கூடும் என்று வேறொரு அறிஞர் சொல்லி அதிலிருந்து அவரது கதையை எடுக்கிறார் வேதசகாயகுமார்.

புதுமைப்பித்தனுடைய காலகட்டத்தில் மலேசியாவில் இருந்து தமிழ் நேசன் போன்ற பத்திரிகைகள் வந்துகொண்டிருந்தன. மலேசிய இதழ்களில் எழுதினால் மலேசிய வெள்ளியில் பணம் கிடைக்கும். அதற்கு இங்கு மதிப்பு அதிகம். ஆனால் இங்கு தினமணியில் எழுதுபவர்கள் வேறு பத்திரிகைகளில் எழுதக்கூடாது என்ற நிலை இருந்தது. அதனால் புதுமைப்பித்தன் போன்றோர் பணத்திற்காக வேறு பெயர்களில் மலேசிய இதழ்களில் கதைகள் எழுதியுள்ளனர். அவ்வாறு எழுதி பணம் பெற்றதற்கான மணிஆர்டர் கூப்பனை வைத்து அவர் கதை எழுதியிருப்பதை கண்டுபிடித்தார் வேதசகாயகுமார். புதுமைப்பித்தன் தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில் தான் மலேசிய இதழில் ஒரு கதை எழுதியிருப்பதாக குறிப்பிடுகிறார். வேதசகாயகுமார் அந்த கடிதத்தைக் கொண்டு அந்த குறிப்பிட்ட இதழை கண்டுபிடித்தார். அன்று மலேசியாவுக்கெல்லாம் செல்லமுடியாது. அதனால் பழைய மலேசிய இதழ்களை சேகரித்து வைத்திருக்கும் உள்ளூர் செட்டியார் இல்லங்களுக்கெல்லாம் சென்று அந்த இதழ்களை சேகரித்து அதில் உள்ள கதைகளை எடுத்தார்.

அவ்வாறாக ஏறத்தாழ பத்தாண்டுகள் ஒவ்வொருநாளும் வேலைபார்த்து பிரதிகளை முழுமையாக சேகரித்தார். அதன் பின்னரே ஆய்வை தொடங்கினார். அடுத்ததாக, புதுமைப்பித்தன் கணிசமான கதைகளை தழுவி எழுதியிருப்பதை கண்டுபிடித்தார். அந்த கதைகள் எதுவும் புதுமைப்பித்தன் பெயரில் இல்லை. பணத்திற்காக ஏதோவொரு கதையைத் தழுவி எழுதி அதை வேறொரு பெயரில் பிரசுரத்திற்கு அனுப்பியிருக்கிறார். அவ்வாறு புதுமைப்பித்தன் தழுவி எழுதிய கதைகளை அவரது மனைவி கமலா அது அவருடைய கதைகள்தான் என்று சொன்னதால் அவற்றையெல்லாம் புதுமைப்பித்தன் மறைவுக்குப்பின் அவர் பெயரிலான அசல் கதைகளுடன் சேர்த்திருக்கின்றனர். அப்படியென்றால் புதுமைப்பித்தன் தழுவல்காரர் என்பதல்ல. ஏனெனில் அந்த கதைகளை அவர் தன் பெயரில் எழுதவில்லை. வேதசகாயகுமார் அவற்றையெல்லாம் கண்டறிகிறார். மேலும், புதுமைபித்தனுடைய மனைவி எழுதிய மூன்று கதைகளை புதுமைப்பித்தன் பெயரில் சேர்ந்திருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து எவை புதுமைப்பித்தனுடையவை, எவை தழுவல், எவை புனைப்பெயரில் எழுதியவை என்பதையெல்லாம் பகுத்துவைத்து அதன் பின்னர்தான் விமர்சனத்தை ஆரம்பித்தார். பொதுவாக எந்த விமர்சகரும் இதை செய்யமாட்டார்கள்.

அதுபோல, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் பல பதிப்புகள் வந்திருந்தன. வேதசகாயகுமார் கால்டுவெல் உயிரோடு இருந்தபோது வந்த ஒப்பிலக்கண உரை ஒன்றை காண்கிறார். அதில் கால்டுவெல் ஒரு முன்னுரை எழுதியிருந்தார். அந்த நூலை மிகுந்த பரவசத்துடன் எடுத்துக்கொண்டு என் வீட்டிற்கு வந்து காட்டினார். அந்த முன்னுரையில் ”பறையர் இன மக்கள்தான் அசல் திராவிடர்கள்” என்று கால்டுவெல் எழுதியிருக்கிறார். அந்த முன்னுரையை இரண்டாம் பதிப்பில் இருந்து எடுத்துவிட்டார்கள், ஏனெனில் அன்றிருந்த தமிழறிஞர்களுக்கு அந்த கருத்து உவப்பாக இல்லை என்பதால் நீக்கிவிட்டார்கள் என்றார். இந்த பிரதியை அவர் கண்டுபிடிக்க காரணம், சொல்புதிதில் தொல்காப்பியம் பற்றி கட்டுரை எழுதுவதற்காக தொல்காப்பிய ஆய்வுகளை அட்டவணை படுத்தும்போது கால்டுவெல் அந்நூலைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று தேடியதே. அந்த தேடலின் ஒரு பகுதியாக காலுடுவெல் எழுதிய ஒப்பிலக்கணத்திற்கு குமார் சென்றார். அந்த ஒப்பிலக்கணத்தின் மூல பிரதியை கண்டுபிடித்தார். அந்த மூல நூலில் உள்ள ஒரு முன்னுரை கிட்டத்தட்ட அறுபது எழுபது ஆண்டுகளாக வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்டதை கண்டுபிடித்தார்.

இசையறியஞர் லட்சுமண பிள்ளை பற்றி தெரிந்துகொள்வதற்காக பறக்கையில் நானும் வேதசகாயகுமாரும் அ.கா.பெருமாளும் நாங்கள் அவரது இல்லத்திற்கு சென்றோம். அந்த பகுதியில் உள்ள மக்களிடமிருந்து லட்சுமண பிள்ளை பற்றிய தகவலை சேகரித்தோம். அதில் ஒருவர் லட்சுமண பிள்ளைக்கு கிருஷ்ணசாமி என்ற மாணவர் திருவனந்தபுரத்தில் இருப்பதாக சொன்னார். உடனே திருவனந்தபுரம் சென்று கிருஷ்ணசாமியை சந்தித்தோம். அங்கு லட்சுமண பிள்ளையின் கையெழுத்து பிரதியான ஒரு கீர்த்தனையை கண்டுகொண்டோம். இவ்வாறாக குமார் தனது ஆய்வுக்காக ஒருவித புலனாய்வுத் தன்மையுடன் செயல்படக்கூடியவராக வேதசகாயகுமார் இருந்திருக்கிறார்.

(2) பிரதியை கூர்ந்து வாசித்தல் (Textual criticism)

இதை அமெரிக்காவில் New Criticism என்பர். இது கிளீன்த் புரூக்ஸ் (Cleanth Brooks) என்ற விமர்சகருடைய மரபு. அதாவது ஒரு பிரதியை மிகக்கூர்ந்து ஒருவரி விடாமல் வாசிப்பது, அந்த பிரதியில் இருக்கும் அச்சுப்பிழை, விடுபடல்கள் போன்றவைகளையும் கவனிப்பது. விஷ்ணுபுரம் முதல் பதிப்பு வந்தபோது வேதசகாயகுமார் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் விஷ்ணுபுரம் நாவலின் ஓரிடத்தில் விடுபடல் இருப்பதை சுட்டிக்காட்டினார். பாண்டிய மன்னனுடைய மனைவியாக ஒரு சோழ இளவரசி இருந்ததாக எனது மூலப்பிரதியில் இருந்தது. பின்னர் திருத்தியமைக்கும்போது அந்த மனைவி பற்றிய பகுதி நீக்கப்பட்டுவிட்டது. நாவலில் எங்குமே பாண்டிய மன்னன் மனைவி பற்றிய குறிப்பு கிடையாது. ஆனால் ஒரேயொரு வரியில் ‘முன்னால் சென்ற ஊர்வலத்தில் புலிக்கொடி இருந்தது’ என்ற தகவல் இருந்தது. வேதசகாயகுமார் அந்த இடத்தை குறிப்பிட்டு அங்கு ஒரு விடுபடல் இருந்திருக்கவேண்டும் என்றார். அது கைத்தவறுதலாக விடுபட்டதாக நான் சொன்னேன். கைத்தவறுதலாக எங்கே விடுகிறீர்களோ அங்கேதான் விமர்சகன் உள்ளே நுழைவதற்கான வாசல் உள்ளது என்றார். இது நவீன விமர்சனத்தில் முக்கியமான ஒன்று. இதை விரிசல் (Crack) என்பர். ஒரு எழுத்தாளன் கைத்தவறுதலாக கவனக்குறைவாக விடும் இடத்தை விமர்சகன் சரியாக கண்டுகொள்கிறான். வைரஸ் உள்ளே நுழைவதுபோல அந்த விரிசல் வழியாக அவன் நுழைகிறான்.

ஜெயகாந்தனின் அக்னிப்பிரவேசம் விகடனில் வெளிவந்தது. அதில் ஓர் இளம்பெண் கல்லூரிக்கு சென்றுவருகிறாள். ஒருவன் வந்து அவளை ஏமாற்றி காருக்குள் உறவு வைத்துக்கொண்டு சென்றுவிடுகிறான். அவள் அம்மாவுக்கு அது தெரிந்து தலையில் தண்ணீரை கொட்டி ‘நீ சுத்தமாயிட்டே, அதை மறந்துரு’ என்று சொல்வதாக கதை உள்ளது. அக்கதை அன்று பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நான் அக்கதை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். வேதசகாயகுமார் அதுபற்றி என்னிடம் பேசும்போது ‘அக்கதையில் அவன் கொடுத்த சூயிங்கத்தை அவள் வாயில் மென்றுகொண்டிருந்தாள். அம்மா அவளது தலையில் தண்ணீரைக் கொட்டும்போதுகூட அது அவள் வாயில்தான் இருந்தது. இது அவளுடைய மனநிலையை காட்டுகிறது’ என்றார். ஒரு படைப்பாளியாக நான்தான் அந்த விஷயத்தை தொட்டிருப்பதாக நினைத்திருந்தேன். ஆனால் அவரும் அதை தொட்டிருந்தார். அந்த சூயிங்கத்தை தொடக்கூடியவன்தான் விமர்சகன். கதையின் மையமான விஷயங்களை எடுத்துக்கொண்டு விமர்சிப்பவன் விமர்சகனே அல்ல.

திருவனந்தபுரம் கல்லூரியில் ஒரு புகழ்பெற்ற பேராசிரியர் மாணவர்களுக்கு மத்தியில் சிலப்பதிகாரம் பற்றி உரையாற்றினார். அதில், ”கோவலனை வெட்டிய தகவல் இவ்வளவு நேரம் கழித்து கண்ணகிக்கு தெரிந்தது. அவள் ஓடிச்சென்று பார்க்கிறாள். கோவலன் இறந்துகிடக்கிறான். ‘இவ்வளவு நேரம் கழித்து’ என்று ஏன் குறிப்பாக சொல்லப்படுகிறது ? அன்று தலையை ஒட்டவைப்பதற்கான தொழில்நுட்பம் இருந்தது. தாமதமாக சென்றதால்தான் கோவலன் தலையை ஒட்டவைக்க முடியவில்லை என்பதை காட்டத்தான்…” என்பதாக அவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவி எழுந்து ‘கோவலன் தலையை வாளால் குறுக்காக வெட்டினார்களா அல்லது நெடுக்காக  வெட்டினார்களா ?’ என்று கேட்டாள். பேராசிரியர் சற்று குழப்பமடைந்து ‘குறுக்காகத்தான் வெட்டுவார்கள்’ என்றார். அதற்கு அந்த மாணவி, ‘வாளொடு நெடுக போழ்ந்து என்றுதான் உள்ளது. அப்படியெனில் நெடுக்காகத்தான் வெட்டியிருக்கிறார்கள். அதை இணைக்க முடியுமா ?’ என்று கேட்டாள். பேராசிரியர், ‘நீ வேதசகாயகுமார் மாணவரா, அப்போ அப்படிதான் பேசுவாய்’ என்றார்.

வேதசகாயகுமாரை நாங்கள் பேச்சுவாக்கில் ‘டெவில்’ என்றுதான் சொல்வோம். சாதாரணமாக கடவுள்கள் போகமுடியாத இடங்களுக்குள் டெவில் சென்றுவிடும். அத்தகைய டெவில்தனமான வாசிப்பு அவரிடம் உண்டு. ஒரு சிறு தகவலையும் விடமாட்டார்.

அவர் சில இடங்களை தொடுவது என்பது அவரது வாழ்வனுபவங்களில் இருந்து வரக்கூடியது. உதாரணமாக, நாஞ்சில்நாடனுடைய ஒரு பதினைத்து கதைகளை நேர்கோட்டில் வைத்து அவற்றின் பொது அம்சம் என்னவென்று எங்களிடம் கேட்டார். எங்களுக்கு தெரியவில்லை. அவர், ‘இந்த பதினைந்து கதைகளிலுமே கதாநாயகன் கதாநாயகியை சந்திக்கும் முதல் தருணம் என்பது அவள் ஆற்றிலோ குளத்திலோ குளித்துவிட்டு வரக்கூடிய தருணமாக உள்ளது’ என்றார். ஆமாம் அதனால் என்ன என்று கேட்டேன். ’நாஞ்சில்நாட்டில் பெண்களெல்லாம் வீட்டில் வேலை செய்துவிட்டு மாலை வேளையில்தான் குளிக்கச்செல்வார்கள். அவர்கள் மிக அழகாக தெரியும் தருணம் என்பது அந்த தருணமே. இது ஆசிரியருடைய மனதில் எங்கோ பதிந்துவிட்டது. அதனால்தான் அது திரும்பத்திரும்ப கதைகளில் வருகிறது’ என்றார். இதுமாதிரியான நுட்பங்களை அவர் தொட்டுக்கொண்டே இருப்பார்.

ஒரு குறிப்பிட்ட விஷயத்தை எடுத்துக்கொண்டு அதன் பின்னால் சென்றுகொண்டிருப்பது அவர் வழக்கம். சில விஷயங்களை அவர் முடிக்கவே மாட்டார். நிறைய விஷயங்களை அவர் எழுதியது கிடையாது. ஆனால் அவற்றை பற்றி மிக அதிகமாக பேசக்கூடியவர். கால்டுவெல்லை அவர் கண்டறிந்த காலங்களில் கிட்டத்தட்ட ஆறேழு மாதங்களுக்கு கால்டுவெல்லாகத்தான் இருப்பார். கால்டுவெல் தவிர வேறு எதையும் பேசமாட்டார். மாணவர்களிடம் மட்டுமல்லாது டீக்கடைக்காரர்களிடமும் அதைத்தான் பேசுவார். என் வீட்டில் லாப்ரடார் நாய் ஒன்று இருந்தது. பொதுவாக அது தரையோடு தரையாக படிந்து படுத்திருக்கும். அப்போது அ.கா.பெருமாள் என் வீட்டிற்கு வந்தார். அங்கு படுத்திருக்கும் அந்த நாயை பார்த்து ‘நாய் அப்படியே படுத்துருச்சே, கால்டுவெல் பிரசங்கம் கேட்டுதோ’ என்றார். வேதசகாயகுமார் பேசுவதென்பது அவரே பேசிப்பேசி தனக்குத்தானே தெளிவுபடுத்திக் கொள்ளத்தான். பேசி முடிந்ததும் கிளம்பி சென்றுவிடுவார். எனக்கு அவருடைய பேச்சுக்கள் பெரும் திறப்பை அளித்துள்ளன.

அவர் பல்வேறு விஷயங்களை தொட்டு தொட்டு ஆராயக்கூடியவர். அவ்வாறு தொட்டுச்சென்று முக்கால்பங்கு அளவிலேயே விட்டுவந்த விஷயங்களும் உண்டு. உதாரணமாக, தமிழிலக்கியத்தில் ‘ஆதன்’ என்ற பெயரைப் பற்றிய அவரது கண்ணோட்டத்தை சொல்லலாம். ஆதன் என்ற பெயருடைய பொருள் என்ன, அது ஏதேனும் இனக்குழுவை குறிக்கிறதா என்கிற கேள்விகளை அவர் எழுப்புவார். நல்லாதன், ஆதனார் போன்ற பெயர்கள் இலக்கியத்தில் காணப்படுகின்றன. ஆதனூர் என்று ஒரு ஊரும் உள்ளது. பொதுவாக தமிழறிஞர்கள் அச்சொல்லுக்கு அப்பன் என்றே பொருளளிக்கிறார்கள். ஆனால் வேதசகாயகுமார் அது ஒரு குறிப்பிட்ட இனக்குழுவின் பெயராகவோ அல்லது ஒரு தெய்வத்தின் பெயராகவோ இருக்கலாம் என்று ஊகிக்கிறார். அவ்வாறு பல்வேறு இணைப்புகளை செய்து பேச்சிலேயே ஒரு சித்திரத்தை உருவாக்கிவிடுவார். அந்த விஷயம் அற்புதமாக இருப்பதாகவும் அதை எழுதும்படியும் அவரிடம் சொன்னேன். ‘உடனே எழுதவேண்டியதுதான்’ என்று கிளம்பிச்செல்வார். மறுநாள் அவரிடம் எழுதினீர்களா என்று கேட்டால், ‘இல்லை, நான்கு மாணவர்கள் வந்துவிட்டனர் பேசிக்கொண்டிருந்தேன்’ என்பார். அந்த கட்டுரையை அவரிடம் எழுதிவாங்குவதற்கு கடைசிவரை முயற்சி செய்தும் அது எழுதப்படவே இல்லை.

ஒரு விமர்சகனுடைய தகுதி என்பது அதுதான். எத்தனைபேர் எத்தனை விதமாக வாசித்திருந்தாலும் அவர்கள் கவனிக்காத ஒரு கோணத்தை, நுட்பத்தை சுட்டிக்காட்டுவதுதான் நல்ல விமர்சகன் செய்யக்கூடியது. சில படைப்புகள் தெருவில் கிடக்கும் சாக்கு போல. உலகில் உள்ள அத்தனைபேரும் அதில் நடந்திருப்பார்கள். எல்லோரும் வாசித்து எல்லோரும் கருத்து சொல்லி எல்லா பள்ளிகளிலும் பாடமாகவும் இருக்கும். ஆனால் அந்த படைப்பிலும் வேதசகாயகுமாருக்கென்று ஒரு வாசிப்பு இருக்கும். உதாரணமாக யானை டாக்டரை சொல்லலாம். அது தமிழ்நாட்டில் அதிகம்பேரால் படிக்கப்பட்ட கதை. அதுபற்றி வேதசகாயகுமார் ஒன்று சொன்னார். அக்கதையில் புழுவுக்கும் யானைக்கும் ஒரு தொடர்பு உள்ளது. யானையின் அசைவில் ஒரு புழுவின் சலனம் உண்டு. யானையின் உடலில் ததும்பக்கூடிய ஒரு தன்மை உண்டு. அது புழுவின் ததும்பல்தான். மிகப்பெரிய யானையில் இருந்து மிகச்சிறிய புழுவுக்கு வரக்கூடிய ஒருவித உடல் ததும்பல் என்றார். எனக்கு அது ஆச்சர்யமாக இருந்தது. அது எனக்கே தெரியாமல் நான் எழுதியது. அதுதான் ஒரு விமர்சகனுடைய இடம்.

ஒரு விமர்சகராக, ஆய்வாளராக வேதசகாயகுமார் தமிழிலக்கியத்தில் பெரிய இடத்தை வகிப்பவர். பெரும் ஆசிரியர்கள் சாவது கிடையாது. அவருடைய மாணவர்கள் வழியாக அவர் மீண்டும் வந்துகொண்டே இருக்கிறார். எங்களது ஏதோவொரு உரையாடலில் அவர் அவ்வப்போது வந்துவிடுவார். இத்தருணத்தில் அந்த அழிவற்ற ஆசிரியனுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

*

கேள்வி பதில்கள்

கேள்வி 1: வேதசகாயகுமார் வெங்கட் சாமிநாதனின் விமர்சன மரபில் வந்தவர் என்று சொல்லப்படுவதுண்டு. நாங்கள் அவரை அவ்வாறுதான் அறிகிறோம். சஜனுடைய நூலிலும் அவ்வாறான குறிப்பு வருகிறது. கா.ந.சு., சு.ரா. போன்றோரின் செல்வாக்கும் அவரிடம் உண்டு. ஆனால் நீங்கள் பிரமிளுடைய தாக்கம் அவரிடம் உண்டு என்கிறீர்கள். அதை விளக்க முடியுமா ?

பதில்: ஒரு இலக்கிய விமர்சகரை எடுத்துக்கொண்டால் அவருக்கு பல்வேறு முன் தொடர்ச்சிகள் இருக்கும். ஒரே ஒரு நபரின் நேரடி தாக்கம் மட்டுமே அவரிடம் இருக்காது. அவ்வாறு ஒருவரை சொல்வதென்பது அவரை குறுக்குவதாகும். பிரமிள் தொடர்ச்சியாக ஆறாண்டுகள் நாகர்கோயிலிலும் திருவனந்தபுரத்திலும் இருந்தவர். அவருடன் வேதசகாயகுமாரும் இருந்திருக்கிறார். பிரமிளுடைய வலுவான செல்வாக்கு அவரிடம் உண்டு. பிரமிள், சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் ஆகிய மூவருடைய தொடர்ச்சியாகத்தான் வேதசகாயகுமாரை நாம் பார்க்க வேண்டும். வெங்கட் சாமிநாதனின் நேரடி தொடர்ச்சியாக மட்டும் பார்க்கக்கூடாது. வெங்கட் சாமிநாதனில் இருந்து வேதசகாயகுமார் முரண்படக்கூடிய இடங்கள் வலுவானவை.

(1) வெங்கட் சாமிநாதன், படைப்பை ஒருவித இயல்கடந்த பித்துநிலையாக (trance) மட்டும்தான் பார்க்கிறார். வேதசகாயகுமார் அவ்வாறு பார்க்கக்கூடியவர் அல்ல. ஒருவித பண்பாட்டு பயிற்சியாகத்தான் இலக்கியம் வருகிறதேவொழிய தன்னை மீறிய பித்து நிலையில் இருந்து வருவதல்ல. எழுத்தின்போது தன்னைமீறிய ஒரு நிலை இருக்கலாம், ஆனால் எப்போதும் அப்படியல்ல என்பதே அவர் கருத்து.

(2) வெங்கட் சாமிநாதன் தமிழ் இலக்கியத்தின் சாதனையாளராக யாரை முன்வைத்தாரோ அவர்களை வேதசகாயகுமார் முன்வைக்கவில்லை. உதாரணமாக, வெங்கட் சாமிநாதனின் பார்வையில் லா.ச.ரா. மிகப்பெரிய படைப்பாளி. ஆனால் வேதசகாயகுமார் அவ்வாறு கருதவில்லை. லா.ச.ரா. வின் எழுத்து ஒரு குறுகிய கலாச்சார வட்டத்துக்குள் மட்டும் நிற்பது என்றே மதிப்பிடுகிறார். மௌனியை ஒரு மகத்தான சாதனையாளராக வெங்கட் சாமிநாதன் பார்க்கிறார். வேதசகாயகுமார் பார்வையில் மௌனி, லா.ச.ரா. போன்றோரை விட புதுமைப்பித்தனே மகத்தான சாதனையாளரும் முன்னோடியுமாக இருக்கக்கூடியவர். வேதசகாயகுமார் பித்துநிலை போன்ற தெளிவற்ற கருத்துநிலைகளை ஏற்கக்கூடியவர் அல்ல. ஆகையால் அவரை வெங்கட் சாமிநாதனின் தன்னிச்சையான தொடர்ச்சியாக கொள்ளமுடியாது.

(3) வெங்கட் சாமிநாதன் பல்வேறு கலைகளை இணைத்துக்கொண்டு இலக்கியத்தை அணுகக்கூடியவர். சினிமா, நாட்டுப்புற கலைகள், கோவில் கலைகள் போன்றவைகளை இணைத்துக்கொண்டே அவர் இலக்கியத்தை பார்த்தார். அத்தகைய பார்வை வேதசகாயகுமாரிடம் இல்லை. அவரை ஒரு இலக்கிய தூய்மைவாதி என்றே சொல்லலாம். அவருக்கு வேறு கலைகளில் பெரிய ஆர்வம் இருந்ததில்லை. பாடல் கேட்பதோ, கூத்து பார்ப்பதோ அவரால் இயலாது.

இத்தகைய பல்வேறு அம்சங்கள் அவரை வெங்கட் சாமிநாதனிடமிருந்து தனித்து நிறுத்துகின்றன.

அதுபோல, அவருடைய ஆய்வுமுறைமை என்பது முழுக்கவே ஆங்கில இலக்கிய விமர்சகர்களிடம் இருந்து (குறிப்பாக அமெரிக்க விமர்சகர்கள்) அவர் எடுத்துக்கொண்டது. அய்யப்ப பணிக்கரிடமிருந்துதான் அமெரிக்க முறைமையான Textual Criticism என்பதற்குள் அவர் செல்கிறார். அது அவருடைய தனித்தன்மை. அவருடைய எழுத்துநடை பெரும்பாலும் சு.ரா.வின் தன்மையுடையது. அதேவேளை மொழிசார்ந்து ஒரு விஷயத்தை மதிப்பிடும் தன்மை, மொழியில் உள்ள தரிசன வெளிப்பாட்டை சரியாக கண்டறிந்து அதை எடுத்து முன்வைக்கும் தன்மை போன்றவை பிரமிளிடம் இருந்து அவருக்கு வந்திருக்க வாய்ப்புண்டு. ஆகையால் அவருடைய முன்னோடிகள் என்று இவர்கள் எல்லோரையும்தான் சொல்லமுடியும். தனி ஒருவருடைய தொடர்ச்சியாக மட்டும் அவரை மதிப்பிட முடியாது.

*

கேள்வி 2: பொதுவாக தமிழர்களுக்கு மலையாளமும் மலையாளிகளுக்கு தமிழும் தெரியாது. ஆனால் இது ஒரு திராவிட குடும்பம்தான். இங்கு ஒரு மலையாளி தமிழ் பேசினால் ரசிக்கிறோம். ஆனால் ஒரு தமிழன் மலையாளம் பேசும்போது உச்சரிப்பில் தவறு ஏற்பட்டால் கிண்டல் செய்யப்படுவோம். ஒரே மொழிக்குடும்பம், ஒரே தாய்க்கு பிறந்த நான்கு குழந்தைகள் என்றெல்லாம் சொல்கிறோம். ஆங்கிலம் உட்பட அனைத்து மொழிகளையும் மதிக்கிறார்கள். ஆனால் தமிழை ஏதோ தாழ்த்தப்பட்டதுபோல பார்க்கிறார்கள். இங்கு பல்வேறு ஜாதி, மதங்களுக்கு மத்தியில் நாம் ஒன்றாக இருக்கிறோம். ஆனால் தமிழும் மலையாளமும் திராவிடம் என்ற பெயரால்கூட ஒன்றாக இல்லையே, ஏன் ?

பதில்: முதலில், திராவிட மொழி என்று ஒரு மொழி கிடையாது. கால்டுவெல் தென்னகத்தில் இருக்கக்கூடிய மொழிகளுக்கான இலக்கண கட்டமைப்பில் சில பொதுமைகள் இருப்பதைக் கொண்டு அவற்றை திராவிட மொழி என்று குறிப்பிட்டு காட்டினார். நமது சிற்ப சாஸ்திரங்களில் திராவிடம் என்ற சொல் உள்ளது. அது தென்னகத்தை ஒட்டுமொத்தமாக குறிப்பிடும் ஒரு பொதுச்சொல்லாக பயன்படுத்தப்பட்டது. திராவிட கட்டடக்கலை என்று சொல்கிறோம். நமது தென்னக கோபுரங்களெல்லாம் திராவிட கட்டடக்கலையை சார்ந்தவை. இந்தப் பொருளிலேயே இச்சொல் தென்னகத்தில் புழக்கத்தில் இருந்துகொண்டிருந்தது. திருஞானசம்பந்தரை ஆதிசங்கரர் திராவிடசிசு என்று குறிப்பிட்டார்.

திராவிடம் என்ற சொல்லே ஒரு சம்ஸ்கிருத சொல்தான். தமிழ் நூல்கள் எதிலுமே திராவிடம் என்ற சொல் கிடையாது. சம்ஸ்கிருத ஆகமங்களிலும் சம்ஸ்கிருத சிற்ப சாஸ்திரங்களிலும்தான் அச்சொல் காணப்படுகிறது.

பின்னாட்களில் வெள்ளையர்கள் இங்கு வந்து தென்னக மொழிகளை ஆராயும்போது இங்குள்ள கூட்டு மொழிக்குடும்பத்திற்கு ஒரு பெயரிட வேண்டும் என்பதற்காக திராவிடம் என்ற பெயரை இட்டனர். நாம் அதை ‘இனம்’ என்பதாக மாற்றிக்கொண்டுவிட்டோம். திராவிடம் என்பது மொழிக்குடும்பத்தின் பெயர்தானே ஒழிய இனத்தின் பெயர் அல்ல. அதன்பின்னர் அயோத்திதாசர் தலித் மக்களை ஆதிதிராவிடர் என்று அழைத்தார். தென்னக மொழிகளுக்கு ஒரு பொதுவான இலக்கணம் இருப்பது உண்மை. அதற்கு மேல் அது ஒரே இனமாகவோ மொழியாகவோ தேசமாகவோ இருந்தது கிடையாது.

தென்னகத்தில் இருக்கும் இந்த பகுதிகளெல்லாம் ஒருகாலத்தில் ஒன்றுக்கொன்று கலந்து இருந்துள்ளன. கேரளத்தில் திருவிதாங்கூரின் அதிகாரபூர்வ மொழியாக நெடுங்காலம் தமிழ் இருந்துள்ளது. தமிழின் முன்வடிவமாகிய கொடுந்தமிழ் என்ற மொழியில்தான் மலையாள படைப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன. மலையாளத்தின் பல்வேறு வெளிப்பாடுகள் தமிழிலும் உண்டு. ஆனால் 1956 இல் நாம் மொழிவாரி மாநிலங்களாக பிரிந்துவிட்டோம். அதற்கு முன்புவரை நமது மனப்பான்மை ஒன்றாக சேரவேண்டும் என்பதாக இருந்தது. 1956 க்கு பிறகு தனித்து செல்லவேண்டும் என்ற மனப்பான்மை உண்டாகியது. ஆகவே இன்றைக்குள்ள மனநிலை என்பது பிரிந்துகொண்டே செல்லவேண்டும் என்பதே. இன்று மலையாளம் தனது மலையாள தன்மையையும், தமிழ் தனது தமிழ் தன்மையையுமே முன்னிறுத்த முயலும். இது இன்று இந்தியா முழுக்க இருக்கும் அரசியல்ச் சூழல்.

தற்போது கேரளம் தவிர மற்ற மாநிலங்களில், அந்தந்த மாநில மொழிகளை தவிர்த்து வேறு மொழிகளையும் பேசுபவர்கள் கணிசமாக உள்ளனர். தமிழ்நாட்டில் ஏறத்தாழ 30-35% மக்களுக்கு தாய்மொழி தமிழ் கிடையாது. தெலுங்கு பேசுபவர்கள் பெரிய அளவில் உள்ளனர். கன்னடம், சௌராஷ்டிரம், உருது பேசக்கூடிய மக்களும் இருக்கின்றனர். அதுதவிர தோடர்கள் போன்று சிறுசிறு மொழிகள் பேசக்கூடியவர்கள் இருக்கின்றனர். அதுபோல கர்நாடகத்தில் ஏறத்தாழ 40% பேர் தெலுங்கும் மராட்டியும் பேசுபவர்கள். மஹாராஷ்டிரத்தில் பெரும்பாலான இடங்களில் பேசப்படும் மொழி போஜ்புரியும் இந்தியும்தான். மராட்டிய மொழி பாதிக்கும் கொஞ்சம் மேல்தான். ஆனால் மராட்டி மட்டும்தான் அங்கு உள்ளது. எழுத்துருக்கள் எண்ணுருக்கள் யாவும் மராட்டியிலேயே உள்ளன.

இவ்வாறு மொழிவாரி மாநிலப்பிரிவினையை ஒட்டி மொழி அடிப்படைவாதம் வளர்ந்து ஒவ்வொரு பகுதியும் தங்களை மொழி அடிப்படையில் வரையறை செய்யத்தொடங்கியபோது இந்த பிரிவினை மனப்பான்மை வந்துவிட்டது. நீங்கள் மதம் அளவுக்கு ஒரு மொழியை கைக்கொண்டீர்கள் என்றால் வேறொரு மொழியை நிராகரிப்பீர்கள். தமிழ்தான் எல்லாம் என்று சொல்லும்போது மலையாளத்தை நிராகரிப்பீர்கள். இதுபோலத்தான் எல்லா மாநிலங்களிலும் நடந்துகொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் கல்வி, தொழில்நுடபம் வளர்ந்து மக்கள் மனம் விரிவடையும்போது இன்றைக்குள்ள மொழிவழி அரசியல் இல்லாமலாகி மாற்றம் ஏற்படலாம்.

*

கேள்வி 3: பாலக்காடு பகுதியில் இருக்கும் சிற்றூர்கள் பல தமிழகத்துடன் இருந்ததில்லை. அதேசமயம் இங்கிருக்கும் நாங்கள் யாரும் வந்தேறிகள் அல்லர். இந்த பகுதி கேரளம் ஆனபோது பாலக்காடு தமிழகம் சேர்ந்த பகுதிகள். தமிழக முதல்வர் பேசும் தமிழ் இங்கிருக்கக்கூடிய இடது, வலது என அனைவருக்கும் புரியும். ஆனால் நாங்கள் இங்குள்ள அரசு அலுவலகங்களில் சென்று தமிழில் பேசினால் எங்களை மலையாளத்தில் பேசும்படி சொல்கிறார்கள். ஜாதி, மதம் இல்லாத, கல்வியறிவு பெற்ற கேரள மண்ணில் மொழி அடிப்படைவாதம் உள்ளதோ என்ற கேள்வி எழுகிறது.

பதில்: அது இங்கு மட்டுமல்ல, பெரும்பாலான இடங்களில் உள்ளது. குமரி மாவட்டம் கிட்டத்தட்ட 40% மலையாளிகள் வாழும் பகுதி. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைமையகமாக இருந்ததே பத்மனாபபுரம் தான். அவை காமராசர், நேசமணி போன்றோரின் முயற்சியால் தமிழகத்துடன் இணைந்தன. அதற்கு பல காரணங்கள் உண்டு. தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஐந்து அணைகளில் மூன்று அணைகள் அந்த மாவட்டத்தில் உள்ளன. தமிழ்நாட்டின் மொத்த மீன்வளத்தில் 20% அங்குதான் கிடைக்கிறது. மொத்த மின் உற்பத்தியில் 15% கிடைக்கிறது. குமரிமாவட்டம் என்பது ஒரு பெரிய கருவூலம் போல. அது பாலக்காடு போன்றதல்ல. அதனால் அதை குறிவைத்து தமிழகம் எடுத்துக்கொண்டது. அங்குள்ள மலையாளிகள் தமிழகத்துடன் இணைந்தனர். அவர்களை இன்றைக்கும் வந்தேறிகள் என்று சொல்பவர்கள் உண்டு. அவர்கள் வந்தேறிகள் அல்ல. நீண்டகாலமாக அங்குதான் இருக்கின்றனர். அவர்களுடைய பகுதி தமிழகத்துடன் இணைந்துவிட்டது. ஆனால்  கிட்டத்தட்ட 90% பேர் தமிழர்களாக மாறிவிட்டனர். தமிழில்தான் பேசுகிறார்கள், தமிழில்தான் படிக்கிறார்கள்.

அதுபோல ஓசூர் பகுதி பெரும்பாலும் கன்னடமும் தெலுங்கும்தான். ஆனால் இன்று அங்கு அம்மொழிகள்  இல்லை. மொழிவழி மாநிலங்கள் அமைந்தவுடனேயே இந்த மொழி அடையாளம் எல்லா இடங்களிலும் திணிக்கப்படுகிறது. அரசியல், ஆட்சி, நிர்வாகம் அவ்வாறுதான் செயல்படுகிறது. ஆகையால் இங்குள்ள (பாலக்காடு போன்ற பிறமொழி பகுதிகளில்) தமிழர்கள் தமிழ்த்தன்மையை தங்களது கலாச்சார தனித்தன்மையாக பேணிக்கொள்ளலாமேவொழிய பொதுவெளியில் அதை கோரமுடியாது. தமிழ்நாட்டிலும் அதேதான் நிலைமை. ஊட்டியில் உள்ள படுகர்கள் படுக மொழியில்தான் நிர்வாகம் இருக்கவேண்டும் என்று கோரமுடியுமா ? நிர்வாகம் தமிழில்தான் இருக்கும். ஆகையால் இன்றைய ஆட்சி, நிர்வாகம் அடிப்படையில் இதை தவிர்க்க முடியாது என்றுதான் சொல்வேன்.

எழுத்துவடிவம் விவேக்ராஜ்

முந்தைய கட்டுரைநிர்மால்யா
அடுத்த கட்டுரைகவனித்தலின் அடிப்படை என்ன?