-4-
தனது உறவினரின் மகள் திருமணத்துக்காக ஒருமுறை தயானந்தா,சாகர் வரை செல்ல வேண்டியிருந்தது.அந்த சமயத்தில் மீனாட்சி என்ற பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் அவள் கணவனைக் கைது செய்திருந்தது.மீனாட்சியின் தாய்,தயானந்தாவின் அம்மாவுக்கு தூரத்து உறவினள்;அதை விட அவர்கள் முன்பு அண்டை வீட்டுக்காரர்களாக இருந்தவர்கள் என்பது,இன்னும் கூட முக்கியமானது.அந்தக் குடும்பத்திலிருந்த நான்கு பெண்களில் மீனாட்சியே இளையவள்.அவளுடைய தந்தை வாசுதேவ்,ஒரு மளிகைக்கடை வைத்திருந்தார்.முதல் மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொடுத்த பயங்கரமான அனுபவத்திற்குப் பிறகும்,மெட்ரிக் தேர்வை எழுதி முடிக்கும் வரை மீனாட்சியை அவர் விட்டு வைத்திருந்ததே பெரும் சாதனைதான்.அதற்குப் பிறகு மீனாட்சி,ஷீனாவுக்கு வாழ்க்கைப்பட நேர்ந்தது.
ஷீனாவின் குடும்பம் விறகு விற்பனை செய்யும் தொழிலைப் பிரதானமாகக் கொண்டிருந்தது.ஊரறிந்த பல வினோதமான பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்த அந்தக் குடும்பத்தின் பரம்பரைப் பண்புகளை அப்படியே சுவீகரித்துக் கொண்டிருந்ததோடு அதையெல்லாம் விடக்கூட மோசமானவனாக இருந்தான் ஷீனா.தீய குணங்களின் மொத்த உருவமாகவே இருந்த ஷீனாவிடம் சுய கௌரவம் என்பது கொஞ்சமும் இல்லை.யாராவது தனக்குச் சாபம் விட்டால் கூட அதை அவன் சங்கீதமாகத்தான் எடுத்துக் கொள்வான்.இப்படிப்பட்ட ஒரு மனிதனைத் திருமணம் செய்து கொள்வதை விட இறந்து போய்விடுவது எவ்வளவோ மேலானது என்றுதான் நினைத்தாள் மீனாட்சி.ஆனால் தன்னுடைய பிறந்த வீட்டுக்குத் தான் ஒரு சுமையாகி விடக் கூடாது என்ற எண்ணம் அவளுக்குள் அழுத்தமாக ஊறிப் போயிருந்தது.;தன் தந்தையின் நிராதரவான நிலை அவளுக்குக் கண்கூடாகத் தெரிந்தது.மீனாட்சியின் ஜாதகத்தைப் பையில் வைத்தபடி அவர் வெளியே கிளம்பும்போதெல்லாம் தனது கையாலாகத நிலை குறித்து அவர் புலம்புவதைப் போலவே அவளுக்குத் தோன்றும்.ஷீனாவின் குடும்பத்திலிருந்து அவளைப் பெண் கேட்டு வந்தபோது அதை மறுத்துப் பேசும் நிலையில் அவள் இல்லாததற்குக் காரணம் அதுதான்.
‘’ஜனங்க அப்படித்தான்…நூறையும் சொல்லுவாங்க! நீதான் தைரியமா இருக்கணும்!ஊரார் பேசறதையெல்லாம் காதிலே போட்டுக்காமெ ஒதுக்கித் தள்ளிடணும்! எல்லா பாரத்தையும் சாமி மேல போடு. எது நிஜம்கிறது அவருக்குத்தான் தெரியும்’’ என்று கண்ணீர் மல்கிய கண்களோடு அவளது குடும்பம் அவளைச் சமாதானப்படுத்த முயற்சித்தது.ஷீனாவைப் போன்ற ஒரு ஆளைக் கல்யாணம் செய்து கொள்ள யார்தான் வரப் போகிறார்களோ என்று அதுநாள் வரை பேசி வந்த ஊர்,இப்போது அவனுக்கு வாய்த்திருக்கும் அதிருஷ்டத்தைப் பற்றியும்,மீனாட்சிக்கு ஏற்பட்டுப் போன துர்ப்பாக்கியம் குறித்தும் பேசத் தொடங்கியிருந்தது.
ஷீனா,தன் மனைவியை எப்படியெல்லாம் சித்திரவதை செய்தான் என்பதைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.ஒரு சில நாட்கள் அவன் தன் மனைவிக்கு விசுவாசமாக-அவளுடன் ஒட்டிக் கொண்டிருந்தான்.அதற்குப் பிறகு அவள் எதைச் செய்தாலும் அது பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு குற்றமாகவே அவனுக்குத் தோன்ற ஆரம்பித்து விட்டது.ஒரு நாள் அவள் வைத்திருந்த குழம்பு மிகவும் காரமாக இருந்ததால்,கொல்லைப்பக்கம் முழுக்க அவளைத் துரத்தித் துரத்தி விரட்டியபடி அதை அவள் தலையில் அப்படியே ஊற்றிவிடக் கூட அவன் முயன்றிருக்கிறான்.அவளை மிக மோசமாகப் போட்டு அடிப்பான் அவன்;அதில் அவள் உடல் முழுவதும் கடுமையான இரத்தக் காயங்கள் ஏற்பட்டிருந்தன.இரவு நேரங்களில் அவன் மிகவும் தாமதமாகவே வீடு திரும்புவான்;சில சமயங்களில் வராமலும் கூட இருந்து விடுவான்.மிகவும் கொச்சையான வார்த்தைகளால் அவளை ஆபாசமாகத் திட்டுவான்.
ஒரு நாள் அவளைக் கொன்றுவிடப்போவதாக அவன் மிரட்டியபோது பயந்து போன மீனாட்சி,ஒரு அறைக்குள் சென்று அதைப் பூட்டிக் கொண்டாள்.அவள் மட்டும் வெளியே வரவில்லையென்றால் குழந்தைகளின் கழுத்தை நெரித்து விடப் போவதாகப் பயமுறுத்தினான் அவன்.குடி போதையில் இருக்கும்போது எப்படிப்பட்ட கொடூரமான செயலுக்கும் அவன் துணிந்து விடக் கூடும் என்று பயந்து போன மீனாட்சி,அறையை விட்டு வெளியே வர,விறகுக் கட்டை ஒன்றால் அவளைக் கடுமையாகத் தாக்கி விட்டான் ஷீனா.இரத்தம் வழிந்து கொண்டிருந்த நிலையிலேயே தன் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு நேரே போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற மீனாட்சி,தன் கணவன் மீது அங்கே ஒரு புகாரைப் பதிவு செய்தாள்.இரவு நேரத்தில்,அப்படிப்பட்ட ஒரு கோலத்தில் குழந்தைகளுடன் வந்து நின்ற அவளது நிலையைக் கண்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் உள்ளம் இரக்கத்தால் கசிந்தது.ரமாநாயக் என்ற கான்ஸ்டபிளை அழைத்து ஷீனாவின் முந்தைய குற்றப் பின்னணிகள் குறித்து விசாரித்தார் அவர்.ஷீனாவின் கேவலமான கடந்தகால நடவடிக்கைகளைப் பற்றி நாயக் விவரிக்கத் தொடங்கியதுமே அவன் மீது உடனடியாகப் புகாரைப் பதிவு செய்த சப் இன்ஸ்பெக்டர்,ஷீனாவின் வீட்டுக்கு விரைந்து சென்று ,அங்கே குறட்டை விட்டபடி தூங்கிக் கொண்டிருந்த அவனைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துக் கொண்டு வந்தார்.அங்கே கிடைத்த அடி,உதை இவற்றால் அவனுள் ஏறியிருந்த குடிபோதை முற்றிலுமாய்த் தெளிந்து போய் விட்டது.ஷீனா லாக்-அப்பில் அடைக்கப்பட்டான்.கலக்கமடைந்தவளாய் நிலை குலைந்து போயிருந்த மீனாட்சி நேராகத் தன் தந்தை வீட்டுக்குச் சென்றாள்.அங்கேயும் தனக்கு இடமில்லாமல் போனால்,குழந்தைகளோடு கிணற்றில் குதித்துவிடப் போவதாக அறிவித்தாள் அவள். நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட வாசுதேவா, தன் மகள் அந்த வீட்டில் தங்கியிருப்பதற்கு ஒத்துக் கொண்டார்.
ஷீனா கைது செய்யப்பட்ட தகவல்,மறுநாளே ஊர் முழுவதும் பரவி விட்டது.ஆனாலும் அவனை விடுவிக்க யாரும் முன் வரவில்லை.ஜாமீன் சாஹேபும் கூட அந்த சமயம் ஊரில் இல்லை.மதியம் வரை எதுவுமே சாப்பிடாமல் சமாளித்துக் கொண்டிருந்த ஷீனா, பிறகு பசி தாங்காமல் தனக்கு ஏதாவது சாப்பிடத் தருமாறு போலீஸ் எஸ் ஐயிடம் கேட்டான்;அவரோ அவன் மீது வசை மாரி பொழிந்தபடி அடி வெளுக்கத் தொடங்கி விட்டார்;நரக வேதனை இன்னதென்பதை அப்போது உணர்ந்தான் ஷீனா.போலீஸ் எஸ் ஐ வெளியே கிளம்பிச் செல்லும் வரை காத்திருந்த ஷீனா,பிறகு ஒரு கான்ஸ்டபிளை அழைத்து எப்படியாவது ஜாமீன் சாஹேபை அழைத்துக் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டான்.கான்ஸ்டபிளிடம் அவன் ஒரு நூறு ரூபாய் நோட்டையும் நீட்டிவிட்டதால்,அதற்கு ஆசைப்பட்டுக் கொண்டு ஷீனாவத் தேடிச் சென்றான் அந்தப் போலீஸ்காரன்.சாகருக்குப் போய்விட்டு அப்போதுதான் திரும்பிவந்து கொண்டிருந்த தயானந்தா,தன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தான்;வழியிலேயே அவனைப் பார்த்து விட்ட கான்ஸ்டபிள்,நடந்த எல்லாவற்றையும் அவனிடம் விவரித்தான்.இந்த வழக்கைப் பொறுத்த வரை,போலீஸ் எஸ் ஐ இதில் தீவிரமான அக்கறை காட்டி வருவதையும்,மீனாட்சியின் உடல்நிலை பற்றிய மருத்துவ அறிக்கையைக் கூட அவர் வாங்கி வைத்திருப்பதையும் தெரிவித்தான் அவன்.ஷீனாவின் மிருகத்தனமான நடவடிக்கைகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டு போகும்போது- மீனாட்சியின் மீது எதிர்பாராமல் ஏற்பட்டு விட்ட இரக்க உணர்வால் கொஞ்சம் மிகையாகவே அவற்றை வருணித்து விட்டான் அவன்.இந்த வழக்கு சற்று சிக்கலானதுதான் என்று தனக்குள் நினைத்துக் கொண்டாலும்,அதனுடன் கூடவே எஸ் ஐ கொண்டிருக்கும் இரக்கத்தை எப்படி அகற்றலாம் என்பதற்கான வழிமுறைகள் பலவற்றையும் யோசிக்கத் தொடங்கி விட்டிருந்தான் தயானந்தா.நேரே போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற அவன்,தன் அறிவுக் கூர்மையின் ஒவ்வொரு அங்குலத்தையும்,மேலும் பல கபடமான தந்திர உத்திகளையும் கையாண்டு ஷீனாவை விடுவித்து விட்டான்.அவனுக்கு ஷீனாவோடு மூவாயிரம் ரூபாய்க்கான பேரம் படிந்திருந்தது.
சற்றும் எதிர்பாராதபடி தன் பக்கம் வீசிய அதிருஷ்டக் காற்றால் பூரித்துப் போனவனாய் வீட்டுக்குள் நுழைந்த தயானந்தாவை மீனாட்சியின் நிலை குறித்த ஆவேசக் குமுறலோடு முதலில் எதிர்கொண்டாள் அவனது தாய்.
‘’அப்படிப்பட்ட மோசமான ஒரு ஆளை விடுதலை செய்யற காரியத்திலே உன்னாலே கூடத் துணிஞ்சு இறங்க முடியாது’’ என்பதையும் தன் பேச்சில் கூடவே சேர்த்துக் கொண்டாள் அவள்.
மிகப் பெரும் வெற்றியடைந்தவனைப் போலத் தன் கைகளைத் தட்டி ஆரவாரித்த தயானந்தா,
‘’அவனைத்தான் நான் ஏற்கனவே வெளியே கொண்டு வந்தாச்சே?இந்த தயானந்தாவைத் தவிர அவனை விடுவிக்கிற துணிச்சல் ஊரிலே வேற எவனுக்கு இருக்கு?’’
என்று அவளுக்குப் பதிலளித்தான்.
அதைக் கேட்டதும் -இதுநாள்வரை அவன் அவளிடம் கண்டிராத கட்டுக்கடங்காத ஆக்ரோஷத்தோடும்,கோபத்தோடும் சீறிப் பாய்ந்தாள் அவள்.
‘’அப்படீன்னா அதைத்தான் மொதல் வேலையாச் செஞ்சுட்டு வந்திருக்கியா நீ? போயும் போயும் அந்தக் கேடு கெட்ட மிருகத்தை…அந்தக் குடும்பத்துக்கே ஒரு சாபமா இருக்கிற அவனையா நீ விடுவிச்சிட்டு வந்திருக்கே?இந்த ஊரிலே இருக்கிற ஜனங்க எல்லாம் பணத்துக்கு மயங்கிடாதவங்க;நியாயத்துக்குக் கட்டுப்பட்டவங்க…அதனாலேதான் ஷீனாவை விடுதலை செய்யறதுக்கு யாருமே முயற்சி எடுக்கலை..உன்னோட அதிகாரபலத்தைக் காட்டிக்கணும்னா அதுக்கு இதுதான் முதலிலே கெடைச்சதா ஒனக்கு?பணத்துக்காகப் பீயை நக்கறதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்?எல்லாத்தையும் கோர்ட்டே முடிவு பண்ணிக்கட்டும்னு நீ விட்டிருக்கணும்..அந்தப் பாவப்பட்ட மீனாட்சி இருக்காளே…அவளைப் பத்தி நெனச்சுப் பாக்கணும்னு கொஞ்சமாவது ஒனக்குத் தோணிச்சா?’’
’’சும்மாக் கன்னா பின்னான்னு எதையாவது கத்தாதேம்மா! நான் ஒண்ணும் அப்படி எந்தக் குத்தத்தையும் செஞ்சிடலை. எல்லாத்தையும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டுத்தான் செஞ்சிருக்கேன்..’’என்று சற்றுக் குரலை உயர்த்தினான் தயானந்தா.அதைக் கேட்டதும் அவனது அம்மாவின் ஆத்திரம் இன்னும் அதிகமாகி விட,…அவளும் பதிலுக்குக் கத்தினாள்.
‘’நாறப் பயலே..வெக்கமா இல்லே ஒனக்கு?இவ்வளவுத்தையும் செஞ்சதுமில்லாமே-பண்ணினதெல்லாம் சரின்னு வேற இன்னும் நம்பிக்கிட்டிருக்கே!…ஒருவேளை சட்டப்படி எல்லாம் சரியா இருந்ததுன்னா ஒரு ஆளைக் கொலை பண்ணக் கூடத் தயங்க மாட்டே போலே இருக்கு..! இந்தமாதிரி அருவருப்பான காரியங்களைச் செஞ்சு பொழைக்கறதை விடத் தெருவிலே போய்ப் பிச்சை எடுக்கறது எவ்வளவோ கௌரவமா இருக்கும்..!’’
தனது தாயின் மூர்க்கமான ஆவேசம்,இதுவரை அவன் பார்க்காத ஒன்றாக இருப்பதைக் கண்டு,திகைத்துப் போய் நின்றான் தயானந்தா.இன்னும் கொஞ்ச நேரம் வீட்டில் இருந்தால் தொடர்ந்து அவள் தன்னைக் குதறி எடுத்து விடுவாள் என்று அஞ்சியவனாய் அங்கிருந்து வெளியேற முற்பட்டான்.
அவனுடைய மனைவி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.அவன் அங்கிருந்து போவதைப் பார்த்த அவன் அம்மா அவனை நோக்கியபடி கத்தினாள்..
‘’இப்ப எங்கே போறே நீ ?அந்தப் போலீஸ்காரனோட குண்டியை நக்கறதுக்கா?….இதுக்குள்ளே ஷீனா அந்த மீனாட்சியை அறுத்துக் கூறு போட்டிருப்பான்..’’
படிகளில் இறங்கிச் செல்லும்போது அந்த வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் தன் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவதைப் போலிருந்தது தயானந்தாவுக்கு.
-5-
உண்மையில் சொல்லப்போனால் மீனாட்சியைப் பற்றிய ஒரு சின்ன எண்ணம் கூட தயானந்தாவுக்கு ஏற்பட்டிருக்கவில்லை.ஷீனாவைக் குற்றமற்றவனாகக் காட்டுவது எப்படி என்பதிலேயே அவன் தனது கவனம் முழுவதையும் செலுத்தியிருந்தான்.இப்படிப்பட்ட நுட்பமான சிக்கல்கள் வரும்போது-இவ்வாறான வேலைகளில் ஈடுபடும் சமயங்களில்-சில கேள்விகளையும்,பிரச்சினைகளையும் எழுப்பியபடி மனச்சாட்சி போடும் தடைகளை ஒரு பக்கமாக ஒதுக்கித் தள்ளிவிட்டுப் போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான்.சிக்கல்கள் நிறைந்த- வழி தெரியாத ஒரு பாதையில் வளைந்து நெளிந்து சாமர்த்தியமாகச் சென்றுகொண்டிருக்கும்போது,ஒரு கணம் தயங்கி நின்றாலும் கூடத் தடையாகி விடுவதைப் போன்றதுதான் இதுவும்.வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்போது- உயரங்களை எட்டுவதற்கான அந்த விளையாட்டின்போது- தனக்குப் பின்னோக்கிப் பார்ப்பதை-அவ்வாறு சிந்திப்பதைக் கூட ஒருவன் விட்டுவிட வேண்டும்;இல்லையென்றால் அவை அவனைக் களைப்படைய வைத்து விடும்.ஒருக்கால் ஷீனாவுக்குப் பதிலாக மீனாட்சிக்கு ஜாமீன் தர வேண்டிய நிலை தயானந்தாவுக்கு ஏற்பட்டிருந்தாலும் கூட – பாலியப் பருவத்தின் ஞாபகங்கள்,சின்னக் குழந்தையாக இருந்தபோது அவளோடு தான் பகிர்ந்து கொண்ட இனிமையான விஷயங்கள் ஆகிய எதுவும் அவனது இதயத்தைத் தொட்டிருக்க வாய்ப்பே இல்லை.
தயானந்தாவும் ,மீனாட்சியும் அண்டை வீட்டுக்காரர்களாக இருந்தபோது ஏழாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில்தான் படித்தார்கள்;பிறகு,அவள் பெண்கள் பள்ளிக்குப் போய் விட்டாள்.இருவரும் ஒன்றாகச் சேர்ந்துதான் பள்ளிக்கூடம் போய் வருவார்கள்.ஸ்கூலுக்குக் கிளம்புவதில் எப்போதுமே சற்றுத் தாமதம் செய்பவன் தயானந்தா.ஆனால் மீனாட்சியோ எப்போதுமே சரியான நேரத்துக்கு வந்து விடுவாள்;தலையில் எண்ணெய் தடவி நன்றாகச் சீவிப் பின்னல் போட்டு ஒரு ரிப்பனால் முடிச்சுப் போட்டபடி வரும் அவள்,வீட்டுக்கு வெளியிலுள்ள நடைபாதையில் அவனுக்காகக் காத்துக் கொண்டிருப்பாள்.அப்போதுதான் தன் புத்தகங்களையெல்லாம் அவசர அவசரமாக ஒழுங்குபடுத்தி அடுக்குவான் தயானந்தா.தன் சிலேட்டுப் பலகையைச் சுத்தமாகத் துடைப்பதற்காக – ஈரமான ஒரு உறியும் பஞ்சை எப்போதும் தன்னுடன் வைத்திருப்பாள் மீனாட்சி.அந்தப் பஞ்சின் மீது தயானந்தாவுக்கு எப்போதுமே ஒரு கண் இருந்தபோதும்,அவளிடம் அதைக் கேட்டுப் பெற முடியாதபடி அவனது அகங்காரம் தடுத்து விடும்.அந்தப் பஞ்சை அவன் பயன்படுத்திக் கொள்ள அவள் அனுமதித்தாலும்,மறக்காமல் அதைத் திரும்ப வாங்கிக் கொண்டு விடுவாள் அவள்.அதை எப்படியாவது திருடி விட வேண்டும் என்ற தூண்டுதல் அவனிடம் இருந்தாலும்,அதைப் பள்ளிக்கூடத்தில் வைத்துப் பயன்படுத்த முடியாது என்ற எண்ணம் அப்படிச் செய்ய முடியாதபடி அவனைத் தடுத்து விட்டது.
அவனுடைய அம்மா, தங்களிடம் மீதமாகிப் போகும் சாப்பாட்டை மீனாட்சி வீட்டுக்கு அவனிடம்தான் கொடுத்தனுப்புவாள்.அவ்வாறான சந்தர்ப்பங்களில் அந்தப் பஞ்சை அவளிடம் எப்படியாவது கேட்டு வாங்கி விட வேண்டுமென்ற ஆசை அவனுக்குள் இருந்தாலும்,அவன் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு விடுவான்.
மாலை நேரங்களில் ஆலமரத்தடியிலிருந்த மேடையில் ஊர்ப்பெண்களெல்லாம் ஒன்று கூடிப் பேசிக் கொண்டிருப்பார்கள். மேடையின் உடைசல்களாகக் கீழே கிடக்கும் விரிசல் விட்ட கல்துண்டுகளை வைத்துக் கொண்டு குழந்தைகளெல்லாம் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.தயானந்தாவும்,மீனாட்சியும் தினமும் அதே இடத்தில் ஒன்றாக விளையாடுவார்கள்.ஆனால் கொஞ்சம் வளர்ந்த பிறகு,தயானந்தா கோலிக் குண்டு விளையாட்டுக்கு மாறி விட்டான்.கோலிக்குண்டு விளையாட்டின் நெளிவு சுளிவுகளை அறிந்த பெரிய பையன்கள்- ஆரம்பத்தில் தயானந்தாவைத் தங்களோடு விளையாடச் சேர்த்துக் கொள்வதில் தயக்கம் காட்டி வந்தார்கள்.நடுவிரலை வில்லைப் போல் வளைத்து வைத்தபடி, கோலிக்குண்டை அடிக்கும் பிற பையன்களின் திறமையால் கவரப்பட்ட தயானந்தா,அவர்கள் செய்வதை ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருப்பான்.அவர்கள் அடிக்கும் கோலிக்குண்டு,தரைக்குப் போய்..அங்கேயிருக்கும் இன்னொரு குண்டை அடித்து மேலே தூக்குவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருப்பான் அவன்.அந்த விளையாட்டில் மிகுந்த ஈடுபாட்டோடு-ஒரே மனதாய்க் கருத்துச் செலுத்திய அவன்,வெகு சீக்கிரத்திலேயே அதில் கை தேர்ந்தவனாக ஆகி விட்டான்.கோலிக் குண்டு விளையாட்டின் மீதான மோகம் வடிந்து போன பிறகு,கில்லி தாண்டும் விளையாட்டை நோக்கி நகர்ந்துவிட்ட தயானந்தாவுக்கு அது ஆர்வமூட்டும் ஒரு புது வரவாயிற்று.அதன் பிறகு,லகோரி,கபடி என்று தொடர்ந்து வேறு பல விளையாட்டுக்களை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தான் அவன்.விளையாட்டுக்கள் மாற மாறப் பழைய நண்பர்கள் ஒரு சிலரே அவனுடன் இருப்பார்கள்.ஒவ்வொரு புது விளையாட்டும் புதிய நண்பர்களைக் கொண்டு வந்து சேர்க்கும்போது பழைய நண்பர்கள் மெள்ள மெள்ளப் பின்னுக்குப் போய் விடுவார்கள்.
கோலி விளையாடத் தொடங்கியதுமே ஆல மரத்தடி மேடைக்குப் போவதை நிறுத்திக் கொண்டு விட்டான் அவன்;ஆனால் மீனாட்சி தொடர்ந்து அங்கேதான் விளையாடிக் கொண்டிருந்தாள். ஒரு முறை தன்னோடு விளையாட வேறு யாரும் அகப்படாததால் தயானந்தாவைத் தன்னோடு விளையாட அழைத்தாள் அவள்.தயானந்தா அதை மறுத்து விட்டதால் அவள் ஏமாற்றமடைந்தாள்.அவளது ஏமாற்றத்தையும்,தனித்து விடப்பட்டது போன்ற உணர்வோடு அவள் திரும்பிச் செல்வதையும் பார்த்து விட்டு அவளோடு விளையாட ஒத்துக் கொண்டான் தயானந்தா.தான் முதலில் அழைத்தபோது அவன் வராததால் இப்போது அவனோடு விளையாட அவளுக்கு விருப்பமில்லை;ஆனாலும் எப்படியோ அவளைச் சமாதானப்படுத்திவிட்டான் தயானந்தா.இருவரும் அமைதியாக விளையாடிக் கொண்டிருந்தனர்.ஆனால்,குச்சிகளைப் பொறுக்கிக் கொண்டு வந்து வீடு கட்டும் அந்த விளையாட்டு,கொஞ்ச நேரத்திலேயே அவனுக்குச் சலித்துப் போய்விட்டது.
இரத்தத்தைச் சுவை பார்த்துப் பழகிப் போன புலியைப் போலக் கோலி விளையாட்டின் இறுதி இலக்கை எப்படி எட்டுவது என்பது பற்றிய சிந்தனையிலேயே நிலை கொள்ளாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தான் தயானந்தா.
[கன்னட மூலம்;விவேக் ஷன்பேக்
ஆங்கில மொழியாக்கம்;என்.மனு சக்ரவர்த்தி,ஷரத் அனந்தமூர்த்தி,
ஆங்கில வழி தமிழாக்கம்;எம்.ஏ.சுசீலா]