கடலூர் சீனு

அழைக்கப்பட்டவர்களும் அலைமோதுபவர்களும்

சென்ற புக்பிரம்மா இலக்கியவிழாவில் கடலூர் சீனு அழைக்கப்பட்டதை ஒட்டி இணையத்தில் சில சிறு எழுத்தாளர்களும் வம்பர்களும் உருவாக்கிய சழக்கை என் கவனத்திற்குக் கொண்டுவந்தனர் நண்பர்கள். முகநூல் வம்புகள் எதுவானாலும் அதில் பெரிதாக சாரம் ஏதுமில்லை, ஒரு வாரச் சலசலப்புக்கு அப்பால் அதில் நினைவுகொள்ள ஒன்றும் எஞ்சுவதில்லை. அது பெரும்பாலும் ஆற்றலுடன் எதையும் நிகழ்த்தமுடியாதவர்கள் தங்கள் வீண்பொழுதை செலவழிக்க, ஆற்றாமைகளை அலம்ப, எளிய கவனிப்புகளைப் பெற்று ஆறுதல்கொள்ள சென்றமையும் அடிவண்டல்.

ஆனால் என் வாசகர்கள் என நான் நினைக்கும் சிலரும் கடலூர் சீனு பற்றி அக்கேள்விகளை கொஞ்சம் சுழற்றிச் சுழற்றிக் கேட்டிருந்தனர். முதலில் அவர்கள் மேல் ஓர் எரிச்சல் உருவானாலும் அந்தக் கேள்விகளிலுள்ள ஒரு வகை அப்பாவித்தனம் அவர்களை மன்னிக்கச் செய்தது. அவர்கள் ’இலக்கியவாதி என்றால் புத்தகம் எழுதுபவன்’ என்று நினைப்பவர்கள். அவர்களுக்காக ஒரு விளக்கம் எழுதவேண்டும் என்று தோன்றியது. முதல் விஷயம், புக்பிரம்மா நிகழ்வில் எல்லா அரங்கிலும் ஓரு வாசகரையும் இடம்பெறச் செய்திருந்தனர். அவ்வாறுதான் சரவணன் மாணிக்கவாசகம், தங்கமணி, நாகராஜன் ஆகியோருடன் கடலூர் சீனுவும் பங்கெடுத்தார்.

சுசீந்திரத்தில் வாழ்ந்த பிச்சை ஐயர் அல்லது அய்யாவு ஐயர் என்பவரைப் பற்றி சுந்தர ராமசாமி குறிப்பிடுவதுண்டு. அவர் இசைக்கலைஞர் அல்ல. பாடகரும் அல்ல. இசை விமர்சகர்கூட அல்ல. இசை கேட்பவர் மட்டுமே. ஆனால் அவருக்கு பாடிக்காட்ட உஸ்தாத் படே குலாம் அலி கான் வந்திருக்கிறார். புல்லாங்குழல் மாலி வந்திருக்கிறார். பெருங்கலைஞர்கள் அவர் இல்லத்து திண்ணையில் அமர்ந்து அவருக்காகப் பாடியிருக்கிறார்கள் . நல்ல கலைஞன் எத்துறை சார்ந்தவன் ஆயினும் நல்ல ரசிகனை அறிந்தவன். நல்ல படைப்பாளி  எந்நிலையிலும் வாசகன் மேல் பெருமதிப்பு கொண்டவன். ஒரு தருணத்திலும் வாசகனை படைப்பாளி இழிவுசெய்ய மாட்டான், அவன் மதிப்பைக் குறைக்கும் ஒரு சொல்லையும் சொல்லவும் மாட்டான்.

’கடலூர் சீனு’ என்ற பெயர் இன்று தீவிர இலக்கியச் சூழலில் அனைவருக்கும் தெரியும். அவர் நூல்கள் எதையும் எழுதியதில்லை. ஓரிரு கட்டுரைகளைக்கூட நண்பர்கள் கேட்டு வாங்கித்தான் வெளியிட்டுள்ளனர். மிக அரிதாக மேடையேறி பேசியிருக்கிறார் – மிக நுட்பமான செறிவான உரைகள் அவை. எஸ்.ராமகிருஷ்ணன் பற்றிய அவருடைய புகழ்பெற்ற பேச்சுகூட அவர் பெயர் அழைப்பிதழில் இல்லாமல் நிகழ்ந்தது. அவர் பார்வையாளராகச் சென்ற விழாவில் எஸ்.ராமகிருஷ்ணன் விரும்ப, பவா செல்லத்துரை அவரை வற்புறுத்தி மேடையேற்றி பேசவைத்தார். ஆனால் மிகத்தெளிவாக திட்டமிட்ட உரை போல் இருக்கிறது அது.

நம் இலக்கியமேடைகளில் தங்களை இலக்கியவாதிகளாக முன்வைப்பவர்கள் நிகழ்த்தும் சளசளப்புகளுடன் அதை ஒப்பிட்டுபார்க்கலாம், அதைப்பேச எத்தனை அகத்தயாரிப்பு வேண்டும், எத்தனை தெளிந்திருக்கவேண்டும் என்று தெரியும். எஸ்.ராமகிருஷ்ணன் பற்றி இரண்டு உரைகளை அவர் ஆற்றியிருக்கிறார், இரண்டுமே தற்செயலாக நிகழ்ந்தவை. எஸ்.ராமகிருஷ்ணனை ஒட்டுமொத்தமாக வகுத்து மதிப்பிடும் அந்த உரைகள் அவரை அழுத்தமாக நிறுவும் தன்மைகொண்டவை. மிக அரிதாகச் சீனு ஆற்றிய ஓரிரு உரைகளில் பெரும்பாலும் எல்லாமே தற்செயலாக அவர் மேடையேறிப் பேசியவைதான்.

இன்று நானறிந்தவரை கடலூர் சீனுவுக்கு நிகரான இலக்கிய வாசகர்கள் மிகமிகச் சிலரே தமிழகத்தில் இருக்கின்றனர். ரசனையில் மட்டுமல்ல, வாசிப்பின் அளவிலும் விரிவிலும்கூட. இடைவிடாத வாசிப்பையே வாழ்க்கையெனக் கொண்டவர். கிடைக்கும் எல்லாவற்றையும் வாசிப்பவரோ, வாசித்த தளத்திலேயே மீண்டும் மீண்டும் வாசித்தபடிச் சுழல்பவரோ அல்ல. வாசிப்பை தேடலாக ஆக்கிக்கொண்டவர், அரியவற்றையே ஒவ்வொரு முறையும் வாசிப்பவர். அதேசமயம் கொஞ்சம் வாசித்ததுமே உருவாகி வரும் தன்முனைப்பும், அதன் விளைவான காழ்ப்புகளும் கசப்புகளும் சற்றும் இல்லாதவர்.

ஏனென்றால் அவர் இலக்கியம் என்னும் பேரியக்கத்தின் முன், இலக்கியவாதிகளின் படைப்புசக்தியின் முன் இயல்பாகவே பணியும் தன்மைகொண்டவர். அவருடைய மாபெரும் வாசிப்பே அந்தப் பணிவை உருவாக்குகிறது. குறைவாசிப்பு கொண்டவர்களிடம்தான் தன்னை வியந்து தருக்குவதும் பிறரை இழிவுசெய்வதுமான சிறுமை வெளிப்படுகிறது என்பது என் அனுபவம். அவரது பணிவாலேயே அவரை எளியவராக மதிப்பிடும் ஒரு போக்கு இங்குண்டு. அத்துடன் இங்கே நான் ஒன்றைக் கவனித்ததுண்டு, ஒருவரை அறிவார்ந்து மதிப்பிட அவருடைய தோற்றமே முதல் அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது. எளிய தோற்றம் கொண்டவர்கள், அல்லது கிராமப்புறத் தோற்றம் கொண்டவர்கள், உடனடியாக அத்தோற்றத்தாலேயே இழிவாக மதிப்பிடப்பட்டு நகையாடப்படுகிறார்கள்.

விஷ்ணுபுரம் அமைப்பு அளிக்கும் இலக்கிய விருதுகள் அனைத்திலும், நான் பரிந்துரைத்து பிற அமைப்புகள் வழங்கும் விருதுகள் அனைத்திலும் கடலூர் சீனுவின் சமரசமற்ற, நுட்பமான, ஆனால் சார்புநிலைகள் ஏதும் இல்லாத இலக்கியவாசிப்பின் பின்புலம் உண்டு. இன்று தமிழில் இலக்கியவாதிகள் பலர் பெற்றுள்ள விருதுகளுக்குக் காரணமானவர் அவர் – சாகித்ய அக்காதமி விருதுகளுக்குக்கூட. ஏனென்றால் அவருடைய பரிந்துரைகள் வலுவான தர்க்கக்கட்டமைப்பு கொண்டவை. ஆகவே எங்கும் முன்வைக்கத் தக்கவை.

இப்போது ஒன்று சொல்லவேண்டும், ஆர்.அபிலாஷ் யுவபுரஸ்கார் வாங்கியதற்கும் கடலூர் சீனுவே காரணம். அன்று பிரபஞ்சன் ஒரு புதுவை எழுத்தாளருக்கு அவ்விருதை வழங்க முழுவீச்சுடன் ’லாபி’ செய்தார். அவர் இலக்கிய எழுத்தாளர் அல்ல. விருதுக்குழுவில் இருந்த நாஞ்சில்நாடன் என்னை அழைத்து அச்செய்தியைச் சொல்லி, அந்தப்பட்டியலில் இருந்த பிறபெயர்களைக் குறிப்பிட்டு என் கருத்தைக் கேட்டார்.

அதைப்பற்றி நான் கடலூர் சீனுவிடம் விருது என குறிப்பிடாமல் பொதுவாகக் கருத்து கேட்டேன். அப்பட்டியலில் இருந்த ஆர்.அபிலாஷை சீனு முன்வைத்தார். நான் அப்போது அந்நாவலை வாசித்திருக்கவில்லை. சீனு ஆர்.அபிலாஷின் இலக்கியப்படைப்புகள் மேல் விமர்சனம் கொண்டவர். ஆனால் ‘நவீன இலக்கியம் x இலக்கியத்தகுதி அற்ற எழுத்து’ என்ற பெரும்பிரிவினை ஒன்று உண்டு என்றார். நவீன இலக்கியத்திற்குள் ஒருவரின் அழகியல்தகுதியை நாம் விமர்சனம் செய்யலாம், அது அவர்கள் மேல் நமக்குள்ள ஈடுபாட்டாலும் எதிர்பார்ப்பாலும்தான். ஆனால் இலக்கியமல்லா எழுத்து முற்றிலும் வேறு, இலக்கியத்துடன் அதற்கு ஒப்பீடே இல்லை என்றார்.

நான் நாஞ்சில்நாடனிடம் அவர் விருதுக்காக ஆர்.அபிலாஷை முன்வைக்கவேண்டும் என்றும், அதில் முற்றிலும் உறுதி காட்டவேண்டும் என்றும், அவரது உறுதிகண்டால் பிரபஞ்சன் மசிவார் என்றும் சொன்னேன். நாஞ்சில் உறுதியாக இருக்கவே தேர்வுக்குழுவில் மூன்றாமர் நாஞ்சில் பக்கம் நகர்ந்தார், ஆர்.அபிலாஷ் விருதுபெற்றார்.நானோ நாஞ்சிலோ சீனுவோ அபிலாஷுக்காகச் செய்தது அல்ல அது, நவீன இலக்கியத்துக்காகச் செய்தது. அன்று அப்பட்டியலில் அவரே நவீன இலக்கியவாதி. எவரானாலும் அதைச் செய்தே ஆகவேண்டும். அபிலாஷின் தொடக்கமே அங்கிருந்துதான். அப்படி மேலும் பல இலக்கியவாதிகள் பற்றி  மேலும் பல தருணங்களைச் சொல்ல முடியும்.

சீனுவுக்கு இதெல்லாம் தெரியும். நான் பெங்களூரில் அவரைச் சந்தித்தபோது அவர் மீதான ஏளனங்களால் (கணிசமானவை அவருடைய தோற்றம் சார்ந்த பகடிகள்) அவர் புண்பட்டிருப்பார் என நினைத்தேன். ஆனால் அவர் வழக்கமான வெடிச்சிரிப்புடன், “நவீன இலக்கியவாதி இங்க வாசகன் இல்லாம இருக்கான் சார், அப்ப அவனுக்கு ஒரு பொருமல் இருந்துட்டேதான் இருக்கும். பாவம், விடுங்க” என்று மட்டுமே சொன்னார். அதுதான் மகத்தான இலக்கியவாசகனின் முன்னுதாரணமான இயல்பு.

இன்று கடலூர் சீனுவை அவமதித்து எழுதுபவர்கள் பல முகநூலில் உள்ளனர். அவருக்கு கேலிப்பெயர் சூட்டி கெக்கலிப்பவர்கள் உண்டு. அவர்களில் ஒருவர் கூட கடலூர் சீனு வாசித்த நூல்களின் பின்னட்டை அளவுக்கு வாசித்தவர்கள் அல்ல. அவர் அறிமுகம் செய்து எழுதிய நூல்களின் பெயர்களைக்கூட அவர்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். அவர்களில் பலர் வாசிப்பதில்லை என்பதையே பிரகடனமாக முன்வைப்பவர்கள். திரும்பத்திரும்ப ஒரே சுழலில் சுற்றிவரும் வெறும் வம்பர்கள்.  கூடவே வரட்டுக் சிறுகதைகள் அல்லது வெட்டிக்கவிதைகள் சிலவற்றை எழுதிவிட்டு தங்களையும் படைப்பாளி என எண்ணிக்கொள்ளும் இலக்கியத் தற்குறிகள் சிலரும் அவ்வாறு எழுதுகிறார்கள். அவர்களுக்கு ஒரு வாசகனின் வாசிப்புக்கு என்ன மதிப்பு என்று தெரியாது. எழுதுவது ஓர் அருஞ்செயல் என்றால் வாசிப்பும் அதற்கிணையானதே என இலக்கியவாதி மட்டுமே உணர்ந்திருப்பான். இலக்கியத்தில் உண்மையான ஈடுபாட்டுடன் செயல்படுபவர்கள், இலக்கியத்தில் உண்மையில் எதையேனும் சாதித்தவர்கள் கடலூர் சீனுவின் மதிப்பை அறிந்திருக்கிறார்கள்.

என்னிடமும் சிலர் கடலூர் சீனு பற்றிய கேலிகளை முகநூலில் இருந்து பொறுக்கிக்கொண்டு வந்து சொல்வதுண்டு. அவர்கள் பெரும்பாலும் பொருட்படுத்தத் தேவையற்ற சில்லறைகள். நான் அவர்களை அந்த கணமே என் நட்புச்சூழலில் இருந்து விலக்கிவிடுவது வழக்கம். இந்த தமிழ்விக்கி -தூரன் விருதுவிழாவில் ஒருவர் என்னிடம் மிகுந்த துயருடன் கேட்டார், அவரை நான் ஏன் முழுமையாக எல்லா தொடர்புகளில் இருந்தும் விலக்கிவிட்டேன் என்று. அவ்வாறு கேட்பதற்கு முன் அவர் அண்மையில் விஷ்ணுபுரம் வாசித்ததைப் பற்றி உணர்ச்சிகரமாகச் சொன்னார். அதனால் மட்டும் நான் அவருக்குப் பதில் சொன்னேன். “கடலூர் சீனு விஷ்ணுபுரம் பற்றி எழுதியதை படித்திருக்கிறீர்களா?”

அவர் பெரும் பரவசத்துடன் “ஆமா சார், அவர் சட் சட்னு ஏகப்பட்ட வாசல்களைத் திறந்து தந்திடறார். சார், விஷ்ணுபுரம் நாவலிலே வர்ர ஒருத்தர் மாதிரியே இருக்கார் சார்” என்றார். நான் “நான்காண்டுகளுக்கு முன் கோவை புத்தகக் கண்காட்சியில் நீங்கள் கடலூர் சீனுவை சிறுமைசெய்யும்படி ஒரு கேலியைச் சொன்னீர்கள்” என்றேன். அவருக்கு நினைவில்லை. “அது ஓர் எழுத்தாளர் முகநூலில் எழுதிய கேலி. அவர் தன் படைப்புசார்ந்த இயலாமையை கசப்பாக மாற்றிக்கொண்டு வசைபாடும் குமாஸ்தா ஜீவன். அதை பொருட்படுத்தி என்னிடம் வந்து சொல்லும் உங்கள் மேல் நான் என்ன எண்ணம் கொண்டிருப்பேன்?. நீங்கள் அப்பால் சென்றதும் உங்கள் எண்ணை என் செல்பேசியிலும் மின்னஞ்சலிலும் தடுப்பு செய்துவிட்டேன்.’

அவர் பதறிவிட்டார். “சார், அப்ப நான் பெரிசா வாசிக்கலை சார். எனக்கு பெரிசா ஒண்ணுமே தெரியாது சார். அவர் எழுதுறது லெட்டர்ஸ் தானேன்னு நினைச்சு படிக்கலை சார்” என்றார். “நான் இப்பவே போய் கடலூர் சீனு அண்ணன்கிட்டே மன்னிப்பு கேட்டுக்கறேன்” என்றார். “வேண்டாம், அது அவருக்கு தெரியாது. அவர் வாழும் உலகம் வேறு. வம்பர்களின் சிறுமைகளுக்கு அப்பால் அவர் தன் இலக்கியத்தீவிரத்துடன் வாழட்டும்”  என்று நான் சொன்னேன்.

நான் சொன்னேன். ”ஆனால் நான் எழுத்தாளன். மாபெரும் எழுத்தாளன். எங்கும் எவர் முன்னிலையிலும் வளைந்தவன் அல்ல, ஆகவே வாசகனின் மதிப்புணர்ந்தவன். ஒரு புத்தகக் கண்காட்சியில் எந்த வாசகரையாவது நான் அமர்ந்துகொண்டு எதிர்கொண்டதை நீங்கள் கண்டிருக்கிறீர்களா? ஆறுமணிநேரம் கூட தொடர்ச்சியாக நின்றுகொண்டே இருந்திருக்கிறேன். ஏனென்றால் வாசகர்கள் எனக்கு அறிவியக்கத்தின் கண்கூடான வடிவங்கள். சிறுவர்கள் என்றால்கூட அவர்கள் வாசகர்கள் என்றால் அவர்கள் என் பெருமதிப்புக்குரியவர்கள். அவர்களுக்காகவே நான் எழுதிக்கொண்டிருக்கிறேன். எந்த வாசகர் என்றாலும் சரி. எவரை அவர் வாசித்தாலும் சரி. விஷ்ணுபுரம் அரங்குகளில் கூடும் வாசகர்களைச் சிறுமை செய்து எழுதும் கீழ்மக்கள் எழுத்தாளர்களிலும் உண்டு. அதை நான் கேள்விப்பட்டால் அக்கணமே அந்தக் கீழ்மகன் என் உள்ளத்தில் இறந்துவிடுகிறான். அவன் எழுத்தாளன் என்றால் முற்றிலும் படைப்புசார்ந்து செத்து மட்கியபின்னரே அப்படிச் சொல்ல முடியும். அதன் பின் அவன் வாழ்ந்தாலும் செத்தாலும் எனக்குச் சமம்தான்”

அவர் கண்கலங்கி என் கைகளைப் பற்றிக்கொண்டார். “அறியாமலேயே என்னென்னவோ மண்டைக்குள்ள போயிடுது சார். ஒரு பெரிய படைப்பைப் படிச்சு முடிக்கையிலே வந்து சேருற உயரத்தை வைச்சு பாக்கிறப்ப வம்புகள்லாம் எந்தக் கீழ்மையிலே கிடக்குன்னு தெரியுது. ஆனால் முகநூல் வம்பை கொண்டாந்து கொட்டிக்கிட்டே இருக்கு” என்றார்

கடலூர் சீனு எனக்கு அறிமுகமானது 2006 ல், வாசகர் கடிதம் வழியாக. இரண்டு ஆண்டுகளுக்குப்பின் 2008ல் நான் சிதம்பரம் நாட்டியவிழா காண்பதற்காகச் சென்றிருந்தேன். நண்பர் கிருஷ்ணன் உடனிருந்தார். சிதம்பரத்தில் ஒரு நண்பரின் இல்லத்தில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது எம்.ஜி.ஆர்- சிவாஜிகணேசன் சம்பந்தமான சர்ச்சை உருவாகி நான் ‘தலைமறைவாக’ இருந்த காலம். ஆகவே கூட்டத்துடன் கூட்டமாக எவருக்கும் தெரியாமல் மணல்தரையில் அமர்ந்திருந்தேன். சீனு வந்து என் அருகே அமர்ந்து “சார் நான் கடலூர் சீனு” என அறிமுகம் செய்துகொண்டார். ”என் ஃப்ரன்ட்ஸ் அந்தா அங்க நிக்கிறாங்க. நீங்க தலைமறைவா இருக்கிறதா சொன்னேன். அதனாலே அவங்க அங்க தலைமறைவா நின்னு உங்களை பாத்திட்டிருக்காங்க”

அன்றுமுதல் இன்றுவரை கடலூர் சீனு எனக்கு கடிதங்கள் எழுதிக்கொண்டே இருக்கிறார். அவருடைய வாழ்க்கையும் பயணங்களும் வாசிப்பும் முழுமையாகவே எனக்கு கடிதங்களாக எழுதப்பட்டுள்ளன. அவற்றில் தனிப்பட்ட கடிதங்களை நான் மட்டுமே வாசிக்கிறேன். பிற கடிதங்கள் இருபது ஆண்டுகளாக தொடர்ச்சியாக என் தளத்தில் வெளியாகின்றன. அவற்றை தேர்ந்த வாசகர்கள் மட்டுமே வாசித்திருக்க வாய்ப்பு. ஏனென்றால் அவை பெரும்பாலும் தீவிரமான பண்பாட்டு ஆய்வுநூல்களைப் பற்றிய வாசக அனுபவங்கள் மற்றும் அறிமுகங்கள். அல்லது அரிதான தொல்லியல் இடங்களுக்குச் சென்று எழுதப்பட்ட வரலாற்றுப் பண்பாட்டுக் குறிப்புகள். வெற்றுச் சொற்கள் கொண்ட ஒரு கடிதம்கூட இல்லை. இன்று தமிழில் எந்த எழுத்தாளனும் எந்த இதழிலும் எழுதும் மிகத்தீவிரமான கட்டுரைகளை விட தீவிரமானவை, ஆழமானவை அவை.

பெரும்பாலும் அந்நூல்களைப் பற்றி தமிழில் எழுதப்பட்ட ஒரே வாசிப்பனுபவக் குறிப்பு கடலூர் சீனு எழுதியதாகவே இருக்கும். தமிழகத்தில் லகுலீச வழிபாடு பற்றிய நூலாகட்டும், தமிழக நாயினங்கள் பற்றிய தியடோர் பாஸ்கரனின் நூலாகட்டும் அவர் வழியாக மட்டுமே நாம் அறிமுகம் செய்துகொள்ள முடியும். தமிழில் வேறு வழியே இல்லை. உலக இலக்கியம் வாசிப்பதான பாவனைகளுக்கு இங்கே குறைவில்லை, ஆனால் வாசித்துவிட்டு நாலு பத்தி எழுத ஆளில்லை. எழுதினால் அது தொண்ணூறு சதவீதம் திருட்டு. அவர்களுக்கு வெட்கமே இல்லை.

இச்சூழலில் இக்கடிதங்கள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. அவற்றை வாசித்து நூற்றுக்கணக்கானவர்கள் பண்பாட்டுநூல்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார்கள். பலர் அவர் வழியாக பண்பாட்டாய்வாளர்களாகவே ஆகிவிட்டிருக்கிறார்கள். அவற்றை வாசித்து உருவாகி வந்தவர்கள் எழுதிய காத்திரமான நூல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.  கடலூர் சீனு செல்லும் பண்பாட்டு மையங்களுக்குச் சென்று இன்னொரு குறிப்பு தமிழகத்தில் எழுதப்பட்டிருக்காது. அவர் செல்லும் ஊர்களுக்கு தாங்களும் செல்லும் ஓர் இளைஞர்குழு இன்றுண்டு. அவரைச் சூழ்ந்து, அவரை ஆசிரியராகவே எண்ணும் ஒரு வட்டம் உண்டு.

தொடர் பயணியான அவர் பல கடிதங்களை எங்கோ இருந்து செல்பேசியில் கட்டைவிரலால் தட்டச்சிட்டு அனுப்புகிறார். அவை எழுத்துப் பிழை மலிந்தவை. அவசரமான எழுத்தின் விளைவான சொற்றொடர்பிழைகளும் உண்டு. சொன்னாலும் அவற்றை திருத்தி அனுப்புவதில்லை. “நான் உங்களுக்கு எழுதறேன். படிச்சுட்டு அழிச்சிருங்க. உங்களுக்குப் புரியுதுல்ல” என்று அதற்கு பதில் சொல்வார். அவர் பிரசுரத்திற்காக எதையுமே எழுதுவதில்லை. அவரைப்பொறுத்தவரை அவர் எழுத்து முழுமையாகவே என்னுடனான தனிப்பட்ட உரையாடல் மட்டும்தான். “உங்க கிட்ட பேசிட்டே இருக்கேன். அதிலே ஒரு சின்ன பகுதி கடிதமா எழுதப்படுது, எனக்கு அப்டி எழுதுறது முக்கியம். அவ்ளவுதான். அத்தோட சரி. நியாயப்படி இதையெல்லாம் பிரசுரம் பண்ணக்கூடாது. ஆனா நீங்க பிரசுரம் பண்ணணும்னு நினைக்கிறீங்க, சரி”

எனக்கு வரும் வாசகர் கடிதங்களை இலக்கியவாசிப்பற்ற தற்குறிகள் கேலிசெய்துகொண்டே இருப்பதை ஓரளவு ஆர்வத்துடன் உள்ளே வருபவர்கள் முதலில் பார்க்கிறார்கள். பின்னர் அக்கடிதம் எழுதுபவர்களை அறிமுகம் செய்துகொள்கையில் பெரும் திகைப்பை அடைகிறார்கள். நீண்ட கடிதங்கள் எழுதியபடி என் தளத்தில் அறிமுகமான பலர் இன்று அறியப்பட்ட எழுத்தாளர்கள், சிற்றிதழாளர்கள், இலக்கியச் செயல்பாட்டாளர்களாக திகழ்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் முன்னரே தீவிரமாக கடிதம் எழுதத் தொடங்கியவர் சீனு. அவர் கடிதமெழுதுபவர் மட்டுமாக நின்றுவிட்டார், அவர் அதில் மிக உறுதியாக இன்றுவரை நீடிக்கிறார்.

2008 முதல் அவரை முறையான கட்டுரைகளாக எழுதும்படிச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். “எனக்கு வாசகர்னு யாருமில்லை. அப்டி ஒரு முகமே என் முன்னாடி இல்லை. நான் ஒரே ஒருத்தர்கிட்ட மட்டுமே பேச விரும்பறேன். வாசிக்கிறவங்க வாசிக்கலாம், அவங்களுக்கு உதவியா இருந்தாச் சரி” என்றார். இக்காரணத்தால் அக்கடிதங்கள் தனிப்பட்ட உரையாடல்தன்மை கொண்டவை. பலவற்றில் முந்தைய கடிதங்களின் தொடர்ச்சி இருக்கும். எனக்கு ஏற்கனவே தெரிந்தவற்றை மேற்கொண்டு சொல்லாமல் மேலே பேசுவார். அவை வாசகர்களுக்கு சிலசமயம் அந்தரத்தில் நிற்பவை போல் இருக்கும். ஆனால் அவை தனி உரையாடல்கள் என்பதனாலேயே அவற்றில் ஓர் உண்மைத்தன்மை உண்டு, தீவிரம் உண்டு. அது மிக முக்கியமானது. கட்டுரைகளில் அந்த உண்மைத்தன்மை சற்று குறைவுபடக்கூடும்.

கடலூர் சீனு என்பது அவருக்கு நான் போட்ட பெயர்- கடிதங்களுக்காக. அவருக்கு தனக்கு ஒரு பெயர் தேவை என்றுகூட தோன்றவில்லை. அவருடைய ஊர் கடலூர் அல்ல, இப்போதிருக்கும் ஊர்தான் கடலூர். அவர் நெல்லைக்காரர்.  அவர் எந்த வகையிலும் தன்னை முன்வைக்க விரும்பவில்லை. நீண்டகாலம் கழித்தே அவருடைய புகைப்படங்கள் வெளியாயின. அது வரை அவர் ஒரு பொய்யான பெயர், அப்பெயரில் நானே எனக்கு கடிதம் எழுதிக்கொள்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

சீனு எனக்கு எழுதி வெளியான நீண்ட கடிதங்கள் கிட்டத்தட்ட முந்நூறு.  அவற்றை பண்பாட்டு நூலறிமுகங்கள், பயணக்குறிப்புகள், இலக்கிய விமர்சனங்கள், இலக்கிய மதிப்புரைகள் என தொகுத்தால் பத்து நூல்களாக எளிதில் மாற்றலாம். அவற்றைவிட தீவிரமான, நுட்பமான நூல்களை இங்கே மிகச்சிலரே எழுதியுள்ளனர். பெரும்பாலும் நான் அவற்றுக்குப் பதிலளிப்பதில்லை. ஆனால் 2010ல் அவற்றை நானே தொகுத்து ‘அன்புடன் சீனு’ என்னும் தலைப்பில் ஒரு நூலாக ஆக்க முயன்றேன். ஆனால் அப்படி ஒரு நூல் வெளிவருமென்றால் அவருடைய தன்னியல்பான தன்மை இல்லாமலாகும் என்ற எண்ணம் வந்தது. அக்கடிதங்கள் அனைத்தும் இத்தளத்தில்தான் உள்ளன, அவை அப்படியே இருக்கட்டும் என எண்ணி அம்முயற்சியை கைவிட்டேன்.

இந்தக் கடிதங்களின் மதிப்பு எனக்கு தெரிந்த எல்லா முக்கியமான எழுத்தாளர்களுக்கும் தெரியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனுவைப்பற்றி  ஒரு மலையாள எழுத்தாளரிடம் சொன்னேன். அவர் சொன்னார். “இது உலக இலக்கியத்திலேயே ஒரு அபூர்வமான நிகழ்வு. இலக்கியச் சிந்தனையாளர் ஆகும் தகுதி கொண்ட ஒரு முக்கியமான வாசகர் வேறேதும் எழுதாமல் ஓர் ஆசிரியருக்கு முக்கியமான கடிதங்கள் எழுதிக்கொண்டே இருக்க்கிறார் என்றால் அதை ஒரு மகத்தான இலக்கிய சாசனமாகத்தான் கருதவேண்டும். உலக இலக்கியத்தில் ஓரிரு உதாரணங்கள்தான் அதற்கு உள்ளன”.

அவர் சொல்லி அடுத்தவாரம் மாத்ருபூமியில் இருந்து அழைத்திருந்தனர். இந்த நிகழ்வை ஒரு ’ஃபீச்சர்’ கட்டுரையாக ஆக்க விரும்பினர். நான் அது தேவையில்லை, இந்த தன்னியல்பான தன்மை நீடிக்கட்டும் என்று சொன்னேன்.  சென்ற ஆண்டு டெல்லியின் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஒருவரிடம் சொன்னேன். திகைத்துப்போய் “எத்தனை பெரிய நிகழ்வு. ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கால இலக்கியவாதிகளுக்குத்தான் அத்தகைய வாசகர்கள் அமைந்தனர். அப்படிப்பட்ட உரையாடல்கள் நிகழ்ந்தன. இந்நிகழ்வைப் பதிவுசெய்யவேண்டும்” என்றார். ஆங்கில இணைய இலக்கிய இதழ் ஒன்றில் அவர் சொல்லி என்னை அழைத்து ஒரு கட்டுரை போடலாமா என்று கேட்டார்கள். அப்போதும் அதையே சொன்னேன்.

இலக்கியம் என்பது ஓர் அறிவியக்கம். அந்த வட்டத்திற்கு வெளியே உள்ளவர்களால் உள்ளே என்ன நிகழ்கிறது என்று புரிந்துகொள்ள முடியாது. கதை, கட்டுரைகள் எல்லாம் எழுதி உள்ளே வந்துவிட்டவர்களில்கூட பலருக்கு வாசிப்பு இல்லாமையால் இலக்கியமென்னும் அறிவியக்கத்தின் மதிப்பும் செயல்முறையும் புரியவந்திருக்காது. அவர்கள் இத்தகைய ஆழ்ந்த நிகழ்வுகளை அற்பமானவையாக நினைக்கலாம். கொஞ்சமேனும் வாசிக்கும் வாசகர்கள் அச்சிறுமையை வாங்கி தங்கள் உள்ளத்தை மலினம் செய்துகொள்ளலாகாது.

நான் ஒரு காலகட்டத்தில் கடலூர் சீனுவுக்கு ஆசிரியர் என்னும் நிலையில் இருந்தேன். இன்று, அவரிடமிருந்தே நான் பண்பாட்டாய்வுகளை அறிமுகம் செய்துகொள்கிறேன். இன்று நான் அதிகமாகக் கற்பது அவரிடமிருந்தும் அஜிதனிடமிருந்தும் மட்டுமே.  கடலூர் சீனு என் உள்ளத்தின் மறுபக்கம் போல் திகழ்பவர். அவரைப்போன்ற ஒருவரை நான் எழுத்தால் கவர்ந்தேன், அவருடைய உரையாடலின் ஒரு முனையாக ஆண்டுக்கணக்காக நீடித்தேன் என்பது என் இலக்கியவெற்றிகளில் முக்கியமான ஒன்று. மிக அரிதாகவே பெரும்படைப்பாளிகள் மட்டும் அடையும் ஒரு கௌரவம் அது.

சிதம்பரம் நாட்டியாஞ்சலி

சிதம்பரம் நாட்டியாஞ்சலி- சீனு கடிதம்

முந்தைய கட்டுரைதேரூர்ந்த சோழன் யட்ச கானம்
அடுத்த கட்டுரைகோயில்கள் வெறும் கலைச்செல்வங்களா?