முக்குளிப்பான், குமார் கூனபராஜு

குமார் கூனபராஜுவை புக்பிரம்மா இலக்கியவிழாவில், பெங்களூரில் சந்தித்தேன். தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி படைப்புகளையும், ஐரோப்பியச் செவ்விலக்கியங்களையும் தெலுங்கில் கொண்டுவருவதற்கு ஒரு பதிப்பகமே தொடங்கியிருக்கிறார். உதயினி என்னும் இணைய இதழை நடத்துகிறார். மிகுந்த தீவிரத்துடன் இலக்கியத்தில் செயல்பட்டு வருகிறார்.

தெலுங்கு இலக்கியம் பற்றி எனக்கிருப்பது மிக மேலோட்டமான புரிதல்கள்தான். ஏனென்றால் இங்கே மலையாள இலக்கியம் உடனடியாக மொழியாக்கம் செய்யப்படுகிறது. கன்னட இலக்கியத்திற்கு பாவண்ணன், நல்லதம்பி உட்பட பல முக்கியமான மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனர். தெலுங்கு இலக்கியம் பற்றி பேச எவருமில்லை. மொழிபெயர்ப்பாளர் என சிலர் மட்டுமே. 

இப்போது பல புதிய மொழிபெயர்ப்பாளர்கள் உருவாகி வந்திருப்பதைக் காணமுடிகிறது. ஶ்ரீனிவாஸ் தெப்பல இந்நூலின் மொழிபெயர்ப்பாளர். பி.அஜய்பிரசாத்தின் சிறுகதைகளை க.மாரியப்பன் தமிழாக்கம் செய்துள்ளார். இவ்வாறு தமிழில் கிடைக்கும் தெலுங்கு மொழி இலக்கியங்கள் அனைத்தையும் எவரேனும் ஒரே பட்டியலாக ஆக்கினார்கள் என்றால் நன்று.

நான் புரிந்துகொண்டவரை தெலுங்கின் நவீனஇலக்கியத்தில் சில அலைகள் தென்படுகின்றன. தெலுங்கு இலக்கியத்தின் தொடக்கத்தில் தேசிய இயக்கம் சார்ந்த இலட்சியவாத அலை பிறமொழிகளைப் போலவே தீவிரமான ஓர் இலக்கியத் தொடக்கத்தை உருவாக்கியது. அதன்பின் மார்க்சிய இலக்கிய அலை. அதில் குறிப்பிடத்தக்க படைப்பாளிகள் சிலர் உண்டு என்றாலும் இலக்கியம் என்றாலே கருத்துப்பிரச்சாரம் என்னும் மனநிலையை அது நிறுவிவிட்டிருக்கிறது என அவ்வியக்கம் சார்ந்த படைப்புகளும் சரி, அதற்கு வெளியே உள்ள இலக்கியங்களும் காட்டுகின்றன. அங்கிருந்து வரும் படைப்புகளின் முதன்மையான சிக்கல் இதுவே.

தெலுங்கை பிரதிநிதித்துவம் செய்து தேசிய கருத்தரங்குகளுக்கு வருபவர்கள் பொதுவாக இரண்டுவகை, பேராசிரியர்கள் மற்றும் பிரபல எழுத்தாளர்கள். அவர்களுக்கு இலக்கிய அழகியல் சார்ந்த புரிதல் இருக்கிறதா என்ற ஐயம் எனக்கு ஒவ்வொரு முறையும் எழும். முற்போக்கான, சமூகசீர்திருத்த நோக்கம் கொண்ட கருத்துக்களை வலுவாகச் சொல்வதே உயரிலக்கியம் என்னும் எண்ணம் அங்கே ஆழமான நிலைகொண்டுவிட்டது என்று படும்.  

இலக்கிய வடிவங்கள், இலக்கிய அழகியல் சார்ந்த விவாதங்கள் தெலுங்கில் நிகழவில்லையா என்னும் எண்ணமே பொதுவாக தெலுங்குப் படைப்புகள் வழியாக உருவாகிறது. ஒரு சூழலில் முதன்மையாக ஒலிக்கவேண்டியது அழகியல் விமர்சகனின் குரல். அவன் தான் இலக்கியம் என்னும் தனித்த அறிவியக்கத்தை நிலைநிறுத்துபவன், முன்னெடுப்பவன். எது இலக்கியத்தகுதி கொண்ட படைப்பு எது அந்த தகுதி கொண்டது அல்ல என்பதை அவனே முடிவுசெய்ய முடியும். ஏன் என்றும் அவனே சொல்லவேண்டும்.

அழகியல் விமர்சகன் என்பவன் ஒரு மனிதன் அல்ல. ஓர் அறிவுக் குழுவும் அல்ல. அழகியல் விமர்சகன் எப்போதுமே தனிமனிதனாகவே செயல்படமுடியும், தனிக்குரலாகவே ஒலிக்க முடியும். அவனுக்கு அமைப்பின் பின்புலம் அல்லது கருத்தியலின் பின்புலம் இருக்க முடியாது, ஏனென்றால் அவன் அவற்றுக்கு எதிரானவன். அவன் எதையும் நிரூபிப்பதில்லை. ஏனென்றால் அவனுடைய வழி தர்க்கபூர்வமான நிரூபணவாதம் அல்ல. அழகியல் விமர்சகன் நல்ல படைப்புகளைச் சுட்டிக்காட்ட மட்டுமே முடியும். அதிலுள்ள அழகியலை கவனப்படுத்த மட்டுமே முடியும். அவன் சுட்டிக்காட்டுவதை வாசகர்கள் வாசித்து, அவன் சொல்வதை தாங்களும் ஏற்றுக்கொள்ளும்போதுதான் அவனுடைய ஆற்றல் உருவாகிறது. அவன் ஒரு அறிவுச்சக்தியாக மாறுகிறான்.

அதாவது அழகியல் விமர்சகன் என்பவன் ஒரு தனி மனிதன் அல்ல. ஒரு கருத்துத்தரப்பு அல்ல. ஒரு வாசகச் சூழலில் தானாக உருவாகி வரும் மையம் அவன். அந்த வாசகச்சூழலின் ஏற்பு வழியாக மட்டுமே நிலைகொள்பவன். அவர்களின் பிரதிநிதிக்குரலாக ஒலிப்பவன். அவனுடைய குரல் ஓங்கி ஒலிக்கையிலேயே வாசகனின் அதிகாரம் அங்கே உருவாகிறது. 

இன்னொரு பக்கம் அழகியல் விமர்சகன் வாசகர்களில் தேர்ந்தவன். ஆகவே அவன் வாசகர்களுக்கு அழகியலை கற்பிக்கிறான். அவன் கற்பிக்கும் அழகியலென்பது எந்த ஒரு கருத்துத் தரப்பாலும் உருவாக்கப்படுவது அல்ல. அதன் அடிப்படை என்பது பேரிலக்கியங்கள்தான். அழகியல் விமர்சகன் தன் மொழியின் பேரிலக்கியங்களில் இருந்து தன் அளவுகோல்களை, கொள்கைகளை உருவாக்கிக் கொள்பவன். உலக இலக்கியத்தின் உச்சப்படைப்புகளில் இருந்து தன் பார்வையை, எதிர்பார்ப்பை திரட்டிக்கொள்பவன்

அழகியல் விமர்சகன் என்பவன் ஒருவன் அல்ல. பலர் ஒரே காலத்தில் செயல்படுவார்கள். அவர்கள் நடுவே முரண்பாடுகள் இருக்கும். விவாதங்கள் நிகழும். அதன் வழியாகவே அழகியல் நெறிகள் உருவாகி நிலைகொள்கின்றன. தமிழ் அழகியல்விமர்சனத் தரப்பிலேயே  .நா.சுவும் சி.சு.செல்லப்பாவும் முரண்பட்டு விவாதித்தனர். அதுவே இங்கே அழகியல் அளவுகோல்கள் கூர்மைப்பட வழியமைத்தது.

இலக்கியத்தில் அழகியலுக்குப் பதிலாக உள்ளடக்கம் முதன்மையாகப் பேசப்பட்டால் அது அரசியலியக்கங்கள் அல்லது மதம் இலக்கியத்தை கைப்பற்றுவதாகவே முடியும். அவை அதிகார நோக்கம் கொண்டவை, அதிகாரத்திற்கான கருவியாக அவை இலக்கியத்தை மாற்றிக்கொள்ளும். அவை இலக்கியத்தை அதற்குமேல் வளரவே விடாமல் நிறுத்திக்கொள்ளும். அவை இலக்கியத்தை பான்ஸாய் ஆக மாற்றிவிடும். 

இலக்கியம் கல்வித்துறையால் வெறுமே பாடத்திட்டமாக பயிலப்பட்டால் அரசியல் அல்லது மதம் உருவாக்கும் அடையாளங்களை ஒட்டியே அவர்களின் ஆய்வு அமையும். அவர்களின் வழிமுறை என்பது அடையாளப்படுத்துதல், அட்டவணைப்படுத்துதல் மட்டுமே.  கல்வித்துறை ஆய்வுகள் எப்போதுமே  இலக்கியத்தின் உயிரை தவறவிடுபவை.

தமிழில், பிரித்தானிய இலக்கியம் போலவே தலைசிறந்த புனைவுகளை எழுதிய இலக்கியவாதிகளே இலக்கிய விமர்சனத்தையும் உருவாக்கியமை நமது நல்லூழ். புதுமைப்பித்தன், கு..ராஜகோபாலன் முதல் சுந்தர ராமசாமி வரை அந்த மரபு நமக்கு அழகியல் விமர்சனத்தை மூன்று தலைமுறைக்காலம் வலுவாக நிலைநிறுத்தியது. இன்றும் இங்கே பொருட்படுத்தப்படும் விமர்சனமென்பது அழகியல் விமர்சனம் மட்டுமே. 

நான் தெலுங்கு இலக்கியத்தில் இருந்து கேட்க நேர்ந்த முதல் அழகியல்குரல் சின்னவீரபத்ருடு அவர்களுடையது. விஷ்ணுபுரம் விருது விழாவில் அவருடைய உரையாடல் தெலுங்கு பற்றி முற்றிலும் புதிய சித்திரத்தை அளித்தது. அவரைப்போன்றவர்கள் முன்னிலைப்பட்டாகவேண்டும்.

*

குமார் கூனபராஜுவின் சிறுகதைகளை இரண்டு கோணங்களில் வகைப்படுத்துவேன். அவை நவீன இலக்கியத்திற்குள் வருவது அவற்றின் பேசுபொருள்தேர்வு மற்றும் அவை முன்வைக்கப்பட்டிருக்கும் விதம் வழியாக. அன்றாடவாழ்க்கையையும் எளிய மனிதர்களையும் நம்பகமாகச் சொல்லிச் செல்கின்றன அவை. ஆசிரியரின் பார்வைக் கோணம் அவர்களின் வாழ்க்கையை கருத்தியல் சார்ந்து வளைக்க முற்படவில்லை. முடிந்தவரை அவர்களை நோக்கிச் செல்லவே புனைவு முயல்கிறது. ஆகவே புனைவின் நம்பகத்தன்மை நுட்பமாக நிலைநாட்டப்படுகிறது. 

இத்தொகுதியில்முக்குளிப்பான்சிறந்தககதை. வலசை வரும் பறவையை கொல்லும்படி அமர்த்தப்பட்ட நாடோடிச் சாதியினனான விப்ரோ ஒரு புள்ளியில் தன்னை அதுவாக அடையாளம் காண்கிறான், அது அவனை விடுதலை செய்கிறது. சொல்லாமல் உணர்த்தப்பட்டுள்ள இந்த இணைப்பு, முக்குளிப்பான் பறவையை ஓர் அழகிய படிமம் ஆக மாற்றி இக்கதையை கலைப்பூர்வமாக நிறுவுகிறது.

பொம்மலாட்டம், தீர்ப்புநாள், சேவல்சண்டை, சுலைமான் கார் ஆகியவை வாழ்க்கைச் சித்திரங்களால் கவனிக்கத்தக்க  கதைகள்.  பொம்மலாட்டப் பொம்மைகளுடனேயே வாழ்ந்து புறக்கணிக்கப்படுபவன், வாழ்க்கையில் முன்னேறியதை ஒரு கார்வழியாக வெளிக்காட்டி அன்னியப்படுபவன், நீதிமன்றத்தின் நீதியின்மை வழியாக தன் நீதியை ஈட்டிக்கொண்டவனின் குற்றவுணர்ச்சி என பலவகை மனிதமுகங்கள் இக்கதைகளில் தென்படுகின்றன.

இக்கதைகளின் ஒட்டுமொத்தப் போதாமை என்பது இவற்றில் சிறுகதை என்னும் தனித்த வடிவமே அனேகமாக இல்லை என்பதுதான். வெறும் வாழ்க்கைச் சித்திரங்களாகவே பலசமயம் இவை நின்றுவிடுகின்றன. 1952ல் தமிழின் புகழ்பெற்ற ஆசிரியர்கள் சிலரின் சிறுகதைகளிலுள்ள இந்தக் குறையை க.நா.சுப்ரமணியம் சுட்டிக்காட்டி கடுமையான விமர்சனம் ஒன்றை எழுத்து இதழில் எழுதினார். அது உருவாக்கிய விவாதம் சிறுகதையின் வடிவம் இங்கே நிலைகொள்ள வழிவகுத்தது.

சிறுகதை என்பது  சிறிய கதைஅல்ல. சிறுகதையின் முதன்மைப்பகுதி அதன் முடிவுதான். அந்த முடிவு ஒரு மறுதொடக்கம். அதுவரையிலான கதை அந்த முடிவில் இருந்து மீண்டும் தொடங்கி வளரவேண்டும். மொத்தக்கதையும் அந்த முடிவை நோக்கிக் கூர்கொண்டு செல்லவேண்டும். எதிர்பாராத திருப்பம்தான் சிறுகதையின் அடிப்படையான வடிவம். திருப்பத்திற்குப் பதிலாக வலிமையான உச்சகட்டம் அல்லது கவித்துவ உச்சம் போதுமானது என்பது பின்னாளில் உருவான ஒரு தரப்பு. ஆனாலும் திருப்பமே சிறுகதையின் செவ்வியல் வடிவம்.

இக்கதைகள் எவற்றிலும் முடிவில் ஏதும் நிகழவில்லை. ஒரு வாழ்க்கைச்சித்திரம் சொல்லப்பட்டதும் கதைகள் நின்றுவிடுகின்றன. சிறுகதைக்கு அது போதாது. வாசிக்கக்கிடைக்கும் கதை ஒரு தொடக்கம்தான், வாசகன் கற்பனைவழியாக மேலும் முன்செல்லும் பயணம்தான் உண்மையான சிறுகதை. ஆகவே சொல்வதல்ல, கூடுமானவரை குறைவாகச் சொல்லி, வாசகனை ஊகிக்கவிடுவதே நல்ல சிறுகதையின் அழகு. சொல்வதல்ல சொல்லாமல் மறைப்பதே ஆசிரியன் கைக்கொள்ள வேண்டிய உத்தி. அனைத்தையும் சொல்லிவிடும் ஆசிரியன் வாசகனின் கற்பனையை தடுத்துவிடுகிறான்

இத்தொகுதியிலுள்ள கதைகளில் அக்காடமி விருது , ஆள்காட்டிக்குருவி போன்றவை எளிமையான ஒன்றை நேரடியாகச் சொல்பவை. அவற்றில் கலைக்கான முயற்சி இல்லை. அம்முயற்சி இருக்கும் கதைகள் வடிவப்போதாமையால் எப்படிச் சிதைகின்றன என்று பார்ப்பது தெளிவை அளிக்கலாம். 

நல்ல கதையான முக்குளிப்பான் கூட ஒருமை கைகூடாமலேயே உள்ளது. நம் கற்பனையால்தான் ஒரு நல்ல கதையை கண்டடைய முடிகிறது. கதை முக்குளிப்பான் பற்றியது. அதைக்கொல்ல காத்திருக்கும் இருவரில் தொடங்குவதும் சிறப்பு. இங்கே கதை முக்குளிப்பான் பறவை, அதனுடன் தன்னை அடையாளம் காணும் விப்ரோ இருவரும்தான் முக்கியம். அவர்கள் இருவரை மட்டுமே கதை முதன்மையாகச் சொல்லியிருக்கவேண்டும்.

விப்ரோவின் குடும்பம் சாய்ராஜுவுக்கு அடிமையாக இருப்பதும் சுரண்டப்படுவதும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாகச் சொல்லப்பட்டிருக்கலாம், ஏனென்றால் அது அவ்வாறுதான் என வாசகர்களுக்கே ஓரளவுக்கு தெரிந்திருக்கும். அது வித்தியாசமாகவோ அதிர்ச்சியளிப்பதாகவோ இல்லை. முக்குளிப்பானின் இயல்புகள் இன்னும் நுணுக்கமாக, அதை வாசகன் கண்ணால் காண்பதற்குரியவகையில் சொல்லப்பட்டிருக்கலாம். எந்த அளவுக்கு அது கூர்மையாகச் சொல்லப்படுகிறதோ அந்த அளவுக்கு அது படிமம் ஆக மாறும்.

முக்குளிப்பானுடன் தன்னை விப்ரோ அடையாளம் காணும் கணமே இக்கதையின் உச்சம். அதை நோக்கிச் சென்று, அங்கே கதை உச்சம்கொண்டு முடிந்திருக்கவேண்டும்.இனி ஒரு போதும் அவனால் சுடமுடியாது என்பதுதான் கடைசிவரி. பண்ணையில் இறால்கள் செத்துப்போனது அல்ல.

இன்னொரு கதை, ‘பனிபொழிந்த ஒரு ஞாயிறுசரியாக எழுதப்படாதது. ஆசிரியரின் பார்வையில் அதிலுள்ளசிறுகதைபுலப்படவில்லை. இக்கதையின் கதைநாயகன் மைக்கேல் ராபர்ட் ஆண்டர்ஸன்தான். அவனுடைய உளமுறிவு. அதுதான் கதை என்றால் கதை அவனில் தொடங்கி அவனில் முடியவேண்டும். கதைசொல்லி எங்கெல்லாம் வாழ்ந்தான், என்ன வேலையெல்லாம் செய்தான் , என்பது முக்கியம் அல்ல. உணவு அளிக்கும் இடத்தில் மைக்கேலை அவன் சந்திக்கும் கணம்தான் கதையின் தொடக்கப்புள்ளி.

அந்தக் கதையின் மையச்சிக்கல்மைய முடிச்சு என்ன என்பதே ஆசிரியன் எழுப்பிக் கொள்ள வேண்டிய கேள்வி. ஒரு கறுப்பினப்பாடகனின் உளவியல் வீழ்ச்சியுடன் எப்படி இந்தியனாகிய கதைசொல்லி தொடர்புகொள்கிறான்? எப்படி அதைப் புரிந்துகொள்கிறான்? அவர்களுக்கிடையேயான உறவாடலில் உருவாகும் முரண்பாட்டை, இணைவை நோக்கிக் கதை சென்றிருக்கவேண்டும்.

அந்தப் பயணத்தில் கதையின் எளிய செய்திகள் கூட பெரும்படிமங்களாக ஆகும். ஹட்ஸன் நதிக்குக் கீழே நூறாண்டுகளுக்கு முன்னரே சுரங்கப்பாதை அமைத்த அமெரிக்கர்களால் அங்கே கறுப்பினத்தாருக்கு இன்னும் நீதிவழங்க முடியவில்லை. அது ஒரு முரண்புள்ளி. மிக எளிதாக கதைசொல்லி அவற்றை அருகே வைத்து வாசகனுக்கு அந்த முரண்பாட்டைக் காட்டியிருக்கலாம். மைக்கேலின் சாவு, அதன்பின் அவனுடைய சொத்தால் அவர்கள் ஒரு நிறுவனம் அமைப்பது எல்லாம் இந்தக்கதையின் மையமுரண்பாட்டுக்குத் தொடர்பே அற்றவை.

இலக்கிய ஆசிரியனின் கோணத்தில் கதைக்குரிய வாழ்க்கைச் சித்திரங்களைக் கண்டடையும் ஆசிரியர் அவற்றை சிறுகதை என்னும் வடிவுக்குள் கொண்டுவருவதில் பெரும்பாலும் தவறவிடுகிறார். அதை வலுவாகச் சுட்டிக்காட்டும் அழகியல் விமர்சனம்தான் அடுத்தக்கட்ட நகர்வுக்கு வழியமைக்கமுடியும். அத்தகைய அழகியல் விமர்சனம் உருவாகவேண்டும். அத்துடன் தீவிரமான எதிர்விமர்சனங்களைக்க்கூட ஆக்கபூர்வமாக எடுத்துக்கொள்ளும் உளநிலையும் அங்கே உருவாகி வரவேண்டும்.  

முக்குளிப்பான் – குமார் கூனபராஜு -சிறுகதைத் தொகுப்பு வாங்க

முந்தைய கட்டுரைமண்டயம் சீனிவாசாச்சாரியார்
அடுத்த கட்டுரைமதங்களில் உறைபவை…