அன்புள்ள ஜெ
நலம் என நினைக்கிறேன்.
கடலூர் சீனு உள்ளிட்ட உங்கள் இளவல்களைப் பற்றியும் அவர்களின் சாதனைகளைப் பற்றியும் எழுதியிருந்தீர்கள். அவர்களிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள் என்று சொல்லியிருந்தீர்கள். அதில் முக்கியமாக அந்தியூர் மணி முன்னால் மாணவராக அமர்ந்து கற்றுக்கொள்வதாகச் சொல்லியிருந்தீர்கள். அது உங்களுடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. ஆனால் உண்மையிலேயே அவர்களிடம் அந்த வகையான உறவைத்தான் கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் இதுவரை எழுதியது, பேசியது எல்லாவற்றையும் எப்படி எடுத்துக்கொள்வது?
சங்கர் கிருஷ்ணன்
அன்புள்ள சங்கர்,
நான் என்னைப்ப்பற்றிக் கொண்டுள்ள மதிப்புகளில் ஒன்று நான் நல்ல மாணவன் என்பது. எப்போதும் கற்றுக்கொண்டே இருப்பவன், இன்றுவரை ஒருநாள் கூட கற்பதை நிறுத்தாதவன் என்பது.அதை கொஞ்சம் பெருமிதமாகவே சொல்லிக்கொள்வதுமுண்டு.
என் இளமையில் அறிஞர்கள், ஞானிகள் என்று சொல்லத்தக்கவர்களை தேடிச்சென்று சந்திப்பவனாக இருந்தேன். வைக்கம் முகமது பஷிர், தகழி சிவசங்கரப்பிள்ளை, எம்.கோவிந்தன், பி.கே.பாலகிருஷ்ணன், சுகதகுமாரி, மாதவிக்குட்டி, எம்.டி.வாசுதேவன் நாயர், ஜி.குமாரபிள்ளை, எம்.கங்காதரன், ஆற்றூர் ரவிவர்மா என மலையாளத்திலும் க.நா.சு,சி.சு.செல்லப்பா, ஞானி, சுந்தர ராமசாமி, ஈரோடு வி.ஜீவானந்தம், கிருஷ்ணம்மாள், ஜெகந்நாதன், மகாராஜபுரம் சந்தானம் என தமிழிலும், சிவராம காரந்த், யு.ஆர்,அனந்தமூர்த்தி, கிரீஷ் கர்நாட், எச்.எஸ்.சிவப்பிரகாஷ் என கன்னடத்திலும் நான் தேடிச்சென்று சந்தித்தவர்களின் நிரை பெரிது.
தேடிச்செல்ல நான் தயங்கியதே இல்லை.சரோஜ் முகர்ஜி, அதீன் பந்த்யோபாத்யாய போன்ற எழுத்தாளர்களையும் , கேளுசரண் மகாபாத்ரா போன்ற கலைஞர்களையும், அன்னா ஹஸாரே, மேதாபட்கர் போன்ற பொதுப்பணியாளர்களையும் சந்தித்துள்ளேன். என்னை அவர்களின் மாணவனாகவும், தொடர்ச்சியாகவும் உருவகம் செய்துகொண்டுள்ளேன்.
மாணவனாக தன்னை உணர்வது இரண்டு காலகட்டங்களில் கடினமானது. முதற்காலகட்டம், முப்பதை ஒட்டிய அகவை. அப்போது நாம் ஓர் ஆணவத்தை வளர்த்துக்கொண்டிருப்போம். அந்த ஆணவம் நம் ஆளுமையை ஒட்டியதோ, நம் சாதனைகளால் ஆனதோ அல்ல. நம் கனவுகளையே நாம் என எண்ணிக் கொண்டிருப்போம். ’ஒருநாள் உலகை உலுக்கவிருப்பவன்’ என நம்மை நாம் உருவகம் செய்துகொண்டிருப்போம். அந்தக் கனவுகளை யதார்த்தத்தின் அப்பட்டங்கள் உடைக்காமல் பாதுகாத்துக் கொள்வோம். அந்தக் கனவுகளை ஆதரிக்கும் சூழலை உருவாக்கிக் கொள்வோம். பெரும்பாலும் அது நம்மைப்போன்ற இன்னொரு இளைஞராக இருக்கும். அல்லது, நம்மை வழிபடும் நண்பர்களாக இருக்கும்.
நாம் நெஞ்சுக்குள் ஒரு மெல்லிய நீர்க்குமிழி போல நம் கனவை பத்திரமாகக் கொண்டு அலைவோம்.எங்கோ எவரோ அதை உடைத்துவிடுவார்கள் என அஞ்சிக்கொண்டே இருப்போம். அந்த மனநிலை மாணவனாக ஆவதை தடுக்கும். ஏனென்றால் ஆசிரியர்கள் நம்மைவிட ஆற்றல் கொண்டவர்கள், திட்டவட்டமாகச் சாதித்தவர்கள் என நமக்குத்தெரியும். அவர்கள் முன் நாம் நம்மை உண்மையான வடிவில் பார்ப்போம். நம் தகுதியின்மைகள், தேர்ச்சியின்மைகள் கண்கூடாகத் தெரியவரும். நம்மை அது ஆழ்ந்த தாழ்வுணர்ச்சிக்குத் தள்ளும். அவநம்பிக்கை உருவாகி சோர்வுகொள்வோம்.
அதைவிட முக்கியமான ஒன்றுண்டு, நாம் இளமையில் கனவுகளுடன் இருக்கையில் அக்கனவுகளை வருடிக்கொண்டிருக்கவே விரும்புவோம். அதைச் செயலாக ஆக்கத்தேவையான கடினமான தவம் நம்மிடம் இருக்காது. அதை ஒத்திப்போட்டுக் கொண்டே இருப்போம். ஆசிரியர்கள் தங்கள் சாதனையின் பாதையில் நடைமுறைச் சூழலைச் சந்தித்தவர்கள். ஆகவே அவர்கள் முன்வைப்பதில் யதார்த்தத்தின் கடினமான உண்மை இருக்கும். அது நம்மை உடைக்குமென நமக்கே தெரியும். ஆகவே நாம் ஆசிரியர்களை தவிர்ப்போம்.
மெய்யான ஆசிரியர் நாம் வைத்திருக்கும் கனவின் நுரைக்குமிழியை இரக்கமில்லாமல் உடைப்பவராகவே இருப்பார். மானுட அறிவியக்கத்தின் விரிவை நமக்குக் காட்டி, அதில் நாம் எவ்வளவு சிறியவர் என்று நிறுவுவார். ஒரு கனவை செயலாக ஆக்க எத்தனை பெரிய உழைப்பு தேவை என்று காட்டி நம்முடைய சோம்பலை நாமே உணரும்படிச் செய்வார். ஆசிரியர்கள் முன் நாம் அடையும் தாழ்வுணார்ச்சி, நம்மில் சீண்டப்படும் ஆணவம் ஆகியவற்றால் நாம் மாணவநிலையை வெறுப்போம், கூடுமானவரை தவிர்க்க முயல்வோம். அதற்கான காரணங்களையும் தர்க்கங்களையும் கண்டடைவோம்.
அந்த தாழ்வுணர்ச்சியும், ஆணவச்சிதைவும் எனக்கு மேலே சொன்ன ஒவ்வொருவரிடமும் அமைந்துள்ளது. க.நா.சு , எம்.கோவிந்தன் போன்றவர்கள் நம் இருப்பையே பொருட்படுத்தாதவர்கள் போலிருப்பார்கள். சுந்தர ராமசாமி, ஆற்றூர் இருவரும் நம்மை வலுவான கேலிகளால் உடைப்பர்கள். ஆனால் உச்சம் நித்ய சைதன்ய யதியுடனான உறவுதான். அவரைக் கண்டடைந்தபின்னர்தான் நான் என் மாணவ நிலையின் சவாலை உண்மையில் சந்தித்தேன்.
நித்யாவைச் சந்திக்கையிலேயே நான் பெயர்பெற்ற எழுத்தாளன். முதல் படைப்பே பரிசு பெற்றது. தேசிய விருது கிடைத்திருந்தது. நான் அவரைச் சந்திப்பதை ஓராண்டுக் காலம் தவிர்த்தேன். காரணம் மேலே சொன்ன அச்சம். சந்தித்த நாளே நுணுக்கமாக என் ஆணவம் உடையப்பெற்றேன். மீண்டும் சந்திக்கவேண்டாம் என்றே எண்ணினேன். ஆனால் தவிர்க்கமுடியவில்லை. அவ்வாறு தவிர்த்தால் நான் என்னை கூரிய மாணவன் என நினைத்திருக்கும் அக உருவகம் அடிபடுகிறது. அதற்காகவே அவரிடம் மீண்டும் சென்றேன்.
நித்யாவிடமிருந்து பலமுறை விலகிச் சென்றிருக்கிறேன். அவரை முழுமையாக நிராகரித்துவிடுகிறேன் என பலமுறை டைரியில் எழுதியிருக்கிறேன். அவரிடமே இருமுறை சொல்லியுமிருக்கிறேன். ஏனென்றால் நித்யா நேரடியாகவே நம்மை உடைத்துக் கொண்டே இருப்பார். உடையும் கணங்களை பொதுவெளியில் நிறுவுவார். நான் அடைந்த எல்லா அவமதிப்பும் பிற மாணவர்களுக்கு நடுவே வைத்துத்தான்.
ஓர் அனுபவம் நினைவுக்கு வருகிறது. நான் தத்துவம் பற்றி என் கூர்மையை வெளிப்படுத்தும் பொருட்டு ஒரு கேள்வி கேட்டேன். (அத்வைதத்தின் விசேஷநிலை தத்துவங்கள் சாமானிய நிலை வாழ்வுடன் நேரடியாக தொடர்பற்றவை என்றால் அவை நடைமுறைப்பயன் அற்றவை அல்லவா என்ற கேள்வி என நினைவு) நித்யா பதில் சொல்லிச் சொல்லி என் கேள்வி எத்தனை அபத்தம் என நிறுவினார். நான் வெறுமே காட்டிக்கொள்வதற்காகத்தான் அதை கேட்டிருக்கிறேன் என்று காட்டினார். அதன்பின் “So , go and give back the Sanskriti Samman award, right?’ என்று புன்னகைத்தார்.
அந்த தேசிய அளவிலான மதிப்பு மிக்க விருதை நான் வென்று ஆறுமாதங்களே ஆகியிருந்தன. 17 ஆங்கில இதழ்களுக்கு பேட்டி கொடுத்திருந்தேன் அப்போது. சீண்டப்பட்ட நான் கண்ணீருடன் அன்றே தர்மபுரிக்கு பேருந்தை பிடித்தேன். ஆனால் அடுத்த வாரமே திரும்பிச் சென்றேன். அப்படி ஒரு சொற்றொடரில் நான் புண்பட்டேன் என்றால் நான் பலவீனமானவன் என்று நானே சொல்லிக்கொண்டேன். அவரும் ஒன்றும் நடந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை.
நித்யா உயிருடன் இருந்தபோது, நித்யா கோரியதற்கு ஏற்ப, ஏராளமான தமிழ்ப்படைப்பாளிகளை நான் அவரிடம் அழைத்துச் சென்றுள்ளேன். மிகப்பெரும்பாலானவர்கள் ஓரிரு முறைக்குமேல் அவரைச் சந்திக்க வரவில்லை. யூமா வாசுகி அவரைச் சந்தித்தபோது உருவான உளநிலையை ஒரு கவிதையாக எழுதி சொல்புதிதில் வெளியிட்டிருக்கிறார். உடைந்த ஆணவத்தைச் செப்பனிட்டபடி திரும்பத் திரும்பச் சென்றுகொண்டிருந்தவன் நான். அவர் அளித்த கொடை என்ன என்று அதன் பின் கால்நூற்றாண்டாக ஒவ்வொரு நாளும் உணர்ந்து கொண்டே இருக்கிறேன்.
இவ்வாறு, ஆசிரியர்களை தவிர்ப்பதற்கு நாம் கவ்விக்கொள்ளும் இரண்டு கருத்துக்கள் உண்டு. ‘நாம் நாமாகவே இருக்கவேண்டும்’ என்பது ஒரு வரி. ‘ஆலமரத்தடியில் வேறு மரங்கள் முளைப்பதில்லை’ என்பது இன்னொரு வரி. இரண்டுமே பொதுவாக அறிவியக்கத்துடன் சம்பந்தமற்றவர்கள் வேறு தருணங்களுக்காகச் சொன்னவை.
நாம் என்பது அறுதியான, மாறாத ஓர் அடையாளம் அல்ல. நாம் நம்மைப்பற்றி கொண்டுள்ள உருவகம் என்பது தொடர்ச்சியாக நம்மாலேயே மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கும் ஒன்று. அது ஒரு தொகுப்படையாளம். நம் சூழல்களை எதிர்கொள்ளும் தோறும் அது உருமாறுகிறது. நான் என நான் எண்ணுவதை எத்தனைமுறை உடைத்து மறு ஆக்கம் செய்கிறேனோ அத்தனை மடங்கு அது கூர்மை கொள்கிறது, ஆற்றல் பெறுகிறது.
ஆகவே என்னை உடைக்காமல் பாதுகாக்கும் இடங்களை நான் நாடுவதென்பது என் வளர்ச்சியை நானே மட்டுப்படுத்திக் கொள்வதுதான். அப்படிச் செய்த பலரை நான் அறிவேன். அப்படிச் செய்பவர்கள் தங்களைப் பற்றி ஓர் எளிய ஆணவத்தை மட்டுமே கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதை வெளிக்காட்டுமளவுக்குச் செயல்வெற்றிகள் இல்லை என்றும் அறிவார்கள். தொடங்கிய இடத்திலெயே நின்றிருப்பார்கள். ஆகவே அவர்கள் ஒரு மௌனமான ஆணவம் கொண்டிருப்பார்கள். எளிய வம்புகளில் ஈடுபட்டு அதற்குள் தங்கள் கசப்புகளை முன்வைப்பவர்களாக காலப்போக்கில் மாறிவிடுவார்கள்.
ஆலமரம் பற்றிய அந்த உருவகம் எந்த முட்டாள் உருவாக்கியதென்று தெரியவில்லை. ஆலமரங்கள் ஆலமரத்தின் அடியில்தான் முளைக்கும். ஆலமரத்தின் விழுதுகள் எப்போது தரையை தொடுகின்றனவோ அப்போதே அவை தனி மரங்களாக ஆகிவிடுகின்றன. தனித்த மரமாக வளருந்தோறும் மைய மரத்துடனான உறவு மெல்லிய தொடர்பாக எஞ்சுகிறது. அடிமரம் மெல்ல ஆற்றலிழந்து தன் உயிரை பிற மரங்களுக்கு அளித்து கூடாக எஞ்சுகிறது. வலுவான ஒன்று மேலும் வலுவான பலவற்றை உருவாக்குவதற்கான மகத்தான உதாரணமே ஆலமரம்தான்.
அறிவியக்கத்தில் நெறி இதுதான், பெருமரங்களின் அடியில் மட்டுமே பெருமரங்கள் முளைக்க முடியும். தொடர்ச்சி, கடந்துசெல்லுதல் இரண்டும் நிகழாமல் தனிச்சாதனைகள் இல்லை. அதுதான் உலகமெங்குமுள்ள நெறி. மிகமிக அரிதாகவே விதிவிலக்குகள், அவைகூட ஆசிரியர்கள் இருந்திருந்தால் மேலும் வளர்ந்திருக்கக்கூடிய ஆளுமைகள் என வரையறை செய்யத்தக்கவை.
தத்துவம், கலை, இலக்கியம் மூன்றிலுமே வலுவான ஆசிரியர்கள் அமையப்பெறுதல், தீவிரமான சூழல் அமையப் பெறுதல் இரண்டும் இன்றியமையாதவை. எந்த மேதைக்கும் அவருடைய ஆசிரியர் எவர் என்பதும் வரலாற்றில் இருக்கும். அந்த மேதையை வழிகாட்டுவதுடன், உடைத்து வார்க்கவும் செய்தவர்களாக அவ்வாசிரியர்கள் இருப்பார்கள். மேதைகளெல்லாம் உரிய ஆசிரியர்களை தேடிச்சென்று, உடனுறைந்து, கற்று விவாதித்து மட்டுமே வளர்ந்திருப்பார்கள்.
அது எப்போதுமே ஒரு தொடர்ச்சிதான். எம்.கோவிந்தனையும் க.நா.சுவையும் எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் முறையே சுந்தர ராமசாமிக்கும் ஆற்றூர் ரவிவர்மாவுக்கும் ஆசிரியர்கள். கிருஷ்ணமேனன் (ஆத்மானந்தர்) எம்.என்.ராய் இருவரும் வரலாற்று ஆளுமைகள். ஆனால் அவர்கள் முறையே க.நா.சுவுக்கும் எம்.கோவிந்தனுக்கும் ஆசிரியர்கள். ஆகவே நான் ஆத்மானந்தரின், எம்.என்.ராயின் வழிவந்தவனும்கூட. அப்படித்தான் நாம் ஒரு பெரிய மரபின் தொடர்ச்சியாக அமைகிறோம். அதுவே நம் வல்லமை.
வலுவான விதைகள் இரண்டுவகையானவை. உள்ளிருக்கும் முளை உயிர்த்துடிப்பு கொண்டது. ஆகவே அதன் வெளியோடு கெட்டியானது. அந்த ஓட்டை உடைத்து அநன் முளை வெளிவந்து செடியாகவேண்டும்.
ஆசிரியரின் செல்வாக்கு மாணவனை தேங்கச்செய்யுமா? அப்படிச் செய்யும் என்றால் உலகில் நாம் காணும் இந்தச் சிந்தனைகள் எவையுமே தோன்றியிருக்காது. ஏனென்றால் இவற்றை உருவாக்கிய அனைவருமே ஆற்றல்மிக்க ஆசிரியர்கள் கொண்டவர்கள். அசலான சிந்தனையாளன் அல்லது தீவிரமான படைப்பாளிக்கு அகத்தே ஓர் அனல் உண்டு. அதை எந்த புறச் சூழலும் வளர்க்கவே செய்யும். அதனருகே உள்ள எல்லாமே அதன் உணவுதான்
ஆசிரியரின் செல்வாக்கு முதலில் மாணவனுடைய ஆற்றலை அடையாளம் கண்டுகொண்டு அதை வளர்க்கும். ஒரு கட்டத்தில் அவனுக்கான எதிர்விசைகாக அமைந்து மேலும் வளர்க்கும்.காற்றும் நெருப்பும்போல. கனலை காற்று உயிர்பெறச் செய்கிறது. சுடருக்கு மூச்சை காற்றே அளிக்கிறது. பெருநெருப்பாகிவிட்டதென்றால் காற்றே அதை மேலும் வளர்க்கிறது. ஆனால் எளிய சுடரை காற்று ஊதி அணைத்துவிடுவதும் உண்டு. தன்னை எளிய சுடர் என உள்ளூர உணரும் ஒருவன் காற்றை விலக்குவது புரிந்து கொள்ளக்கூடியதுதான். அறைக்குள் தன்னை பொத்திக்கொள்வது தவிர அவனுக்கு வேறு வழி இல்லை.
நான் என்றுமே என் அகநெருப்பு பற்றிய நம்பிக்கை கொண்டவனாக இருந்தேன். ஆகவே என் ஆசிரியர்களைத் தேடிச்செல்ல, அருகமர என்னால் முடிந்தது. என் தனித்தன்மையை உருவாக்கிக் கொள்ள, என் தேடலை முன்னெடுக்க, எனக்கான உலகை அமைக்க உதவின அந்த அருகமர்வுகள்.
இன்று இரண்டாம் காலகட்டம். இரண்டாவது பெருந்தயக்கத்தின் தருணம். இன்று, அடையாளம் உருவாகிவிட்டது. ஆணவம் வேறொருவகையில் முழுத்துவிட்டது. அதைவிட நம்மை ஒருவகையில் மதிப்பிட்டு வைத்திருக்கும் பெருந்திரள் அந்த மதிப்பீட்டை நாம் காப்பாற்றவேண்டும் என எதிர்பார்க்கிறது.
நான் இன்றும் கற்பதை நிறுத்தவில்லை. நாளில் 3 மணிநேரமாவது வாசிக்காமலிருந்ததே இல்லை. எனக்கான வாசிப்புகள் பெருகிக்கொண்டேதான் செல்கின்றன. குறிப்பாக இன்று இந்திய தத்துவம், பண்பாடு சார்ந்த மூலநூல்களையே அதிகம் படிக்கிறேன். ஆனாலும் என் அறிதலுக்கு தன்னியல்பாகவே எல்லை உருவாகிறது. காரணம் என் அகவை.
நான் அறுபதைக் கடந்துவிட்டேன். இதுவரை நான் அறிந்தவையே என்னை மேலும் புதியதாக அறிய முடியாமலாக்குகின்றன. எனக்கான தனி அறிவுதேடல் உருவாகிவிட்டமையாலேயே என்னால் இன்னொன்றில் தீவிரமாக நுழைய முடிவதில்லை. இளமையில் இருந்த அந்த புதுமைநாட்ட வெறி இன்றில்லை. முற்றிலும் புதியவற்றுக்கு என் அகம் பெருந்தடையை அளிக்கிறது.
இன்று ஏ.வி.மணிகண்டன் சொல்லும் கலைக்கொள்கைகளை அறிய நான் அறிந்த கலைக்கொள்கைகளைக் கலைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஜெர்மன் தத்துவத்தையோ, நவபிளேட்டோவியத்தையோ அஜிதனளவு நுட்பமாக இனிமேல் என்னால் கற்றறிய முடியாது. இன்று எழுதும் ஒரு படைப்பாளியின் உலகுக்குள் எளிதில் நுழைய முடியவில்லை. கடலூர் சீனுவோ சுனீல்கிருஷ்ணனோ வலுவாகப் பரிந்துரைக்கவேண்டியுள்ளது. எதையாவது தவறவிடுகிறேனா, புதியவற்றுக்கு எதிராக இருந்துவிட நேருமோ என்ற ஐயத்தாலேயே புதிய எழுத்தாளர்கள் பற்றி எதிர்மறையாக எதுவும் சொல்வதை தவிர்க்கிறேன். எளிய பரிந்துரைக்குமேல் ஏதும் சொல்வதில்லை.
ஆகவே புதியவற்றை புதிய தலைமுறையிடமிருந்து கற்றுக்கொள்வதே சிறப்பானது. அவர்கள் கற்கும் முறையும் முற்றிலும் புதியதாக உள்ளது. அவர்களின் கண்கள் வழியாக நாம் மீண்டும் மானுட அறிவுப்பெருக்கைக் காணமுடியும். அந்த வாய்ப்பைத் தவறவிட என் ஆணவம் ஏன் தடையாக ஆகவேண்டும். ஒருவன் தன் தந்தையின் கைபற்றி நடக்க ஆரம்பிக்கிறான். ஓர் அகவைக்குப் பின் மகனின் கையை பற்றிக்கொள்கிறான். அறிவியக்கம் செயல்படுவதும் அப்படித்தான்.
ஜெ