தமிழ் விக்கி – தூரன் விழா முதல்நாள்

தமிழ்விக்கி தூரன் விருதுவிழா இன்று (14 ஆகஸ்ட் 2024) மாலை 3 மணிக்கு அதிகாரபூர்வமற்ற வகையில் தொடங்கிவிட்டது. சுவடியியல் ஆய்வாளர் கோவைமணி 2 மணி நேர வகுப்பில் தமிழக ஏட்டுச்சுவடித்தமிழை படிக்கும் பயிற்சியை அளிக்க தன்னால் முடியும் என்று சொல்லியிருந்தார். ஆகவே ஒரு வகுப்பை ஏற்பாடு செய்திருந்தனர். 30 பேர் பெயர் கொடுத்திருந்தனர். 60 பேர் கலந்துகொண்டார்கள்.

கோவைமணி தமிழ் எழுத்துவடிவங்கள் இன்றுள்ள வடிவில் அமைவதற்கு பேனா- தாள் எப்படி காரணமாக அமைந்தன என்று விளக்கினார். ஓலையில் எழுதும் முறையில் எழுத்தாணி ஓலையில் எழுதி முன்னகர மட்டுமே முடியும். ஏனென்றால் ஓலை தொடர்ச்சியாக பின்னிழுக்கப்பட்டு எழுத்தாணி ஒரே இடத்தில் எழுதிக்கொண்டிருக்கும். இதன்விளைவாக எழுத்துக்கள் தங்களுக்குரிய மாற்றங்களை அடைந்தன. அந்த மாற்றங்களை எழுதிக்காட்டியபின், ஒவ்வொரு எழுத்தையும் எப்படி புரிந்துகொள்வது என விளக்கிவிட்டு, காணொளியில் ஒரு சுவடியைக் காட்டி அதை வாசிக்க கூறினார். மெல்ல அதை வாசிக்க முடிந்தது என்பது ஓர் அற்புதம்

அதன்பின் 510க்கு முதல் அமர்வு. பறவையியலாளர் ஜெகந்நாதன் அவர்கள் அரைமணிநேரம் தமிழ் பறவையியல் சூழல், பறவைகளின் வகைகள் பற்றிய சுருக்கமான ஓர் அறிமுகம் அளித்தபின் பறவையியல் பற்றி பார்வையாளர்களின் கேள்விக்கு பதில் சொன்னார். நிகழ்வை விஜயபாரதி தொகுத்தளித்தார்.

தமிழகத்தில் பறவைகளின் அழிவுக்கு பொறுப்பற்ற இயற்கையழிவு மட்டும் அல்ல பறவைகளை பேணுகிறோம் என்ற பேரில் ஒருவகை பறவைகளுக்கே மிதமிஞ்சிய உணவை அளிப்பதும் காரணம் என்பது ஒரு திகைக்கச்செய்யும் செய்தியாக இருந்தது. ஜெகந்நாதனின் அணுகுமுறை கள அனுபவம் சார்ந்தது. அறிவியல்பூர்வமானது. ஆகவே ‘செண்டிமெண்ட்’ அம்சம் இல்லாதது. வழக்கமாக சூழியலாளர்கள் உருவாக்கும் கடுமையான எதிர்மறை மனநிலையையும் உருவாக்கவில்லை. எது சாத்தியமோ அதை முன்வைத்துப்பேசினார்.

சிறு இடைவேளைக்குப்பின் கோவைமணி அவர்களின் அமர்வு. பவித்ரா வழிநடத்தினார். பேரா. மு.இளங்கோவன் ஒரு நாட்டுப்புறப்பாடலை பாடிவிட்டு கோவைமணி அவர்களைக் கௌரவித்தார். கோவைமணியுடனான உரையாடல் மிகுந்த தீவிரமும், பல்வேறு அறியப்படாத தளங்கள் நோக்கிய திறப்புகளும் கொண்டதாக இருந்தது.

குறள் உட்பட நமது பேரிலக்கியங்கள் சுவடிகளை கொண்டு மறுபரிசீலனை செய்யப்படவேண்டும், ஏனென்றால் பலநூறு சுவடிகளை ஒப்பிட்டுப்பார்க்கும் வசதி இன்று உள்ளது, அறிவியல்பூர்வமாக எழுத்துருக்களை ஆராயவும் முடிகிறது, பலசமயம் நூல்கள் அன்றைய குறைந்த சாத்தியக்கூறுகளின் அடிப்படையிலேயே வாசிக்கப்பட்டன என்று கோவைமணி சொன்னார்.

சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு மிகுதியான கூட்டம். எதிர்பாராத விருந்தினர்களும் இருந்தனர். ஆகவே தங்குமிடம் ஏற்பாடுகள் எல்லாவற்றிலும் நெருக்கடிகள் இருந்தன. ஆனால் மாலை அமர்வுக்கே நூற்றைம்பதுபேர் கூடிய பெரிய திரள் என்பது தமிழ்விக்கி தூரன் விருதும் விஷ்ணுபுரம் விழாபோல ஒரு பெருநிகழ்வாக நிலைகொண்டுவிட்டதைக் காட்டுகிறது

நாளைய நிகழ்வில் கல்வெட்டு அறிஞர் வெவேதாசலம் ,குகை ஓவிய அறிஞர் காந்திராஜன் மலையாள விமர்சகர் எம்என்காரசேரி ஆகியோரின் மூன்று அமர்வுகளும் நாதஸ்வர இசைநிகழ்வும் உள்ளன. காலை 10 மணிக்கே நிகழ்வு தொடங்கும். மாலையில் விருதுவிழா

முந்தைய கட்டுரைஇர.திருச்செல்வம்
அடுத்த கட்டுரைதமிழ்விக்கி- தூரன் விருதுவிழா நேரலை நிகழ்வு