சிவம், கடிதங்கள்

காலசிவம்!

அன்பின் ஜெமோவிற்கு வணக்கம்,

நலம்,நலமே சூழ்க.

இன்றைய ‘காலசிவம்’ என்ற பதிவில் தங்களின் முழு உடல் பரிசோதனை குறித்தான செய்தியைப் படித்ததும் உள்ளத்தில் ஓர் உவகை ஊற்றெடுத்தது. உங்கள் நண்பர்கள் வட்டத்தில் யாரேனும் இதை முன்னரே வற்புறுத்தியிருக்க வேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு எப்போதும் இருந்து வந்தது.ஆனால் யார் அந்த மணியைக் கட்டுவது என்று இருந்துவிட்டார்கள் போல.போகட்டும் இந்த அளவில் அந்த பரிசோதனை முடிவுகள் நல்ல செய்திகளை அளித்தது உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் மனநிறைவை அளித்தது.சொல்லப் போனால் உங்கள் அருண்மொழி அடைந்த சந்தோஷத்தில் துளி அளவும் குறைந்ததல்ல  வாசகர்களாகிய நாங்கள் அடைந்ததும் என்பதைச் சொல்லவே இக்கடிதம்.

எங்கள் ஆசீர்வாதம் என்றும் உங்களைப் பின்தொடரும்.

என்றும் உங்கள் நலம் நாடும்

இரா.விஜயன்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

பணிவான வணக்கங்கள்.

காலசிவம் படித்த போது கண்ணீர் துளிர்த்தது.  நெஞ்சம் பதைபதைத்தது. தாங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று உள்ளம் துடிதுடித்தது.  தொடர்ந்து படிக்காமல், கட்டுரையின் நிறைவுப் பகுதியைப் படித்துவிடவும் தயக்கம் எழுந்தது.  ஒரு வழியாகப் படித்து முடித்தவுடன் தங்கள் நலம் அறிந்து நிம்மதியும் மகிழ்வும் ஒருபுறம் என்றால் – “ஏன் சார், இதயத்தில் ஒரு மாறுபாடென சோதனைக்கு செல்வதையும் கட்டுரையாக்கினால் – என்னத்தைச் சொல்வது?”   எனக் கோபம் வந்ததும் மெய்யே.

“நான் நலம்” என இரு வார்த்தை எழுதி கட்டுரையை தொடங்கியிருக்கலாம்.  நாங்களும் நிதானமாக படபடப்பின்றி, கட்டுரையை படித்திருப்போம்.  அது சாத்தியப்படப் போவதில்லை.  ஆக, வாசகர்களாகிய எங்களுக்கு மிகவும்  பொறுமை வேண்டும்.

நீங்கள் முழு ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ எனது பிரார்த்தனைகள் என்றென்றும்.

மிகுந்த அன்புடனும், மரியாதையுடனும்,

கணநாதன்

முந்தைய கட்டுரைமிளகு, இரா.முருகன் – கடிதம்
அடுத்த கட்டுரைபின்தொடர்வது, கடிதம்