ஆகஸ்ட் 14 ,15ஆம் தேதி நடந்த பெரியசாமி தூரன் விக்கி விழாவின் நிகழ்வுகளை இன்னும் அசை போட்டுக் கொண்டிருக்கிறேன். விழாவிற்கு போனதும் வந்ததும் அதிவேகமாகக் கடந்து விட்டது. பார்த்த எல்லோருடைய பெயரையும் அவர்களுடைய முகங்களோடு இணைத்து சேமித்துக் கொள்கிறேன். முதல் தடவையாக இந்த விழாவிற்கு வருகிறேன். இன்னும் இன்னும் என்று அள்ள அள்ள குறையாத கருவூலங்கள். விழா சிறப்பாக நடைபெறுவதும், அரங்கு, உணவு தங்குமிடம் எல்லாம் அதனதன் வழியில் சீராக சென்றதும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் நிகழ்வுகளுக்கு புதிது அல்ல. என்னுடையஉணர்வுகளை சொல்ல நினைத்த அளவு சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. இலக்கிய படைப்பாளர்களுக்கு இவ்விழாவின் அமர்வுகள் திறக்கும் கதவுகள் ஏராளம். ஒவ்வொரு அமர்விலும் எனக்கு கிடைத்த தரிசனங்களை பற்றி கூறத்தான் இந்த கடிதம்.
முதல் அமர்வில் சுவடியியல் முனைவர் கோவை மணியின் வகுப்பு. 14ந் தேதி நண்பகல் வகுப்பு முடியும் சமயத்தில் அப்பொழுதுதான் கோயம்புத்தூரில் இருந்து வந்து அமர்ந்த எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. மேல் கொம்பு கீழ்க்கொம்பு என்று அவர் வினவ மிகவும் தயக்கமாக ஒன்று இரண்டு பேர் முனக அய்யய்யோ என்ற சோர்வடைந்தேன். வகுப்பிற்கு பின் அவர் பவர் பாய்ண்டில்(Power Point) ஓலைச்சுவடு படிப்பதின் பயிற்சியை கொடுத்த பொழுது ஒரு சொடுக்கில் எல்லாம் புரிய ஆரம்பித்தது. அவர் அமர்வில் எனக்கு கிடைத்த தரிசனம், எழுத்தாணியை கட்டைவிரல் நகத்தினூடே எழுதும்பொழுது நகர்வது ஓலைச்சுவடி என்று புதிர் ஓன்றை சொன்னார் .
முன்னோர்கள் எழுதியதை படிவம் எடுக்கும்பொழுது தவறுகள் வர வாய்ப்பும் உண்டு . ஓரொரு நூலிலும் சில தவறாக படிவங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் அதை பரிசீலிக்கும் நேரம் வந்துவிட்டது என்றார் . இதற்கு உதாரணமாக அவர் திருக்குறள் ஒன்றை எடுத்துக்காட்டாக கூறினார். எண்பது விகிதம் சுவடிகள் இன்னும் ஆராயப்படவில்லை என்னும் பொழுது எத்தனையோ சமுதாயத்தின் கூறப்படாத வரலாறுகள் கருவூலமாக காத்துக் கிடக்கின்றன என்று வியப்பாகின்றது .
இதன் தொடர்ச்சியாக ஜெ .மோ மாலை கூடிய விழாவில் ஒரு கணிப்பொறி மென்பொருள் உருவாக்கலாம் ஒரு சுவடியை எந்தெந்த விதத்தில் தவறுகள் இருக்கக்கூடும் எத்தனை விதமாக திருத்தக்கூடும் எவ்வளவு விதங்களாக படிவங்கள் உருவாக்க முடியும் என்று மென்பொருள் வழி நாம் செய்ய முடியும் என்று கூறினார் . இது நடக்க கூடியதுதான். ஒரு மானிட மரபணுக்களின் வரிசையை (sequence of DNA) அலசி ஆராய்ந்து அதில் ஆழ்ந்த புதைந்திருக்கும் நுண்விவரங்களை ஒரு வினாடியில் சொல்லும் மென்பொருட்கள் உள்ளன. அதுபோல் மென்பொருட்கள் நோக்கி நகரவேண்டியது அடுத்தகட்ட செயல்.
அடுத்த அமர்வு காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ப. ஜெகநாதன்அவர்களுடையது .அழகான பறவைகள் , கானுயிர் படங்கள் காண்பித்த பிறகு பறவைகளின் வலசை பற்றி கூறிக் கொண்டிருக்கிற பொழுது, ஜெ.மோவின் விசும்பின் கதை இணையாக என் நினைவில் ஓடிக்கொண்டிருந்தது. அக்கதையின் பறவை ஆராய்ச்சியாளர் வலசை பற்றி ஆராய்கிறார். ஊதாக்கதிர்களின் வழியை மாற்றுகிறார்.அதன் விளைவை அறிய அவர் வெளிநாடு சென்றிருக்கிறபொழுது எதிர்பாராத விதமாக அவர் இருக்கும் இடத்திலேயே தென் அமெரிக்கப்பறவை ஒன்று வருகின்றது. பலபல பறவைகள் பெயரை அனாயசமாகஆண்ட கதையில் ஜெ.மோ எழுதியிருப்பார்.
நினைவலைகளை மோப்பம் பிடித்தது போல் முனைவர் ஜெகநாதன் அமூர் பருந்து வலசை பற்றி கூறும் பொழுது அதன் வலசை தொடங்கும்பொழுது அதன் இரையான தட்டானும் தன் வலசையை தொடங்குகிறது. போகும்வழியிலேயே பருந்துக்கு உணவாகும் என்று தெரிந்தும் அது வல சையை தொடர்கிறது என்று சொன்னதும் இயற்கையின் எத்தனையோ விளையாட்டில் இதுவும் ஒன்று என்று பட்டது . இரையும் இரைதேடுபவனும் ஒன்றாக பயணிக்கும் வினோதம்.(the Prey and the Predator) இப்புதிர் எத்தனை ஜீவராசிகளில் நடக்கிறது. இதன் போராட்டங்களில் இறுதியில் வெற்றி தோல்வி இல்லாது காலம் நகர்கிறதோ . முடிவு தான் என்ன? நம்முள் யார் யார் இரையாகிறோம் யார் யார் இரையை தேடுகிறோம் ? ஆலம் கதை எல்லாம் நினைவுக்கு இந்த இணைப்பயணமே பல நூறு காவியங்களின் அடிப்படையாகக்கூடும்நம் எழுத்தாளர்களுக்கு என்று தோன்றியது.
இதே கதையில் அந்த பறவை ஆராய்ச்சியாளரின் தந்தையின் புலம்பல்” உங்களால் ஒரு பூச்சியை கூட முழுசாக அறிந்து விட முடியாது அங்கே சைபீரியாப் பறவைகள் கிளம்பும் பொழுதே இங்கே அவற்றுக்கு உணவாகும் பூச்சிகளும் மீன்களும் முட்டை போட ஆரம்பித்து விடுகின்றன “.உண்ணுவதும் உணவு தேடுவதும் என்னும் செயலில் ஒரு நியதியும் ஒழுங்கும் இருப்பதை முனைவர் காட்டிய தரிசனமாக நினைக்கிறேன் .
அடுத்த நாள் காலையில் கல்வெட்டு அறிஞர் வெ. வேதாசலம் அவர்களின் அமர்வு தமிழ்நாட்டின் அகழ்வாராய்ச்சி பற்றி மசாலா உணர்ச்சிகள் துணை எதுவுமில்லாமல் உண்மைகளை தெளிவாக வைத்தார். கீழடியை விட தொன்மையான இடங்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன என்று தெளிவாக கூறினார் உண்மையை நிலைநாட்டுவது மட்டுமே ஆராய்ச்சியாளர்களின் கடமை என்று மென்மையான ஆனால் அறுதியாக கூறிய அவர் குரல் ஒரு தரிசனம்.
அடுத்த நாள் குகை ஓவிய அறிஞர் காந்திராஜன் அமர்வு. இவ்வளவு பாறை ஓவியங்கள் தமிழ்நாட்டில் இருப்பது கூட சிலருக்கே தெரியும் என்று நினைக்கிறன் . சிவப்பும் வெள்ளையும் சில சமயம் மஞ்சள் நிறங்களான ஓவியங்கள், நான் நினைத்தது போல இது தாவரங்களின் இலைகளோ பட்டைகளில் எடுத்த வண்ணங்கள் அல்ல(organic ) அந்த நிறம் கொண்ட வேதியப் பொருட்கள்(inorganic minerals) என்று அறிந்ததும் அதிர்ச்சியான நான் ஏதாவது நீல நிற ஓவியம் கிடைத்ததா என்று கேட்ட பொழுது “அது எப்படி முடியும் நீல நிறம் தான் எல்லாவற்றிலும் இளமையான வண்ணம் என்று அவர் கூறியது ஒரு தரிசனம்.
மற்ற குகை ஓவியங்கள் எல்லாம் 20,000 அல்லது 30,000 ஆண்டுகள் முன்பு என்று கணக்கிடும்பொழுது பொது யுகம் ஐந்தாம் நூற்றாண்டில் அல்லது நான்காம் நூற்றாண்டிலோ தான் நீலம் கண்டுபிடிக்கப்பட்டது. நிறங்களில் இளமை என்னும் ஒரு கருத்து புதிதாக இருந்தது. கடல் விசும்பு என்று பார்க்கும் இடங்கள் எல்லாம் நீலம் இருந்தும் அதை தன் ஓவியத்தில் கொண்டுவர முயற்சி செய்யாமலே இருந்திருப்பானா குகை மனிதன்.பாறைஓவியங்களின் வயதை ஆய்வு செய்ய தெர்மல் லுமினேசன்ஸ் அல்லது தோரியம்(thermoluminescence, OSL, Uranium/thorium) பயன் படுத்துவதை கூறினார்.
இறுதியில் சிகரம் வைத்தது போல் மலையாள விமர்சகர் எம். என். காரசேரி உடன் உரையாடல். ஆசிரியர் பஷீர் பற்றி நகைச்சுவையும் உணர்வுகளோடும் மலையாளத்தில் நிகழ்த்திய உரையாடலை கணினியை விட வேகமாக தமிழில் மொழி பெயர்த்த ஜெ. மோ விற்கு நன்றி. ஒவ்வொரு தடவையும் புரிந்த பிறகு கைதட்டி சிரித்த மக்கள். கடைசியாக பஷீர் வாழ்க்கையை அவர் புரிந்து கொண்ட சாராம்சமாக கூறியது இது “நம் காலம் குறைவாக இருக்கிறது.அல்லாஹ்வின் கஜானாவில் மட்டும் காலம் அதிகமாக இருக்கிறது ” என்று முடித்த பொழுது எனக்கு கிட்டியது ஐந்தாவது தரிசனம்.
இசை விழாவில் பிஞ்சுக் குழந்தை முதலில் பயத்தோடும் பின் நம்பிக்கையோடும் காம்போஜி ராகத்தில் வாசித்த பொழுது ஒரு கவித்துவமான முடிவாக இருந்தது.
மிகவும் நிறைந்திருக்கிறது மனம். நாம் தேடினால் இணைத்தளங்களில் எல்லா தகவல்களும் கிடைக்கும். அவைகள் எல்லாம் ஜெ.மோ சொல்வது போல் தகவல்கள் தான் அனுபவம் அல்ல. ஓலைச்சுவடிகளோடும் கானு யிர்களோடும் அகழ்வாராய்ச்சிகளிலும் பாறை ஓவியங்களோடும் காவியங்களோடும் வாழ்ந்த குருமார்கள் அளித்தது தெரிந்தெடுத்த அருட்மணிசுடர்கள் என்று வணங்கி நன்றி கூறுகிறேன்.
வணக்கம்
மாலதி
கோவை