புக் பிரம்மா விருது, கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

பிரம்மா சாகித்ய விருது பெற்றமையை அறிந்தேன். வாழ்த்துகள். நீண்ட காலமாக விருதுகளுக்கு அப்பால் உங்களை வைத்துக்கொண்டவர் நீங்கள், இதனை ஏற்றுக்கொண்டது வியப்பளிக்கிறது. நீங்கள் பெற்றுக்கொண்டதனால் இவ்விருது பேசப்படும்.

மகிழ்ச்சி.

அசதா தாஸ்

B. Jeyamohan awarded inaugural Book Brahma Sahitya Puraskara 

Jeyamohan awarded Book Brahma Sahitya Puraskara 

அன்புள்ள ஜெ

புக்பிரம்மாவின் வாழ்நாள் சாதனை விருது பெற்றமைக்கு மகிழ்ச்சி. புக்பிரம்மா அமைப்பு கர்நாடகத்தில் மதிப்பு மிக்கது. இந்த ஆண்டு முதல் அவர்கள் நடத்த ஆரம்பித்திருக்கும் தென்னிந்திய இலக்கியவிழா மிக முக்கியமான ஒரு தொடக்கமாகக் கருதப்படுகிறது. அவ்விழாவை ஒட்டி அமைக்கப்பட்ட முதல் விருது இது. தென்னிந்திய இலக்கியத்தில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு அளிக்கப்படுவது. இத்தகைய ஒரு விருதை அவர்கள் உங்களுக்கு அளித்திருப்பதென்பது மிகுந்த கௌரவம் கொண்டது.

தமிழகத்தில் அந்த விருதின் முக்கியத்துவம் உணரப்படவில்லை. கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும் வந்த செய்திகளில் மிகுந்த முக்கியத்துவம் அளித்திருந்தனர். (தமிழ் நாளிதழ்களோ, தமிழ் ஊடகங்களோ அதை செய்தியாகக் கருதவில்லை) வழக்கமாக எவர் முக்கியமான விருது பெற்றாலும் நீங்கள் அச்செய்தியை வெளியிட்டு அளிக்கும் மனமுவந்த பாராட்டு வழியாகவே நாங்களெல்லாம் அந்த விருதைப்பற்றி அறிந்துகொள்வோம். உங்களுக்கான விருது என்பதனால் வேறெங்கும் எவரும் சம்பிரதாய வாழ்த்துகூட சொல்லவில்லை  – அது எதிர்பார்த்ததுதான். யாரும் வாழ்ந்தாததனால் சில்லறைப்பயல்களுக்கு செய்தி தெரியவில்லை, ஆகவே வசைகளும் வரவில்லை. அந்தவகையில் நல்லதும்கூட.

என்னைப்போன்றவர்கள் கர்நாடகத்தில் வாழ்பவர்கள். இங்கே தமிழிலக்கியம் மீது பெரிய மதிப்பு வாசகர்களிடம் இல்லை. ஏனென்றால் முக்கியமான படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்டதில்லை. அறம் கதைகளின் மொழியாக்கம் இங்கே மிகவும் அலையை உருவாக்கியுள்ளது. அறம் கதைகள் அக்டோபரில் நுல்வடிவாகிறது என்றும் உடனே ஏழாம் உலகமும் வெளியாகிறது என்றும் அறிந்தேன். மிகுந்த மகிழ்ச்சி. ஒரு தமிழ் வாசகனாக நிமிர்வை அடையும் தருணம் இது.

ஆர். கிருஷ்ணா

புக்பிரம்மா விருது, நெம்மிநீலம் வெளியீடு

 

முந்தைய கட்டுரைவிபாசனா, கடிதம்
அடுத்த கட்டுரைகுகை ஓவியம் – அரங்கு, கடிதம்