தமிழ் விக்கிக்கு ஒரு வாழ்த்து!

ஜோகன்னா செலஸ்டின் மீட்

நாகர்கோவிலில் கல்லூரி சாலையிலிருந்து கீழே செல்லும் போது வீனஸ் ஆப்டிகல்ஸ் எதிரில்  ‘மீட் தெரு’ சேல்ஸ் டாக்ஸ் ஆபிஸ் தாண்டி முனிசிபாலிட்டி வழியாக பாலமோர் ரோடுக்கு செல்லும் பாதையும் அது.

முப்பது ஆண்டுகளாக மீட் தெருவில் எத்தனையோ முறை சென்றிருக்கிறேன். கடந்த மாதம் தமிழ் விக்கியில் ஜோகன்னா மீட் பதிவை படித்தபோதுதான் தெரிந்தது அவர் யார் என.

தினமும் தமிழ் விக்கியில் ஒரு பதிவையாவது படித்து விடுகிறேன். ஒவ்வொரு நாளும் கண்கள் விரிய ஒரு ஆளுமையை அறியும்போதும் நெஞ்சு எடை கொண்டுவிடுகிறது. ஒரு ஆளுமையின் பிறப்பு,கல்வி,தனி வாழ்க்கை,வேலை,ஆய்வுகள், படைப்புகள் மற்றும் அவரது இடமென்ன என விரிவான தகவல்களை தருகிறது தமிழ் விக்கி பதிவுகள்.

இங்கிலாந்திலிருந்து மிஷன் பணிக்காக வந்தவர்கள் இங்குள்ளவர்களின் நன்மை கருதி செய்த காரியங்கள் ஏராளம். தாய்,தந்தையர் லண்டன் மிஷன் பணிக்காக தஞ்சாவூரில் இருந்தபோது  ஜோகன்னா மீட் தஞ்சையில் 1803 இல் பிறந்தவர் என்பது முதல் ஆச்சரியம்.

திருமணதிற்கு பின் மைலாடிக்கு வந்தவர் லண்டன் மிஷன் தலைமையகத்தை மாற்றி  நாகர்கோவிலுக்கு வந்துள்ளனர். அ ங்கு வந்த திருமதி மார்த்தா மால்ட் உடன் இணைந்து நாகர்கோவிலில் பெண்களுக்கான கல்வியை துவங்க ஜோகன்னா மீட் முடிவு செய்கிறார். அவர்களுடன் திருமதி தாம்ப்ளன்,பெய்லி,நாட்டன்,பேக்கர் ஆகிய பெண்மணிகள் இணைய  நாகர்கோவிலில் ஒரு ஆங்கில பள்ளியை நிறுவி, அருகில் பெண்களுக்கான பள்ளியும் நிறுவப்படுகிறது.

ஆனால் பள்ளிக்கு பெண்கள் யாரும் கல்வி கற்க வரவில்லை. வீடு,வீடாக ஏறி,இறங்கி  பதினெட்டு பெண் குழந்தைகளுடன் பள்ளியை துவக்குகிறார்கள். பள்ளிக்கு கல்வி கற்க சென்றால் வேலை செய்ய முடியாமல் வாழ்வாதாரம் பாதிப்பதால் பிள்ளைகள் பள்ளிக்கு வர மறுப்பதை அறிந்த ஜோகன்னா மீட் அவர்களுக்கு தையல் கற்று கொடுக்க ஏற்பாடு செய்கிறார். திருமதி மால்ட் அவர்களுக்கு லேஸ் பின்ன கற்று கொடுக்கிறார்.பின்பு அது லண்டனுக்கு ஏற்றுமதியாகி  லேஸ் பின்னுதல் மிக லாபகரமான தொழிலாக மாறி கல்வி கற்க நிறைய பெண்குழந்தைகள் பள்ளிக்கு வருகிறார்கள்.இன்று பெண்கள் அணியும் அடிப்பாவாடை,ஜாக்கெட் போன்றவை அவர்கள் உருவாக்கி தந்தவையே.(மார்பை மறைக்கும் சரியான ஆடை இல்லாமல் இருந்த காலம் அது)

பின்பு 1828 இல் நெய்யூருக்கு மாற்றலாகி செல்லும் ஜோகன்னா மீட் அங்கும் கால்டன் ஸ்கூல் எனும் தங்கி பயிலும் பெண்கள் பள்ளியை நிறுவுகிறார். லேஸ் பின்னி வந்த காசில் வீட்டுக்கும் பணம் அனுப்ப முடிந்ததால் நெய்யூரை சுற்றி மேலும் பள்ளிகள் உருவாகிறது. 1840 ல் நெய்யூர், நாகர்கோவில் என் இரு மிஷன் மாவட்டத்தில் 7540  குழந்தைகள் படித்தனர் அதில் 998 பேர் பெண்கள்.

இவை எல்லாம் தமிழ் விக்கியில் கிடைத்த அரிய தகவல்கள்.நெடுநாட்களுக்கு முன் நாளிதழ் ஒன்றில் இந்தியாவில் பெண்கள் அதிகம் கல்வி கற்கும் மாவட்டம் கன்னியாகுமரி என படித்தேன். அதற்கு காரணம் ஜோகன்னா மீட் அம்மையார் இங்கு கல்வி தாயாக இருந்ததால் தான் என இப்போது தமிழ் விக்கி மூலம் தெரியவந்தது.

விடுமுறைக்கு வரும்போது நெய்யூர் சென்று கல்வி தாய் ஜோகன்னா மீட் அம்மையாரின் கல்லறை சென்று மரியாதை  செய்யவேண்டும் என இருக்கிறேன்.

தமிழ் விக்கி பக்கத்துக்காக எழுதுபவர்கள், ஆசிரியர் குழு மற்றும் அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்து தொய்வில்லாமல் நடத்திசெல்லும் ஆசிரியராகிய உங்களுக்கும் வாழ்த்துக்களும், வணக்கமும்.

ஜோகன்னா மீட்  பக்கத்தை பிரேமையுள்ள இளையவள் இரம்யாவுக்கு அனுப்பி பெரும் படைப்புக்கான தகவல் என சொன்னேன்.விரைவில் நல்ல கதை ஒன்று வரலாம். கதைக்கான கருக்கள் ஏராளமாக தமிழ் விக்கியில் கொட்டி கிடக்கிறது.

கோவை மணி அவர்களை பற்றிய பதிவை படித்துவிட்டு என்னுடன் பணிபுரியும் தமிழ் ஆர்வமுள்ள மலேசிய தமிழர் ராமிடம் வியந்து சொல்லிக்கொண்டிருந்தேன் ஓலைச்சுவடி ஆய்வை குறித்து.அடுத்த சில தினங்களில் இவ்வாண்டுக்கான தமிழ் விக்கி பெரியசாமி தூரன் விருது கோவை மணி அவர்களுக்கே அறிவிக்கப்பட்டது. அவரை அன்றே போனில் அழைத்து வாழ்த்து சொன்னேன்.

விருது விழா சிறப்பாக நடக்கட்டும் மானசீகமாக அந்நாட்களில் நானும் ராஜ் மகால் மண்டபத்தில் தான் இருப்பேன்.

ஷாகுல் ஹமீது

(கப்பல்காரன்)

முந்தைய கட்டுரைஇன்றைய உளச்சோர்வுகள்
அடுத்த கட்டுரைம.கோபாலகிருஷ்ண ஐயர்