இராணுவநினைவலைகள் கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ், முனைவர் ப கிருஷ்ணன்.
கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ் (James Welsh ) இந்திய வரலாற்றாய்வில் அடிக்கடிக் காதில் விழும் பெயர். தென்னிந்திய வரலாற்றின் நேரடிச் சாட்சியங்களில் ஒன்று அவருடைய ராணுவ நினைவுக்குறிப்புகள். பாளையக்காரர் கிளர்ச்சி, திப்புசுல்தானுடனான கர்நாடகப்போர்கள் என வரலாற்றுப் பெருநிகழ்வுகளில் பங்கெடுத்தவர். அத்துடன் தான் சென்ற இடங்களை நுணுக்கமான கோட்டோவியங்களாக வரைந்தவர். வெல்ஷின் ஓவியங்களே பதினெட்டாம் நூற்றாண்டு தென்னிந்தியாவை அறிவதற்கான முதன்மையான காட்சிச்சான்றுகளாக இன்றுள்ளன.
இந்நூலை வெவ்வேறு காலகட்டங்களில் நான் என் வரலாற்றுநாவல் எழுதும் முயற்சிகளின்போது வாசித்துள்ளேன். முனைவர் ப.கிருஷ்ணன் மொழியாக்கத்தில் இந்நூல் இப்போது தமிழில் வெளிவந்துள்ளது. வரலாற்றார்வம் கொண்டவர்கள் மட்டுமல்ல, தமிழ்ப்பண்பாட்டின் வளர்ச்சியை அறியவிரும்பும் எவரும் மீண்டும் மீண்டும் வாசிக்கவேண்டிய நூல்களில் ஒன்று இது. இந்நூலை அதன் வெளியீட்டாளர் திரு சரவணன் தங்கப்பா அவர்கள் கோவை புத்தகக் கண்காட்சியில் என்னைச் சந்தித்து அளித்தார்.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வெல்ஷ் 1775ல் பிறந்தவர். 1790ல் கிழக்கிந்ந்திய ராணுவத்தில் சேர்ந்து இந்தியாவந்தார். கல்கத்தா வழியாகச் சென்னை வந்து சென்னை மெட்ராஸ் யூரோப்பியன் ரெஜிமென்ட் (வெல்லூர்) பொறுப்பை ஏற்றார். தமிழ்நாட்டிலும் திருவிதாங்கூர் அரசிலும் வட இந்தியாவிலும் தொடர்ச்சியாக ராணுவ சேவையில் இருந்தார். 1861ல் இங்கிலாந்தில் மறைந்தார்.
வெல்ஷ் வரும்போதே தான் பார்ப்பவற்றை ஆவணப்படுத்தும் ஆர்வம் கொண்டிருந்தார். தன் வருகையையே அன்றாடம் நாட்குறிப்பில் எழுதிக்கொண்டிருந்தார். தேவையானவற்றை பென்சில் ஓவியங்களாக வரைந்துகொண்டும் இருந்தார். கடற்பயணத்தை ‘வழக்கமானது, ஆகவே சொல்வதற்கு பெரிதாக ஏதுமில்லை’ என்று கூறும் வெல்ஷ் அளிக்கும் முதல் சித்திரம் கல்கத்தா துறைமுகம்தான்.
நெரிசல், அழுக்கு, ஓசை ஆகியவற்றுடன் கொந்தளித்துக்கொண்டிருந்தது வெல்ஷ் கண்ட கல்கத்தா நகரம். வெல்ஷின் ஐரோப்பிய மேட்டிமைப்பார்வை, இனவாதம் அவருடைய முதற்குறிப்பில் இருந்தே வெளிப்படுகிறது. தொடர்ச்சியாக அது எல்லா பதிவுகளிலும் உள்ளது – அதை அந்தக்காலக் காலனியாதிக்கவாதிகளின் இயல்பான நோக்கு என்றுதான் சொல்லவேண்டும்.
பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளின் மனநிலைகள் இரட்டைத்தன்மை கொண்டவை. மேட்டிமை நோக்கு, ஆதிக்க நோக்கு, சுரண்டலுக்கு ஏற்பு ஆகியவை இயல்பான ஒரு பக்கம். அவை பற்றிய பிரக்ஞையும் அவர்களிடமிருப்பதில்லை. மறுபக்கம், தாங்கள் வெல்லும் நிலம் மீது ஆழ்ந்த உரிமையுணர்ச்சியும் பொறுப்புணர்ச்சியும் அவர்களிடமிருந்தது. அந்நிலத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள, அதை ஆட்கொள்ள, அதை தங்கள்மயமாக்க அவர்கள் முயன்றனர்.
ஒரு பக்கம் இரக்கமின்மை மறுபக்கம் நீதியுணர்வு. இரண்டில் ஒரே குணம் ஓங்கியவர்கள் உண்டு. வெல்ஷ் போன்றவர்கள் இரண்டு குணங்களும் இணையாக முயங்கியவர்கள். அந்த இரண்டு உணர்வுநிலைகளின் முரணியக்கத்தை இந்நூல் மீண்டும் மீண்டும் காட்டுகிறது. அதை உணராதவர் வெல்ஷை ஒரு வெள்ளைவெறியர் என்றோ இந்தியர்மேல் கனிவுகொண்ட மனிதாபிமானி என்றோ புரிந்துகொள்ளக்கூடும். இரண்டுமே பிழையானவை.
கல்கத்தா வெல்ஷுக்கு அளித்த முதல் சித்திரமே அவருடைய பார்வைக்கு உதாரணம். ‘சிறியகால்களுடனும் வாடிய முகங்களுடனும் மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பதற்கான சான்றுகள் போல.. பரிதாபத்துக்குரிய மக்கள். மனிதர்கள் என அழைக்கப்படுவதற்கே தகுதியற்றவர்கள்’ என்று வெல்ஷ் துறைமுகத்தில் கண்டவர்களை விவரிக்கிறர்.
ஆனால் வடக்குநோக்கிச் செல்லச்செல்ல அழகிலும் அந்தஸ்திலும் இன்னும் மேம்பட்டவர்கள் தென்பட்டனர் என்கிறார். அரசகுடியினர், நிலவுடைமையாளர்கள். வெல்ஷ் அந்த மேம்பட்ட வர்க்கத்தவரையே சற்றேனும் தாங்கிக்கொள்கிறார். அவர்களில் பிராமணர்கள் கூர்மையானவர்கள் என்று அவர் எண்ணினாலும் அவர்களை விரும்பவில்லை, இஸ்லாமியப் பிரபுக்கள் மேல் அவருக்கு மதிப்பிடுக்கிறது. கரிய, மெலிந்த, பட்டினிமக்கள் மீதான ஒவ்வாமையை வெளிப்படுத்த தயங்கவில்லை
வெல்ஷ் மனிதர்களைப் பற்றிச் சொல்லும்போது நேர்த்தியான, அல்லது நேர்த்தியற்ற கால்கள் என்னும் வர்ணனை வந்துகொண்டே இருக்கிறது. மெலிந்த, வளைந்த கால்கள் அவருக்குப் பிடிப்பதில்லை. அது அவருடைய தனிப்பட்ட ரசனை மட்டும் அல்ல. வெள்ளையரின் கால்கள் பெரியவை, நீளமானவை. அத்துடன் அன்றைய உடையில் தெளிவாக வடிவம் தெரிபவை கால்களே. இடைக்குமேல் பல அடுக்குகளாக சட்டைகளும், மேல்சட்டையும் அணிந்திருப்பது வழக்கம்.
இதேபோல பழைய பிரிட்டிஷ் நாவல்களில் ‘அழுக்கில்லாத நகங்கள் கொண்ட விரல்கள்’ தகுதியின் அடையாளமாகக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். ஏனென்றால் அழுக்கடைந்த நகங்கள் அதை உடையவர் உடலுழைப்பாளர் என்பதற்கான சான்றுகள். இத்தகைய நுண்விவரணைகள் எந்த ஒரு புனைவெழுத்தாளனுக்கும் பெரும் செல்வங்கள்.
குறிப்பாக எந்த ஆய்வுநோக்கும் இல்லாத காரணத்தால் நான் சிறுவிவரணைகளை மட்டுமே பார்த்துக்கொண்டு முன்சென்றேன்.கல்கத்தாவிலும் சரி, சென்னையிலும் சரி, கொசுக்களின் பெருந்தொல்லை. கொசுவலைக்குள் கடும் புழுக்கமும் மூச்சுத்திணறலும். நன்றாகத் தூங்க முடிந்த நாட்களை வெல்ஷ் சொல்லிக்கொண்டே இருக்கிறார். பிரிட்டிஷாரின் பெரும்பாலான வசிப்பிடங்கள் கடலோரம் என்பதனால் வெக்கையைப் புரிந்துகொள்ள முடிகிறது. பிரிட்டனில் கடலோரவாழ்வை விரும்பியவர்கள் இந்தியாவில் ஏன் சிம்லா முதல் ஊட்டிவரை மலைகளை கண்டடைந்தார்கள் என்றும்.
ஜேம்ஸ் வெல்ஷ் திப்புசுல்தானுடனான கர்நாடகப்போர்களிலும் கட்டப்பொம்மன் மற்றும் மருதுபாண்டியர்களின் மீதான வெள்ளையரின் வெற்றியிலும் உடனிருந்தார். அந்த சித்திரங்களை நுணுக்கமான தரவுகளுடன் எழுதியுள்ளார். பொதுவாக இந்தியர்கள் கோழைகள், போர்ப்பயிற்சி அற்றவர்கள் என்றே பதிவுசெய்யும் வெல்ஷ் அவர்கள் அரிதாகச் சாவுக்குத் துணிந்து போரிடுகையில் அதையும் குறிப்பிடுகிறார்.
போர்களில் மிகக்குறைவான படைகளுடன் வெள்ளையர் பெருந்திரளான இந்தியப்படைகளை கொன்று குவித்து வெல்கிறார்கள். இந்தியர்களின் மூன்று பிரச்சினைகளாக அவர் சொல்வது, ஒன்று புறவயமான தரவுகளில்லாமை, அதில் கவனமில்லாமை. இரண்டு, முறையான தகவல் தொடர்பில்லாமை, மூன்று எந்நிலையிலும் சாதிகளாகவே பிரிந்து செயல்படுவது, அதன் விளைவாக ஓர் ஒருங்கிணைந்த ராணுவமாக ஆகமுடியாமை. அவை இன்றும் அவ்வாறே நீடிக்கும் இந்தியப்பிரச்சினைகள் என்ற எண்ணம் எழுகிறது.
வெல்ஷ் திருவிதாங்கூர் மற்றும் கொல்லம், கொச்சி பகுதிகளில் விரிவாகப் பயணம் செய்து பதிவுசெய்துள்ளார். திருவிதாங்கூர் அரசகுடி வெள்ளையர்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு அவர்களிடம் சரணடைந்து செயல்பட்டது. ஆகவே அவர்களுடன் நெருக்கமாகப் பழக அவரால் முடிந்துள்ளது. அவர்களைப் பற்றிய அவரது குறிப்புகள் பூடகமான நையாண்டி கொண்டவை. அரிதாகக் கூரிய கசப்பு மண்டியவை. அடிமைகளிடம் ஆண்டான் கொண்டிருக்கும் மனநிலை.
வெல்ஷ் திருவிதாங்கூர் அரசி, இளவரசிகளை அசிங்கமான தோற்றம்கொண்ட பெண்கள் என்று பதிவு செய்கிறார். ஒருமுறை இளைய அரசரின் கல்வித்தகுதியை அவர் முன் காட்டுகிறார்கள். இந்தி, ஆங்கிலம், பாரசீகம் என பலமொழிகளை மன்னர் பேசி, படித்துக் காட்டுகிறார். ஆனால் ஆங்கில உச்சரிப்பு சரியில்லை என்னும் நையாண்டியே வெல்ஷில் இருந்து உருவாகிறது. அவரது ஆசிரியருக்கும் ஆங்கில உச்சரிப்பு தெரியாது என்கிறார்.
இளவரசர்கள் இந்திய முறைப்படி பெரியவர்களின் மடியில் ஏறியமர்வது வெல்ஷுக்கு விந்தையாக உள்ளது. இளவரசர் வெள்ளையரின் மடியிலும் ஏறி அமர்ந்துகொள்கிறார். அதை பண்படாத நடத்தைக்கான சான்றாக பூடகமான கேலியுடன் அவர் பதிவுசெய்கிறார். கதகளியின் முன்வடிவமான ராமனாட்டத்தை அரசகுடியினருடன் அமர்ந்து பார்க்கும் வெல்ஷ் அதை ஆபாசமான, கீழ்த்தரமான ஒரு கேலிக்கூத்து என்று பதிவுசெய்கிறார்.
வரலாறும் வாழ்க்கைச்செய்திகளும் கலந்து தொகுக்கப்பட்டிருக்கும் இந்த பெருந்தொகுப்பு நீண்டகாலம் முன்னரே தமிழில் வெளிவந்திருக்கவேண்டும். இந்நூலை ஒட்டியே நாம் நமது இறந்தகாலத்தை புரிந்துகொள்ள முடியும். அதற்கு முதலில் வெல்ஷை நம் கண்கள் வழியாகப் பார்க்கவேண்டும், பின்னர் வெல்ஷின் கண்வழியாக அன்றைய இந்தியாவைப் பார்க்கவேண்டும்.