புக்பிரம்மா விருது, கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

மிகத் தகுதியான விருது, தகுதியானவர்களால் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மிக மிக மகிழ்வாக உணர்கிறேன். விருதுகளைக் கடந்து விட்டவர் நீங்கள். ஆனாலும் உங்களுக்கான ஒரு கௌரவம், நாங்கள் எல்லாம் மகிழும் படியான ஒன்று இன்னும் அமையவில்லையே என்ற ஏக்கம் என்னைப் போன்றவர்களுக்கு இருந்து கொண்டு தான்‌ இருந்தது. இன்று அது கொஞ்சம் குறைந்திருக்கிறது. தமிழில் உங்களுக்கு ஏதேனும் விருது அளிக்கப்படும் என்றால் அது எவ்வகையிலாவது உங்களுடன் தொடர்புள்ள ஒரு வாசகர் குழுமத்தால் மட்டுமே சாத்தியம். ஏனெனில் இன்று தமிழ் இலக்கியப் பரப்பில் தீவிரமாகச் செயல்படும் பெரும்பாலானவர்கள் விஷ்ணுபுரத்தவர்களே. எனவே உங்களை கௌரவிப்பது என்பது எங்களுக்கு நாங்களே சால்வை போர்த்திக் கொள்வது போலத் தான். எனவே தான் உங்கள் வாசகர்கள் வெவ்வேறு தளங்களில் ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்து உங்களுக்கான விருதுகளை வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

அவ்வகையில் பார்க்கையில் தான் எனக்கு இந்த புக் பிரம்மா – புத்தகங்களின் வேதியன் என்னும் இவ்விருது மிகுந்த மனநிறைவை அளிப்பதாக இருக்கிறது. அதுவும் முழுமையறிவு என ஒரு நவீன குருகுலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அளிக்கப்பட்டிருப்பது அம்மகிழ்வை பன்மடங்காக்குகிறது. மேலும் இவ்வமைப்பின் முதல் விருது பெறுபவராக உங்களைத் தேர்ந்தெடுத்தமை இனி அவ்விருதின் மதிப்பை பன்மடங்காக்கி விடும். ஒவ்வொரு வருடமும் அதைப் பெறுபவர் அந்தந்த மொழிகளில் மேலும் சிறந்த பங்களிப்பை ஆற்ற வழிவகுக்கும். வாழ்நாள் சாதனை என்பது முடிவல்ல, மற்றுமொரு துவக்கம் என இவ்விருது தன்னைத் தானே நிறுவிக் கொள்ளும்.

மகிழ்வாக உணர்கிறேன். மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜெ.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்.

 

அன்புள்ள ஜெ

 

உங்களுக்கு புக்பிரம்மா விருது அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இனிமேல் உங்களுக்கு வரவேண்டிய விருதுகள் எல்லாமே தமிழகத்துக்கு வெளியே இருந்து கிடைக்கவேண்டியவை. நான் உங்களுக்கு கேரளத்தில் முக்கியமான ஏதேனும் விருது கிடைக்கும் என்றுநினைத்தேன். கர்நாடகம் முந்திக்கொண்டுவிட்டது.

தென்னிந்தியாவின் 4 மொழிகளில் இருந்து 300 படைப்பாளிகள் கலந்துகொண்ட நிகழ்வில் இந்த விருதை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். ஒரே நாளில் தென்னிந்திய இலக்கியச் சூழலில் அறியப்பட்ட முகமாக ஆகிவிட்டீர்கள். இது தமிழ் இலக்கியத்துக்கே ஒரு முக்கியமான நிகழ்வு. இன்று தமிழ் இலக்கியவாதிகள் இதை உணரவில்லை. ஒரு வாழ்த்து கூட என் கண்களுக்குப் படவில்லை. வெவ்வேறு விருதுகளுக்காக நீங்கள் பாராட்டிய எழுத்தாளர்கள்கூட ஒரு மரபுக்காகக்கூட வாழ்த்தவில்லை. அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்.

ஆனால் நீங்கள் பிறரைப்போல உங்களை மட்டுமே முன்வைப்பவர் அல்ல. தமிழிலக்கியத்தை முன்வைப்பவர். அந்த புக்பிரம்மா தொடக்கவிழாவிலேயே தமிழிலக்கியத்தின் முழுமையான முகத்தைத்தான் முன்வைத்தீர்கள். நாம் சந்தித்துக்கொண்ட மும்பை கேட்வே இலக்கியவிழாவிலேயே தமிழிலக்கியத்தின் முக்கியமான எல்லா படைப்பாளிகளின் பெயர்களையும் சொன்னீர்கள்.

( தெளிவாக ஆங்கிலம் பேசுகிறீர்கள். சரளமாகப்பேசுவதற்கான வேகம் இல்லை. ஆனால் நல்ல வக்காபுலரியுடன் திட்டவட்டமான சொற்றொடர்களுடன் பேசுகிறீர்கள். இப்படி இன்று தமிழிலிருந்து எவரும் இந்திய அரங்குகளில் பேசுவதில்லை ஒரு இலக்கிய கனாய்ஸியராகவும் ஆகிவிட்டீர்கள்)

இந்த விருது வழியாக நவீனத்தமிழிலக்கியமே கவனம்பெறும் என்று நம்புகிறேன். கவனத்தை ஈர்க்க முயல்வீர்கள். ஆகவே இந்த விருது முக்கியமானது

 

ஸ்ரீராம் கிருஷ்ணகுமார்

முந்தைய கட்டுரைHORSEWHIP YOUR BRAIN!
அடுத்த கட்டுரைதூரன் விழா உரை, கடிதம்