இரு நாவல்கள்

அன்புள்ள ஜெ

வெண்முரசு வாசித்துவிட்டு ஆலமும் படுகளமும் வாசிப்பதென்பது ஒரு விசித்திரமான அனுபவம். முதலில் இதென்ன இப்படி எழுதுகிறார் என்ற எண்ணம் ஆலம் வாசிக்கும்போது வந்தது. ஆலம் சூடுபிடித்து அதன்பின் ஒன்றும் தோன்றவில்லை. ஒருமணி நேரத்தில் வாசிப்பு முடிந்தது. நீங்கள் உங்களுக்கே ஏதோ ஒரு எழுத்துத்தேவை இருப்பதனால் ஆலம் எழுதிவிட்டீர்கள் என்று நினைத்தேன்.

ஆனால் பத்துநாட்களுக்குப்பிறகும் சில பகுதிகள் ஆழமாக நினைவில் நின்றன. நுட்பமான உளவியல் சாதாரண புழக்கம் வழியாக வெளிப்படும் இடங்கள் அவை. சந்தானத்திற்கும் அவர் மகனுக்குமான உறவை பற்றி பிறர் வியந்து பேசும் இடங்கள். அந்த வன்முறை நிறைந்த வீட்டில் உள்ள இறுக்கம். இதெல்லாம் தமிழில் த்ரில்லர் எழுதிய எவரும் எழுதவே முடியாத இடங்கள். (அப்படி ஒரு வீட்டை எனக்குத் தெரியும்)

அதேபோல நகைச்சுவை மென்மையாக வெளிப்படும் இடங்கள். சந்தானத்தின் வீட்டில் வேலைபார்த்த ஆச்சி பேசும் இடங்கள். அவருடைய சொத்தை அபகரித்துக்கொண்ட பங்காளி அவரைப்பற்றிச் சொன்னதும் பதறும் இடம். மிகமெல்ல விரிந்துசெல்லும் நாவல் ஒரு மகத்தான அபத்தத்தை காட்டி முடிவடைகிறது.

படுகளம் நேர்மாறாக அதன் உச்சமே முதல் அத்தியாயம்தான். ஒரு கடைவீதியின் ஒருநாளின் நுட்பமான விவரிப்பு. அந்த சலிப்பின் போதையை அழகாக காட்டியது அது. அந்நாவலில் அம்மாவின் கதாபாத்திரம் அபாரமானது. கடைக்காரர்களின் உறவுகளுக்குள் உள்ள நயவஞ்சகமும் அருமை. (என் அனுபவமும் அதுவே) இந்நாவலில் நாடார் அமைப்பு உண்மையில் வகித்த பங்கை மறைத்துவிட்டீர்கள் என்று ஒரு நண்பர் சொன்னார். இதை திட்டுபவர்கள் பலபேர் வேளாளர்கள். ஒரு நாடார் ஒரு வேளாளரை அழிப்பதுதான் கதை என்று அவர்கள் வாசித்திருக்கிறார்கள்.

படுகளம் இங்கே நடந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் நடக்கிறது. எந்த மார்க்கெட்டிலும் போய் கேட்டால் படுகளத்தில் வீழ்த்தப்பட்ட ஒரு ஜயண்ட் இருப்பார். அவரைப்பற்றிய கதைகளும் இருக்கும். வீழ்த்தியவர்கள் ஜயண்ட் ஆகி அவர்களும் வீழ்வார்கள். கதாநாயகன் அந்த ரேஸில் சிக்காமல் கடைசி நிமிடத்தில் தப்பித்துக் கொள்கிறான். அவன் வெறும் வியாபாரி அல்ல. வியாபார வெற்றி அவனை கவரவில்லை. அவனுக்கு அது பயத்தைத்தான் அளிக்கிறது. அந்த நுட்பம்தான் இதை ஒரு எளிமையான திரில்லர் அல்லாமலாக்குகிறது. அவனுக்குள் இருக்கும் கலை, அவன் ஆசிரியரின் அருகாமை எல்லாம் அதற்கு உதவுகின்றன.

மாதவராஜ் பெருமாள்சாமி

முந்தைய கட்டுரைகுடைவரைப் பயணம்
அடுத்த கட்டுரைமருபூமி – மரணங்களின் தரிசனம்:ரோட்ரிக்ஸ்