அன்பின் ஜெ!
ஜூலை மாதம் 5ம் தேதி, இரவு 9.35க்கு தனக்கு மகத்தான நாளாக விடிந்ததை, ஏற்புரையில் போர் பிரகடனம் செய்யும் தோரணையில் தஞ்சாலூர் பாஷையில் சொல்லியிருந்தார் கோவை.மணி அவர்கள்.
ஒன்னரை மணி நேரத்தில் ஓலைச்சுவடியை ஓரளவுக்கு எழுத்து கூட்டி படிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளவும், வடநாட்டு ஜேஷ்டா தேவி தென்னாட்டு மூதேவியாக மாறியதன் பின்னணியையும்,கானுயிர்கள் மீதான கரிசனம் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதையும், பசித்த புலிக்கு முன்பாக திகைத்து நிற்கும் மானின் மிரட்சியையும் காண அரங்கம் முழுவதும் குழுமியிருந்த வாசகர்கள்.
15 நபர்கள் கட்டாயமாக கலந்து கொள்வார்கள் எனில் சுவடி வாசிக்கும் பயிற்சியை ஒருங்கிணைக்கலாம் என்பதுதான் ஈரோடு கிருஷ்ணனின் திட்டம்.14ம் தேதி மதியம் அமர்வுக்கு அறுபதுக்கும் மேற்பட்டோர் அமர்ந்து விட்டிருந்தனர். அன் அஃபீஷியல் அமர்வுக்கு அஃபீஷியல் வரவேற்பு ஒன்றை வழங்கி தொடங்கி வைத்தார் கிருஷ்ணன். அதன் பின்னான அனைத்து அமர்வுகளும் திட்டமிட்டபடி அரங்கேறின.
கோவை விஷ்ணுபுர விழாவில் உக்கிராண அறையில் வியர்வையில் குளித்தபடி இருநாட்களுக்குமான உணவு தயாரிப்பு மற்றும் உபசரிப்பில் நின்றிருக்கும் நண்பர் விஜயசூரியன், மனைவி ரேணுகாவுடன் தூரன் விழா அமர்வுகளில் பதட்டங்கள் ஏதும் இன்றி பார்வையாளராய் கலந்துகொண்டதை பார்க்க மகிழ்வாக இருந்தது.
கோவை விழா நிகழ்விடத்தின் ஒவ்வொரு தளத்தையும் நொடிகளில் கடந்தபடி, முன்னேற்பாடுகளில் முழுமூச்சாய் இருக்கும் மீனாம்பிகை ஈரோடு விழாவின் நிகழ்விடத்தில் விஷ்ணுபுர பதிப்பகத்தின் நூல்களுக்கு மத்தியில் அமர்ந்தபடி தூரன் விழா அமர்வுகளை கவனித்துக் கொண்டிருந்தார்.
வழக்கம் போலவே பல்வேறு ஊர்கள்,நாடுகளில் இருந்து விழாவுக்கென வந்திருந்த ஜெயகாந்த் ராஜூ–கல்பனா, செந்தில் உள்ளிட்ட நண்பர்கள்.
முதல்நாள் அமர்வுகள் அனைத்திலும் கலந்துகொண்டு, இரண்டாம் நாள் தனது அலுவல் நிமித்தம், மாவட்ட ஆட்சியருடனான நிகழ்வு ஒன்றிற்கான ஈரோட்டில் இருந்து ஊட்டி சென்றுவிட்டு, திரும்பவும் விழா நிகழ்வுகளுக்கு வந்து சேர்ந்துவிட்ட பவித்ரா பிரபு.
இவ்வாண்டுக்கான இசை கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டதும், அவர்களை இரண்டாம் முறை தொடர்பு கொள்ளும்போது, மைக் மேட்டரை ஆரம்பித்த உடனேயே “அண்ணே… மைக் இல்லாமலே நாங்க வாசிக்கிறோம்” என்று பதில் வந்துவிட்டது.
விஷ்ணுபுரம் விழாக்களின் தனித்துவம் என்ன…?
மொத்த அவையும் ஒற்றை மனமென அமைந்து அமர்ந்திருப்பது.
“இங்கே அவர்களின் இசையை கவனமாக அமர்ந்து கேட்பார்கள் என்னும் எங்கள்
உறுதிமொழிக்காக மட்டுமே அவர்கள் வந்தனர்”
சென்ற ஆண்டு இசை நிகழ்வு குறித்து நீங்கள் எழுதிய பதிவு.
தூரன் விழா, உளப்பதிவுகள் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
இவ்வாண்டும் அதை நிரூபித்தனர் விஷ்ணுபுரம் வாசகர்கள். இசை நிகழ்வுக்கு முன்வரிசை நாற்காலிகளில் இடம்பிடிக்க விஷ்ணுபுர நண்பர்களிடையே சிறிய போட்டியே நடந்தது.
இவ்வாண்டு இசை நிகழ்விலும், இரண்டு மணி நேரங்கள் அரங்கில் ஒருவருடைய அலைபேசி கூட ஒலிக்கவில்லை. பார்வையாளர்கள் யாரும் இருக்கையை விட்டு இடையில் எழுந்து செல்லவில்லை. சென்ற ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு நிகழ்வில், பார்வையாளர்கள் வரிசை, அரங்கை தாண்டி, மாடிப்படிக் கட்டுகளிலும், மேல் தளத்திலுள்ள பார்வையாளர் மாடத்திலும் நிறைந்து இருந்தது.
உச்சமாக நிகழ்வின் முடிவில் இசைக்கலைஞர்களை மொத்த அரங்கமும் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டிய நிமிடங்கள்.
கண்களில் தெரிந்த நன்றியோடு, நெகிழ்சியான குரலில் அவையினரை அமரும்படி கேட்டுக்கொண்டனர் இசைக்கலைஞர்கள். இவ்வாண்டு இசை நிகழ்வுக்காக தேர்வு செய்யப்பட்ட பாடல் பட்டியலில் உள்ள பாடல்களில் ஒன்றை கூட நாதஸ்வர கலைஞர்கள் இதற்கு முன் வாசித்து இருக்கவில்லை.இந்நிகழ்விற்காக அப்பாடல்களை நாதஸ்வரத்தில் பயிற்சி செய்து தூரன் விழா மேடையில் முதல் முறையாக அவற்றை வாசித்தார்கள்.
மேலும் பட்டியலில் இருந்த பத்து பாடல்களில் ஆறு பாடல்களுக்கு இணையத்தில் பதிவுகளோ, ஒலிப்பதிவோ இல்லை. நாதஸ்வர கலைஞர் சின்னமனூர் விஜய் கார்த்திகேயன் அவர்களிடம் நாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவற்றை நம் விழாவிற்கென பிரத்யேகமாக பாடி ஒலிப்பதிவு செய்து தந்தார்.
தவில் தனி ஆவர்தனம் இவ்வாண்டு தனித்துவமாக அமைந்தது. தனிஆவர்தனத்தில் வாசிக்கப்பட்ட சொற்கட்டுகளில் பெரும்பான்மையானவை தற்போது அறிதாகவே வாசிக்கப்படுகின்றன. டாக்டர் ஜெகன் தவில் தனி ஆவர்த்தனம் ஒரு விளையாட்டு போல இருந்ததையும், ஒரு கட்டத்தில் தானும் அந்த ஆட்டத்தின் உள்ளே சென்று விட்டதையும் சொல்லிக்கொண்டு இருந்தார்.
விஷ்ணுபுரம் விழாக்கள் குறித்த தனது மனப்பதிவையும், அவருக்கு சொல்லப்பட்ட தகவல்களையும், விழாவுக்கு வந்து நேரில் பார்த்தபின் தான் கண்ட விசயங்களையும் தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசியிருந்தார் கல்வெட்டு அறிஞர் வேதாச்சலம். நிகழ்வு குறித்த தங்களது எண்ணங்களை அதே அலைவரிசையில் நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டனர் இசைக்கலைஞர்கள்.
ஒன்னரை நாளில் நேரத்துக்கு சாப்பாடு, இடைவேளை பட்ஷணங்கள், விஷ்ணுபுரம்,தமிழினி,தன்னறம் பதிப்பகங்களின் புத்தக கடைகள்,நூற்பின் கைத்தறி ஆடைகள், ஈரோட்டில் இருந்து அழைத்து வர, திரும்பவும் பேருந்து/ரயில் நிலையத்தில் இறக்கி விட மினி பஸ். அத்தனை ஏற்பாடுகளையும் அழகாய் ஒருங்கிணைத்தது நம் விஷ்ணுபுரம் நண்பர்கள் குழு.
விழாவிற்கு வந்திராத இளம் எழுத்தாளர்கள் இழந்தவற்றை உங்களின் உரையில் குறிப்பிட்டு இருந்தீர்கள். சுவடியியலின் அரிச்சுவடியை படிக்க, தொல்லியல் ஆய்வுகளின் ஆழத்தை புரிந்துகொள்ள, காட்டுயிர் காணும் பயிற்சியை மேம்படுத்திக்கொள்ள, குகை ஓவியங்களின் ஒன்றிப்போகவென இலக்கிய வாசகர்கள் இந்த இருநாட்களில் பெற்றுச் சென்றவை பெருஞ்செல்வங்கள்.
அருட்செல்வப்பேரரசன் முகநூலில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டு இருந்தார்.
‘’ எவரெல்லாம் வந்திருந்தனரோ, அவரெல்லாம் ஒரு நூற்றாண்டுக்கான பயனைப்
பெற்றிருப்பார்கள்”.
இசை நிகழ்வின் “ஆனந்தபைரவி” ராக ஆலாபனையை யானை நடந்துவரும் அழகோடு ஒப்பிட்டு சொல்லிக் கொண்டு இருந்தீர்கள்…
யானை மேல் அமர்ந்தபடி அறிவியக்க செயல்பாடுகள் குறித்த எண்ணங்களை விதைகளென விசிறிபடி சென்று கொண்டு இருக்கிறீர்கள்.
மூன்று வருடங்களுக்கு முன்பாக கோவை விஷ்ணுபுரம் விருது விழா முடிந்தபின், ராஜஸ்தானி சங் கட்டிடத்தின் படிகளில் அமர்ந்தபடி “தமிழ் விக்கி” குறித்தான திட்டங்களை நண்பர்களோடு பகிர்த்துகொண்டீர்கள்.
இதோ…. வையாபுரிப்பிள்ளை அவர்களின் நினைவாக அமெரிக்காவில் நடத்தவிருக்கும் நவீன தமிழ் இலக்கியத்திற்கான மாநாடு குறித்த அறிவிப்பினை தமிழ் விக்கி– பெரியசாமி தூரன் மூன்றாம் ஆண்டு விருது விழாவில் வெளியிட்டுள்ளீர்கள்..
அறிவியக்க செயல்பாடுகளை நிகழ்த்துதல் தரும் நிமிர்வு யானை மேலன்று வேறெங்கு அமர செய்யும்?.
நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.