(டிசம்பர் 2015 -ல் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன ஆதரவில் கோவையில் ஆற்றப்பட்ட கீதைப் பேருரையின் எழுத்துவடிவம். எழுதியவர் Sakthi Prakash)
அரங்கில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மேடையில், என்னுடைய ஆசிரியர்களாக, நான் எண்ணும் சிலர், கீதை வழி தங்கள் வாழ்க்கையாகக் கொண்டவர்கள் என் நினைவுக்கு வருகிறார்கள். விவேகானந்தர், காந்தி, பாரதி. இந்த உரை ஆற்றுவதற்கு முன், என் குரு மரபு என்று நான் நினைக்கும் நாராயண குரு, நடராஜ குரு, நித்ய சைதன்ய யதி ஆகியோரை பாதம் பணிந்து வணங்கிக் கொள்கிறேன்.
புராணமும் வரலாறும்
நண்பர்களே, நாலைந்து வருடங்களுக்கு முன்பு சுசீந்திரம் ஆலயத்தின் வெளியே நானும் எனது நண்பர் கிருஷ்ணனும் நின்று கொண்டிருந்தோம். ஒரு அறிவிப்புப் பலகை அங்கே இருக்கிறது. அந்தப் பலகையின் மேலே அந்த ஆலயத்தைப் பற்றி ஒரு வரலாறு இருக்கிறது. ‘இந்த ஆலயம், துவாபர யுகத்தின் இறுதியில் இந்திரன் இங்கே வந்து, இங்குள்ள ஒரு தடாகத்தில் நீராடி, தனது தொழுநோயை நீக்கிக் கொண்டதன் நன்றிக்கடனாக மயனை வேண்டிக்கேட்டுக் கொண்டு, அந்த மயனால் கட்டப்பட்டது’.
அதற்குக் கீழே தொல்லியல் துறையின் வரலாறு எழுதப்பட்ட இன்னொரு அறிவிப்பு உள்ளது. ’இந்த ஆலயம், பழைய காலத்தில் சிவ இந்திரம் என்ற பெயரில் அறியப்பட்ட சிறிய சிவன் கோயிலாக இருந்தது. இப்போதுள்ள கோயிலுக்கு உள்ளே, ஒரு சிறிய பாறை மேல், மிகச்சிறிய ஒரு கற்கோயில் இருக்கிறது. காசி விஸ்வநாதர் கோயில் என்று பெயர். அந்தக் கோவில்தான் இங்கே இருந்தது. சற்றுத்தள்ளி முன்னுதித்த நங்கை என்றொரு சிறிய கோயில் இருக்கிறது. இந்த இரு கோயிலையும் சேர்த்து ஒரு பெரிய கோயிலாகக் கட்டியது இராஜராஜ சோழன். அப்போது தான் அதற்கு சிவ இந்திரம் என்ற பெயர் வந்திருக்கிறது. அதன்பிறகு பாண்டியர்கள், அதன்பிறகு நாயக்க மன்னர்கள், பிறகு திருவிதாங்கூர் அரசர்கள் என தொடர்ந்து கட்டப்பட்டு இன்றுள்ள ஆலயம் அமைந்திருக்கிறது.’
நண்பர் கிருஷ்ணன் சொன்னார் “சார், ஒரே பலகையில் இரண்டு வரலாறுகள்.”
நான் சொன்னேன் ”பொயு 941 ஆண்டிலுள்ள கல்வெட்டில் இந்தக்கோயில் எப்போது கட்டப்பட்டது என்று உள்ளது. இது இராஜராஜ சோழனால் விரிவாக்கிக் கட்டப்பட்டது, சோழமண்டலம் ஆகிய சிவஇந்திரத்தில் உள்ளது. இது வரலாறு. அதன் மேல் ஒரு வரலாறு இருக்கு பாருங்க, அது இன்னொரு வரலாறு. அது தொன்ம வரலாறு.”
இதை நீங்கள் கவனித்திருக்கலாம். எந்த ஆலயத்திற்குப் போனாலும் இரண்டு வரலாறுகள் உங்கள் முன்னால் வந்து நிற்கும். ஒரு வரலாற்றை தல வரலாறு என்று சொல்வார்கள், ஸ்தல புராணம் என்று சொல்வார்கள். இன்னொன்று நவீன வரலாறு. நமக்கு பொதுவாக இந்த இரண்டாவது வரலாற்றின் மேல் பெரிய ஆர்வம் இருக்காது. எப்போதுமே நாம் அந்த முதல் வரலாற்றைத் தான் கவனிப்போம். அதுதான் நமக்கு ஞாபகத்தில் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை தமிழ் ஹிந்துவில், தினமலரில் வரும் ஆலயங்களைப் பற்றிய கதைகளில் முதலில் அந்த வரலாறுதான் இருக்கும். ’இது அகத்தியரால் திரேதா யுகத்தில் கட்டப்பட்டது’ என்பது போல. இரண்டாவது வரியில் இருக்கும் ‘இது குலோத்துங்க சோழனால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில்.’ அதை நாம் கவனிப்பதில்லை
நமக்கு தமிழ்நாடு பற்றியே எப்போதும் இந்த இரண்டு வரலாறுகளும் இருந்து கொண்டே இருக்கும். எந்த ஒரு ஆளுமை பற்றியும் இரண்டு வரலாறுகள் இருக்கும். இந்த இரண்டு வரலாறுகளில் ஒரு வரலாறு பொய் என்று சொல்வதற்கான ஒரு மனப்பக்குவத்தை கொஞ்சம் கொஞ்சமாக நாம் அடைந்து கொண்டிருக்கிறோம். அதாவது புராணம் பொய், புராண வரலாறு கற்பனை என்று. அப்படி நான் சொல்ல மாட்டேன். புராணம் என்பது வேறு ஒருவகையான வரலாறு என்று சொல்வேன். வரலாறு ஒன்றாகத்தான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. காலம் ஒன்றாகத்தான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வரலாறுகள் பல இருக்கலாம், பல வகையான வரலாறுகள் இருக்கலாம். ஆக, இந்த இரண்டு வகையான வரலாறுகள் இந்தியாவில் நமக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.
இந்த இரண்டாவது வகையான வரலாறு என்பது பதினெட்டாம் நூற்றாண்டிற்கு பிறகு நமக்கு மேலைக்கல்வியால் அறிமுகம் செய்யப்பட்ட ஓர் அறிவுத்துறை. இதைத்தான் Historiography என்று சொல்கிறார்கள். புறவயமான வரலாறு இது. Objective History. ஆனால் நம் பக்தர்களுக்கு எப்போதும் முதல் வரலாற்றில்தான் ஆர்வம் இருக்கிறது. அதுவும் இயல்பே. ஏனென்றால் பக்திக்கு அடிப்படை நம்பிக்கைதான்.
என்னுடைய மதிப்பிற்குரிய நண்பரும் ஆசிரியருமான அ.கா.பெருமாள் அவர்கள் சுசீந்திரம் ஆலயத்தைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். சுசீந்திரத்தின் அதிதீவிர பக்தர் ஒருவரிடம் அந்தப் புத்தகத்தைக் கொடுத்தேன், பத்துப் பக்கம் படித்து விட்டு திருப்பிக் கொடுத்துவிட்டார். ஏனென்றால் அவருடைய நம்பிக்கையை அது சீண்டுகிறது. இந்திரன் இங்கு வந்து நீராடி இந்தக் கோயிலைக் கட்டினான் என்பது அவருடைய நம்பிக்கை. இதை இராஜராஜ சோழன் கட்டினான் என்றால் அவருடைய நம்பிக்கை அடிபடுகிறது. அந்தக் குழப்பம். அந்த இடர் ஒரு இந்துவிற்கு இன்றைக்கு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அதிலிருந்து வெளியே வருவது ஒரு நவீனப்பார்வைக்கு மிக முக்கியமானது.
எப்படி அந்தப் புராணங்கள் அனைத்தும் வெறும் கற்பனை என்று சொல்வது தவறோ, அதே மாதிரி இன்னொரு தவறும் இருக்கிறது, அந்தப் புராண காலத்தைக் கொண்டுவந்து இந்தப் புதிய காலத்துடன் கலந்து கொள்வது. உதாரணமாக, யுகக்கணக்குகள். நமக்குத் தெரியும், கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என நான்கு யுகங்கள் இருக்கின்றன. இதை குத்துமதிப்பாக 1955 – ல் கலியுகம் முடிகிறது என்று சொல்லி, புராணக் கணக்கையும் நவீன காலக்கணக்கையும் கலந்து கொள்வது மிகப்பெரிய தவறு. புராணகாலக் கணக்கு வேறு, இது வேறு.
இரண்டு வகையான காலம் என்று சொல்கிறேன். ஒன்று Qualitative ஆன காலம், அதுதான் புராண காலக்கணிப்பு. இன்னொன்று Quantitative ஆன காலம். அதுதான் நவீனகாலக் கணிப்பு. புராணகாலக்கணிப்பு அதன் உள்ளடக்கத்தால், அதனுடைய Content -ஆல் மதிப்பிடப்படுகிறது. நாம் இப்போதுகூட அப்படித் தொடர்ந்து காலத்தை மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். Electronic யுகம் என்று சொல்கிறோம் இல்லையா? அல்லது மன்னராட்சியின் காலகட்டம் என்று சொல்கிறோம் இல்லையா? நிலப்பிரபுத்துவ காலம், முதலாளித்துவ காலம் என்கிறோம் இல்லையா. அதுபோல யுகம் என்பது ஒரு காலம்! அது குணாதிசயங்களின் அடிப்படையில் போடப்பட்ட ஒரு காலம். அந்தக் காலத்தையும் வரலாற்று காலத்தையும் பிரித்துத்தான் பார்க்க வேண்டும்.
ஜைனர்களுடைய காலம் இன்னும் சிக்கலானது. ஜைனர்களுக்கு வேறு ஒரு காலக்கணக்கு இருக்கிறது. அங்கம், உபாங்கம் என்று ஒரு காலமுறை வைத்துள்ளார்கள். உபாங்கம் என்றால் எண்பத்தாறு லட்சம் வருடங்கள். எண்பத்தாறு லட்சம் உபாங்கங்கள் சேர்ந்தது ஒரு அங்கம். எந்த ஜைன கோயில்களுக்குள் போனாலும் இந்தக்கணக்குதான் சுவரில் எழுதப்பட்டிருக்கும். ரிஷபதேவர் எப்போது பிறந்தார் என்றால், இந்த உபாங்கத்தின் தொடக்கத்தில், அதாவது எண்பத்தாறு லட்சம் வருஷங்களுக்கு முன்னால் பிறந்தார் என்று போட்டிருப்பார்கள்.
இது ஒரு வகையான கால உருவகம். குண அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்தக் காலஉருவகத்தில் இருந்து நவீனகால காலஉருவகத்தைப் பிரித்துப் பார்க்கவேண்டிய அவசியம் இருக்கிறது. இந்தப் பிரிவினை தான், கீதையையோ, மகாபாரதத்தையோ வாசிக்க ஆரம்பிக்கும் நவீன இளைஞன் செய்துகொள்ள வேண்டிய முதல் பயிற்சி.
இதற்குப் பின்னர்தான் வரலாற்றுப் பிரக்ஞை என்று ஒன்று வருகிறது. புராணம் – நவீனம் என பிரித்து பார்ப்பதைத்தான் நான் வரலாற்றுணர்வு அல்லது வரலாற்றுப் பிரக்ஞை என்று சொல்கிறேன். ஒரு நவீன இளைஞனுக்கு அவசியமாயிருப்பது என்னவென்றால் இந்த பகுத்தறிவுதான். இந்து மத நம்பிக்கைகளையோ, புராணங்களையோ, மூலநூல்களையோ படிக்கும் போது அவனுக்கு வேண்டியது ஒரு வரலாற்று உணர்வு. ஒவ்வொன்றையும் ஆராயும்போது இந்தியாவின் வரலாற்றில், உலக வரலாற்றில், இதை எங்கு கொண்டு வைப்போம் என்கிற கேள்வி எழவேண்டும். அதை வகுத்துக்கொள்ளவேண்டும்.
நண்பர்களே, நீங்கள் இரண்டு வகையான கீதை உரைகளைக் கேட்டிருக்கலாம். பழமையான உரைகள் தான் நமக்கு அதிகம் காதில் விழுகின்றன. அந்த உரைகள் அனைத்திலும் உள்ள ஒரு பொது அம்சம், அவர்களின் பார்வையில் இந்த வரலாற்றுப்பிரக்ஞை, Historicity இருக்காது என்பதுதான். அவர்கள் அனைத்தையும் புராண காலத்தில் கொண்டு வைப்பார்கள். அல்லது அந்தப் புராண காலத்தில் இருந்து எடுத்து இங்கே கொண்டுவந்து விளக்குவார்கள். வரலாற்று அடிப்படையில் தத்துவக் கேள்விகளை எழுப்புவதையோ, வரலாற்று அடிப்படையில் கீதையை வகுத்துக்கொள்வதையோ அவர்கள் செய்வது கிடையாது.எப்போது நாம் வரலாற்றுணர்வுடன் பேச ஆரம்பிக்கிறோமோ, அப்போது தான் நாம் ஒரு நவீன மனதுடன் கீதையையோ, உபநிஷத்துகளையோ, மகாபாரதத்தையோ, இராமாயணத்தையோ, திருக்குறளையோ அணுக ஆரம்பிக்கிறோம். ஆனால் இந்த மனநிலை நம் யாரிடத்திலும் இல்லை.
நாம் உடனே இந்த வரலாற்றுணர்வற்ற மனநிலையை மதம் சார்ந்தது என்று நினைக்கிறோம். அப்படி இல்லை. யோசித்துப் பாருங்கள். நான் நெடுங்காலத்துக்கு முன்னால் ஆதிச்சநல்லூர் போயிருந்தேன். அங்கே சில தமிழியர்களைச் சந்தித்தேன். “இந்த நாகரீகம் ரொம்பப் பழையது, ஐம்பதாயிரம் வருடம் பழையது” என்றார்கள். நான், “இல்லை, ஆதிச்சநல்லூரில் இரும்பு கிடைத்துள்ளதே! இரும்புக்காலகட்டம் என்பதே அதிகபட்சம் நாலாயிரம் வருஷத்துக்கு முன்னால் போகாதே! நாலாயிரம் வருஷத்துக்கு முன்னால் இந்த நாகரிகம் போவதற்கு வாய்ப்பே கிடையாதே!” என்றதும், பயங்கரமாகக் கொந்தளித்து கத்த ஆரம்பித்துவிட்டார்கள். அது மதம் சார்ந்த மனநிலையா? அல்ல. அதுவும் புராணமனநிலைதான்.
இந்தப் புராண மனநிலை என்பது எல்லோரிடமும் இருக்கிறது. நாம் நினைப்பது மாதிரி அது மதத்திற்குள் மட்டும் இல்லை, நம்முடைய பொது மனநிலை அது. “கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி” என்பது ஒரு புராண மரபு. அது உணர்ச்சிகர நம்பிக்கை. உண்மையில் தமிழ்ப்பண்பாட்டிற்கு எவ்வளவு வருடப் வழக்கம் இருக்கிறதென்று கறாராகப் பார்த்தலென்பது ஒரு வரலாற்றுப் பார்வை. இரண்டும் வேறு வேறு. இந்தப் பின்னணியில் இருந்து நாம் ஆரம்பிக்கிறோம்.
இந்த உரையை நான் ஆரம்பிக்கும் பொழுது, இந்த வரலாற்றுப் பிரக்ஞையை வலியுறுத்தி அங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என எண்ணினேன். இதுதான் என் பார்வையின் தனித்தன்மை என்று நான் நினைக்கிறேன்.
நீங்கள் யோசித்துப் பார்க்கலாம், இப்போதே எனக்குத் தெரிந்து கிட்டத்தட்ட இருபது பேர் கீதையைப் பற்றி ஆழமாக, நுட்பமாக உரையாற்றக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அந்த உரைகளை நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வீதம் குறைந்தது பத்து வருஷம் கேட்டால் கூட ஒரு கம்யூனிஸ்ட் கீதையைப் பற்றிக் கேட்கும் கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது. கீதைசார்ந்து அவர்களிடம் நீங்கள் விவாதிக்க முடியாது. ஏனென்றால் அவர்களுடைய உரை, பின் நோக்கித் திரும்பியதாக இருக்கிறது. இதுவரைக்குமான மரபை நோக்கித் திரும்பி நின்று அவர்கள் தங்கள் உரையை ஆற்றுகிறார்கள். எனது இந்த உரை எதிர்காலத்தை நோக்கி திரும்பி நின்று ஆற்றப்படும் உரை. இதுதான் என்னுடைய தனித்தன்மை.
வரலாற்றுப்பார்வை
ஏன் வரலாற்றுப் பார்வை தேவை? ஏன் Historicity தேவை? ஏன் நவீன வரலாற்றுக் கோணம் தவிர்க்கமுடியாதது?
அதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. ஒரு நூலை வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போதுதான் முதன்மையாக அதன் கட்டமைப்பு பற்றிய ஒரு பார்வை நமக்கு வரும். கீதையை Historical ஆக பார்த்தோமென்றால் எப்போது இதன் அமைப்பு உருவாகி வந்திருக்கும் என்னும் புதிருக்கு விடை கிடைக்கும். கீதைக்கு ஒரு கதை, கதையிலிருந்து ஆரம்பித்து ஒரு தத்துவத்திற்கு உட்புகும் ஓர் அமைப்பு இருக்கிறதல்லவா? இந்த அமைப்பு எப்படி வந்தது? இதன் பதினெட்டு அத்தியாயம் என்ற அந்த எண்ணிக்கை எப்படி வந்திருக்கும்? இதையெல்லாம் புறவயமாகப் பார்ப்பதற்கு உங்களுக்கு ஒரு வரலாற்றுப் பார்வை தேவையாக இருக்கிறது.
அதைவிட முக்கியமாக கீதையின் வார்த்தைகளை சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்வதற்கு ஒரு வரலாற்றுப் பார்வை தேவை. “சதுர்வர்ண்யம் மயாஸ்ருஷ்டம் குண-கர்ம விபாகஸ” என்றொரு பாடல்வரி இருக்கிறது. இரண்டு வரி. இதுதான் கீதையைப்பற்றி மிக அதிகமான ஆட்களுக்குத் தெரிந்த வரி. எந்த ஒரு இடதுசாரியும் இந்த வரிகளைச் சொல்லி உங்களிடம் சண்டைக்கு வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இந்த வார்த்தைக்கு எப்படி அர்த்தம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால், இந்தப் படைப்பு எந்தக்காலகட்டத்தில் எழுதப்பட்டது, எந்தச் சூழலில் எழுதப்பட்டது என்பதன் அடிப்படையில்தான். அந்த காலப்பின்னணி உங்களுக்குத் தெரியும் போதுதான், அந்த வார்த்தைக்கு அர்த்தம் எடுக்க முடியும். நீங்கள் இன்றைக்கு என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறீர்களோ அந்த அர்த்தத்தில் அந்த வார்த்தையை எடுத்துக் கொள்ள முடியாது.
வர்ணம் என்கிற வார்த்தையை ஜாதி என்ற அர்த்தத்தில் இன்றைக்குப் பயன்படுத்துகிறார்கள். அதற்கான காரணம், இந்திய மறுமலர்ச்சிக் காலகட்டத்திலும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போதும் சாதி பற்றிப் பேசிய சமூக சீர்திருத்தவாதிகளால் அந்த அர்த்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கான சமூகவியல், அரசியல் பின்னணியும் உண்டு. இங்கிருந்த சாதியவாதிகளும் கீதையில் கடவுள் சாதியை வலியுறுத்தினார் என்று சொல்வதற்காக வர்ணத்தை சாதி என்றே விளக்கினார்கள். ஆனால் தத்துவார்த்த ரீதியாக அச்சொல்லுக்கு என்ன அர்த்தம்? கீதை என்னும் இந்தப் படைப்பு எழுதப்பட்ட காலத்தை வைத்துப் பார்த்தீர்களானால், மனிதர்கள் மட்டுமல்ல, அத்தனை மிருகங்களும் வர்ண அடிப்படையில் அப்போது பிரிக்கப்பட்டிருக்கின்றன என்று தெரியும். ஏன், கருங்கல்கூட வர்ண அடிப்படையில் வகுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் ஸ்தபதிகளிடம் கேட்டால் தெரியும். இது பிராமணக்கல், சத்வகுணம் கொண்டது. இது ஷத்ரியக்கல், ரஜோகுணம் கொண்டது என்று நான்கு வர்ணங்களை கல்லில் கண்டு சொல்வார்கள்.
ஆக, வர்ணம் என்பது ஒரு Tool, ஒரு கருவி. ஒரு சிந்தனை முறை. பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் குணம், செயல் என்னும் இரண்டு இயல்புகளின் அடிப்படையில் நான்கு வகைகளாகப் பிரித்து அணுகுவதற்கான ஒரு பார்வை அது. அதன் பின்னணியிலேயே அந்த வரி அமைகிறது. அதை உள்ளபடி விரிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், அந்தக் காலகட்டம் உங்களுக்குத் தெரிய வேண்டும். அதற்குத்தான் வரலாற்றுப் பிரக்ஞை இருக்க வேண்டும் என்கிறோம்.
‘குண -கர்ம’ என்ற வார்த்தைகள் அந்தப் பாடலிலேயே இருக்கின்றன. குணம் என்று சொல்லும் போது மனிதர்களின் குணாதிசயம், Character என்று எடுத்துக் கொள்ளும் வழக்கம்தான் இன்று இருக்கிறது. உங்களுக்கு ஒரு வரலாற்றுப் பிரக்ஞை இருந்தால், ’குணம்’ என்பது இந்திய சிந்தனையில் மிக ஆழமான பொருள் கொண்ட கலைச்சொல் என்பது புரியும். கீதையே அச்சொல்லை சாங்கிய அடிப்படையில்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறது. சாங்கியம் அதை விரிவாக வகுத்து சொல்கிறது. குணம் என்ற வார்த்தை மூன்று குணங்களை – அதாவது அடிப்படை இயல்புகளை – குறிக்கிறது. ரஜோ குணம், தமோ குணம், சத்வ குணம் என்ற குணங்கள். அதாவது முறையே நேர்விசையான செயலூக்கம், எதிர்விசையான தேக்கம், சமநிலையான இயல்புநிலை. இந்த மூன்று குணங்களை வைத்துத்தான், மொத்த இயற்கையையுமே அந்தக் காலத்தில் பகுப்புபடுத்திப் பார்த்தார்கள். இதன் அடிப்படையில் தான் வாதம், பித்தம், கபம் என்ற கருத்து ஆயுர்வேதத்தில் வந்திருக்கிறது. இந்தியசிந்தனை முழுக்க இந்த குணப்பகுப்பு உள்ளது. வைசேஷிகம் போன்ற தரிசனங்களில் குணம் என்பது இன்னும் விரிவாகப் பகுத்துப் பேசப்படுகிறது.உலகத்திலுள்ள அனைத்தையுமே மாறாத நிலை, செயலூக்கம் கொண்ட நிலை, சமநிலை என்ற மூன்று நிலைகளாக வைத்துப் பார்த்தார்கள் அவர்கள். இது அக்காலத்திலிருந்த ஒரு பகுப்பாய்வு முறை. எப்படி கிரேக்கச் சிந்தனை முறையிலே Dialectics – முரணியக்கம் என்கிற ஒரு சிந்தனை முறை இருக்கிறதோ அதைப்போல. அதை வைத்துத்தான் அவர்கள் மொத்தப் பிரபஞ்சத்தையும் அணுகினார்கள். அதுதான் அவர்களின் இயங்கியல். அதுபோல இங்கு இருப்பது இது. மூன்றாகப் பிரித்துப் பார்க்கும் முரணியக்க இயங்கியல் என்று அதைச் சொல்லலாம்.
இதேபோல் இன்னொரு வார்த்தை. கர்மம் என்கிற வார்த்தையை செயல் என்கிற அர்த்தத்தில் இங்கே வழக்கமாக மொழிபெயர்ப்பார்கள். ஒரு ’பாக்கெட் பகவத்கீதை’யை பாருங்கள். அதில் மனிதர்களின் செயல் என்றுதான் இருக்கும். கர்மம் என்றால் செயல் மட்டுமா? அப்படி இல்லை. அச்சொல்லை வரலாற்றுரீதியாகச் சரியாக புரிந்துகொண்டால் ‘செயல்தொடர் முடிவிலி’ என்று அதை நாம் மொழிபெயர்ப்போம். ஒரு செயல் இன்னொரு செயலாக மாறி, அது இன்னொரு செயலாக ஆகி முடிவின்மை வரைக்கும் போய்க்கொண்டே இருக்கும் அந்தப் பெரிய பாதையைத்தான் கர்மம் என்னும் அந்த வார்த்தை குறிக்கிறது. சாங்கிய தரிசனத்தில் அப்படித்தான் அர்த்தம். சாங்கிய பொருளில்தான் அச்சொல் பேசப்படுகிறது என்று கீதை சொல்கிறது. அப்படித்தான் பலநூறாண்டுகளாக வேதாந்த மரபில் பொருள்கொள்ளவும் பட்டது. கீதைக்கான எளிய விளக்கங்கள், பக்தி விளக்கங்கள் எல்லாமே இருநூறாண்டுகளாக அந்நூல் ‘மக்கள்நூலாக’ ஆனபிறகு உருவானவை.
இந்த வார்த்தையைப் புரிந்து கொள்வதற்கு, இவ்வாறு கீதையில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் புரிந்து கொள்வதற்கு, நம் பார்வையில் ஒரு வரலாற்றுத்தன்மை Historicity தேவை. கீதை என்னும் நூலை வரலாற்றிலும் சிந்தனையிலும் எந்த இடத்தில் வரலாற்றில் பொருத்திக்கொள்ளலாம் என்று உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்படித் தெரியாமல் நீங்கள் அந்தப் படைப்பைப் பற்றிப் பேச ஆரம்பிக்கும் போதே புரிதல் கீழே இறங்க ஆரம்பிக்கிறது. தத்துவநூலுக்கு அளிக்கப்படும் எளிமையான விளக்கங்கள் எல்லாமே தவறான விளக்கங்கள் என்பதை மறக்கவேண்டாம்.
மூன்றாவது விஷயம், தர்க்க முறை. எந்த அடிப்படையில் இந்த நூலின் தர்க்கங்கள் உருவாக்கபட்டிருக்கின்றன என்று தெரிவதற்கு ஒரு வரலாற்றுப்புலம் தேவை. வரலாற்று ரீதியாக அதை பொருத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. உதாரணமாக சிலவகையான இலக்கிய நுட்பங்கள் கீதையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ’சம்சாரம் என்பது அல்லது இகவாழ்க்கை என்பது தலைகீழான ஒரு மரம், வேர் வானத்திலே இருக்கிறது, கிளைகள் மண்ணிலே இருக்கிறது’ என்ற உவமை கீதையில் வருகிறது. அந்த உவமையை நீங்கள் விரிவாகப் பேசுங்கள், ஆனால் அதற்கு முன்னால் ஒரு விஷயம் கவனிக்கப்படவேண்டும். இந்தப் படைப்பு, நியாய சாஸ்திரம் வளர்ந்த பிறகு உருவானதா, அல்லது அதற்கு முன்னால் உருவானதா என்ற கேள்வியுடன் தான் கீதையை அணுக முடியும்.
நியாய சாஸ்திரம் வளர்வதற்கு முன்னால், ஓர் உவமை என்பது ஒரு விஷயத்தை விளக்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நியாய சாஸ்திரத்தின் வளர்ச்சிக்குப் பின்னால், ஓர் உவமை என்பது ஒரு விஷயத்தை நிரூபிப்பதேதான். பிரத்யக்ஷம், அனுமானம், ஸ்ருதி என்று மூன்று பிரமாணங்கள் (அதாவது அறிதல்முறைகள்) இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நேர்க்காட்சி, ஊகம், முன்னோர் சொல் அல்லது முன்னறிவு என்று அவற்றுக்குப் பொருள். நான்காவதாக ஒரு பிரமாணமாக உவமையைச் சொன்னார்கள் நியாயவியலில். அதாவது ஒரு விஷயத்தை நிரூபிப்பதற்கு, அதற்கு இணையான ஒரு உவமையைச் சொல்லி அந்த உவமையை நிரூபித்தோம் என்றால், அவ்விஷயத்தை நிரூபித்த மாதிரிதான். உவமைக்கு ஒரு மேலதிக அழுத்தம் கிடைத்த ஒரு காலகட்டம் இந்தியச் சிந்தனையில் நியாயசாஸ்திரம் உருவான பிறகு வந்தது. அந்த உவமையை நியாயவியலின்படி எடுத்துக்கொண்டால் அதன் இடமே வேறு.
ஆகவே, ஒரு நூல் எந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தது என்பது முக்கியம். அதன் உவமையை எப்படி எடுத்துக் கொள்வது? பிரமாணமாக எடுத்துக்கொள்வதா? அல்லது ஓர் அணியாக (அலங்காரமாக) எடுத்துக் கொள்வதா? அதற்கு உங்களுக்கு ஒரு வரலாற்றுணர்வு தேவை. ஆகவேதான் வரலாற்று ரீதியாக ஒரு படைப்பை எங்கே கொண்டுவந்து பொருத்துவது என்று தெரிவதென்பது ஒரு வாசிப்பின் அடிப்படை நிலைகளில் ஒன்று.
தொடரும்
மொழிபெயர்ப்பாளர் சக்தி பிரகாஷ்