நாளை நம் உலகம் என்னவாகும்?
நம்பிக்கைவாதம், அவநம்பிக்கைவாதம் பற்றிச் சொன்னேன். அவநம்பிக்கை வாதம் ஏன் இத்தனை விரும்பப்படுகிறது, ஏன் இத்தனை பேருருக்கொண்டிருக்கிறது?
அதற்கான ஆழமான காரணம் மதம்தான். அவநம்பிக்கைவாதத்தின் ஆணிவேர் மதம். அது கடவுளைத் தவிர எல்லாவற்றையும் அவநம்பிக்கையுடன் அணுகவைக்கிறது. மதத்தில் இருந்து அந்த அவநம்பிக்கைவாதம் நவீன உள்ளத்திற்கு வரும்போது கடவுள்மீதான நம்பிக்கையும் இல்லாமலாகிவிடுகிறது. எஞ்சுவது முழுமையான அவநம்பிக்கைவாதம்.
உதாரணம், ஃப்ராய்ட் தான். ஏதேன் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மனிதன் என்ற உருவகத்தைத்தான் ஃப்ராய்ட் இன்னொரு வகையில் விரிவாக்கம் செய்கிறார். ஆதிமனிதன் சமூகம் அற்றவன். ஆதி மனிதன் தூய்மையானவனாக இருந்தான். சமூகம் உருவானதும் அவனுக்கு உளச்சிக்கல்கள் உருவாக ஆரம்பித்தன. அவன் துயர்நிறைந்தவன் ஆனான் என்கிறர் ஃபிராய்ட்.
ஆதிபாவம் போன்ற கருத்தே ஃப்ராய்ட் சொல்வதுவும். ஃப்ராய்ட் யூதர். ஆதிபாவம் என்ற கருத்து யூதமதத்தின் அடிப்படை. ஆனால் மதத்தில் அந்த ஆதிபாவத்தில் இருந்து கடவுள் மீட்பு அளிப்பார். ஃப்ராய்டியத்தில் கடவுள் கிடையாது. இதுதான் வேறுபாடு.
மதம் இங்கே பல ஆயிரம் ஆண்டுகளக உள்ளது. ஆதாமும் ஏவாளும் ஆதிபாவம் செய்து சொற்கத்தைப்போன்ற ஏதேன் தோட்டத்தில் இருந்து விரட்டப்பட்ட கதைக்கு மூவாயிரம் ஆண்டு வரலாறு உண்டு. அந்தக்கதை நம் ஆழ்மனத்தில் அழுத்தமாக வேரூன்றியது. ஆகவே அதையே நவீனக் கதைகளில் இன்னொருவகையில் காண்பதற்கு நமக்கு பிடித்திருக்கிறது. இக்காரணத்தால்தான் பேரழிவுக் கதைகள், சிதவுலகக் கதைகள் நமக்கு ஏற்புடையவையாக இருக்கின்றன. சினிமாக்களாக அவை எடுக்கப்பட்டால் நாம் ரசிக்கிறோம்.
நம் உணர்ச்சிகளில் ஓங்கியிருப்பவை அச்சம், அருவருப்பு போன்ற எதிர்மறை உணர்ச்சிகளே. அவை நம் பாதுகாப்புக்கு அவசியமானவை. எல்லா விலங்குகளுக்கும் உரிய அடிப்படையான உணர்ச்சிகள் அவை. அவற்றைப் பயன்படுத்தி கதைகளை எழுதினாலோ, சினிமா எடுத்தாலோ அவற்றை அனைவரும் கவனிப்பார்கள். தீவிரமான மனக்கொந்தளிப்பை அடைவார்கள். ஆகவே அந்தவகையான உணர்ச்சிகளை முன்வைக்கும் எழுத்துக்களும் சினிமாக்களும்தான் அதிகம்
நவீன இலக்கியம் உருவானபோது அச்சம், அருவருப்பு போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை மையமாகக்கொண்ட கதைகள் நிறைய எழுதப்பட்டன. இவற்றை கோதிக் இலக்கியம் என்று சொன்னார்கள். மேரி ஷெல்லி போன்றவர்கள் எழுதியது அந்தவகையான எழுத்தே. இன்றுவரை உலகம் முழுக்க இந்தவகையான கதைகளுக்கே வரவேற்பு உள்ளது.
அவநம்பிக்கைவாதம் வலுவாக இருக்க ஒரு நல்ல நோக்கமும் உண்டு. ஒரு சமூகத் தீங்கைச் சுட்டிக்காட்டி நம்மை எச்சரிப்பதற்கு அது ஒரு வழி. உதாரணமாக, உலகில் கார்பன் டையாக்ஸைட் அதிகமாகி ஆக்ஸிஜன் குறைந்து வருகிறது என்ற அறிவியல் உண்மையை மக்கள் மனதில் உறைக்கும்படிச் சொல்ல எதிர்மறையான அழுத்தத்துடன் ஒரு கதை சொல்லப்படலாம். அது உண்மையான எதிர்மறைத்தன்மை அல்ல. அதிலுள்ளது நம்பிக்கைதான், அதை வாசிப்பவர் மனம் மாறுவார் என்றும் அதன் வழியாக எல்லாம் சரியாக ஆகும் என்றும் கொள்ளும் எதிர்பார்ப்புதான்.
இந்தப் பின்னணியில் கல்கி சினிமா, உங்கள் ஐயங்களை அணுகுங்கள். நான் ’பதில்’ சொல்ல விரும்பவில்லை. நான் வழிகாட்டி அல்ல. நீங்களே உங்கள் விடைகளைக் கண்டடைவதற்கான ஒரு விரிவான சிந்தனைப்புலத்தை மட்டுமே காட்டுகிறேன்.
கல்கி போன்ற படங்களின் அவநம்பிக்கைவாதம் என்பது ’அறிவியல்பூர்வமானது’ ஒன்று அல்ல. அது ஒரு பார்வைக்கோணம் மட்டுமே. அந்தப் பார்வைக்கோணம் எளிதில் ஏற்கப்படுவதனால் அதிகமாகச் சொல்லப்படுகிறது. சுஜாதாவின் என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ போன்ற கதைகள் எல்லாமே ஆல்டஸ் ஹக்ஸ்லி எழுதிய காலம் முதல் இலக்கியத்தில் இருந்துகொண்டே இருக்கும் அவநம்பிக்கைப் பார்வையின் தொடர்ச்சிதான். சுஜாதாவுக்கு அந்தப் பார்வை இருந்ததா இல்லையா என்பது தெரியாது. அவருக்கு முன்பு அறிவியல் கதைகளை எழுதியவர்கள் அப்படி எழுதினார்கள், அவரும் அப்படி எழுதினார். அதை நீங்கள் அப்படியே ஏற்கவேண்டியதில்லை. அதை பரிசீலித்துப்பார்க்கலாம்.
மானுட அறிவை நம்புதல்- உரையின் எழுத்துவடிவம்
மானுட அறிவை நம்புதல்- கேள்விபதில்
உண்மையில் இயந்திரங்கள் உலகைக் கைப்பற்றும் காலம் வருமா? நவீனத் தொழில்நுட்பம் வழியாக அதிகாரம் மையப்படுத்தப்பட்டு சர்வாதிகாரம் வருமா? நவீன கலாச்சாரம் நுகர்வின் வழியாக உலகை அழித்துவிடுமா?
வ்வாறான எச்சரிக்கைகள் நமக்குத் தேவை. அப்படி நடக்கக்கூடாது என்று நாம் கவனமாக இருக்கலாம். அதற்கு எதிரான அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம். அந்த அளவுக்கு மட்டுமே இவை உதவியானவை என்பதே என் எண்ணம்.
மானுட வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அந்தவகையான எதிர்மறை நம்பிக்கைகளுக்கான ஆதாரங்கள் பெரிதாக இல்லை. மாறாக நம்பிக்கை கொள்வதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளன.
சில விஷயங்களை மட்டுமே சுட்டிக்காட்டுகிறேன்.
இன்று நவீனப்போர்க்கருவிகள் உலகமெங்கும் குவிந்துள்ளன. நவீனத் தொழில்நுட்பம் வந்தபோது நவீன ஆயுதங்கள் உருவாகி உலகம் அழிவை நோக்கிச் செல்லும் என்ற எண்ணம் சிந்தனையாளர்களால் முன்வைக்கப்பட்டது. ஆனால் உலகவரலாற்றிலேயே சென்ற முக்கால்நூற்றாண்டுதான் போர்கள் மிகக்குறைவான காலகட்டம். அதற்கு முன்பு போர்கள் நடக்காத இடமோ, காலமோ இருந்ததில்லை. நவீனப்போர்க்கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன்புதான் போரில் பலகோடிப்பேர் செத்துக்கொண்டிருந்தனர். போருக்கான மனநிலைதான் போரை உருவாக்குகின்றதே ஒழிய ஆயுதங்கள் அல்ல. அந்த மனநிலை பொதுவாக மாறிவருகிறது. இன்னும் மாறுவதற்கே வாய்ப்பு.
நவீன அறிவியல் 16 ஆம் நூற்றாண்டில் இருந்து உலகம் முழுக்கப் பரவியது. அதன் விளைவாக நவீன இயந்திரங்கள் உருவாயின. அதைத்தான் தொழிற்புரட்சிக்காலம் என்கிறோம். அந்த இயந்திரங்களால் மனிதனின் வேலைவாய்ப்புகள் போகும், முதலாளிகள் இயந்திரங்களைக் கொண்டு வேலைசெய்யவைத்து லாபம் சம்பாதிக்க, உழைப்பாளர்கள் வேலையில்லாமல் பட்டினி கிடந்து சாவார்கள் என்று அறிஞர்கள் சொன்னார்கள். ஆனால் அதன்பிறகுதான் தொழிலாளர்களின் சக்தி திரண்டது. அவர்களின் உரிமைகள் வரையறை செய்யப்பட்டன.
மனித வரலாற்றிலேயே தொழிற்புரட்சிக்குப் பிறகுதான் உழைப்பாளி மக்களுக்கு வசதியான வாழ்க்கையும் அடிப்படை உரிமைகளும் கிடைத்தன. அதன் தொடர்ச்சியாகவே இன்று தொழிலாளர்கள் வாழ்க்கை மேம்பட்டுள்ளது. மானுட வரலாற்றிலேயே இன்று தொழிலாளர் வாழ்வதுபோன்ற வசதியான வாழ்க்கை இதற்கு முன் இருந்ததே இல்லை. அது மேலும் சிறப்படையவே வாய்ப்பு தெரிகிறது. எந்த நாட்டிலும் பின்னடைந்ததாக வரலாறு காட்டவில்லை.
நாம் வாழும் இந்தக் காலகட்டத்தில் பூமியின் பெரும்பாலான மக்களுக்கு உணவு உள்ளது. வீடுகள் உள்ளன. மருத்துவ வசதிகள் உள்ளது. இந்த நிலைக்குச் சமானமான நிலை பூமியில் எப்போதுமே இருந்ததில்லை. மதவாதிகள் மட்டுமே நேற்றையகாலம் பொற்காலம் என்பார்கள். நாம் வாழும் காலமே பொற்காலம். இன்னும் கோடிக்கணக்கான மக்கள் பசியும் நோயும் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களையும் நவீன அறிவியலால் மீட்கமுடியும். அதுதான் எதிர்காலம் என நம்புவோம். அதற்காக உழைப்போம்.
இன்று நுகர்வு அதிகமாகியுள்ளது. காரணம், கோடானுகோடிப்பேருக்கு உணவும் உறைவிடமும் கிடைப்பதனால்தான். சென்ற காலங்களில் அவர்களுக்கு உணவு உறைவிடம் இல்லை. இந்த நுகர்வால் பூமியில் குப்பை பெருகுகிறது. சூழல் அழிகிறது. வேறு உயிரினங்கள் அழிகின்றன. இதை சுட்டிக்காட்டுபவர்களும் அறிவியலாளர்கள்தான்.
அவர்கள் அதையெல்லாம் சுட்டிக்காட்ட ஆரம்பித்து ஐம்பதாண்டுகள் ஆகவில்லை. அதற்குள்ளாகவே அதற்கான மாற்று வழிகள் அறிவியலால் உருவாக்கப்பட்டுவிட்டன. அந்தச் சிக்கல்களுக்கான தீர்வை அறிவியல் அளிக்க முடியும். அறிவியலை நிராகரித்து மீண்டும் பசிபட்டினி நோய்க்குச் செல்லமுடியாது.
இயந்திரங்கள் மனிதன் மீது ஆதிக்கம் செலுத்துமா? அது ஒரு கற்பனை மட்டுமே. இன்று வரை உருவான எல்லா இயந்திரங்களும் மனிதனின் உடலையும் உள்ளத்தையும் ஆற்றல்பெறச்செய்துள்ளன என்பதே உண்மை. நாளை அவை மனிதனை அடிமையாக்கும் என்பதற்கு இன்றுவரை வலிமையான சான்றுகள் ஏதுமில்லை. மனிதனின் சிந்தனை, கற்பனை ஆகியவற்றின் தொடர்ச்சியே இயந்திரங்கள். அவற்றை மனிதன் பயன்படுத்திக்கொள்ளவே செய்வான்.
இன்றுவரை மானுட வரலாறு காட்டும் ஓர் உண்மை உண்டு. மனிதனின் ‘பிரக்ஞை’ (Consciousness )தான் வாழ்க்கையையும் வரலாற்றையும் தீர்மானிக்கிறது. இயந்திரங்களோ ஆயுதங்களோ அல்ல. அவையெல்லாம் மனிதனின் பிரக்ஞையின் கருவிகள் மட்டும்தான். மனிதனின் பிரக்ஞையில் அறவுணர்ச்சி, சமத்துவ மனநிலை, இயற்கை பற்றிய ஒட்டுமொத்தமான அறிதல் போன்றவை இருந்தால் மானுடம் வாழும். இயந்திரங்களை அதற்குப் பயன்படுத்திக்கொள்ளும். அந்த உணர்ச்சிகள் அழிந்தால் மானுடம் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும்.
நாமறிந்த இருபது நூற்றாண்டுக்கால வரலாறு காட்டும் உண்மை என்பது ஒவ்வொரு நூறாண்டிலும் மானுடனின் அறவுணர்வும், சமத்துவமனநிலையும், இயற்கைப் புரிதலும் பல மடங்கு மேம்பட்டுக்கொண்டே வருவதுதான். ஆகவேதான் இந்த உலகம் நேற்றிருந்ததை விட இன்று பல மடங்கு மேலானதாக உள்ளது. சும்மா பொதுவாக வரலாற்றைப் பார்த்தாலே தெரியும். நாம் வாழும் ஊரை பார்த்தால்போதும். நம் குடும்பப் பாரம்பரியத்தைப் பார்த்தாலே போதும். நூறண்டுகளுக்கு முன் ஒரு சிறுமி இப்படி ஒரு கடிதம் எழுத முடியுமா? கல்வி உண்டா, சுதந்திரம் உண்டா? அதை சிந்தித்தாலே போதும்.
மனிதனின் பிரக்ஞை முன்னேறித்தான் செல்லமுடியும். அதற்குத்தான் இத்தனை ஞானிகளும், தத்துவ அறிஞர்களும், எழுத்தாளர்களும், கலைஞர்களும் முயல்கிறார்கள். படிப்படியாக மானுடத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இன்று இக்கடிதத்தை நீ எழுதுகிறாய் என்றால் அதில் பெண்கல்விக்கும் பெண்விடுதலைக்கும் போராடிய எத்தனை அறிஞர்களும் ஞானிகளும் பங்களிப்பாற்றியுள்ளனர் என எண்ணினால் போதும் இது புரியும். கால்டுவெல், பாரதியார், அ.மாதவையா முதல் எத்தனை பேர்!
அவர்கள் செய்த அதே பணியைத்தான் நானும் செய்கிறேன். சிறிதேனும் என் பங்களிப்பை அளிக்கிறேன். ஆகவேதான் நான் அவநம்பிக்கை கொள்வதில்லை. நம்பிக்கை கொள்ளத்தான் இங்கே வாய்ப்பு உள்ளது .வரலாறு அதையே காட்டுகிறது. எதிர்மறை உணர்ச்சிகளை உருவாக்கும் வெறும் கேளிக்கை சினிமாக்களை கண்டுவிட்டு நான் மானுடன் மேல் அவநம்பிக்கை கொள்வேன் என்றால் இந்த ஞானிகளையும் சிந்தனையாளர்களையும் அவமதிக்கிறேன். என் பணியையே நான் சிறுமை செய்கிறேன் அல்லவா?
என் கதைகளில் எல்லா பிரச்சினைகளும் பேசப்பட்டிருக்கும். ஆனால் அவற்றின் உச்சமாகத் திரண்டுவருவது நம்பிக்கையாகவே இருக்கும். கம்பன் சொன்ன வரி அதுதான் ‘மானுடம் வெல்லும்!’
ஜெ