(டிசம்பர் 2015 -ல் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் கோவையில் ஆற்றப்பட்ட கீதைப் பேருரையின் எழுத்துவடிவம். எழுதியவர் Sakthi Prakash)
கீதையை வகுத்துக்கொள்ளுதல்
வரலாற்றுப்பார்வையில் கீதையை எப்படிப் பார்ப்பது? கீதை எந்த வரலாற்றில் எந்த இடத்தில் வருகிறது? இதற்கு விடையாக ஒரு பெரிய இந்திய வரலாற்றுச் சித்திரம் ஒன்றை உருவாக்க வேண்டியிருக்கிறது. அந்தச் சித்திரத்தை நான் ஏற்கெனவே சொன்னது போல, பெளராணிகமான ஒரு சித்திரத்திலிருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது. புராணத்தை நான் மறுத்துப்பேசவில்லை. அது வேறொருவகையான அணுகுமுறை, அது ஒரு குணவகையான அணுகுமுறை, அகவயமான அணுகுமுறை. அதற்கு வேறொரு இடம் மற்றும் தேவை இருக்கிறது.
உதாரணமாக, ஒரு பக்தனைப் பொறுத்த அளவிலே ராஜராஜ சோழன் சுசீந்திரம் கோயிலைக் கட்டினான் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட ஒருபடி முக்கியமானது இது இந்திரனால் கட்டப்பட்டது, இந்திரன் தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்ட இடம் அது என்னும் புராணம். ஏனென்றால் அது கலியுகத்தைக் குறிக்கிறது. வைஜயந்தியும், கல்பதருவும் சொந்தமாகக் கொண்ட ஒருவன் இந்திரன், அவனுக்கே அழுக்கு வரக்கூடிய ஒரு காலம் வந்துள்ளது என்று பொருள். அவன் வந்து நீராடி பாவம் போக்கிய இடமென்பது, பக்தனுக்கு குறியீட்டு ரீதியாக மிகப்பெரிய முக்கியத்துவத்தைக் கொடுக்கக்கூடியது. ஆகவே அவன் அப்படி எடுத்துக்கொள்வதில் எந்தத் தவறும் கிடையாது.
ஆனால் நீங்கள் யார் என்பது முக்கியமானது. நீங்கள் ஒரு பக்தனாக உங்களை வரையறுத்துக் கொண்டீர்கள் என்றால், கீதையை பக்தி நோக்கில் மட்டுமே அணுகினீர்கள் என்றால், சாங்கிய யோகம் வரைக்கும் படித்தால் போதும், அதற்கு மேல் படிக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஏனென்றால் பக்தர்களுக்கு மட்டுமே என்று சொல்லப்பட்டது என்பது ஸாங்கிய யோகம் தான். படித்து, நம்பி “சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ…” என்று சொல்லி எல்லா தர்மத்தையும் அவன் காலடியில் போட்டுவிட்டு வாழ்வதற்கு அது போதுமானது.
ஆனால் நீங்கள் உங்களை ஒரு முமுக்ஷூவாக உருவகம் செய்துகொள்வீர்கள் என்றால், அறிதலின் வழியை அதாவது ஞான மார்க்கத்தை தேர்ந்தெடுத்தவர் என்றால், உங்களுக்கு இந்த வரலாற்றுப் பிரக்ஞை தேவை. உங்களுக்கு பெளராணிக அறிதல் போதாது. முமுக்ஷூ என்கிற வார்த்தையை இந்தியச் சிந்தனை மரபில் தெளிவாகத் திரும்ப திரும்ப வரையறுக்கிறார்கள். ’அறிதலின் பாதையை, ஞானத்தின் பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டவன். அதன்பொருட்டு பிற அனைத்தையும் துறந்தவன்’ என்று பொருள். அவனுடைய பாதையை ‘க்ஷுரஸ்யதாரா’ என்று உபநிஷதம் வர்ணிக்கிறது. ‘சவரக்கத்தியின் கூர்முனைமேல் பயணம் செய்வது’ அது. சவரக்கத்தியின் கூர்முனை போன்றது அவனுடைய ஞானம், அதற்கு ஈவு இரக்கம் கிடையாது என்ற பொருளும் உண்டு. பழைய காலத்தில் அறுவை சிகிச்சையை சவரக்காரர்கள்தான் செய்வார்கள். அப்படியென்றால், சவரக்கத்தியின் கூர்முனை என்பது அறுவைசிகிச்சை கத்தியின் ஈவிரக்கமற்ற கூர்மைதான். அந்தக் கூர்மை கொண்டவன் தான் முமுக்ஷூ.
’கிருஷ்ணனை மனிதனாகப் பார்க்கலாமா? தத்துவ ஆசிரியனாக நினைக்கலாமா? அவன் வைணவத்தின் தெய்வம் இல்லையா? கடவுளைப்போய் நாம் விமர்சனம் செய்ய வேண்டுமா? கடவுள் சொல்லும் ஒன்றை நாம் ஆராய்ந்து அது தவறாக இருக்கிறது என்று சொல்லலாமா?’ என்ற பார்வை கொண்டவன் முமுக்ஷூ கிடையாது. அவன் பக்தன், அவனுடைய பாதை வேறு. கிருஷ்ணனே ஆனாலும் எனக்கு அவன் சொல்வது நிறைவு அளிக்கவேண்டும் என்று சொல்பவன் தான் முமுக்ஷூ. உண்மையில் அவனுக்காகத்தான் கீதை எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே கீதையிலேயே கடைசியில் அதுதான் வருகிறது. ’நான் சொன்னேன் என்பதற்காக நீ ஏற்க வேண்டாம், நீயே யோசித்துப் புரிந்துகொள்’ என்றுதான் கீதையே சொல்கிறது. அர்ஜூனனிடம் விஸ்வரூபத்தைக் காட்டியபிறகும் கூட ‘நீயே சிந்தித்து முடிவெடு’ என்றுதான் கிருஷ்ணன் சொல்கிறான். ஆகவே ஒரு முமுக்ஷூவுக்காக எழுதப்பட்ட ஒரு நூலை முமுக்ஷூத்தனத்துடன் அணுகும் ஒருவர், அறிவார்ந்த அணுகுமுறை கொண்ட ஒருவராகவே இருக்கமுடியும். அவர் இந்த நூற்றாண்டில் இந்த வரலாற்றுப் பிரக்ஞையோடுதான் அதை அறிந்தாக வேண்டும்.
அடுத்த கேள்வி ஒன்று எழுகிறது. அப்படியென்றால், ஏற்கெனவே சங்கரர், ராமானுஜர், மத்வர் என ஆரம்பித்து ஒரு பெரிய மரபு உள்ளதே, அவர்களெல்லாம் இந்த நவீன வரலாற்றுப் பார்வை இல்லாமல்தானே கீதையை அணுகினார்கள்? அவர்களெல்லாம் கீதைக்கு உரை எழுதினார்களே? இந்த வரலாற்றுப்பார்வை என்பது, புறவயமான வரலாற்றில் கீதையை வைத்துப் பார்க்க வேண்டும் என்கின்ற பார்வை என்பது, பதினேழாம் நூற்றாண்டின் கடைசிக்காலத்தில் ஆங்கிலேயர்களால் இங்கு அறிமுகம் செய்யப்பட்டு, பதினெட்டாம் நூற்றாண்டிற்குப்பிறகு வலுப்பெற்று, இன்றைக்கு இருக்கும் ஒரு நவீன வழிமுறை. இந்த வழிமுறை அவர்களுக்குத் தெரியாதுதானே? அப்படியென்றால் அவர்கள் பார்வை குறைவுபட்டதா என்ன? இந்தக் கேள்வியை நீங்கள் கேட்கலாம். அதற்கான பதில் என்னவென்றால், அவர்கள் தங்களின் காலகட்டத்தில் எது உச்சகட்ட அறிவோ அதைக்கற்று, அதன் உச்சியில் அமர்ந்துதான் கீதையைப் பார்த்தார்கள் என்பதே. அவர்கள் ஞானிகள், ஆனால் கல்வியில் சிறந்தவர்களும்கூட. யோசித்துப் பாருங்கள்! அவர்கள் மூன்று பேரின் காலகட்டத்தில் பெளத்தம் ஒரு பெரிய அறிவுத்துறையாக உருவாகி, இந்தியாவின் சிந்தனையை நிறைத்திருந்தது. அவர்கள் மூன்றுபேரும் பௌத்த தர்க்கவியலை, அதாவது பௌத்த நியாய சாஸ்திரத்தை,ஐயம் திரிபறக் கற்று, பௌத்த நியாய சாஸ்திரத்தைக் கொண்டுதான் கீதைக்கு உரை எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு முந்தைய உரையைவிட அவர்கள் உரை மேம்பட்டு இருப்பதற்கான காரணம் அதுதான். அவர்கள் காலகட்டத்தில் எது அறிவுத்துறையுடைய உச்சமோ அங்கிருந்துதான் அவர்கள் உரை எழுதினார்கள்.
அப்படியென்றால் இன்றைக்கு உரை எழுதுபவர்கள் இன்றைக்கு, மேலைச்சிந்தனை, ஐரோப்பிய தத்துவ சிந்தனை, அமெரிக்க தத்துவ சிந்தனை என்ன சொல்கிறதோ, அதனுடைய உச்சத்தில் இருந்துதான் கீதையைப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு ழாக் தெரிதாவோ(Jacques Derrida) ரோலான் பார்த்தோ (Roland Barthes) நோம் சோமஸ்க்கியோ (Noam Chomsky) அந்நியமாக இருக்கக்கூடாது. ஆனால் அப்படித்தான் இருக்கிறார்களா? ஆனால் இவர்களும் மத்வாச்சாரியார் இருந்த அதே காலகட்டத்தில் மானசீகமாக இருந்துதான் தங்கள் உரையை ஆற்றுகிறார்கள் என்பதால்தான் அதன் அறிவுத்தன்மை குறைகிறது.
திரும்ப இந்த மேடையில் நான் சுட்டிக்காட்ட விரும்புவது; இந்த சமகால அறிவுச்சூழலில், இன்றைக்குள்ள வரலாற்றுப் பிரக்ஞையில், இங்கே இன்று நாம் கீதையை எங்குகொண்டு வைப்போம் என்பதைத்தான்.
வரலாற்றுப் பின்புலம்
கீதையின் வரலாற்றுப் பின்புலம் என்ன? அதற்கு முந்தைய கேள்வி, மகாபாரதத்தின் வரலாற்றுக் காலம் என்ன?
மகாபாரதத்தின் காலத்தை வரையறை செய்வதற்கு சில வரலாற்றுக் கருவிகளை இந்த நூற்றாண்டில் நவீன வரலாற்று ஆய்வு நமக்குத் தந்திருக்கிறது. மிகப்புறவயமான ஆதாரம் என்னவென்றால் மகாபாரதத்தில் அக்காலத்தில் இரும்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்னும் செய்தி உள்ளது என்பது. மகாபாரதம் முழுவதும் இரும்புக் கருவிகளைப் பற்றி, இரும்புப் படைக்கலங்களைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன. இன்னும் சொல்லப்போனால் இரும்பில் உருவாக்கிய சக்கர இயந்திரங்களைப் பற்றிய குறிப்புகள் மகாபாரதத்தில் இருக்கின்றன. ஆக, உறை அடுப்பு அப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதுதான் காலத்தை வகுக்கும் ஆதாரம்.
இரும்பை சாதாரணமாக உருக்க முடியாது. அதற்கு முன்னால் இருந்த வெண்கலக்காலகட்டத்தில் இருந்த செம்பு போன்ற உலோகங்களை எளிதில் உருக்கலாம். இரும்பை உருக்கி அதனுடன் கலந்த மண்ணில் இருந்து பிரித்தெடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு உச்சவெப்பநிலை தேவை. அதற்கு உறையடுப்பு என்கிற தொழில்நுட்பம் தேவை. (வெப்பம் வெளியேறாதபடி மண்ணுக்குள் அடுப்பு அது). மானுடப்பரிணாம வரலாற்றில் அந்த உறையடுப்பு வருவது வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலத்தில். ஆகவேதான் இரும்புக் காலகட்டம் என்று அதைப் பிரிக்கிறார்கள். அந்த இரும்புக் காலகட்டத்திற்கு பிறகுதான் மகாபாரதம் எழுதப்பட்டிருக்கும் என்பது ஒரு முக்கியமான வரலாற்று முடிவு. இரும்பை வைத்து காலம் கணிப்பது ஒரு நம்பகமான வரலாற்றுக் கருவி. மகாபாரதக் காலம் என்பது திரேதா யுகம் என்று நீங்கள் சொல்லலாம். அது வேறு கணக்கு. திரேதா யுகம் என்பது ஜோதிடப்படி ஆங்கில ஆண்டுக்கணக்கில் இந்த வருடம் என்ற கணிப்பெலாம் இங்கே போடக்கூடாது. நவீன வரலாற்றுப் பிரக்ஞையின்படி இரும்புக்காலகட்டத்தின் தொடக்கத்தில் அமைந்த ஒரு பண்பாட்டில் நடந்தது மகாபாரதம்.
இரண்டாவது முக்கியமான சான்று என்பது, அன்றைய அரசியல். மகாபாரதம் அன்றிருந்த ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில் நிகழ்கிறது. மகாபாரதத்தில் சொல்லப்படும் பெரும்பாலான நாடுகள் இந்திய வரலாற்றில் 1947 வரைகூட இருந்திருக்கின்றன. வரலாற்றுக்காலம் என்று ஒன்று இருக்கிறது. மொஹஞ்சதாரோ, ஹரப்பா காலகட்டம் என்பது வரலாற்றுக்காலம் கிடையாது. அன்றைக்கு என்ன வரலாறு இருந்தது என்று நமக்குத் தெரியாது. எந்த மன்னர் ஆண்டார் என்று நமக்குத் தெரியாது. நாமறிந்த இன்றைய வரலாற்றுடன் அதற்குத் தொடர்பே இல்லை. அது வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம். ஆனால் மகாபாரதக்காலம் அப்படி அல்ல. மகாபாரதக்காலத்தில் சொல்லப்பட்ட மகதம் உட்பட எல்லா நாடுகளும் வரலாற்றில் இருக்கின்றன. பல நகரங்கள் இன்றைக்கும் இருக்கின்றன. பாடலிபுத்திரம் (பாட்னா) இன்றைக்கும் இருக்கிறது. ராஜகிரகம் (ராஜ்கீர்) இன்றைக்கும் இருக்கிறது. பெரும்பாலான ஊர்கள், அடையாளங்கள் இன்றைக்கும் தெள்ளத்தெளிவாக இருக்கின்றன. குருக்ஷேத்திரம் என்னும் நிலத்தை இன்றும் அடையாளப்படுத்த முடிகிறது.
மகாபாரதம் மிகத்தெளிவாக இந்தியாவின் அரசியல் வரைபடத்தை அளிக்கிறது. அது ஒரு முக்கியமான ஆதாரம். வணிகப்பாதைகள் மிக விரிவாக உருவான ஒரு காலகட்டத்தைத்தான் மகாபாரதம் காட்டுகிறது. கிழக்குப் பக்கம் காமரூபம், அஸ்ஸாம், மணிப்பூர் வரைக்கும் மகாபாரதத்தில் இருக்கின்றன. அந்தப்பக்கம் காந்தஹார் அதாவது காந்தாரம் வரைக்கும் மகாபாரதத்தில் இருக்கிறது. வடக்கே காஷ்மீரின் கீழ்எல்லை வரைக்கும் இருக்கிறது. தெற்கே மதுரை வரைக்கும் மகாபாரதம் இருக்கிறது. இவ்வளவு இடத்தையும் வணிகப்பாதைகள் வழியாக இணைத்தபிறகு எழுதப்பட்ட ஒரு காப்பியம். ஆகவே அது வரலாற்றுக்கு முன்னால் உள்ள காலத்தைச் சேர்ந்தது அல்ல.
அடுத்து வரலாற்று ரீதியாக நான்காவது ஒரு காரணத்தை ஆய்வாளர் சொல்வார்கள். அது பேரரசுகள் உருவான காலம். அது மனித வரலாற்றில் மிகமுக்கியமான ஒரு காலகட்டம். அதற்கு முன்னால் சிறிய சிறிய இனக்குழுக்கள் ஆளும் சிறு நாடுகள்தான் இருந்தன. சிறிய சிறிய ஜாதிகள் தங்களுக்குள் சேர்ந்து குட்டிக்குட்டி அரசாங்கங்களை உருவாக்கி வைத்திருந்தார்கள். அதெல்லாம் சேர்ந்துகூட ஒரு பெரிய நிலப்பரப்பு அளவுக்கு இருக்காது. நம்முடைய ஒரு பெரிய பஞ்சாயத்து அளவுதான் அந்தக்காலத்தின் ஓர் அரசன் ஆளும் ஒரு நாடு இருக்கும். வரலாற்றில் அடுத்த கட்டத்தில்தான் பெரிய மீன் சிறிய மீனை விழுங்கி விழுங்கி பெரிதாவது போல பேரரசுகள் உருவாக ஆரம்பித்தன. அப்படி பேரரசுகள் உருவான பிறகுதான் மகாபாரதம் எழுதப்பட்டிருக்கிறது, மகாபாரதப்போர் நிகழ்கிறது.
ஆகவே இந்த நான்கு காரணங்களால் மகாபாரதத்தின் காலம், எவ்வளவு தள்ளி பின்னால் கொண்டு போனாலும் நாலாயிரம் வருடங்களுக்கு முன்னால் போகமுடியாது. இதுதான் ஆதாரபூர்வமான வரலாற்றுக் கணிப்பு. கிறிஸ்துவுக்கு முன்னால் இரண்டாயிரம் வருடம், அதாவது பொதுவருடத்துக்கு முன்னால் இரண்டாயிரம் வருடம், இன்றைக்கு நாலாயிரம் வருடங்களுக்கு முன்னால் மகாபாரதம் நடந்திருக்கிறது. இது ஒரு வகுத்துரைப்பு. இதை நீங்கள் விரிவாக விவாதித்துக்கொண்டே போகலாம். ஆனால் இந்த நான்கு காரணங்களும் முக்கியமானவை. இவற்றை நீங்கள் ஆதாரபூர்வமாக எதிர்கொள்ளவேண்டும்.
இடைச்செருகலா?
கீதை மகாபாரதத்தின் ஒரு பகுதி. ஒரு மரபான அறிஞனைப் பொருத்தளவில் வியாசபகவானால் எழுதப்பட்டது. வியாசபகவான் எழுதிய மகாபாரதத்தில் போர்க்களத்தில் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சொன்னதை சஞ்சயன் ஞானக்கண்ணால் கண்டு திருதராஷ்டிரனுக்கு சொல்லி, அதன் மூலம் பதிவு செய்யப்பட்ட ஒரு புத்தகம். ஆனால் நவீன வரலாற்றுரீதியாக கீதையின் வரலாற்றுத்தன்மையை வரையறுப்பதற்கான ஒரு பெரிய விவாதம் நடந்திருக்கிறது. பகவத்கீதை உரைகளைக் கேட்பவர்கள்; பகவத்கீதையின் தத்துவவிஷயங்களை விவாதிப்பவர்கள்; வரலாற்றைப்பற்றி, அதாவது 1770-களில் இருந்து இன்றைக்கு வரைக்கும், கீதையின் காலகட்டத்தை வரையறுக்க நடந்த விவாதங்களைப் பற்றி ஒரு மணிநேரம் சொல்லுமளவுக்காவது புரிந்துகொள்ள வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை.
வில்கின்ஸ் (Charles Wilkins) 1770-களில் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஆரம்பித்தார். இந்திய பிரிட்டிஷ் அரசின் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் (Warren Hastings) அவர்களின் கோரிக்கையை ஏற்று அந்த மொழிபெயர்ப்பு நடந்தது. அப்போதே அதன் காலகட்டத்தை வரையறுப்பதற்கான முயற்சி நடந்தது. கீதை மகாபாரதத்தில் உள்ளது. அப்படியென்றால் ஒரு கேள்வி. கீதை மகாபாரதத்தில் பிரிக்கமுடியாத ஒரு உறுப்பா? இல்லை, இடைச்செருகலா? இடைச்செருகல் என்று சொல்லும்போது ஒரு தவறான கோணம் வருகிறது. அது ஒரு மீறல், அல்லது தவறு, அல்லது ஒரு பிழை என்பதுபோல. அதை தவிர்த்துவிடுங்கள், அதை விரிவாக பிறகு சொல்கிறேன். இடைச்செருகல் என்பது இந்தியச்சிந்தனை முறையில் ஒரு தவறான விஷயம் கிடையாது, இந்தியச்சிந்தனை முறையின் ஒரு வழக்கம் அது.
இப்போதைய கேள்வி இதுதான். கீதை மகாபாரதமேதானா? மகாபாரதக்காலம்தான் கீதை எழுதப்பட்ட காலமா? அல்லது பகவத்கீதை மகாபாரதத்துடன் சேர்க்கப்பட்ட ஒன்றா? அதை பின்னால் சேர்த்தார்களா? அதில் இரண்டு வகையான கருதுகோள்கள் இருக்கின்றன.
இல்லை, அது மகாபாரதத்தில் ஒருபகுதிதான் என்று சொல்லும் சில அறிஞர்கள் இருந்தாலும், பொதுவாக மகாபாரதத்தையும் கீதையையும் கூர்ந்து அறிந்த அத்தனை அறிஞர்களும் சொல்லும் ஒரு விஷயம்; அது மகாபாரதத்தின் காலகட்டத்தில் மிகச்சரியாக பொருந்தும் ஒன்று அல்ல என்பதே. அதை இடைச்செருகல் என்று சொல்வதற்கு சில காரணங்களைச் சொல்லலாம்.
ஒன்று, மகாபாரத மூலத்தை நீங்கள் படித்திருந்தால், இந்தப் புராணப் பிரசங்கிகளுடைய பேச்சுகளைக் கேட்காமல், உண்மையிலேயே மகாபாரத மூலத்தைப் படித்திருந்தால், அது ஒரு புராணம் அல்ல, வரலாறு என்று உங்களுக்குத் தெரியும். புராணங்களின் கூறுமுறை (narrative pattern) அதில் ஆங்காங்கே இருந்தாலும் அது ஒரு வரலாறுதான். மிகக்கறாரான, புறவயமான ஒரு தெளிவான வரலாற்றுச் சித்திரம் மகாபாரதத்தில் உண்டு. அது வெறும் புராணம் கிடையாது. திருவிளையாடல் புராணம் போலவோ அல்லது கந்த புராணம் போலவோ ஒரு கதை கிடையாது. அதன் அத்தனை நாடுகளும் உண்மையிலேயே இருந்த நாடுகள். இன்றும் நம் வரலாற்றில் இருக்கின்றன அந்த நாடுகள்.
உதாரணமாக ஒரு விஷயம் சொல்கிறேன். மகாபாரதத்தில் உங்களுக்கு தெரிந்த கதை என்ன? திருதராஷ்டிரர் காந்தாரியை திருமணம் செய்து கொண்டார், காந்தாரியின் கர்ப்பம் பெரிதாக்கிக்கொண்டே இருந்தது, குழந்தையே பிறக்கவில்லை. அந்தச்சமயத்தில் குந்திக்குக் குழந்தை பிறக்கிறது. காந்தாரி ஒரு அம்மிக்கல்லை எடுத்து வயிற்றில் அடித்துக்கொள்கிறாள். ஒரு பெரிய ஊன்தடி பிறக்கிறது. காந்தாரி அழுததைப்பார்த்து வியாசர் அங்கு வருகிறார். அந்த ஊன்துண்டை நூறு துண்டுகளாக வெட்டுகிறார். நூறு எண்ணைக்கலங்களில் போடுகிறார். ஒரு சிறிய துண்டை ஒரு குட்டிக்கலத்தில் போடுகிறார், இந்த நூறு கலங்களும் பத்து மாதத்தில் குஞ்சு பொரித்து வெளியே வந்து கௌரவர்கள் நூறு பேரும், துச்சலையும் உருவாகிறார்கள். இதுதான் நீங்கள் அறிந்த கதை, இல்லையா?.
இன்றைய மகாபாரதத்தில் இந்தக்கதை இருக்கிறது, ஆனால் அடுத்த அத்தியாயத்தில் என்ன கதை இருக்கிறது தெரியுமா? காந்தார நாட்டுக்குச்சென்று காந்தாரியை திருதராஷ்டிரர் கல்யாணம் செய்து கொள்கிறார். காந்தார நாட்டு மரபுப்படி ஓர் அரசனுக்குப் பெண்ணைக் கொடுப்பதாக இருந்தால், அவளுடைய அத்தனை சகோதரிகளையும் அந்த அரசனுக்கே கொடுப்பார்கள். ஏனென்றால் அவனுக்கு சகலை என்று ஒருவன் வந்துவிடக்கூடாது, அது பெரிய அதிகாரப்போட்டிக்கு வழிவகுக்கும். ஆகவே பதினொரு சகோதரிகளையும் திருதராஷ்டிரனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். அந்தப் பதினொரு பேரின் பெயரும் மகாபாரதத்தில் இருக்கிறது. அந்தப் பதினொரு பேரையும் கூட்டிக்கொண்டுதான் அஸ்தினபுரிக்கு வருகிறார். அந்தப் பதினொரு மனைவிகளுக்கும் சேர்த்து நூறு பிள்ளைகள் பிறந்தன என்றுதான் மகாபாரதத்தில் இருக்கிறது.
ஆகவே வரலாறும், புராணமும் மகாபாரதத்தில் பின்னிப்பிணைந்து இருக்கின்றன. புராணத்தைவிட வரலாறுதான் மிகத்தெளிவாக, மிகத்திட்டவட்டமாக இருக்கிறது. ஆக மிகப்பெரிய பொதுவிவேகத்துடன், சமநிலையுடன் எழுதப்பட்ட ஒரு நூல் மகாபாரதம். இன்னும் சொல்லப்போனால், இன்றைக்குள்ள சமகால எழுத்தாளர்களை விட இன்னும் தெளிவான மண்டையுடன் எழுதப்பட்ட ஒரு படைப்பு. அதில் மாயத்துக்கு எல்லாம் பெரிதாக இடம் கிடையாது. அப்படிப்பட்ட ஒரு படைப்பில், ஒரு போர் முனையில், அந்தப்பக்கம் லட்சக்கணக்கான ஆட்கள் நிற்கும்போது, ஒருவன் வில்லைக் கீழே வைத்துவிட்டு சண்டைபோட மாட்டேன் என்று சொல்ல, அவனுக்கு இவ்வளவு பெரிய புத்தகத்தை ஒருத்தர் உபதேசம் செய்தார் என்று எழுதும் அளவிற்கு வியாசனுக்கு பொதுப்புத்தி (Common Sense) குறைவு கிடையாது. அப்படிப்பட்ட சந்தர்ப்பமே வேறிடங்களில் மகாபாரதத்தில் கிடையாது.
சரி, அப்படியிருந்தால் கூட, கீதையில் சாங்கிய யோகத்தை சொன்னால் மட்டும் போதும். உனக்குப் புகழ் கிடைக்கும், மோட்சம் கிடைக்கும், உன்னுடைய கர்மம் இது, ஒழுங்காகச் செய், என்று சொன்னாலே போதுமே! மோட்ச-ஸன்யாச யோகம் வரைக்கும், பதினெட்டு அத்தியாயங்களை அங்கே சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. அதுவே அது ஒரு இடைச்செருகல் என்பதற்கு முக்கியமான ஆதாரம்.
இரண்டாவது, இவ்விருநூல்களிலுள்ள சமஸ்கிருதத்தின் மொழிநடை சார்ந்து ஆய்வை செய்த அறிஞர்கள், பகவத்கீதையின் பல பகுதிகளின் மொழிநடை மிகப்பிற்காலத்தையது என்று வரையறுத்திருக்கிறார்கள். அதாவது சங்க இலக்கியத்திற்குள் பாரதியாரின் நான்கு பாடல்களைச் சேர்த்துவிட்டால் எப்படி வித்தியாசம் தெரியுமோ அந்த மாதிரி. யாரும் கண்டுபிடிக்கலாம். இது பழைய மொழி அல்ல என்று சொல்லலாம். ஆக, அந்த மொழி வித்தியாசத்தினாலேயே அது மகாபாரதத்தில் பின்னால் சேர்க்கப்பட்டது தான் எனலாம், மகாபாரதத்துடன் தன்னியல்பான ஒரு பகுதி அல்ல எனலாம்.
மூன்றாவதான காரணம் என்னவென்றால், மகாபாரதத்தில் அப்படி பல இடைச்செருகல்கள் இருக்கின்றன. ரொம்ப சுவாரஸ்யமான ஒரு அவதானிப்பு என்னவென்றால், மகாபாரதம் எந்த அளவோ அதுமாதிரி பத்து மடங்கு இடைச்செருகல் அதில் இருக்கிறது. உங்களுக்கு இது வேடிக்கையாக இருக்கும். மகாபாரதம் என்பது கிருஷ்ண துவைபாயன வியாசனால் ‘ஜெய’ என்கிற பெயரில் எழுதப்பட்ட ஒரு நூல். பூனாவைச் சேர்ந்த பன்டார்கர் (Bhandarkar Oriental Research Institute) ஆய்வு நிறுவனம் ‘ஜெய’ மட்டும் தனியாக எடுத்து பிரசுரம் செய்திருக்கிறார்கள். அறுநூறு எழுநூறு பக்கங்களுக்குள் தான் இருக்கும். ஆனால் இன்றைக்குள்ள மகாபாரதம் ஏழாயிரம் பக்கங்கள் இருக்கும். மீதி அத்தனையும் இடைச்செருகல் தான். அத்தனையும் பின்னர் சேர்க்கப்பட்டவை. வியாசரின் காலகட்டத்திலேயே அவருடைய நான்கு மாணவர்கள் எழுதி சேர்த்துதான் அதற்கு ‘பாரதம்’ என்கிற பெயர் வருகிறது. வைசம்பாயனர், ஜைமினி, பைலர், சுமந்து, சூததேவர் என அவருடைய மாணவர்கள் எழுதியதுதான் பெரும்பகுதி.
அதன்பிறகு தொடர்ச்சியாக பலபேர் எழுதிச் சேர்த்திருக்கிறார்கள். உதாரணமாக பிற்காலத்தில் பார்கவ மரபைச் சேர்ந்த பிராமணர்கள் அதில் பரசுராமரின் கதையை முழுக்க எழுதிச் சேர்த்தார்கள். அந்த கதைகளை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ரொம்ப வேடிக்கையாக இருக்கும். பரசுராமன் ராமனிடம் போர் புரிகிறார், பீஷ்மரிடம் சண்டை போடுகிறார், அர்ஜுனனைப் பார்க்க வருகிறார். அதற்குப் பிறகும் அவர் இருந்துகொண்டே இருக்கிறார். பல யுகங்களில் அவர் வாழ்கிறார். அதாவது எங்கெல்லாம் சேர்க்க முடியுமோ அங்கெல்லாம் பரசுராமரைக் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். இவையெல்லாம் முடிந்தபிறகு பத்தாம் நூற்றாண்டு, பனிரெண்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு, மறுபடியும் மகாபாரதத்தில் இடைச்செருகல்கள் சேர்க்கப்பட்டன. மரபான அறிஞர்களே அதை பிரக்ஷிப்தம் என்று சொல்லி தனியாக எடுத்து வைத்திருப்பார்கள். நீங்கள் மே.வீ.ராமானுஜாச்சாரியார் உரையப் பார்த்தாலே தெரியும், பல பகுதிகளை புறனடைவு (பிரக்ஷிப்தம்) என்று தனியாக எடுத்து வைத்திருப்பார்.
ஆக, மகாபாரதத்தில் புது விஷயங்களைச் சேர்க்கும் ஒரு வழக்கம் இங்கே இருக்கிறது. கங்கையில் ஒரு விஷயத்தைப் போடுவது மாதிரி அது. அந்த ஒழுக்கில் அது போய்க்கொண்டே இருக்கும். ஒரு விஷயம் முடிவிலா எதிர்காலம் வரைக்கும் போகவேண்டுமென்றால், என்றென்றைக்கும் அழியாமல் இருக்க வேண்டுமென்றால், எப்போதைக்குமாக போய்ச்சேர வேண்டுமென்றால் அதை மகாபாரதத்தில் சேர்க்கும் ஒரு வழக்கம் இருந்திருக்கிறது. விஷ்ணு சகஸ்ரநாமம் மகாபாரதத்தில் தான் இருக்கிறது. தாமரையின் ஆயிரம் பெயர்கள் மகாபாரதத்தில் தான் இருக்கிறது. பல்வேறு தோத்திரநூல்கள், குட்டிக்கதைகள், நீதிக்கதைகள் அதனுள் இருக்கிறது. அத்துடன் கீதை மாதிரியே வேறுவகையான கீதைகள் அதிலுள்ளன. அதாவது பீஷ்ம நீதி, விதுர நீதி, ஸௌனக நீதி, யட்சப்பிரஸ்னம், நகுஷப் பிரஸ்னம் இப்படி பல்வேறு வகையான நீதி நூல்கள் கிட்டத்தட்ட 19 நூல்களுக்கு மேல் மகாபாரதத்தில் இருக்கின்றன. அவை எல்லாமே தனித்தனியான நூல்கள். அவை கீதை போன்றவைதான். ஆகவே இப்படி புதுநூல்களை மகாபாரதத்தில் காலந்தோறும் கொண்டுசென்று சேர்க்கக்கூடிய ஒரு வழக்கம் இருந்தது. ஆகவே கீதை அப்படிச்சேர்க்கப்பட்டது.
கடைசியான, முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. ஏன் மகாபாரதத்தில் இதைச்சேர்த்தார்கள் என்பதற்கான காரணம். ஒன்று, எது கீதையின் Vision – ஓ, மையத்தரிசனமோ அது ஏற்கெனவே மகாபாரதம் முழுக்கவே இருக்கிறது. ஒரு பசுவின் உடம்பில் பால் அதன் குருதி முழுக்க எல்லா இடத்திலும் இருக்கிறது. மடியிலேதான் அது திரண்டு இருக்கிறது, அது மாதிரி. அந்த உவமை உங்களுக்குத் தெரிந்திருக்கும். வேதமென்ற பசுவின் பாலில் திரண்ட வெண்ணைதான் கீதை. பசுவின் காம்பில்தான் பாலைக் கறக்க முடியும், ஆனால் அது பசுவேதான். ஆக மகாபாரதம் முழுக்க பெரும்பாலான சந்தர்ப்பத்தில் கீதையின் தத்துவார்த்தமான சாரம் உறைந்திருப்பதனால், கீதை அங்கே மிகச்சரியாக பொருந்தும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. ஆகவே கீதை அதிலே சேர்க்கப்பட்டது.
கீதையின் காலம்
அப்படியென்றால் அடுத்த கேள்வி. கீதை எப்போது எழுதப்பட்டது? கீதையின் காலம் என்ன? மகாபாரதத்தில் கீதை சேர்க்கப்பட்டதென்றால் எப்போது சேர்க்கப்பட்டது?
இது சார்ந்து மிகப்பெரிய விவாதங்கள் நடந்திருக்கின்றன. ஒரு தனிப்பேருரையாக அதை ஆற்ற முடியும். ஆனால் இதை ஓர் உரையின் முன்னுரையாக சொல்வதனால், சுருக்கமாக என்னென்ன பேசப்பட்டிருக்கின்றன என்று மட்டும் சொல்கிறேன். டாக்டர் ராதாகிருஷ்ணன், எஸ்.என்.தாஸ்குப்தா போன்ற அறிஞர்கள், கீதை கிறிஸ்துவுக்கு முன்னூறு வருஷங்களுக்கு முன்னால், பொ.மு.300 காலகட்டத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள். ஆனால் அவர்களும் கீதை பின்னால் சேர்க்கப்பட்டதாகத்தான் நினைக்கிறார்கள். அதாவது ஏறத்தாழ இன்றைக்கு 2500 வருடங்களுக்கு முன்னால். அவர்கள் அவ்வாறு அதை வரையறுப்பதற்கான காரணம் என்னவென்றால் கீதைக்குள்ளே ஒரு வரி வருகிறது; ‘நான் சொல்வது மாதிரியும் சொல்லலாம் அல்லது வேதாந்த சூத்திரங்கள் போலவும் சொல்லலாம்’ என்று. அதாவது. பிரம்ம சூத்திரம் போலவும் சொல்லலாம். பாதராயணரின் பிரம்ம சூத்திரம் எழுதப்பட்ட பிறகுதான் கீதை எழுதப்பட்டிருக்கிறது என்பது இதன் பொருள். ஆகவே உபநிஷதங்கள் எழுதப்பட்டு, அவற்றின் முதிர்ச்சிக் காலகட்டத்தில் பிரம்மசூத்திரம் உருவாகி வந்து, அதன்பின்னர் இன்றைய வடிவில் கீதை உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பது ஒரு தரப்பு.
நாம் இன்றும் மதிக்கக்கூடிய மேலை நாட்டு இரண்டு அறிஞர்கள் கீத், ரிச்சர்ட் கார்பே. இந்தியச்சிந்தனையில் மார்க்ஸிய நோக்கில் கீதையை ஆராய்ந்த டி.டி.கோசாம்பி அடுத்தபடியாக என் மதிப்புக்குரியவர். இவர்களெல்லம் கீதை என்பது கிறிஸ்துவுக்கு பிறகு பொயு முதல் நூற்றாண்டில் இருந்து மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டுக்கு உள்ளே எழுதப்பட்டிருக்கலாம், இன்றைய வடிவில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். இவர்கள் சொல்லும் காரணங்கள் வேறு வேறாக இருக்கின்றன.
மகாபாரதக் காலகட்டத்திற்குப் பிறகு தத்துவச்சிந்தனைகள் முதிர்ச்சியடைந்து வேதாந்தம் ஒரு குறிப்பிட்ட உச்சத்தை அடைந்த பிறகு கீதை எழுதப்பட்டிருந்தால்தான் இந்த வடிவத்தில் அது இருக்க முடியும். அது ஒரு பெரிய சிந்தனைப்பள்ளி (School of Thought)யின் கனிந்த உச்சம் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஒரு நூல் தன்னிச்சையாக வந்துவிட முடியாது. ஜெயமோகன் ஒரு நாவல் எழுதுகிறாரென்றால், புதுமைப்பித்தன் காலத்தில் இருந்து ஒரு உரைநடை மரபு வளர்ந்து வளர்ந்து வந்துதான் விஷ்ணுபுரமாக, வெண்முரசாக ஆக முடியும். புதுமைப்பித்தனைத் தொடர்ந்து உடனே ஜெயமோகன் வெண்முரசை எழுதிவிட முடியாது. அதேபோல சங்கப்பாடல்களில் ஆரம்பித்து சிலப்பதிகாரத்தின் வழியாக வந்த வளர்ச்சிநிலையில் தான் கம்பராமாயணம் மாதிரியான பெரும்படைப்பு (Masterpiece) வர முடியும். அப்படி ஒரு தத்துவ வளர்ச்சியின் ஓர் உச்சப்புள்ளி கீதையில் இருக்கிறது. அந்தப்புள்ளி வேதாந்த விவாதங்களின் முழுமைக்குப்பின் நடந்திருக்கும் என்றும், அதுவே உபநிஷத்துக்காலத்தின் இறுதியில் கீதை எழுதப்பட்டிருக்கும் என்பதற்கான சான்று என்றும் ஆய்வாளர்கள் நினைக்கிறார்கள்.
ஸ்வேதாஸ்வதர உபநிஷத்துக்கும் கீதைக்கும் இடையே நெருக்கமான மொழித்தொடர்பு இருக்கிறது. அந்த இரண்டுக்குமிடையில் நடை அமைப்பில் ஒற்றுமை இருப்பதனால் அதன் காலகட்டத்தில் கீதை எழுதப்பட்டிருக்கலாம். ஆகவே கி.மு.மூன்றாம் நூற்றாண்டு என்று சொல்லும் அறிஞர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் சில மேலை நாட்டு அறிஞர்கள், குறிப்பாக சம்ஸ்கிருதத்தில் மிக விரிவாக ஆய்வு செய்த இந்தியவியலாளர்கள் (Indologist) என்ன சொல்கிறார்கள் என்றால், பௌத்தம் உருவாகி வளர்ந்தபிறகுதான் கீதை உருவாகி வந்திருக்க வேண்டும். ஏனென்றால் கீதையின் தர்க்கவியல் அடிப்படையில் பௌத்த தர்க்கவியலை சார்ந்திருக்கிறது. பௌத்தம் பூர்வ மீமாம்சத்தை வென்றபிறகு, பௌத்தம் உருவாக்கிய கேள்விகள் முழுமையடைந்த பிறகு, அந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லும் முகமாகத்தான் இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே கீதை பிற்காலத்தையதே. பௌத்தத்தின் தத்துவம் வளர்ச்சியடைந்த பிறகு வந்ததே கீதை – இது கோசாம்பியின் கொள்கை.
நடராஜகுரு கீதை உரையில், அவருடைய முன்னுரையில், மூன்றாவதாக ஒரு விஷயத்தை சொல்கிறார். M. N. பான்குகார் என்கிற ஒரு அறிஞரை மேற்கோள் காட்டி அவர் என்ன சொல்கிறாரென்றால் ஸ்வேதாஸ்வதார உபநிஷத்தின் காலத்தில் சேர்ந்த ஒரு பழமையான நூல், பல இடங்களில் கூடுதல் வரிகள் சேர்க்கப்பட்டு, ஒரு புனைவுத்தருணம் மாற்றப்பட்டு, மகாபாரதத்துக்குள் கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று. எனக்கு உவப்பாக இருக்கும், என் பார்வையில் பொருத்தமாக இருக்கும் கொள்கை என்பது இதுவே.
ஏனென்றால் கீதையை மொழிநடையை ஆராய்ச்சி செய்த அறிஞர்கள் அத்தனை பேரும் சொல்லும் ஒரு விஷயம் உண்டு. கீதை ஒரே மொழிநடையில் அமைந்த புத்தகம் கிடையாது. சம்ஸ்கிருத அறிஞர்கள் குறைந்தது மூன்று வகையான மொழிநடைகள் அதில் இருக்கின்றன என்கிறார்கள். ஆகவே மூன்று எழுத்தாளர்கள் அதை எழுதியிருக்கலாம் என்று சொல்லும் அறிஞர்கள் இருக்கிறார்கள். மிக முக்கியமான அறிஞர்கள் அதைச்சொல்லியிருக்கிறார்கள். கோசாம்பியும் அதை சொல்கிறார். கீதையை மாபெரும் இலக்கியத் திருட்டு என்று, ஒரு எதிர்மறைப் பாராட்டாக கோசாம்பி குறிப்பிடுகிறார்.
கீதையின் முதல் அத்தியாயம் 62 ஸ்லோகங்கள், பிறகு கர்ம யோகத்தில் கடைசி ஸ்லோகங்கள் ஆகியவை மொழிநடை நோக்கில் மொத்த நூலில் இருந்து தனியாக இருக்கிறது என்கிறார்கள். ஆக எப்படி நடந்திருக்கலாம் என்றால், மிகத்தொன்மையான ஒரு வேதாந்தநூல், மகாபாரதக் கதைச்சந்தர்ப்பத்திற்கு ஏற்ப சற்று தொடக்கம் மட்டும் மாற்றி எழுதப்பட்டு, இன்றைய வடிவத்தை அடைந்து பொயு. மூன்றாம் நூற்றாண்டில் கீதை என்ற பெயரில் மகாபாரதத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம். இதுதான் கீதையின் வரலாற்று ரீதியான உருவாக்க வரலாறு.
(மேலும்)