இன்று (11 ஆகஸ்ட் 2024) பெங்களூர் புக்பிரம்மா இலக்கியவிழாவில் எனக்கு சிறந்த தென்னிந்திய எழுத்தாளருக்கான வாழ்நாள்சாதனை விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டுமுதல் வழங்கப்படும் விருது இது. விழாவின் நிறைவுநாளன்று இது அறிவிக்கப்பட்டது. ரூ 2 லட்சமும் கேடயமும் கொண்டது.
விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள செய்தியை நான் வந்தபின் எனக்கு தெரிவித்தனர். அணுக்கமான நண்பர்களிடம் மட்டுமே சொல்லியிருந்தேன். ஆகவே பகல் முழுக்க உடனிருந்த நண்பர்கள் பலர் மாலைவிழாவில் இல்லை, கிளம்பிச்சென்றுவிட்டிருந்தனர்.
இன்று காலை 8 மணிக்கே அரங்குக்குச் சென்றேன். வெங்கடேஷ் குமாரின் இந்துஸ்தானி இசைநிகழ்வு. அருண்மொழிக்கும் அஜிதனுக்கும் பிரியமான பாடகர். அருண்மொழி ஃபோன் செய்து தவறவிடாதே என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். அரங்கு நிறைந்திருந்தது.
வெங்கடேஷ்குமாரின் குரல் அற்புதமானது. என் வீட்டில் ஒலித்துக்கொண்டே இருக்கும் குரல், ஆனால் அரங்கில் வேறொரு வீச்சு கொண்டிருந்தது. மகத்தான இசையனுபவம் என்றுதான் சொல்லவேண்டும். விரிவான தோடி ஆலாபனை ஓர் அனுபவம். அக்கமாதேவியின் பாடல் இன்னொரு அனுபவம். பாடல்நடுவே சிறு உரையாடலுடன் மிக இயல்பாக மேடையில் திகழ்ந்தார்.
வெங்கடேஷ்குமாரின் இசை நிகழ்வு இருந்தமையால் காலையிலேயே நண்பர்கள் குழுமிவிட்டனர். தொடர்ச்சியான உரையாடல்கள். நடுவே நடந்துசென்று டீகுடித்தல். மீண்டும் உரையாடல். இந்த வகை விழாக்களின் அழகென்பதே இந்தச் சந்திப்புகள்தான். 2022 பெங்களூர் இலக்கிய விழாவில் முதல்முறையாகச் சந்தித்த பலர் இப்போது விஷ்ணுபுரம் நிகழ்வுகளின் முதன்மையான பங்காளர்களாக மாறிவிட்டிருக்கின்றனர்.
வெவ்வேறு இடங்களில் நின்றும் அமர்ந்தும் பேசிக்கொண்டே இருந்தோம். நடுவே தெலுங்கு வாசகர்கள். இந்த அரங்கில் தீவிரமாக நிகழாத அரங்குகள் மலையாளம்தான் என்று சொன்னார்கள். ஓரிரு அரங்குகள் தவிர பெரும்பாலும் ஒருவகை மேடைப்பேச்சுகளாகவே உரையாடல்கள் அமைந்தன என்று சொன்னார்கள்.
மதியம் 2 மணிக்கு புஸ்தகா என்னும் அரங்கில் நூல்வெளியீடு. கதைகள் ஏற்கனவே வெளியாகி வாசிக்கப்பட்டவை என்பதனால் நல்ல கூட்டம் இருந்தது. அரங்கசாமி வந்திருந்தார். பல நண்பர்கள். அறம் கதைகளை தெலுங்கி வாசித்த ஒரு வாசகர் உணர்ச்சிகர நிலையிலேயே முழுநிகழ்விலும் காணப்பட்டார்.
தெலுங்கு வாசகர் ஒருவர் என் கைகளைப் பற்றியபடி ‘யானைடாக்டர்’ பற்றிச் சொன்னார். அவரால் தெளிவாகப் பேசமுடியவில்லை. அவர் வாழ்க்கையில், உலகியலில் அவர் ஒரு தீவிரமான முடிவெடுக்க வேண்டியிருந்தது. யானைடாக்டர் அளித்த தரிசனம் அந்த முடிவை எடுக்கச்செய்தது, அது அளித்த விடுதலையில் இருப்பதாகச் சொன்னார்.
‘நாம் இங்கே செய்துகொண்டிருப்பவை எதுவும் முக்கியமே இல்லை சார். காட்டில் கஜராஜன் அதுபாட்டுக்கு இயல்பாக வாழ்கிறது’ என்றார். என் கைகளைக் குலுக்கிக் கொண்டே இருந்தார். நிகழ்ச்சிக்கு வாருங்கள் என்றேன். எனக்கு நிகழ்ச்சி முடிந்துவிட்டது என்றார். அவினேனி பாஸ்கர் வந்து நேரமாகிறது என்றபோது நான் அவர் கைகளை விடுவித்துக்கொண்டு அரங்குக்குச் சென்றேன்
தெலுங்கு விமர்சகர் மிருணாளினி தலைமை வகித்தார். விவேக் ஷன்பேக், வசுதேந்திரா ஆகியோர் பேசினர். நான் சுருக்கமாகப் பேசினேன். ஐம்பது நிமிடங்களில் நிகழ்ச்சி முடிந்தது. நூல்களில் கையெழுத்திட்டு முடிக்க நாற்பது நிமிடங்கள். வெளியீட்டுக்குக் கொண்டுவந்திருந்த எல்லா நூல்களும் விற்று தீர்ந்துவிட்டன என்றனர் சாயா பதிப்பகத்தார்.
எனக்கு அது நிறைவான நாள். என் நண்பர்கள் சூழ என் நூல் தெலுங்கில் வெளியாகிறது. சீக்கிரத்திலேயே கன்னடத்தில் வெளியாகவுள்ளது. மொழியில் நம் நூல் வெளியாவதென்பது நாம் இன்னொரு பிறப்பு எடுப்பதுபோலத்தான். அல்லது நம் உருவில் நமக்கொரு மகன் பிறப்பதுபோல. புத்தகத்தின் தோற்றமே மனநிறைவை அளிப்பதாக இருந்தது.
நெம்மிநீலம் என்னும் தலைப்பைப் பற்றி மிருணாளினி சொன்னார். நெம்மி என்றால் மயில் என்பதுடன் அன்பு, காதல் என்னும் பொருட்களும் உண்டு. ஆகவேதான் அந்த தலைப்பு. அந்தக்கதையை நெம்மி என்னும் சொல் பலவாறாக உருமாற்றிவிட்டிருந்தது.
பாஸ்கர் அவினேனி பேசும்போது தமிழ்பேசும் நிலத்தில், ஆனால் ஆந்திரத்துக்கு அருகே குடியிருப்பது தனக்களிக்கும் சாதக அம்சம் பற்றிச் சொன்னார். அது ஆந்திரத்தின் பேச்சுமொழியை அறிந்தவராகவும், அதே சமயம் அதில் மூழ்காதவராகவும் இருக்க உதவியது. தெலுங்கின் மகத்தான செவ்விலக்கியத்தை அணுக்கமாக அறியவும், அதனூடாக சிந்திக்கவும் வழியமைந்தது. நெம்மிநீலம் கதைகளின் மொழிநடை என்பது அவ்வாறு உருவானதுதான் என்றார்.
தமிழிலக்கியச் சூழலின் எல்லா தரப்பினர் முகங்களையும் இங்கே காணமுடிந்தது. ஒருவகையில் சென்னை புத்தகக் கண்காட்சிதான் இப்படி முன்பு இருந்தது. மொரப்பூர் தங்கமணி, பாண்டிச்சேரி நாகராஜன் ஆகியோரை நீண்ட இடைவேளைக்குப் பின் சந்திக்கிறேன். கயல், விமர்சகர் சரவணன் மாணிக்கவாசகம் போன்றவர்களை இப்போதுதான் முதலில் பார்க்கிறேன். சரவணன் மாணிக்கவாசகம் வங்கி அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர் என்று தெரிந்தது ஓர் ஆச்சரியம், யாரோ சொன்னதை வைத்து நான் இளையவர் என நினைத்திருந்தேன். அபிலாஷ் சந்திரன் ஞாயிறு மாலை வந்திருந்தார்.
நிகழ்வுக்குப்பின் மீண்டும் அளவளாவல். நான் அறைக்கு வந்து குளித்து உடைமாற்றி அரங்குக்குச் சென்றேன். ஐந்து மணிக்கு நிறைவு விழா. ஹம்பா நாகராஜையா, மெல்லேபுறம் ஜி வெங்கடேஷ், நரஹள்ளி பாலசுப்ரமணியா ஆகியோர் பேசினார்கள். கன்னட இலக்கிய வரலாற்றாசிரியரும், விமர்சகருமான மூத்த அறிஞர் ஹம்பா நாகராஜையா புக்பிரம்மா விருதை அறிவித்தார். நான் மேடையேறி விருதை பெற்றுக்கொண்டேன்
ஹம்பா நாகராஜையாவுக்கு எண்பத்தெட்டு வயது. அவருடைய உற்சாகமும், துள்ளலும் என்னை மனம் மலரச்செய்தன. இருபதாண்டுகளுக்குப்பின் அவரைப்போல் இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன், அதை மேடையிலேயே சொன்னேன்.
சுசித்ரா ராமச்சந்திரன் என்னை ஒரு நீண்ட பேட்டி எடுத்தார். ஒருமணிநேர உரையாடல். அதில் இந்திய ஆங்கிலத்தில் இன்றிருக்கும் வாசிப்பின் எல்லைகள், இந்திய அழகியல் என்ற ஒன்றுக்கான தேவை, செவ்வியல் இலக்கியத்தின் அடிப்படைகள் என வெவ்வேறு கேள்விகளுக்குப் பதில் சொன்னேன்.
ஆறுமணிக்கு சிவானந்த ஹெக்டே குழுவினரின் யட்சகானம். சூர்ப்பனகை ராமனிடம் அவமதிப்படையும் பகுதி. யட்சகானத்தில் சிவானந்த ஹெக்டே ஒரு நட்சத்திரம் என்றனர். மொத்த நிகழ்விலும் அழகிய சூர்ப்பனகையாக வந்தவர் பெண்ணின் நளினத்தின் உச்சத்தையே காட்டிவிட என் அனுதாபம் முழுக்க சூர்ப்பனகைமேல் கவிந்துவிட்டது.
விருதுகளை ஓர் இலக்கிய அமைப்பு அளிக்கும்போது, வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்களால் அந்த தெரிவு நிகழும்போது அதற்கொரு தனி மதிப்பு வந்துவிடுகிறது. அதைப்பெறுபவர் கௌரவிக்கப்பட்டவராக உணர்கிறார். விஷ்ணுபுரம் விருதுகள் அத்தகையவை, அத்தகைய விருது இதுவும். அதை பெற்றது எனக்கு மகிழ்வளித்தது.
நண்பர்களைச் சந்தித்து, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, பிரியும்போது பத்துமணி. களைத்திருந்தேன் எனினும் ஓர் அழகிய நாள்.