அன்புள்ள ஜெ
அண்மையில் உங்கள் தங்கப்புத்தகம் நூலை வாசித்தேன். எப்படியோ அது ஒரு பயணநூல் அல்லது அதேமாதிரியான படைப்பு என்று நினைத்திருந்தேன். அது ஒரு கற்பனைப்படைப்பு, முழுக்கமுழுக்க கற்பனை என்பது அதை வாசித்த பிறகுதான் தெரிந்தது. ரஷ்ய ஓவியரான ரோரிச் திபெத் மீது மிகப்பெரிய பற்று கொண்டவர். ஷம்பாலா என்ற அற்புதநகரம் உண்டு என்று நம்பி கோடிக்கணக்கான ரூபாயை அதைக் கண்டுபிடிப்பதற்காகச் செலவிட்டார். அந்தக் கற்பனை அர்த்தமற்ற ஒன்று. ஆனால் விளைவாக காலத்தால் அழியாத மாபெரும் ஓவியங்களை அவர் வரைந்தார்.
தங்கப்புத்தகம் அத்தகைய ஒரு அபூர்வமான படைப்பு. திபெத் என்ற மர்மநிலம் பற்றிய கதைகள். ஒரு ஃபேண்டஸி கதைத்தொகுப்பு போல அவற்றைப் படித்துச்செல்ல முடிகிறது. ஆனால் எல்லாக் கதைகளுமே மிஸ்டிக் கதைகள். நாம் சாதாரணமாக அணுகமுடியாத சில ஆழங்கள் கொண்டவை. இந்தக்கதைகளை வாசிப்பதே ஓரு தியான அனுபவமாக அமைந்தது. அண்மையில் நான் ஒரு புத்தகத்தில் இந்த அளவுக்கு ஈடுபட்டு வாசித்தேன் என்றால் அது தங்கப்புத்தகம்தான்.
தியானத்தை கொஞ்சம் பழகியவர்களுக்கு தங்கப்புத்தகம் என்பது மனம்தான் என எளிதில் தெரிந்துகொள்ள முடியும். கரு உட்பட எல்லா கதைகளுமே எங்கோ கனவின் ஆழத்தில் நடைபெறுகின்றன.
துறவூர் சண்முகசுந்தரம்
அன்புள்ள ஜெ
அண்மையில் நான் வாசித்து மகிழ்ந்த ஒரு நூல் என்றால் இரு கலைஞர்கள் என்னும் சிறுகதைத் தொகுப்புதான். தற்செயலாக ஒரு நண்பரிடமிருந்து வாங்கி அதில் ஜெயகாந்தன் வரும் கதையை மட்டும் வாசித்தேன். ஆர்வம் தாளாமல் எல்லா கதைகளையும் வாசித்தேன். எனக்கு வயது 80. இன்றுவரை இந்த வகையான கதைகளை வாசித்ததில்லை. இவை கதைகளின் புதிய வடிவங்கள் என நினைக்கிறேன். கதைகளை தொடர்ச்சியாக வாசித்தபோது என் அபிப்பிராயம் இதுதான். மனிதர்களில் பொன்னும் மண்ணும் உண்டு. மண்ணை எழுதலாம். நீங்கள் பொன்னை மட்டுமே எழுதியிருக்கிறீர்கள். எனக்கு கண்ணதாசன் மேல் ஈடுபாடு. எங்கள் செட்டிநட்டுக் கவிஞர். கண்ணதாசன் பற்றிய கதைகள் இல்லை என்பது ஒரு ஏமாற்றம்.
அ. பழனியப்பன்