அன்புள்ள ஜெ
ஆகஸ்ட் 14ம்தேதி மாலை 5 மணி முதல் 15ம் தேதி இரவு 10 மணிவரை தூரன் விருதுவிழாவில் இருந்தேன். புதன்கிழமை காலை வழக்கம்போல் சமைத்து பிள்ளைகளை பள்ளிக்கும் கல்லூரிக்கும் அனுப்பிவிட்டு மறுநாளைக்குத் தேவையான உணவை சமைத்துவைத்துவிட்டு சீருடைகளை துவைத்து உலர்த்திவிட்டு 11.30 மணியளவில் திருச்சியில் இருந்து 3 பேருந்துகள் மாறி விழா நடக்கும் இடத்திற்கு வந்தேன்.
ஓலைச்சுவடி வகுப்பு முடிவுறும் தறுவாயில் இருந்த நேரத்தில் அரங்கினுள் நுழைந்து அமர்ந்து அதுவரை என்னோடு தொடர்பில் இருந்த கப்பல்காரனுக்கு ஜோதியில் ஐக்கியமாகிவிட்டேன் என்று செய்தி அனுப்பிவிட்டுவிட்டுத்தான் சரியானேன். அதன்பிறகு சிரிப்பும் தழுவல்களும் அளவளாவல்களும்தான். நேரம் தவறாமைக்கும், ஒழுங்குக்கும் பேர்போன நமது குழுவினரின் கவனிப்புக்குள் சிறந்த தங்குமிடத்திலும் அங்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன வசதியையும் மகிழ்வோடு அனுபவித்தோம்.
ஒவ்வொரு துறை சார்ந்த விருந்தினர்களின் அமர்வுகள் ஒவ்வொன்றும் அருமையாய் இருந்தது. எல்லோரும் பேசும்போது அவர்களிடம் இருந்து தெரிந்துகொண்டது அவர்கள் அந்தத் துறையை சிறுவயதில் இருந்தே மிக நேசித்தோ, விரும்பியோ அதற்குள் வரவில்லை. அதை ஒரு பணியாய்தான் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள். விருந்தினர்கள் ஒருவருக்குக்கூட அவர்கள் செய்து இருக்கிற காரியத்தின் பெருமை இல்லை. தன் வேலையை மிக நேசித்து அதற்கென்றே தன் வாழ்நாளையும் கொடுத்து பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
செய்யும் தொழிலே தெய்வம் என்பது பழைய சொற்றொடர்தான். அதை இப்போது சொன்னால் எல்லோரும் சிரிப்பார்கள். ஆனால் இந்த ஆய்வாளர்களுக்கு அது அவர்களைப்பிடித்துக்கொண்ட தெய்வம்தான். சின்னப்பிள்ளைகளுக்கு உணவூட்டுவதற்கும் அவர்களை சரிப்படுத்துவதற்கும் சொல்லப்படும் அஞ்சுகண்ணனிடம் பிடித்துக்கொடுத்துவிடுவேன் என்ற பயமுறுத்தல் போல் இவர்களை சுவடியியல், பாறைக்செதுக்கு, கல்வெட்டு, பறவையியல் போன்ற தெய்வங்களிடம் பிடித்துக்கொடுத்துவிட்டார்கள்.
விவிலயித்தில் ஒரு வசனம் உண்டு. ‘அழைக்கப்பட்டவர்கள் பலர்; தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர்’ என்று. அவர்கள் ஆற்றிவரும் அரசுப்பணியில் இவர்கள் பணிநியமனம் பெற்றபோது அநேகர் பணியில் சேர்ந்திருப்பார்கள். அவர்கள் அழைக்கப்பட்டவர்கள். ஆனால் ஜெகநாதன், வேதாசலம், கோவைமணி, காந்திராஜன் போன்றோர் அந்தப்பணிக்கென்றே தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்.
நீங்கள் எப்போதும் சொல்லிக்கொண்டே இருக்கிற செயல்யோகம்தான் அது இல்லையா? அப்படி இருக்கும்போதுதான் அந்த செயலை புரிந்துகொள்ளாதவர்களின் அவமதிப்புகள், அலட்சியங்கள் எதுவுமே அவர்களை பாதிப்பதில்லை. பசிநோக்கார், கண்துஞ்சார், கருமமே கண்ணாயினார் என்றபடியான செயல் யோகக்காரர்களையும் அவர்களின் அனுபவங்களையும் கேட்டுக்கொண்டே இருந்தேன். அவர்களிடம் தனியாய் பேசும்போதுகூட அப்படியே மடைதிறந்தாற்போல் பேசுகிறார்கள். இதுநாள் வரையிலும் அவர்கள் தங்களின் பணியைப்பற்றி இத்தனைபேரிடம் பேசியிருப்பார்களா என்று தெரியவில்லை. இரண்டு நாட்களில் அவ்வளவு பேசியிருக்கிறார்கள்.
விருதுபெற்றவரின் குடும்ப உறுப்பினர்கள் எங்களின் பின்வரிசையில்தான் இருந்தார்கள். கொஞ்சநேரம் பிள்ளைகளோடு அலைக்கழிந்து கொண்டே இருந்தார்கள். ஆனால் நேரம் செல்லச்செல்ல அமைதியாய் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கே அவருடைய பணியின் மேன்மை அப்போதுதான் தெரிந்திருக்கும். அவருடைய மனைவி இனி 15ம் தேதிக்கு முன்பிருந்தவர்களாய் இருக்கமாட்டார்கள் என்பது உறுதி.
விவிலியப்பார்வையில் பெரும் செயல்களைச்செய்தவர்கள் எல்லோருமே ரொம்ப சாதாரண மனிதர்கள்தான். ஆடு மேய்ப்பவர், மீன் பிடிப்பவர் போன்ற எளிய மனிதர்களைத்தான் பெரிய காரியங்களைச் செய்வதற்கென்றே கடவுள் அழைக்கிறார். எல்லா அமர்வுகளும் சிறப்பாய் இருந்தாலும் மிகச்சிறப்பாய் இருந்தது எம். என். காரசேரி அவர்களின் அமர்வுதான். சிரித்துக்கொண்டே தொடங்கி சிரித்துக்கொண்டே முடிந்தாலும் கண் தளும்பித் துடைத்துக்கொண்டேதான் இருந்தேன். அவரிடமும் புத்தகத்தில் கையொப்பம் பெற்று இரண்டொரு வார்த்தைகளும் பேசினோம். மிகமிக உற்சாகமான மனிதர். பின் காந்தியையும் பஷீரையும் அறிந்தவர்கள் வேறு எப்படி இருக்கமுடியும்.
அறிவுச்செயல்பாட்டில் ஈடுபடுபவர்கள்தான் வயதானாலும் மற்றவர்களை கவர்பவர்களாகவும், வாழ்க்கைக்குறித்த எந்த எதிரிடையான கருத்துக்களும் இல்லாதவர்களாய் இருப்பார்கள் என்று எழுதியிருக்கிறீர்கள். அதை அனுபவத்தில் நாங்களும் உணர்ந்துகொண்டே இருக்கிறோம்.
நாதஸ்வர இசையும் நன்றாய் இருந்தது. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கவுரவம் மிகச்சிறப்பாய் இருந்தது. படங்களைப் பார்த்துவிட்டு இவ்வளவு சிரிச்ச முகமாய் இந்தக் கூட்டங்களில் மட்டும்தான் இருக்கிறீங்க என்று என் பிள்ளைகள் சொல்கிறார்கள். இரவு அகரமுதல்வன் திருச்சி வரை தன் காரில் கூட்டிக்கொண்டு வந்து பத்திரமாய் வீட்டில் விட்டுவிட்டுப்போனார். அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் சார்.
டெய்ஸி பிரிஸ்பேன்