அழைக்கப்பட்டவர்களும் அலைமோதுபவர்களும்

அன்புள்ள ஜெ,

புக்பிரம்மா விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள். அண்மையில் புக்பிரம்மா இலக்கியவிழாவை ஒட்டி முகநூலில் வழக்கம்போன்ற ஒரு வெட்டிவிவாதம் எழுந்தது. அந்த அரங்குக்குச் சிலர் தாங்கள் அழைக்கப்படவில்லை என்பதை ஒட்டி கண்டனம் தெரிவித்திருந்தனர்.அதை எடுத்துக்கொண்டு சிலர் அந்தவார வம்பு என கொண்டாடினர். நீங்கள் அந்த வம்புகளில் இருந்த முன்முடிவுகளையும் காழ்ப்புகளையும் கவனிக்கவேண்டியதில்லை. அவற்றை எழுதியவர்கள் இலக்கியத்தில் எந்தவகையிலும் பொருட்படுத்தவேண்டியவர்களும் அல்ல. ஆனால் ஏன் இந்த வம்பு எழுகிறது என்று ஒரு விளக்கம் அளிக்கலாமென நினைக்கிறேன்.

செந்தில்ராஜ்

அன்புள்ள செந்தில்,

இலக்கியத்தில் ஓர் எழுத்தாளனின் அடிப்படை நாகரீகம் என்பது ’என்னை ஏன் நீங்கள் ஏற்கவில்லை?’ என்று கேட்காமலிருப்பது. ஏற்பு தன்னியல்பாக உருவாகவேண்டும். தவிர்க்கமுடியாத முக்கியத்துவத்தை எழுத்தினூடாக இயல்பாக ஒருவர் அடைய வேண்டும். மதியாத இடங்களை தான் புறக்கணிக்கவேண்டும், தான் மதிக்கப்படவில்லை என தானே தம்பட்டம் அடிக்கலாகாது.

நான் இன்றுவரை அப்படி எங்கும் கேட்டதில்லை. பதினைந்து ஆண்டுக்காலம் தமிழகத் தலைநகரில் நிகழ்ந்து வந்த ஒரு சர்வதேச இலக்கிய விழாவில் ஒருமுறைகூட நான் அழைக்கப்பட்டதில்லை. இந்தியாவெங்கும் அழைக்கப்பட்டுக்கொண்டும் இருந்தேன். சொல்லப்போனால் சென்ற இருபதாண்டுகளில் எனக்கு அழைப்பு வராமல் இந்தியாவில் எந்த சர்வதேச இலக்கியவிழாவும் நடந்ததில்லை. நான் அவற்றில் ஆர்வமிழந்திருந்தேன். என் கவனம் தமிழ் மட்டுமே என இருந்தது

என் நூல்கள் ஆங்கிலத்தில் வெளியாகி கவனம்பெற்றபோது அந்த இலக்கியவிழாவை நடத்தும் ஆங்கிலநாளிதழின் மேலிடமே கூப்பிட்டுச் சொன்னபின் அதன் தமிழ் அமைப்பாளர்கள் என்னை தொடர்புகொண்டு அழைத்தனர் . ’என்னை அழைக்கும் தகுதி உங்களுக்கில்லை, மேற்கொண்டு தொடர்புகொள்ளவும்கூடாது’ என்று சொல்லி மறுத்தேன். அதுவே இலக்கியவாதி கொள்ளவேண்டிய நிமிர்வு.

அத்துடன் ஒன்றுண்டு. ஆண்டெல்லாம் முகநூலில் வெறும் அரசியல்-சினிமா வம்புகளை மட்டுமே பேசிவிட்டு இலக்கியவிழா என வரும்போது மேடைவேண்டும் என கோருவதிலுள்ள சிறுமையை அச்சிறுமதியாளர்கள் அவர்கள் சிறுமதியாளர்கள் என்பதனாலேயே உணர்வதில்லை. வாசகர்களுக்குத் தெரியும். எவர் எல்லா காலத்திலும் இலக்கியத்தையே முன்னிறுத்துகிறார்களோ அவர்களே இலக்கிய விழாக்களுக்குரியவர்கள். அது எந்தவகை இலக்கியமானாலும் சரி.

இலக்கியவிழாக்களில் பங்கேற்பாளர்களை அழைப்பதில் ஒரு நடைமுறை உள்ளது. ஓர் இலக்கியச்சூழலை எழுத்தின் வகைமை, எழுத்தின் கருத்தியல், எழுத்தாளனின் அகவை சார்ந்து பல கூறுகளாக வகுத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு கூறுக்கும் ஒன்றொ இரண்டோ பிரதிநிதிகள் இருக்கும்படி அழைக்கிறார்கள். அதுவே பரலவாக அழைக்கும் முறை.

இன்னொன்று, எந்த இலக்கியவிழாவும் அத்தனைபேரையும் அழைத்துவிட மாட்டார்கள். அடுத்தடுத்த விழாக்களுக்கு முகங்கள் தேவைப்படும். புக்பிரம்மா இலக்கியவிழாவுக்கு இம்முறை நானும் பெருமாள் முருகனும் அழைக்கப்பட்டோம். எனில் அடுத்தாண்டுக்கான முகம் எஸ்.ராமகிருஷ்ணனோ, சாரு நிவேதிதாவோ, இரா.முருகனோ, யுவன் சந்திரசேகரோ ஆக இருக்கலாம். ஐந்தாண்டுகளுக்கு அழைக்கப்பட வேண்டியவர்களின் பட்டியல் அமைப்பாளரிடம் இருக்கவேண்டும். இல்லையேல் அழைக்கப்பட்டவர்களே மீண்டும் அழைக்கப்பட்டு சலிப்பு உருவாகும்.

இந்நிலையில் மொத்தமாகப் பார்க்கையில் முப்பதாண்டுகளாக எழுதும் ஒருவர் தவிர்க்கப்பட்டு ஐந்தாண்டுகளாக எழுதும் ஒருவர் அழைக்கப்பட்டதாகத் தெரியும். அதை வம்பாக மாற்றினால் இலக்கியமறியாப் பாமரர் அதை வாசித்து உச் உச் கொட்டவும்கூடும். பலசமயம் இலக்கியவாதிகளிலுள்ள பாமரர்களே அதை வம்பாக மாற்றுகின்றனர்.

புக்பிரம்மா இலக்கிய விழாவில் அழைக்கப்பட்டவர்களை பார்க்கும் எவரும் தமிழிலுள்ள அத்தனை கருத்தியல் தரப்புக்கும் இணையான எண்ணிக்கையில் இடம் அளிக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும். எல்லா அகவையினருக்கும் இடமளிக்கப்பட்டிருப்பதையும் காணமுடியும். அத்தகைய ஒரு பட்டியலைப்போட இன்று தேர்ந்த இலக்கியப் பார்வையும், நடுநிலை நோக்கும் தேவை.

சட்டென்று ஒருவர் அதில் விஷ்ணுபுரம் அமைப்பின் உறுப்பினர்களே மிகுதி என்று சொல்லிவிட முடியும்தான். ஆனால் இன்று தமிழகத்தில் நிகழும் இலக்கிய அரங்குகள் எதிலும் விஷ்ணுபுரம் அமைப்பினூடாகக் கவனம்பெற்றவர்களே மிகுந்திருப்பதைக் காணலாம். அரசியல்கட்சி சார்ந்த அமைப்புகளின் உள்கூட்டங்கள் விதிவிலக்கு. பார்வையாளர்களில்கூட பெரும்பாலும் விஷ்ணுபுரம் சார்ந்தவர்களே இருப்பார்கள்.

ஏனென்றால் ஆண்டுதோறும் இலக்கியநிகழ்வுகள், பயிலரங்குகள் நிகழ்வது இங்கே.  பலநூறு இளைஞர்கள் திரண்டிருப்பது இங்கே.இலக்கியத்தை மட்டும் முன்னிறுத்தும் ஒரே அமைப்பு இது மட்டுமே. இங்கிருந்தே அடுத்த தலைமுறை உருவாகமுடியும். இரவுபகலாக அரசியலும் சினிமாவும் வம்புகளாகவே சலம்பப்படும் முகநூல் சூழலில் இருந்து அல்ல. ஒரு நூலை வாசித்துவிட்டு வந்து மெய்யான இலக்கியப்பார்வையுடன் கூர்மையாகப் பேசும் ஒருவர் உங்கள் இலக்கியவிழாவுக்குத் தேவை என்றால் நீங்கள் இங்குதான் வந்தாகவேண்டும்.

அதுவே இந்திய மேடைகளிலும். இன்று இந்திய இலக்கியவிழாக்களில் தெளிவும் கூர்மையுமாக ஒலிக்கும் குரல்கள் எங்கள் நட்புக்குழுமத்தில் இருந்து எழுந்து வந்தவர்களுடையவைதான். குறிப்பாக பெண்குரல்கள். சென்ற முப்பதாண்டுகளில் தமிழின் குரல்களாக அத்தகைய கற்றறிந்த, நுண்ணுணர்வுகொண்ட குரல்கள் எழுந்ததே இல்லை. தன்னை முன்வைக்காமல் அறிவியக்கத்தை முன்வைத்த குரல்களே ஒலித்ததில்லை.

எண்ணிக்கொண்டிருங்கள், இன்னும் பத்தாண்டுகளில் உலக இலக்கியமேடைகளில் எங்கள் அணியின் குரல்கள்தான் ஒலிக்கவிருக்கின்றன. தமிழை நோக்கி உலகின் கவனத்தை திருப்பவிருக்கின்றன.

ஏனென்றால் நாங்கள் ஒரு குறிப்பிட்ட கருத்தியல் தரப்பை உருவாக்கவில்லை. குறிப்பிட்ட வகை எழுத்தை முன்வைக்கவில்லை. குறிப்பிட்ட எழுத்தாளர்களையும் முன்வைக்கவில்லை. இலக்கியம் என்னும் இயக்கத்தை, அதன் அழகியல் அடிப்படைகளை மட்டுமே முன்வைக்கிறோம். அதைக் கற்க வழிசெய்கிறோம். அதனுடன் இணைந்த தத்துவம், கலைகளுக்கான தொடர்புகளை நிபுணர்களைக் கொண்டு பயிற்றுவிக்கிறோம். அறிவியக்கச் செயல்பாட்டுக்குரிய நட்பார்ந்த சூழல் ஒன்றை தொடர்ச்சியாக நிலைநிறுத்துகிறோம். இது ஒரு குழு அல்ல, ஓர் இயக்கம்.

எங்கள் இளம் முகங்களே எங்கள் பதாகை. அவர்களின் பங்களிப்பு, எங்கள் சாதனை.

ஜெ

 

முந்தைய கட்டுரைவட்டத்தொட்டி
அடுத்த கட்டுரையோகமும் தியானமும் ஒன்றா?