தமிழ்விக்கி தூரன் விருதுவிழா, நிறைவுநாள்

இன்று (ஆகஸ்ட் 15) பெரியசாமித் தூரன்தமிழ் விக்கி விருதுவிழா. நேற்றிரவு பதினொரு மணிக்கே உரையாடல் அவை கலையநேரிட்டது. காரணம் ஏராளமான பங்கேற்பாளர்கள். பலரை தனித்தனியாக பல இடங்களிலாகத் தங்கவைத்திருந்தார்கள். அவர்களை அழைத்துச்சென்று அங்கங்கே சேர்க்கவேண்டியிருந்தது. இரவு பதினொரு மணிக்குள் அந்த பணியை முடிக்கவேண்டியிருந்தது

காலையில் ஜெகந்நாதன் தலைமையில் ஒரு குழு அதிகாலை 530 மணிக்கு கிளம்பி அருகே வெள்ளோடு பறவைச்சரணாலயம் செல்ல திட்டமிட்டிருந்தது. ராஜ் மகாலில் இருந்து நடந்துசெல்லும் தொலைவுதான் பறவைச் சரணாலயம். ஈரோட்டில் அதிகமான வலசைப்பறவைகள் தென்படும் ஏரிகளில் ஒன்று அது. 

நான் காலையில் அதை தவிர்த்துவிட்டேன். நண்பர் அந்தியூர் மணி, மதுசூதன் சம்பத், காரைக்குடி கணேஷ் ஆகியோருடன் நடந்துசென்று அருகிருக்கும் டீக்கடையில் டீ குடித்தேன். அங்கே தேவிபாரதி சிகரெட் பெட்டியும் கையுமாக வந்திருந்தார். உரையாடல் உயிர்களில் இருக்கும் கூட்டு நனவிலி குறித்தது.  

அறைக்குத்திரும்பி குளித்து வெளியே வந்தேன். இசைக்கலைஞர்கள் முந்தையநாள் இரவே வந்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்தனர். நானும் லோகமாதேவியும் சென்று அவர்களைப் பார்த்து வணக்கமும் வரவேற்பும் தெரிவித்தோம். பத்துமணிக்கு இருநூறுபேர் கொண்ட அவை திரண்டுவிட்டது.

இந்த வகையான நிகழ்வுகளுக்கு இன்று இயல்பாகவே பெருந்திரளாக இளைஞர்கள் வருகிறார்கள். பொதுவாக வேடிக்கைபார்க்க வரும் கூட்டம் அல்ல. வெவ்வேறு ஊர்களில் இருந்து பணம் செலவிட்டு வருபவர்கள். ஆகவே தமிழகத்திலேயே எந்த அறிஞருக்கும் சாத்தியமான மிகச்சிறந்த அவை இது.

முதல் அரங்கு கல்வெட்டு அறிஞர் வேதாச்சலம் அவர்களுடையது. ஒரு மணிநேரம் கேள்விகளுக்குப் பதில் சொன்னார். தாமரைக்கண்ணன் ,பாண்டிச்சேரி தொகுத்துரைத்தார் (குருகு இணைய இதழில் ஆய்வுக்கட்டுரைகளை தாமரைக்கண்ணன் எழுதி வருகிறார்) இரண்டாவது அமர்வு குகையோவிய ஆய்வாளர் காந்திராஜனுடையது. சிபி தொகுத்துரைத்தார். காந்திராஜன் அரைமணிநேரம் உரையாற்றிவிட்டு கேள்விகளுக்குப் பதில் சொன்னார். மூன்றாவது உரையாடல் எம்.என்.காரசேரியுடன். நான் அவருடைய உரையை தமிழாக்கம் செய்தேன்.

 

இந்த அவைகளை நாங்கள் பதிவுசெய்வதில்லை. ஏனென்றால் இவை இயல்பாக, கட்டுப்பாடுகள் இல்லாமல் நிகழவேண்டுமென எண்ணுகிறோம். மெய்யான ஆர்வம் கொண்டு வந்து அவையமர்பவர்கள் மட்டும் இதை கேட்டறிந்தால் போதும். அவர்களுக்கே பயன்படும். அறிவார்ந்த எந்தக் கல்விக்கும் அதற்கான அர்ப்பணிப்பு ஒன்று கற்பவர் பக்கம் இருக்கவேண்டும்.

இலக்கியவாதிகள் ,வாசகர்கள் போன்றவர்களுக்கு இந்த அமர்வுகள் அளிக்கும் திறப்புகள் திகைக்கச்செய்யும் அளவுக்குப் பிரம்மாண்டமானவை. தமிழ் அறிவுச்சூழலில் வாழ்கிறோம் என எண்ணியிருக்கும் நாம் எந்த அளவுக்கு சிற்றறிவுடன் , மிகச்சிறு வளையத்திற்குள் வாழ்கிறோம் என உணரச்செய்பவை. அறிவுஜீவி என்று சொல்லிக்கொள்ள நவீன எழுத்தாளனுக்கு அடிப்படைத்தகுதி உண்டா என யோசிக்கச் செய்பவை.

இசை நிகழ்வு சென்ற ஆண்டு போலவே இவ்வாண்டும் அற்புதமான அனுபவம். நாதஸ்வரத்தை ஒரு கூடத்தில், அமைதியில், ஒலிப்பெருக்கி இல்லாமல் கேட்பதென்பது ஒரு பெருநிலை. நாதஸ்வர இசையின் ஓங்குதலும் குழைவும் வேறெந்த வாத்தியத்திற்கும் இல்லாதவை. நாதஸ்வரம் அளிக்கும் நிறைவு நெஞ்சு விம்மச் செய்வது. தமிழின் ஒலி என ஒன்றை வாத்தியத்தில் அமைக்கக்கூடும் என்றால் அது நாதஸ்வரத்திலேயே.

இந்த ஆண்டு ஆனந்தபைரவியில் அமைந்த விரிவான ராக ஆலாபனை மயங்கச் செய்தது. ஆனந்த பைரவி ஒரு சரியான ‘மல்லு’ ராகம். கேரளத்தின் பெரும்பாலான நாட்டார் பாடல்கள் ஆனந்த பைரவியில்தான். கேரளச்செவிகளுக்கு நன்கு தெரிந்த ராகவும் அதுதான். பாம்பு சுழன்றாடும் உணர்வை அளித்த ‘காலகாலன் கயிலைநாதன்’ இந்த ஆண்டு தூரன் கீர்த்தனைகளில் செவியிலேயே சுழன்றுகொண்டிருப்பது.

ஆறுமணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. ரம்யா (நீலி இதழ் ஆசிரியர்) தொகுத்துரைத்தார். விருதுகள் அளிக்கப்பட்டன. வேதாசலம். எம்.என்.காரசேரி, நான் பேசியபின் கோவைமணி ஏற்புரை வழங்கினார். அவை முழுமையாகவே  சுருதி டிவி யூடியூப் சானல் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.

நிகழ்வில் தமிழ் விக்கியில் அதிக பங்களிப்பாற்றிய அர்விந்த் சுவாமிநாதனுக்கு பரிசு வழங்கப்பட்டது. பங்களிப்பாளர்களுக்கான பரிசை தளநிர்வாகியான மதுசூதன் சம்பத், திருமலை ஆகியோர் பெற்றுக்கொண்டனர்

இந்த விழாவில் மு.பிரகாஷ் காரைக்குடி வரைந்த கோவைமணி அவர்களின் கோட்டோவியம் அவருக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. அரங்கத்தில் இருந்த கோவைமணி அவர்களின் பெரிய கோட்டோவியல் ஜெயராம் வரைந்தது.

விஷ்ணுபுரம் விழாக்களின் வழக்கமே ஒவ்வொன்றும் முழுமையாகத் திட்டமிடப்பட்டு, முற்றிலும் சரியாக செய்து முடிக்கப்படும் என்பதுதான். மண்டப அலங்காரம், அரங்கவடிவமைப்பு, விருந்தினர் உபசரிப்பு, நிகழ்வு ஒருங்கிணைவு அனைத்துமே முற்றிலும் செம்மையாக நிகழ்ந்தன.

பிரபு, அவர் துணைவி பவித்ரா, அழகியமணவாளன் (அகழ் இதழில் முக்கியமான கட்டுரைகள் மொழியாக்கங்கள் செய்து வருகிறார்) பாரி (மொழிபெயர்ப்பாளர்)  பாலாஜி, விஜய்பாரதி, தாமரைக்கண்ணன் ஆகியோரின் கூட்டு உழைப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது. நண்பர் வழக்கறிஞர் கிருஷ்ணன் வழிநடத்தினார்.

நேற்று தொடங்கிய விழா நிறைவுற்றது. வழக்கம்போல புகைப்படங்கள் எடுத்தல், சொல்லிக்கொண்டு கிளம்புதல். இரவு 12 மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். இன்னொரு மனநிறைவூட்டும் நிகழ்வு.

 

முந்தைய கட்டுரைதமிழ்விக்கி- தூரன் விருது- நேரலைப் பதிவு
அடுத்த கட்டுரைReader’s Block