அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். நான் என் தந்தையின் மறைவை முன்னிட்டு ஆகஸ்ட் ஏழு முதல், எனது சொந்த கிராமத்தில் இருக்கிறேன். நீங்கள் புக் பிரம்மா வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கியது, தமிழ் விக்கி விருது விழா நடப்பு என எல்லாவற்றையும் பின்னணியில் கவனித்துக்கொண்டுதான் வருகிறேன். இதனுடன் கடலூர் சீனு பற்றிய முகநூல் குமரலும் என் காதுக்கு வந்தது. அதை கவலையாக சொன்ன நண்பரிடம், அதற்கெல்லாம் பதில் எதற்கு சொல்லவேண்டும், நாம் நம் வேலையை கவனிப்போம் என்றேன்.
தங்கள் தளத்தில் கடலூர் சீனு, மனோஜ் குரூர்/கே.வி. ஜெயஸ்ரீ-யின் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ பற்றி எழுதிய கட்டுரையும், ‘சோற்று கணக்கு’ பற்றிய வாசிப்பனுபவமும் வாசித்து பிரமித்து அவரது ரசிகனானவன் நான். மீதமுள்ள அவரது கட்டுரைகளை தேடி தேடி வாசித்தேன். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விழாக்களில் கலந்துகொள்ள ஆரம்பிக்கும் முன்னரே அவரை அழைத்துப் பேசினேன். 2019-ல் அவரையும் பார்க்கவேண்டும் என்ற ஆவலுடன்தான் வந்தேன். அகத்தில் நிறைத்து வைத்திருந்த சீனு ஒல்லியாக தாடியுடன் இருந்தது கண்டு சிறிது ஷாக் வேவ் அடித்தாலும், நிறைந்தவருக்கு உள்ள பார்வையும் சிரிப்பும் அர்ஜூனனின் வண்ணமும் இருந்தது கண்டு மகிழ்ந்தேன்.
நானும் ராலே ராஜனும் வெண்முரசு ஆவணப்படத்திற்காக, கடலூர் சீனுவை காணொளி அனுப்ப கேட்டபொழுது, வீடியோ-வா வேண்டாம் என்று மிகவும் சங்கோஜப்பட்டார். உங்கள் காணொளி இல்லையெனில் ஆவணப்படம் வெளியே வராது என்றோம். நித்யா-வின் சீடனாக உங்களை அவர் வரித்து சொல்லும் வரியை முகப்பு காட்சிகளில் வரும் தலைப்பு வாக்கியங்களில் ஒன்றாக்கினோம்.
இன்றைய வளர்ந்து வரும் கவிஞர்களை அறிந்துகொள்ள நான் அணுகுவது எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் தளத்தையும், kavithaigal.in -ல் கடலூர் சீனு அவர்கள் தொடர்ந்து எழுதும் கட்டுரைகளும்தான். பொன்முகலி-யை சீனு-வின் கட்டுரையின் வழியாக அறிந்தே, யார் இந்தப் படைப்பாளி என்று பின் சென்றேன். விட்டகலா குருதிக்கறை கட்டுரையில் ஒரு புனைவு எழுத்தாளனுக்குள்ள அக எழுச்சியும், கலைஞனே அறியாமல் எழுதும் வரிகளும் இருப்பதை காணலாம். கடலூர் சீனு-வும் யூமா வாசகியும் இணையும் இடத்தை காணும் எந்த ஒரு வாசகனும் அவருக்குள் உள்ள படைப்பாளியை இனம் காண்பான்.
எனது தனிப்பட்ட உரையாடலில், உங்கள் கட்டுரைகளை தொகுத்து ஏன் புத்தகம் போடக்கூடாது என்று கேட்டிருக்கிறேன். இணையத்தில் வரும் கட்டுரைகளும், ஜெயமோகன் தளத்தில் வரும் கட்டுரைகளும் போதுமென நிறைவாக சொல்வார். க. நா.சு. உரையாடல் அரங்கிற்கு நான் எழுத்தாளர்களை அழைக்கும்பொழுது , அவர்களது படைப்புகளை பற்றி கடலூர் சீனு பேசுவாரா என்று ஆவலுடன் விசாரிப்பார்கள். அவர்கள் கொடுக்கும் அங்கீகாரத்தைவிட வேறு என்ன வேண்டும் கடலூர் சீனு-வை முன்னிறுத்த? அவரை அறிந்துகொள்ள நாமும் அதிகம் வாசிக்கவேண்டியுள்ளது. நமக்கு எங்கே அதற்கெல்லாம் நேரம் ? புக் பிரம்மா மட்டும் இல்லை , தமிழ் இலக்கியத்திலும் கடலூர் சீனு-வுக்கு இடம் உண்டு என்று வாசிக்கும் கூட்டத்திற்கு தெரியும்.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்