இருண்ட உலகம் என்று பெயர் வைத்து இருக்கலாம். வாழ்வாரத்திற்காக எந்தத் தொழில் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை கடந்த நூற்றாண்டின் இறுதியில் ஆரம்பித்தாலும், இந்த நாவலை படிக்க ஆரம்பிக்கும் போதே பதட்டத்தை தருகிறது.
பண்டாரம் போத்திவேலுக்கு பழனி அடிவாரத்தில் பிச்சையெடுக்க வைத்திடும் தொழில். அவன், அவனின் பிள்ளைகளிடம் காட்டும் பாசம் வேறு. தொழில் வேறு. அவன் செய்யும் தொழிலை தர்மமாக கருதுகிறான். இதற்கு மேல் கதைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை.
உயிரை மட்டும் விட்டு விட்டு, உயிரை எடுத்திடும் உலகமாய் இந்த ஏழாம் உலகம். இந்த ஜென்மம் எதற்கு என்று நன்றாக வாழ்ந்திடும் நாமே, வாழ்வில் ஒரு சில முறை கேட்டு கொள்வோம். இவர்களுக்கு எல்லாம் இது தோன்றி இருக்குமா? இல்லை அடுத்த வேளை என்பதையே சிந்திக்காமல் இருந்திடும் மனநிலையில், அடிப்படைத் தேவையை நிறைவு செய்து கொண்டவன் போல எந்த நெருக்கடியும் வராதோ! என்ற எண்ணமும் வந்து போகிறது.
மனிதனை அஃறிணையில் “உருப்படி“
என்று அழைத்திடும் போது, இந்த வாழ்வின் அடிநாதமாக சொல்லும் அனைத்தையும், செய்யும் அனைத்தையும் கூறுபோட்டு, இவர்களின் வாழ்வியல் நம்மை ஒருமுறை திரும்பி பார்க்க வைக்கிறது.
ஒரு ஆணையும், பெண்ணையும் இல்லறத்தில் இணைத்திட, கல்யாணம் என்ற பெயரில் எத்தனை கொண்டாட்டமாக ஆரம்பித்து வைக்கிறோம். ஆனால் இந்த உலகத்தில் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை யாரை யாரையோ இணைய வைக்கிறார்கள். அந்தப் புதிய பிறப்பும் அடுத்த 12 மாதத்தில் பிச்சையெடுக்க வேறு இடத்திற்கு மாற்றுகிறார்கள். பிள்ளைக் கொடுத்தவன் யாரென்றும் தெரியாது.
ஒரு முறை எருக்கு என்பவள் போலீசில் மாட்டி கொள்ள பெருமாள் என்பவன் எருக்கு என்ற உருப்படியை தன் இருப்பிடத்திற்கு கொண்டு சொல்ல, தற்காலிக தாலி கட்டிவிட, அவனை கணவனாக ஏற்று கொண்டு அவள் படும்பாடு உணர்வுகளின் உச்சம்.
மூட்டைகளை அள்ளிப்போடுவது போல உருப்படிகளை, இடம் விட்டு இடம் மாற்றுவதும், வேறு தேசத்திற்கு கை மாற்றுவதும் மனிதக் குலத்திற்கே சாபம் என்று தான் சொல்ல வேண்டும்.
படுக்க இடமில்லை. சரியான சாப்பாடு இல்லை. மருத்துவம் செய்ய கூட ஆளில்லை. மலையின் அடிவாரத்தில் இருக்கும் யாரும் ஒரு முறை கூட முருகனைத் தரிசித்தது இல்லை. ஆனாலும் சிரிக்கிறார்கள். நகைச்சுவையாக பேசுகிறார்கள்.
பணம், பொருளாதாரம், இலக்கு என்று எத்தனை ஓடினாலும், திணிக்கப்பட்ட வாழ்வில் இருந்து நின்று, நிதானமாய் உலகைப் பார்த்தால் இறுதியில் உணர்வோடு தான் இறுதியில் லயித்து போகிறான்.
இந்தப் புத்த்கத்தைப் படித்தால் பிச்சை எடுப்பவர்களை எப்படியாவது காப்பாற்ற முடியுமா? என்ற எண்ணம் ஒரு வேளை வரலாம்.
எழுத்து அற்புதமாக இருந்தாலும், தீர்வு இல்லாமல் முடித்தது ஒரு வருத்தம். நாகர்கோவில் வட்டார வழக்கு கொஞ்சம் பரிச்சியமானது.
இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்பதே வேண்டுதல்.
(தொடர்புக்கு : [email protected]
Phone 9080283887)