அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
வேட்டையாடக்கூடிய விலங்கை ஒருவன் அம்பு எய்தி கொல்வதற்கு ஆயத்தமாய் இருக்கிறான். ஒரு வேளை அவன் குறியிலிருந்து தப்பிவிட்டால், அடுத்தவன் வில்லோடு தயாராக இருப்பது போலவும், பின் ஒருவன் ஈட்டி எய்தி கொல்வதற்கு தயாராக இருப்பது போலவும் ஓவியம் பாறையில் வரையப்பட்டிருக்கிறது.
ஒரு காட்சிக்குப் பிறகு மற்றொரு காட்சி என அனிமேஷன், கார்ட்டூன் காட்சிக்கான மூலக்காட்சியாக இதைப் பொருத்திப் பார்க்க முடிகிறது. வரலாற்று ஓவியங்களை பார்ப்பதன் மூலம் புதிய யோசனைகள் (idea)கிடைக்கும் என்பது தெளிவாகிறது.
மற்றொரு ஓவியத்தில் ஓடிக் களைத்த மான், வேட்டையாடப்படப் போகிறோம் என்பது தெரிந்து, எதிரில் நிற்கும் புலியின் முன் சரணடைந்தது. மான் வேட்டையாடப்பட்டதா இல்லை தப்பி ஓடியதா, புலி பசி தீர்ந்ததா என்பது பற்றியான ஓவியம் இல்லை.
புலியின் முன் மான் சரண் அடைகிற அந்தக் காட்சி ஓவியமாக வரையப்பட்டுள்ளது. முடிவுரையை பார்வையாளனே தீர்மானிக்கட்டும் என்கிற விதத்தில் ஓவியன் அதை அப்படியே விட்டு விட்டான். இந்த காட்சி பார்வையாளனின் கற்பனைத் திறனை வளர்க்கும். ஓவியக் காட்சியின் மூலம் மற்றவரின் சிந்தனையை கற்பனையைத் தூண்ட முடியும் என்று சிந்தித்து அதை ஓவியமாக வரைந்த அந்த ஓவியனின் சிந்தனை சிலிர்க்க வைக்கிறது.
வேட்டையாடும் தருணங்கள், வேட்டையாடப்படும் மிருகங்கள், மனிதன் பயம் கொள்ளும் மிருகங்கள், போர் காட்சிகள் ஆகியவையே பெரும்பாலும் ஓவியமாக வரையப்பட்டுள்ளது.
ஒரு ஓவியத்தில் நான்கு வெவ்வேறு விலங்குகள் தன் குட்டிகளுக்கு பால் ஊட்டுவதைப் போன்ற காட்சி வரையப்பட்டுள்ளது. குட்டிகளுக்கு பாலூட்டும் சமயத்தில் விலங்குகளை வேட்டையாடக் கூடாது, பாலூட்டி குட்டிகளை பேணிக்காப்பது விலங்குகளின் கடமை, தாய்மை உணர்வு விலங்குகளுக்கும் உள்ளது. இப்படியாக பல சிந்தனைகளுக்கு அந்த ஓவியம் என்னை இட்டுச் சென்றது.
யுத்த காட்சி ஒன்று வரையப்பட்டிருக்கிறது. குழுவாக சென்று வேறு ஒரு குழுவோடு போர் புரிந்த காட்சி. பண்டைய காலம், நவீன காலம், இடைக்காலம் என எல்லா காலத்திலும் மனிதர்களுக்குள் பகையும் போரும் இருந்திருப்பதை, நம்மால் வரலாற்று சாட்சியோடு புரிந்து கொள்ள முடிகிறது.
இந்தக் குகை ஓவியங்களை காண்பதற்காக ஆய்வாளர்கள் காடுகளுக்குள்ளே கிலோமீட்டர் கணக்கில் நடந்து பயணிப்பதும், அந்த ஆபத்தான சூழ்நிலையில் அவர்கள் ஓவியங்களை பார்த்து படம் எடுப்பதும், ஆய்வாளர்களின் இந்த களப்பணி நிச்சயம் பாராட்டுக்குரியது.
பார்வையாளர் ஒருவர் புற வாழ்க்கை பற்றிய ஓவியங்களே பாறைகளில் வரையப்பட்டிருக்கிறது, அகவாழ்க்கைச் சார்ந்த ஓவியங்கள் இல்லையா என்ற கேள்வி எழுப்பினார்.
அதுபோன்ற ஓவியங்களை தான் கண்டதில்லை என்று குகை ஓவிய அறிஞர் திரு. காந்திராஜன் அவர்கள் தெரிவித்தார். அவர்களின் அக வாழ்க்கையில் என்னென்ன நிகழ்வுகள் நடந்திருக்கும் என்பதை அறிய எனக்கும் கூட ஆவலாக உள்ளது.
நன்றியுடன்,
சு. திருமுருகன்