குருதியெழும் பொழுது – சின்னக்கிருபானந்தன்

ஜெயமோகனின் மகாபாரத காப்பிய மறு ஆக்கமான வெண்முரசு நாவல் வரிசையில் உள்ள 26 நாவல்களில் 16 ஆவது நாவல் “குருதிச்சாரல்” வரை வாசித்துவிட்டேன்.

குருஷேத்திரப் போருக்கு முன்னரான களநிலையில், போரினை தவிர்ப்பதற்காக கிருஷ்ணன் துரியோதனனிடம் மூன்று முறை செல்லும் தூதுகளையும், தம் மைந்தரையும், கொடிவழியினரையும் போரின் மூலமாக இழக்காமல் பாதுகாக்க முயலும் பாண்டவ, கெளரவ தரப்பு அரசியர்களின் முயற்சிகளையும் “குருதிச்சாரல்” நாவல் விரித்துச் செல்கின்றது.

முன்னர் வெறும் பெயர்களாக அறியப்பட்ட அரசியர்களின் – தேவிகை (தருமர்), விஜயை (சகாதேவன்), பிந்துமதி (பீமன்), கரேணுமதி (நகுலன்), பலந்தரை (பீமன்), துச்சளை (கெளரவர்களின் சகோதரி – சிந்து நாட்டரசன் ஜயதத்ரனின் அரசி) , பானுமதி (துரியோதனன்), அசலை (துச்சாதனன்), தாரை (விகர்ணன்), விருஷாலி (கர்ணனின் சூத அரசி), சுப்ரியை (கர்ணனின் ஷத்திரிய அரசி) – ஆளுமைகளும், உளநிலைகளும், அகத்தளத்தில் இருந்து வெளியே வந்து அரசசூழ்தலில் (ராஜதந்திரங்களில்) அவர்கள் பங்குகொள்ளுவதும் நாவலை நகர்த்துகின்றது.

துரியோதனனின் அஸ்தினபுரியைத் தலைநகராகக் கொண்ட குருநிலம் முழுவதையும் ஆளவேண்டும் என்ற மண்ணாசையை தடுக்கமுடியாத புத்திர பாசத்தில் திருதராஷ்டிரர் இருக்கின்றார். அவர் அசலை, மற்றைய அரசியர்களின் வேண்டுதலாலும், தூண்டுதலாலும் மைந்தர்களையும், கொடிவழியினரையும் காக்க அணுக்கன் சஞ்சயன் மூலமாக பாண்டவர்களிடம் ‘போர் நிகழலாகாதென்று. எந்நிலையிலும் பாண்டவர்கள் படைக்கலம் எடுக்கலாகாது. அனைத்தையும் இழக்க நேரிட்டாலும்கூட’ என்ற ஆணையை மன்றாட்டாக வைக்கின்றார்.

சஞ்சயன் தூதுச்செய்தியை தெரிவித்தபோது திரெளபதி தான் துகிலுரியப்பட்டவேளை உரைத்த வஞ்சினத்தை துறந்துவிட்டதாகச் சொன்னாள். சகாதேவன் பாண்டவர் கொண்டுள்ள வஞ்சம் இப்புவியில் எழுந்த அத்தனை பெண்டிருக்காக எனவும் தனியே திரெளபதிக்கு மாத்திரமல்ல எனவும், போரைத் தவிர்த்தல் என்பது அவ்வஞ்சத்தை துறந்து மீளவும் கானேகுவதை ஏற்பதில் முடியும் என்றான். எனினும் மூத்த தந்தையான திருதராஷ்டிரரின் ஆணையை பாண்டவர்கள் தட்டாமல் ஏற்கின்றனர்.

கிருஷ்ணர் முதலாவது தூதில் கெளரவரின் அரசவைக்குச் சென்று, நால்வேதத்தின் காவலனாக நிற்பதாகச் சொல்லும் துரியோதனனிடம் அவன் முன்னர் கொடுத்த சொல்லுறுதியாகிய அஸ்தினபுரி அரசின் மேற்குநிலம், பாதிக் கருவூலம், இந்திரப்பிரஸ்தம் ஆகியவற்றை பாண்டவர்கள் சார்பில் கேட்கின்றார். பாண்டவர்கள் நாடாளும் தகுதியற்றவர்கள் என துரியோதனன் அக்கோரிக்கையை மறுதலித்தும், தந்தை திருதராஷ்டிரரை விலக்கியும், தன்னை கலிதேவனுக்கு முழுதளிக்கின்றான்.

போருக்கு ஒருங்கும் ஷத்திரிய அவைக்கு இரண்டாம் முறையாகத் தூது வந்த கிருஷ்ணர் அஸ்தினபுரி நாட்டின் வடகிழக்கெல்லைக் காட்டின் அருகே ஐந்து ஊர்களை பாண்டவர்களுக்காகக் கோருகின்றார். பாண்டவர்கள் ஷத்திரியர் அல்ல, அவர்கள் நாலாம் வர்ணமாகிய சூதர்களே என்று பாண்டவர்களின் பிறப்பை இழிவுசெய்து, குந்தி அவைக்கு வந்து பாண்டவரின் தந்தையர் எவர் எனக் கூறவேண்டும் எனவும் துரியோதனன் சிறுமை செய்கின்றான். அஸ்தினபுரியின் ஒரு பருமணலையும் கொடுக்கமுடியாது என கிருஷ்ணரை வெறுங்கையுடன் திருப்புகின்றான்.

போரின் வெற்றிக்காக துரியோதனன் ஏற்பாடு செய்த புருஷமேத யாகத்தின் (யாகங்களில் உச்சமாக தூய அந்தணனை எரிகுளத்தில் அனலுக்கு பலிகொடுப்பது!) வேத அவைக்கு மூன்றாவது தூதுடன் சாந்தீபினி குரு நிலையின் ஆசிரியராக வந்த கிருஷ்ணர், ஷத்திரியர் வேலிகட்டிப் பாதுகாக்கும் நால்வேதங்களை மட்டுமல்ல, அசுரவேதம், நிஷாதவேதம் என இன்னும் பலவேதங்களின் நற்கூறுகளை எடுக்கும் வேதமுடிபே தூயது என்று வேத அவையில் வேதியரோடும், முனிவர்களோடும் தத்துவவிசாரணைகளில் ஈடுபடுகின்றார். எனினும் எவரும் வேதமுடிபை ஏற்காததால் தோல்வியே வருகின்றது. இந்த தத்துவ விசாரணைகளின்போது கிருஷ்ணர், துரியோதனனால் வேள்வியின் துணைக்காவலனாக இருத்தப்பட்ட கர்ணனை அவன் சூதன் என்பதால் ஷத்த்ரியர்களையும், அந்தணர்களையும் கொண்டே அகற்றச் சூழ்கை செய்கின்றார். வரவிருக்கும் போரில் கர்ணன் போர்த்தளபதியாக ஆகமுடியாத நிலையை இது உருவாக்குகின்றது.

கிருஷ்ணர் வேள்வியை ஏற்காமல் அவையிலிருந்து வெளியேறும்போது துரியோதனனிடம் கொடையாக பாண்டவர்களை அஸ்தினபுரியின் குடிகள் என ஏற்று அவர்களுக்கு ஐந்து வீடுகளைக் கோருகின்றார். அதனையும் துரியோதனன் தொல்வேதங்களின் நெறிகளைக் காரணம்காட்டி மறுக்கின்றான்.

இவ்வாறாக, கிருஷ்ணர் மூன்று தூதுகளிலும், வேதமுடிபை ஏற்கச் செய்வதிலும் தோல்விகளைத் தழுவி அஸ்தினபுரிக்கும், அரசகுடிக்கும் தான் இனி பொறுப்பல்ல என்று கூறித் திரும்பும்போது, திருதராஷ்டிரர் அவர் முன்னர் பாண்டவர்கள் தன்மைந்தரை களத்தில் எதிர்கொள்ளலாகாது எனக் கொடுத்த ஆணையைத் திரும்பப் பெறுவதாகக் கிருஷ்ணருக்குச் செய்தி அனுப்புகின்றார்.

போருக்கான தடைகள் இல்லாமல் போவதோடு, கிருஷ்ணரின் மூன்று தூதுகளினூடாக பாண்டவர்கள் ஒருபோதும் போரை விரும்பவில்லை என்பதும், துரியோதனனின் மண்மீதான பேராசையும் உறுதிப்படுத்தப்படுகின்றன.

நாவலில் போரைப் பற்றிய பீஷ்ம பிதாமகரின் கூற்று.

“ போர் என ஒன்று எழுமென்றால் நாம் ஆடைகளை என நாம் பெற்றும் கற்றும் உற்ற அனைத்தையும் கிழித்துவீசிவிட்டுத்தான் முன்செல்வோம். தந்தையர் நெஞ்சில் உதைப்போம். ஆசிரியர்களின் முகத்தில் உமிழ்வோம். உடன்பிறந்தார் தலைகளைக் கொய்வோம். இளமைந்தர் குருதியில் குளித்துக் களியாடுவோம்.”

மனித உரிமைகளும், மனித நேயமும் நிலவுவதாகச் சொல்லப்படும் இந்நவீன உலகில் நடக்கும் போர்களில் இழைக்கப்படும் அநீதிகளும், போர்க்குற்றங்களும் அன்றைய குருஷேத்திரப் போருக்குச் சற்றும் குறைவானதல்ல!

சின்ன கிருபானந்தன்

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : [email protected] 
Phone 9080283887) 

முந்தைய கட்டுரைதத்துவம், பெண்கள், கடிதம்
அடுத்த கட்டுரைசந்திரகாந்தன்