அன்புள்ள ஜெ
உங்கள் இரண்டு நாவல்களை என் பிள்ளைகளுக்காக வாங்கினேன். வெள்ளி நிலம், பனிமனிதன். என் பிள்ளைகள் இரண்டுபேருமே இன்று வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களை எதையாவது வாசிக்க வைப்பது என்பது இன்று மிக முக்கியமான ஒரு தேவையாக உள்ளது. இன்றைய பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் இழந்துவருகிறார்கள். எழுத்துக்களைப் பார்க்கும் வழக்கமே குறைகிறது. எழுத்தைப் பார்த்தாலே எரிச்சல் கொள்கிறார்கள்.
நான் ஆரம்பத்திலேயே கொஞ்சம் கவனமாகவே இருந்தேன். பிள்ளைகளுக்கு செல்போன் எல்லாம் கொடுக்கவில்லை. ஆனால் பள்ளி நம் கட்டுப்பாட்டில் இல்லை. பள்ளியிலும் கட்டுப்பாடுகள் உண்டு. ஆனாலும் பள்ளிக்கு செல்போன் வந்துவிடும். செல்போன் இல்லை என்றாலும் அதிலுள்ள கண்டெண்டை பேசிக்கொண்டே இருப்பார்கள். அதுவே செல்போன் நோக்கி ஈர்க்கும்
பிள்ளைகள் முதலில் சிறிய யூடியூப் வீடியோதான் பார்க்கிறார்கள். அதுவும் மிருகங்கள் போன்ற காட்சிகள். சின்னச்சின்ன காமெடிகள். சரி படிப்புக்கு கொஞ்சம் ரிலீஃப் ஆக இருக்கட்டுமே என்று நாம் நினைப்போம். ஆனால் அது ஒரு தொடக்கம். சீக்கிரமே கேம் விளையாட்டிலே போய் முடியும். என் நண்பரின் மகன் பப்ஜி விளையாட்டிலே அடிமை. அவனை கண்டித்தார். அவன் ஓடிப்போய் எட்டுநாள் கழித்து மீட்டார்கள். நல்லவேளை கிடைத்துவிட்டான்.
நானெல்லாம் காலேஜ் வரை வீட்டில் கதைபுக் படிக்க அனுமதிக்கப்படாமலேயே வளர்ந்தேன். ரகசியமாக சுஜாதா எல்லாம் படிப்போம்.ஆனால் இன்றைக்கு பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டியுள்ளது. கதை படித்தால்கூட படிக்கும் வழக்கம் இருந்தால் நல்லது என்று படுகிறது. இல்லாவிட்டால் எதையுமே படிக்கமுடியாமலாகிவிடுகிறது.
பனிமனிதன் நாவலை முதலில் கொஞ்சம் கதை சொல்லிவிட்டு அவர்களுக்குக் கொடுத்தேன். அதிலுள்ள துணுக்கு அறிவியல்செய்திகளை முதலில் வாசித்தார்கள். அதன்பின் இருவருமே படித்தார்கள். அவர்களுக்கு நம்மைவிட அறிவியல் ஆர்வம் இருக்கிறது. நாம் நினைப்பதைவிட ஜாஸ்தியாகவே தெரிந்தும் இருக்கிறது. பனிமனிதனிலுள்ள பரிணாமவாதம் பற்றிய செய்திகள் அவர்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்தன. அந்நாவலின் கட்டமைப்பே ஃபேண்டஸியும் அட்வெஞ்சரும் கலந்ததாக இருந்தது. அது கற்பனைகளைத் தூண்டிக்கொண்டே இருந்தது. நிறைய பேசினோம். பரிணாமவாதத்தைப் பற்றி எல்லாம் விவாதம் செய்தோம். ஒரு புத்தகம் இவ்வளவு பேசவைக்கும் என்பது ஆச்சரியமாக இருந்தது.
உடையாள் வாங்கியிருக்கிறேன். படிக்கவேண்டும்
வே.தி.குமார்
அன்புள்ள குமார்
இன்று குழந்தைகளை இயற்கையுடன் இணைந்திருக்கவும், புத்தகங்களை வாசிக்கவும் பழக்காதவர்கள் அவர்களின் வாழ்க்கையை முழுமையாக அழிக்கிறார்கள் என்றுதான் பொருள். இயற்கையுடன் இருப்பதற்கும் புத்தகங்களுடன் இருப்பதற்கும் பொறுமை தேவை. ஏனென்றால் அதற்கு தொடர்ச்சியான காலம் உண்டு. இன்றைய காணொளிகளில் தொடர்ச்சியான காலம் இல்லை. துளித்துளியாகவே அவை உள்ளன. அவற்றில் ஈடுபடுந்தோறும் மனம் தொடர்ச்சி அற்றதாக ஆகும். சிந்திக்கவோ சிந்தனைகளை வெளிப்படுத்தவோ முடியாமலாகும். வாசிப்பு, பறவைகள் பார்த்தல், தாவரங்களை சேகரித்தல் போன்ற செயல்பாடுகளே குழந்தைகளை இன்றைய காணொளி – கணினிவிளையாட்டு அலையில் இருந்து காக்கும். அதைத்தான் உலகம் முழுக்கச் செய்கிறார்கள். இன்று அந்த விழிப்புணர்வு இந்தியாவில் உருவாகவில்லை
ஜெ