அன்பிற்கினிய ஜெமோ அவர்களுக்கு,
நான் தங்களுடைய புதிய வாசகன். ஓராண்டாகத்தான் நான் தங்களை வாசித்து வருகிறேன். இத்தனை காலம் தங்களை வாசிக்காமல் போனது என்னுடைய துரதிர்ஷ்டம்.
விசும்பு – அறிவியல் புனைகதைகள் தொகுதியில் இடம்பெற்றுள்ள தங்களின் சிறுகதைகள் சில மாதங்களாகவே என் சிந்தையை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. இந்த மின்னஞ்சல் வழியாக, என்னுடைய சில உணர்வுகளைத் தங்களிடம் வெளிப்படுத்தி விடுவதன் மூலம் என் மனக்கிளர்ச்சியை ஓரளவு தணித்துக்கொள்ள முயல்கிறேன்.
முதலாவதாக, ‘பித்தம்‘ பற்றிப் பேசவேண்டும்.ஒரு வேதியியலாளனாக, ஆராய்ச்சியாளனாக, இரசவாதம் பற்றி எனக்கு சில சொந்தக் கருத்துகள் இருந்தன. இரசவாதம் என்பது ஒரு பித்தலாட்டம் என்பதே என் எண்ணமாக இருந்தது. ஏனெனில், ஏதோ சில தாவரச்சாறுகளில் முக்கி வைத்து விடுவதால் இரும்பு தங்கமாகி விடாது, மிஞ்சிப்போனால் வேதிவினைகள் நிகழலாம் என்பதே என் நிலைப்பாடாக இருந்தது. வேதிவினை என்பது அணுக்கள் மோதும்போது நிகழ்வது. அணுக்கள் ஒன்றோடொன்று மோதுகையில் அதன் புறப்பரப்புதான் மோதலுக்குள்ளாகிறது. புறப்பரப்பில் சுற்றிக்கொண்டிருக்கும் எலக்ட்ரான்கள், மோதலின்போது கூடவோ, குறையவோ செய்கின்றன. இந்நிகழ்வில், ஒரு தனிமம் இன்னொரு தனிமமாக மாறுவதில்லை.
ஒரு தனிமத்தை வேறொரு தனிமமாக மாற்ற வேண்டுமெனில், அதன் அணுக்கரு கையாளப்பட வேண்டும். புரோட்டான்கள் சேர்க்கப்படவோ, நீக்கப்படவோ வேண்டும். இந்நிகழ்வு கதிர்வீச்சினை வெளிப்படுத்தும். இவ்வகையான அணுக்கரு வினையை நிகழ்த்தும் ஆற்றல் தாவரச்சாறுகளுக்கு இல்லை. ஒரு அணுக்கரு ஆய்வுக்கூடத்தில், முறையான பாதுகாப்புடன், தானியங்கி எந்திரங்களைக் கொண்டு, இத்தகைய அணுக்கரு வினையை செயற்கையாக நிகழ்த்தும் சாத்தியக்கூறு உள்ளது. ஆனால், இதற்கு ஆகும் செலவிற்கு, தங்கத்தையே வாங்கி விடலாம். எனவே இரசவாதம் என்பது ஒரு சுத்தப் புளுகு என்றே நான் முடிவு கட்டியிருந்தேன்.
ஆனால், கதிர்வீச்சை வெளிப்படுத்தக்கூடிய சந்திரகாந்தக்கல்லைப் பற்றித் தாங்கள் கதையில் கூறியபோது, என் நிலைப்பாடு சற்று ஆட்டம் கண்டது. ஒருவேளை, அந்தக் கதிர்வீச்சு, மனிதர்களை பாதிக்காத அளவுக்கு, நீண்ட செயல்முறையின்போது கட்டுப்பாட்டோடு வெளிப்பட்டு, இரும்பில் அணுக்கரு வினையை நிகழ்த்தலாமோ? என்கிற தர்க்கம் தோன்றியது. இவ்வளவு ஆழமான அறிவியல் புனைகதையை என்னுடைய சிறிய எல்லைகள் கொண்ட வாசிப்புப் பரப்பில் நான் சந்தித்ததே இல்லை.
இந்தக் கதையைத் தாங்கள் நிகழ்த்திக் காட்டிய களமும், என்னை வியப்பிலாழ்த்தி விட்டன. ரசவாத வித்தையை அடைய முயலும் பண்டாரம், அவரை எள்ளி நகையாடும் பகுத்தறிவுக் கோலப்பன், பண்டாரத்திற்குப் பொருளுதவி செய்யும் நல்லகுத்தாலிங்கம் பிள்ளை, திருமூலரின் பாடலுக்கு வேறு விளக்கம் கூறும் பாட்டன், பாஷாணப் புகைக்கு (கதிர்வீச்சைத்தான் இவ்வாறு குறிப்பிடுகிறீர்கள் இல்லையா?) பலியான செட்டியார் என பாத்திரங்களின் வடிவமைப்பை நுணுகிச் செய்துள்ளீர்கள்.
தன் முயற்சியில் தோல்வியடைந்த பண்டாரம், எடுப்பதற்கு ஒரே ஒரு முடிவுதான் இருந்தது என்பதை கதையோட்டம் புரியச்செய்து விட்டது.பாதி தங்கமான ஆணியைக் கண்ட கோலப்பன் என்ன செய்திருப்பான் என்பதைத் தாங்கள் கூறாமல், வாசகனின் கற்பனைக்கு விட்டுவிட்டீர்கள். பண்டாரத்தின் இளமைக்காலம் கோலப்பனின் நிகழ்காலத்தை விட அதிக அலட்சியமாகவும், ஒழுக்கமின்மைகளால் நிரப்பப்பட்டும் இருந்திருக்கிறது. செட்டியாரின் சிதையில் வெடித்துக் கிடந்த சட்டியில் மின்னிய பொன்னைப் பார்த்த பண்டாரத்தின் இடத்தில், காலவெளியில், இப்போது கோலப்பன் நிற்கிறான்.
இப்போது அவனுக்கு மூன்று வழிகள் உள்ளன. அவன் தன்னுடைய தவறுக்கு வருந்திவிட்டு, பண்டாரத்தின் ஆன்மாவிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுவிட்டு, தன் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கலாம். அல்லது, தன்னுடைய பகுத்தறிவுக் கறுப்புக் கண்ணாடியை அணிந்துகொண்டு, பகுத்தறியாமல் கடந்து சென்றிருக்கலாம். அல்லது, அவனும் ஒரு பண்டாரமாக மாறியிருக்கலாம். எனக்கு மூன்றாவது நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமிருப்பதாகத் தோன்றியது. மனிதனின் அறிவுப்பசி மிக உக்கிரமானதல்லவா?
ஐந்தாவது மருந்து ஏன் கண்டுபிடிக்கப்படக்கூடாது என்பதை ‘ஐந்தாவது மருந்து’ கதையில் கூறியிருந்தீர்கள். அதுபோலவே, இரசவாதம் என்ற ஒன்று இருப்பின் அது மனிதனின் கைகளில் அகப்படக் கூடாது அல்லவா? எனில் தங்கத்திற்கு மதிப்பென்ற ஒன்றே இல்லாமல் போய்விடுமே. அது ஒரு சாதாரண உலோகமாகி விடாதா? இந்த உண்மையைப் பண்டாரத்தின் ஞானத்தேடல் புறந்தள்ளி விட்டது.
அடுத்ததாக என்னை மிக வியக்கச் செய்தது, ‘தமிழ் இலக்கிய வடிவங்கள் – நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு’. படிக்கத் தொடங்குகையில் தங்களின் தனிக்குரல், சொல்முகம் போன்ற உரைத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளவை போல இதுவும் தங்களின் ஒரு உரை என்று தோன்றியது. இது உரைத்தொகுப்பில் இடம் பெறாமல் ஏன் அறிவியல் புனைகதைகளில் இடம் பெற்றுள்ளது என்று குழம்பினேன். திடீரென 2055-ஆம் ஆண்டு என்று வந்ததும் நிமிர்ந்து உட்கார்ந்து விட்டேன். அச்சுப்பிழையோ என்று கூடத் தோன்றியது. அவ்வளவுதான். இக்கதை ஒரு காலஎந்திரமாக மாறியது. 2065, 2072, 2088, 2110, 2170, 2612, 2800, வெளிவருடங்கள் என மரங்களைக் கடக்கும் பேருந்து போல இக்காலஎந்திரம் என்னை வருடங்களைக் கடந்து சுமந்து சென்றது. இலக்கிய வடிவங்கள் அழிவதையும் புதிய வடிவங்கள் தோன்றுவதையும், பூமியின் முடிவையும், மனிதனின் ஆற்றலையும் பரிணாம வளர்ச்சியையும் நான் கண்டேன். இலக்கிய வடிவங்களின் எதிர்காலம் பற்றிய தங்களின் எதிர்பார்ப்புகள், அவதானங்கள், கற்பனைகள் மிக ஆழமானவையாக இருந்தன.
ஐந்து மருந்து, உற்று நோக்கும் பறவை கதைகள் வியப்பின் உச்சம் என்றால் மிகையில்லை.இதுபோன்ற ஒரு வடிவில் அறிவியல் புனைகதைகளைப் படிப்பது ஒரு அற்புத அனுபவமாக இருந்தது. இந்த அனுபவம் வேறு எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அறிவியல் புனைகதைகள் நம் பண்பாட்டிலிருந்து உருவாக வேண்டும் என்றீர்கள். இந்தத் தளத்தில் இன்னும் செறிவுடன் கதைகள் எழுதப்பட வேண்டும் என்றீர்கள். ஆனால், இன்று வரை வேறு யாரும் இத்தகைய முயற்சியை செய்ததாகத் தெரியவில்லை. என் போன்றோரின் வேட்கையைத் தீர்க்கும்பொருட்டு தாங்கள் ஏன் மேலும் இதுபோன்ற கதைகளை எழுதக்கூடாது?
பாரம்பரியமான அறிவியல் புனைகதைகளிலிருந்து மாறுபட்ட, விசும்பு தொகுப்பில் இடம்பெற்றுள்ளது போன்ற கதைகளை வேறு யாராவது எழுதியிருக்கிறார்களா என தயைகூர்ந்து தெரிவிக்கவும்.
– வ. ரமணன், பள்ளிக்கரணை, சென்னை.
How US physicists played God, created a new element called Livermorium using titanium particle beam
அன்புள்ள ரமணன்,
பித்தம் கதை வெளிவந்து ஏறத்தாழ 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. அக்கதை வெளிவந்த நாட்களில் ஓர் அறிவியல் ஆசிரியர் எனக்கு எழுதியிருந்தார். அது அறிவுரை சொல்லும் பாணியிலான கடிதம். அதன் சாரம் இதுதான். தனிமம் அல்லது மூலகம் என்பது மாறாத அணு எண் கொண்டது. ஆகவே ஒரு தனிமத்தை இன்னொன்றாக மாற்ற முடியாது- நிலையற்ற அணுக்கட்டமைப்பு கொண்ட தனிமங்கள் சில உருமாறும். தோரியம்- யுரேனியம்- பொலேனியம் போல.ஆனால் அவை ஒரே உலோகத்தின் இன்னொரு தோற்றங்கள் மட்டுமே. இந்த அடிப்படை தெரிந்திருந்தால் ரசவாதம் ஒரு பைத்தியக்காரத்தனம் என்று புரியும். இனிமேல் தீர விசாரித்து எழுதவும்.
நான் அதற்கு பதில் எழுதினேன். அப்பதிலை ஏளனம் செய்து அவர் எனக்கு இன்னொரு கடுமையான கடிதம் எழுதினார். அதை அவர் தன் வலைப்பூவில் வெளியிட்டார். உடனே அதைச்சார்ந்து என்னைப்பற்றிய கேலிகள், அறிவுரைகள் வந்து குவிந்தன. நான் அவருக்கு எழுதிய பதிலை அன்று வந்துகொண்டிருந்த ஓர் இணைய இதழில் வெளியிட்டேன். அந்தப்பதிலை எவரும் புரிந்துகொள்ளவில்லை. அதைச் சமாளிப்பு என்றே எடுத்துக் கொண்டார்கள்.
அந்தப் பதில் இதுதான்.
அறிவியலை அப்படியே எழுதுவது அல்ல இலக்கியம். எழுதவும்கூடாது. இலக்கியம் தன் பேசுபொருளாக நேரடியான வாழ்க்கையையே கொண்டுள்ளது. அந்த வாழ்க்கையை செறிவாகப்புரிந்துகொள்ள அது தத்துவத்தின் கருவிகளைப் பயன்படுத்துகிறது. கூடுதலாக அது வரலாற்றையும் பிற அறிவுத்துறைகளையும் தன் கருப்பொருளாகப் பயன்படுத்திக்கொள்கிறது. வரலாற்றில் இருந்தும் பிற அறிவுத்துறைகளில் இருந்தும் இலக்கியம் எடுத்துக்கொள்வது படிமங்களையும் உருவகங்களையும்தான். வாழ்க்கையைச் சொல்வதற்கு அவை கவித்துவமாகப் பயன்படுகின்றன.
இலக்கியத்துக்குத் தேவை அறிவியலின் நிரூபிக்கப்பட்ட தரவுகள் அல்ல. ஏனென்றால், அவற்றில் கற்பனைக்கான இடம் இல்லை. இலக்கியத்திற்குத் தேவை அறிவியலின் புதிய சாத்தியங்கள்தான். ஆகவே எப்போதும் frontier science எனப்படும் அறிவியலின் எல்லைகளையே இலக்கியம் கவனிக்கும். அதில்தான் விந்தை அம்சம் உள்ளது, கற்பனைக்கான வாய்ப்பு உள்ளது. அதில் ஒரு பகுதி அறிவியல் உண்மையாகவும் ஒருபகுதி ஊகமாகவும் இருந்துகொண்டிருக்கும்.
அறிவியலிலும் எப்போதுமே ஒரு பகுதி வெறும் ஊகங்கள் (hypothesis) தான். அவை பின்னர் நிரூபிக்கப்பட்டு அறிவியல் உண்மைகள் ஆகின்றன. இலக்கியம் அந்த ஊகங்களையே கூடுதலாகக் கவனிக்கிறது. அவற்றையே எடுத்தாள்கிறது. அறிவியல் தன் ஊகங்களில் இருந்து தர்க்கபூர்வமான நிரூபணம் நோக்கி செல்கிறது. இலக்கியம் அந்த ஊகங்களை மேலும் கற்பனையால் வளர்த்துக்கொண்டு புதிய பார்வை ஒன்றை உருவாக்க முயல்கிறது.
ஆகவே இலக்கியத்தை அறிவியலுண்மைகளைச் சொல்லும் கதை என எடுத்துக்கொள்ளக்க்கூடாது. மானுடவாழ்க்கை சார்ந்து சில அடிப்படைகளைச் சொல்வதற்காக அறிவியலை இலக்கியம் உருவகமாகவும் படிமமாகவும் பயன்படுத்துகிறது என்றே எடுத்துக்கொள்ளவேண்டும். அதுவே அறிவியல்புனைவை வாசிப்பதற்கான வழிமுறை.
உதாரணமாக, இலைகள் பச்சையத்தால் ஒளிச்சேர்க்கை செய்து உணவு தயாரிப்பதுபோல ஒரு மனிதன் தன் உடலால் ஒளிச்சேர்க்கை செய்கிறான் என்று ஒரு கதை எழுதப்படுகிறது என்று கொள்வோம். அது எந்த வகையில் சாத்தியம் என்று நிரூபணவாத நோக்கில் பார்ப்பது இலக்கிய வாசிப்பு அல்ல, நிரூபணத்திற்கு இலக்கியம் தேவையில்லை, இலக்கியத்தில் அதற்கான வழிகளுமில்லை. அது ஓர் உருவகம். மனிதனுக்கும் ஒளிக்கும் இடையே ஓர் உறவாடல் நிகழ்வதை அது குறியீடாகச் சொல்கிறது. அந்த உருவகம்தான் அந்தக்கதையில் வாசகன் உணர்ந்து விரிவாக்கம் செய்யவேண்டியது.
பித்தம் கதை பற்றி நான் விளக்கினேன். ரசவாதம் (alchemi) என்பது மானுடகுலம் முழுக்க இருந்துகொண்டே இருக்கிறது- நவீன வேதியியலே அல்கெமியில் இருந்து உருவானது. ஒரு தனிமத்தை இன்னொன்றாக ஆக்கமுடியும் என்பதே அந்நம்பிக்கை. இடைவிடாத சோதனைகள் நிகழ்கின்றன. அவை இன்றுவரை நடைமுறை வெற்றி அடையவில்லை. ஆனால் மாற்றமுடியும் என்னும் ஒரு ஊகம், கருதுகோள் உள்ளது. இலக்கியத்திற்கு அதுபோதும்.
பித்தம் கதையில் அந்தக் கருதுகோள் சொல்லப்படுகிறது. அதை ஒட்டி அக்கதை ரசவாதத்தை ஒரு தத்துவ உருவகமாக முன்வைக்கிறது. தங்கம் என்பது ஓர் உருவகம். அதைநோக்கிய மனிதனின் தேடலும் தவிப்புமே அந்தக் கதை. தோற்றாலும் மனிதன் அந்த தேடலை கைவிடுவதில்லை. ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு அது பற்றிக்கொள்கிறது.
கடைசியாக நான் அந்த அறிவியலாசிரியருக்கு எழுதினேன். அறிவியல் என்பது வேறு அறிவியல் பாடம் வேறு. அறிவியல்பாடம் நிரூபிக்கப்பட்டவற்றை கற்பிப்பது. அறிவியல் புதிய கருத்துக்களை நோக்கி தொடர்ச்சியாக முன்னகர்வது. தமிழகத்தில் நாம் அறிவியலை பாடமாக படிக்கிறோம். அதன்பின் அறிவியலென்றால் நாம் படித்த பாடங்களே என நினைத்துக் கொள்கிறோம். அதையே சொல்லிக்கொண்டிருக்கிறோம். நமக்கு அறிவியல் மனநிலையே அமையாது போனமைக்கான காரணம் இது.
‘இது ஒருபோதும் சாத்தியமல்ல’ என்று அறிவியலாளன் சொல்ல மாட்டான். ‘இன்றைய நிலையில் இது நிகழவில்லை’ என்றே சொல்வான். அதுவே அறிவியல்மனநிலை. இன்று ஒரு தனிமத்தை இன்னொன்றாக மாற்றமுடியாது. நாளை இன்னொன்றாக அறிவியலாளர் மாற்றிக்காட்டவும் வாய்ப்புண்டு. அதுதான் அக்கதையிலும் அறிவியல்பூர்வமாகச் சொல்லப்பட்டுள்ளது.
இதை நான் அவருக்கு எழுதினேன். அவர் என்னை கண்டித்து எழுதினார். ‘அறிவியலின் அடிப்படைகள் மாறாது. ஒன்றும் ஒன்றும் இரண்டுதான்’ என்றார். ‘அது நிரூபணவாதம். கொள்கைசார் அறிவியலில் ஒன்றும் ஒன்றும் ஒன்றாகவோ மூன்றாகவோ ஆக வாய்ப்பு உண்டு’ என்று நான் எழுதினேன். அதன்பின் ஏளனங்கள்.
சில நாட்களுக்கு முன் அமெரிக்க அறிஞர்கள் ஒரு புதிய தனிமத்தை உருவாக்கிவிட்டார்கள் என்ற செய்தியை அவருக்கு அனுப்பினேன். ஆனால் அவர் உயிருடன் இருக்கிறாரா என்று தெரியவில்லை. அப்போதே அவருக்கு அறுபது கடந்த வயது. பதில் வரவில்லை.
அறிவியல்புனைவை வாசிக்க இன்னொரு தெளிவும் தேவை.
அறிவியல் புனைகதைகள் காலப்பயணம், ஒளிவேகப் பயணம், இயந்திரமானுடர் என்றெல்லாம் இன்று பேசும் பல விஷயங்கள் இன்றைய அறிவியல் அல்ல. அறிவியல்புனைவிலேயே இரண்டு வகைமை உண்டு. அறிவியல் புனைவு, அறிவியல் மிகுபுனைவு. (Science fiction, Science Fantasy) அறிவியலின் உண்மையான ஊகங்களை விரிவாக்கம் செய்வது அறிவியல்புனைவு. அந்தச் சாத்தியக்கூறுகளில் இருந்து கட்டற்ற கற்பனைக்குச் செல்வது அறிவியல் மிகுபுனைவு. ஹாலிவுட் சினிமாக்களில் வருவது அறிவியல் மிகுபுனைவுதான்.நான் அறிவியல்புனைவை மட்டுமே எழுத விரும்புகிறேன்.
இன்னொரு புரிதல். அறிவியல் வேறு, தொழில்நுட்பம் வேறு. science and technology என்று புரித்தே எப்போதும் பேசுகிறார்கள். தொழில்நுட்ப விந்தைகளைச் சொல்வது அறிவியல்புனைவு அல்ல. அறிவியல்கொள்கைகளின் விந்தைகளையே அறிவியல்புனைவுகள் நாடுகின்றன. ஆனால் தொழில்நுட்பத்தை ஒரு உருவகமாக பயன்படுத்தி வாழ்க்கையின் நுட்பத்தை பேசமுடியும் என்றால் அது அறிவியல்புனைவே. உதாரணமாக, எதிர்காலத்தில் செயற்கையான நூற்றுக்கணக்கான கண்களை எல்லா இடங்களிலும் பொருத்தி அவற்றை மானுட மூளையுடன் இணைத்து மனிதனின் பார்வையை பலநூறு மடங்கு விரிவாக்கம் செய்துவிட்டார்கள் என்று ஒரு கதை வருகிறது. அது தொழில்நுட்ப விந்தை பற்றிய கதை அல்ல. மானுடனின் பார்வை பற்றிய கதை.
நான் எழுதிய குழந்தைகளுக்கான நாவல்களிலும் நான் அறிவியலை பயன்படுத்தியுள்ளேன். அறிவியலில் உள்ள ஊகங்களின் சாத்தியக்கூறையே நான் பயன்படுத்துகிறேன். அறிவியலை தெளிவாக விளக்கி, அதில் இருந்து கற்பனை வழியாக ஒரு முன்னகர்வு. அந்தக் கற்பனை அறிவியல் அல்ல, ஆனால் அறிவியலின் நீட்சி. ஆகவேதான் அவை அறிவியல்புனைவுகள். என் நோக்கம் அறிவியலைப்பேசுவது அல்ல, வாழ்க்கையையும் தரிசனங்களையும் முன்வைப்பதே. (அரூ அறிவியல் இணைய இதழ்)
*
தமிழில் அறிவியல்புனைவுகள் பொழுதுபோக்குக்காகவே எழுதப்பட்டன. அதை விரிவாக்கம் செய்யும் நோக்குடன் அறிவியல் கொள்கைகளை முன்வைத்து நான் எழுதிய அறிவியல் கதைகளே விசும்பு தொகுதி. ஒரு தலைமுறைக்குப் பின்னரே அதில் அடுத்தகட்ட நீட்சி சாத்தியமானது
அரூ என்னும் இதழ் தொடர்ச்சியாக அறிவியல் சிறுகதைப்போட்டிகளை நடத்தி கதைகளை தொகுப்புகளாக வெளியிட்டது. அவற்றில் தமிழ் அறிவியல் சிறுகதைகளின் மிகச்சிறந்த மாதிரிகள் உள்ளன. கிரிதரன் ராஜகோபாலன், சுசித்ரா, பெரு.விஷ்ணுகுமார், நகுல்வசன் ஆகியோரை முதன்மையாக குறிப்பிடுவேன். பிரபாகரன் சண்முகநாதன், விஜயராவணன் என பலர் அறிவியல்கதைகளை எழுதினர். பலர் இயல்பான தயக்கத்தால் புனைபெயர்களில் எழுதியுள்ளனர் என்று தோன்றுகிறது.
ஆனால் அரூ கதைகளுக்கு தமிழ்ச்சூழலில் போதிய எதிர்வினைகள் உருவாகவில்லை. (அரூ போட்டிக்கு நடுவராக வந்தவர்களிலேயே யுவன் சந்திரசேகர் போன்றவர்களுக்கு நவீன அறிவியல்புனைவின் வடிவங்கள் தெரியவில்லை. சாதாரண யதார்த்தமொழிக் கதைகளே இங்கே நம் உள்ளத்தில் உள்ளன. அறிவியல்புனைவு என்பது எப்படியோ ஒரு மொழிப்பயணமாகவும் ஆகிவிடும்) ஆகவே வாசக எதிர்வினைகளும் உருவாகவில்லை. அந்த முயற்சி தேக்கநிலையில் உள்ளது. வாசகர்கள் தயாராகவில்லை என்பதனால் எழுத்தாளர்கள் சோர்வடையலாகாது. தமிழில் வலுவான அறிவியல் புனைவுகள் வரவேண்டும்
ஜெ