அன்புள்ள ஜெ
எம்.என்.காரஸேரி தமிழ் விக்கி
காந்தியின் சாட்சி–எம்.என். காரசேரி
தமிழில்: குமரி எஸ். நீலகண்டன்
முன்னுரை
காந்தியின் செயலாளர் வெங்கட்ராம் கல்யாணம் உயிரோடு இருக்கிறார் என நான் கேட்ட போது, மகத்தான ஒரு புனிதமான வரலாற்று காலத்தின் எஞ்சிய பகுதியின் சாட்சியான ஒருவரோடு என்னை அறிமுகம் செய்து கொள்ளும் ஆர்வத்தையும் தாகத்தையும் வேகத்தையும் என்னுள் நான் உணர்ந்தேன். என்னுடைய நண்பர் இந்திய ரயில்வேயில பணியாற்றுகிற, கேரளாவின வடகராவைச் சேர்ந்த பி.கே. ராமச்சந்திரன் மூலமாக, அந்த இனிய வாய்ப்பும் அமைந்தது. 2018 ஆம் ஆண்டு ஃபெப்ரவரி மாதத்தில், சென்னையில் கல்யாணத்தை அவர் வீட்டிலேயே சந்தித்தேன். அப்போது 96 வயதிலிருந்த அந்த முதியவரிடம் மூன்று வாரங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தேன்.
அவரது நினைவுத் திறனும், அதை வெளிக் கொணரும் விதமும், என் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு இருந்தது. இதைக் குறித்து என் நண்பர் கே.சி.நாராயணனிடம் கூறிய போது, அவற்றையெல்லாம் எழுத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தினார். நான் எல்லாவற்றையும் எழுத்தாக்கம் செய்த பின், அவற்றின் பெரும்பகுதியானது நாராயணன் அவர்களை ஆசிரியராகக் கோட்டயத்திலிருந்து வெளி வருகிற ‘பாஷா போஷினி’ யில் வெளியிடப்பட்டது. கல்யாணத்துடனான என்னுடைய உரையாடலை விரிவாக கோட்டயத்திலிருந்து வெளிவருகிற டி.சி. புக்ஸ் 2020 செப்டம்பர் மாதத்தில், ‘காந்தியுடெ சாட்சி’ என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டது. அந்த நூலின் தமிழ் மொழியாக்கம்தான் தற்போது உங்கள் கையிலிருக்கும் இந்நூல்.
இதை மொழிபெயர்த்தவர் தமிழில் நன்கு அறியப்பட்ட சிறந்த எழுத்தாளர் குமரி எஸ். நீலகண்டன். அவர் வெங்கட்ராமன் கல்யாணத்தின் வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டு ‘ ஆகஸ்டு 15’ என்ற நாவலை எழுதி இருக்கிறார். அவர் கல்யாணத்தோடு மிகவும் நெருக்கமானவர் என்ற அளவில் இந்த மொழியாக்க பணியை அவர் ஏற்ற போது எனக்கு மிகுந்த திருப்தியை அளித்தது.
கல்யாணத்திற்கும், நண்பர் பி.கே. ராமச்சந்திரன் அவர்களுக்கும், இதழாசிரியர் கே.சி.நாராயணன் அவர்களுக்கும், மொழி பெயர்ப்பாளர குமரி எஸ். நீலகண்டன் அவர்களுக்கும், எனது குருநாதர் டி.பி.வேணுகோபால் பணிக்கர் அவர்களுக்கும், மிகப் பொருத்தமான ஓவியங்கள் வரைந்த பிரபல ஓவியர் இ.பி. உண்ணி அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றி.
இந்த மொழி பெயர்ப்பை நூலாகக் கண்டு மகிழ்வதற்கு கல்யாணம் இன்றில்லை என்கிறபோது என் மனம் வருந்துகிறது. கல்யாணம் 2021 மே 4 ஆம் தேதி காலமாகி விட்டார்.
அம்பாடி, காரசேரி
20 ஜூன், 2022
எம்.என். காரசேரி
அத்தியாயம் 1- காந்தியின் செயலாளர் காந்தியவாதி அல்ல!
“மூன்று கண்டங்கள் பத்தாயிரம் மைல்கள் பயணித்திருந்தும் காந்தியடிகள் ஒரு விமானத்தைத் கூட அருகாமையில் பார்த்ததே இல்லை.”
நம்பவே இயாமல் கண்கள் வியக்க அவரைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.
இந்த வார்த்தைகள் ஒரு சாதாரண மனிதரிடமிருந்து உதிர்ந்தவை அல்ல. மகாத்மா காந்தியின் இறுதிக் காலத்தில் அவரது செயலாளராக இருந்த வெங்கட்ராம் கல்யாணம் கூறியவை.
“மன்னிக்க வேண்டும். இதை எப்படி நான் நம்புவது?” என்றேன்.
“இந்த விஷயத்தை நான் காந்தியே கூறக் கேட்டதாகும்” என்றார்.
“எப்போது?”
“இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு லார்டு மவுன்ட் பேட்டனும் அவரது மனைவியும் இந்தியாவில் சில காலங்கள் இருந்தார்கள் அல்லவா. அப்போது மவுன்ட் பேட்டனின் மனைவி காந்தியடிகளைப் பார்க்க அடிக்கடி வருவார். ஒரு தடவை அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது நான் அங்கே இருந்தேன்.”
“இப்படி இனி நீங்கள் காரிலும் புகை வண்டியிலும் பயணம் செய்யாதீர்கள். உங்களுக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. இனி உங்கள் பயணமெல்லாம் விமானத்திலேயே இருக்கட்டும்.” என்றார் லேடி மவுன்ட் பேட்டன்.
இதைக் கேட்ட காந்தியடிகள் சிரித்தார்.
“நான் இதுவரைக்கும் ஒரு விமானத்தை அருகாமையில் பார்த்ததில்லை. இனியும் அதைப் பார்க்க வேண்டிய தேவையுமில்லை. எனக்கு ரயில் வண்டியில் மூன்றாம் வகுப்பில் பயணிப்பதே தாராளம்.” என்றார்.
லேடி மவுன்ட் பேட்டன் அடுத்து கேட்டார்.
“அதற்கு காரணம்?”
காந்தியின் பதில் எளிமையாகவும் வலுவாகவும் இருந்தது.
“நான் சாதாரண மனிதர்களை சந்திக்கவே பயணிக்கிறேன். விமானத்தில் சென்றால் எவ்வாறு நான் அவர்களை சந்திக்க இயலும்? அது விமானத்தின் உள்ளேயும் சாத்தியப் படாது. வெளியேயும் இயலாது.”
வெங்கட்ராம் கல்யாணம் ஒரு தமிழர். தமிழ்நாட்டில் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். அவரது பிறந்த தினத்திற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. நாம் சுதந்திர தினமாக கொண்டாடுகிற நமது நினைவில் என்றும் நிற்கிற ஆகஸ்டு 15 தினமே அவரது பிறந்த நாளாகும். பிறந்த வருடம் 1922. காந்தியுடைய முதன்மைச் செயலராக இருந்த யாவரும் அறிந்த மகாதேவ தேசாய் இறந்ததும் ஆகஸ்டு 15 அன்றுதான். கல்யாணம் பிறந்து இருபது வருடங்கள் நிறைவு பெற்றபின், ஏதாவது 1942 ல் மகாதேவ தேசாய் இறந்தார். மகாதேவ தேசாய் இறந்து இரண்டு வருடங்கள் கழிந்த பின்புதான் கல்யாணம் காந்தியிடம் வந்து சேருகிறார்.
இதை நான் எழுதுகிற போது கல்யாணத்திற்கு 96 வயது. குறிப்பிடத்தக்க அளவில் நினைவுத் திறன். வியக்க வைக்கும் பேச்சுத் தெளிவு. நரையுடன் வயதான தோற்றமளித்தாலும் 70 வயதிற்கு மேல் அவரது வயதை மதிப்பிட இயலாது. இள மஞ்சள் வண்ண குர்தாவும் பைஜாமாவும் அணிந்திருந்தார். ஒரு கோணத்தில் அவரைப் பார்த்த போது பேராசிரியர் குப்தன் நாயரின் சாயலில் இருந்தார். எழுந்து நிற்கும் போது சிறிது கூனாலான அசெளகரியமே அவருக்கு பிரச்சனையாக இருந்தது. சிறிது சிரமத்துடன் அவர் நடக்கிறார். ஒரு ஊன்றுகோல் உதவியுடன் வீட்டின் உள்ளும் வெளி முற்றத்திலும் நடக்கிறார். சர்க்கரை நோய் சார்ந்த சில உடல் நலிவினைத் தவிர்த்து குறிப்பிடத்தக்க அளவில் எந்த நோயும் இல்லை. இந்த நாட்களில் வெளிப் பயணத்தை பெரும்பாலும் தவிர்த்து வருகிறார்.
அவர் வெளிப் பயணமே செய்வதில்லையென்று கருதி விட வேண்டாம். 2018 பிப்ரவரி 18 அன்று காந்தி காமராஜ் அறக்கட்டளை சார்பில் மைலாப்பூரில் நடைபெற்ற ஒரு சிறிய கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசிய நிகழ்வில் நானும் சாட்சியாக இருந்தேன். ஒரு ஹோட்டல் அரங்கில் பார்வையாளர்கள் கிட்டத்தட்ட இருபத்தைந்து பேரே இருந்தனர். காந்தியைப் பற்றி கல்யாணம் சுமார் நிமிடங்கள சுவையாக உரையாற்றினார். அந்தக் கூட்டத்தில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேடையிலேயே அவர் உட்கார்ந்திருந்தார்.
தூக்கென்பது அவருக்கு சிறிது நேரம்தான். சோபாவில் சாய்ந்து கொண்டு இடையிடையே நேரம் கிடைக்கிற போது அவர் கொள்கிற குறுகிய தூக்கம்தான் அவரது முக்கியமான ஓய்வு நேரமாகும். கட்டிலில் கிடந்தாலும் அதிகாலை 3.30ற்கு எழுந்து விடுவார். அவரது ஆஸ்ரம வாழ்க்கையின் நடைமுறைப் பழக்கம் அது. உணவும் பெரிய அளவில் இல்லை. சோறு சாப்பிட்டு மூன்று வருடங்களாகி விட்டன. தினமும் பத்து பதினைந்து கோப்பைகள் காப்பி குடிப்பார். அதனோடு சில நேரங்களில் முந்திரிப் பருப்போ அல்லது இட்லியோ பிஸ்கட்டோ துணை உணவாக இருக்கும்.
கல்யாணம் மிகச் சிறந்த சமையல் கலைஞர் கூட. மதியம் எனக்கு காப்பியினை அவரே தயாரித்துத் தந்தார். நான் குடித்தக் கோப்பையை நான் சுத்தம் செய்ய அவர் என்னை அனுமதிக்கவில்லை.
“இங்கே வைத்து விடுங்கள். அதெல்லாம் என்னுடைய வேலை” என்று பிடிவாதமாகக் கூறினார். அத்தகைய பெரிய மனிதர் எனக்காக அந்த வேலையை செய்வதில் நான் மிகவும் அசௌகரியமாக உணர்ந்தேன். ஆனால் என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
அவரோடு வாசிக்கும் மூத்த மகள் மாலினி வெளியே எங்கேயோ சென்றிருந்தார். அவரை ‘ உஷா’ என்று அழைப்பார். அவர் ஒரு களைஞர். ஓவியம் வரைவார். களி மண்ணால் சிறந்த அளவில் சிற்பங்களை உருவாக்குவார். ஒரு அறை முழுக்க அவருடைய கலைப் படைப்புகளைதான் நிறைந்திருந்தன.
முன்னறையின் நான்கு சுவர்கள் முழுவதும் சிறியதும் பெரியதுமாக சட்டமிடப்பட்ட புகைப் படங்களால் நிறைந்திருந்தன. பெரும்பாலும் காந்தியுடைய படங்கள்தான். இந்திய வரலாற்றின் சில முக்கியமான பதிவுகள் கண்ணாடியிடப்பட்டு அங்கே தொங்கிக் கொண்டிருந்தன. மிக முக்கியமான கல்யாணம் வெவ்வேறு நிலைகளில் இருக்கும் புகைப்படங்களும் தாராளமாக இருந்தன. எல்லோரையும் கவரும் விதமாக பிரபல ஓவியக் கலைஞர் எபி. என். ஜோசப் வரைந்த கல்யாணத்தின் மிக அழகான கோட்டு சித்திரம் அங்கே சுவரை அலங்கரித்திருந்தது.
கல்யாணம் அவருடைய தந்தைக்கு ஒரே மகனாக முத்தவனாக சிம்லாவில் பிறந்தார். அவருக்கு ராஜலஷ்மி, சீதாலஷ்மி, சுந்தரி என்று மூன்று இளைய சகோதரிகள். தஞ்சாவூர்காரரான அவருடைய தந்தை எஸ். வெங்கட்ராம் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் ஒரு எழுத்தராக பணியாற்றி வந்தார். அவர் மெட்ரிகுலேஷன் வரையே படித்திருந்தார். மதுரைக்காரரான அம்மா மீனாம்பாளும் பெரிதாய் படிக்கவில்லை.
பிரிட்டிஷ் ஆட்சித் காலத்தில் டெல்லியில் வெயில் அதிகமாக இருக்கிற கோடை காலத்தில், அதிலிருந்து நிவாரணம் பெறும் விதமாக தலைநகர சிமலாவாக இருக்கும். இரண்டு தலைநகரங்களுமாக வேலை செய்கிற தமிழ் மக்கள் நடத்தி வந்த கலாச்சார குழுவில் அவருடைய தந்தை தீவிரமான பங்கேற்பாளராக இருந்தார். ‘ராம் பாபு’ என்ற பெயராலேயே அவரை எல்லோரும் அறிவர். அவர் தீவிரமான சமூக சேவகராக இருந்தார். 1920 ல் சிம்லாவில் மதராஸ் பள்ளி ஆரம்பித்த போது அதன் முக்கிய நிறுவனர்களில் ஒருவராக ராம் பாபு இருந்தார். தமிழ் கற்றுக் கொள்வதை ஊக்கப்படுத்தும் விதமாக அந்த பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. தென்னிந்தியர்கள் கூடும் களமாக அது மாறுவதற்கு அதிக காலம் ஆகி விடவில்லை. கன்னடக்காரர்களும் மலையாளிகளும தெலுங்கு மக்களும் அவர்களது குழந்தைகளை அங்கே சேர்த்தனர். அவர்கள் எல்லோரையுமே ‘ மதராசிகள் ‘ என்றுதான் பொதுவாக அழைத்தார்கள். பின்பு அது விரிவாக்கம் பெற்று ‘ டெல்லி தமிழ் கல்வி சங்கம் ‘ என்று அறியப்பட்டது.
“உங்களுடைய தந்தை ஒரு காங்கிரஸ்காரரா?”
“இல்லை அவர் பிரிட்டிஷ் அரசின் பக்தியுள்ள குடிமகனாகவும் அவருடைய அரசில் எழுத்தராகவும் பணியாற்றினார்”
கல்யாணம் டெல்லிக் கல்லூரியில் வர்த்தகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1940 – 41 ல் டெல்லியிலுள்ள இராணுவத் தலைமை அலுவலகத்தில் ஒரு எழுத்தராக பணியில் சேர்ந்தார். பிரபலமான கேரள ஆளுமையான வி.பி.மேனனின் ஒரு மகன் அங்கே இளநிலையிலுள்ள ஒரு பதவியில் இருந்தார். அந்தப் பழக்கத்தில் மேனனை கல்யாணம் ‘ அங்கிள் ‘ என்றே அழைத்து வந்தார்.
பிரிட்டிஷ்காரர்களுக்காகப் பனி செய்து பெற்ற பயிற்சியையும் அனுபவத்தையும் குறித்த நல்ல நினைவுகளும் அவர்கள் மேல் கொண்ட மதிப்புமே அவரிடம் நிறைந்து உள்ளன. அவர்களின் தனித்துவமான குணமானது அவர்கள் ஒரு சிறு தருணம் கூட சும்மா இருப்பதில்லை. அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்ததுமே பூந்தோட்டத்தில் இறங்கி வேலை செய்வர். இல்லையென்றால் சுவரில் வண்ணம் தீட்டுவர். அதுவுமில்லையென்றால் தண்ணீர்க் குழாய்களைச் சரி செய்து கொண்டிருப்பர். வேறு ஒரு வேலையும் இல்லையென்றால் மின் விளக்குகளின் பழுதினை சரி செய்வர். சுத்தமாக இருத்தல் என்பது அவர்களின ஒழுக்க இயல்புகளில் முக்கியமான ஒன்றாகும்.
தூய்மையான வாழ்க்கை வாழும் முறைதான் கல்யாணம் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட முக்கியமான பாடமாகும். அது சாத்தியமாக வேண்டுமென்றால், ஒருவர் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எந்த வேலையையும் எந்த தயக்கமுமின்றி செய்யத் தயாராக இருக்க வேண்டும். காந்தியடிகள் கூட அத்தகைய இயல்புகளை பிரிட்டிஷாரிடமிருந்துதான் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். அவர் படித்தது லண்டனில் அல்லவா?
அப்போதெல்லாம் கல்யாணத்திற்கு ஆச்சரியமாக இருக்கும் ஏன் காந்தியடிகள் இந்திய சுதந்திரத்திற்காக போராடுகிறார் என்று. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலுள்ள எல்லா நாடுகளை விட நல்லாட்சி இந்தியாவிலேயே நடந்தது என்பதை நாங்கள் உறுதியாக அறிந்திருந்தோம்.
பிரிட்டிஷ்காரர்களின் உள்ளார்ந்த ஒழுக்கத்தையும் அவர்களின் கடுமையான உழைப்பையும் கற்றுக் கொள்ள வேண்டும். திங்கள் கிழமை காலை முதல் வெள்ளிக் கிழமை மாலை வரை கடினமாக உழைப்பார்கள். சனியும் ஞாயிறும் என்றால் முழுக்க முழுக்க ஓய்வும் பொழுது போக்குமாக இருக்கும். அன்று எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். நமது இந்தியர்களைப் போல் அல்ல அவர்கள். உடுழைப்பான பணிகள் செய்ய அவர்கள் தயக்கம் காட்டுவதில்லை. அதை மரியாதை குறைவாக எண்ணி வெட்கப் படுவதுமில்லை.
“எப்போது நீங்கள் காந்தியடிகளை முதன்முதலாக பார்த்தீர்கள்?”
“பம்பாயில் வைத்துதான் பார்த்தேன். 1944 மே மாதம் காந்தியடிகள் ஆகாகான் மாளிகையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு, ஜூஹுவில் சாந்திகுமார் மொரார்ஜியின் வீட்டிற்கு வந்திருந்த போது நான் அவரை அங்கே சந்தித்தேன்.”
“மொரார்ஜி?”
“இவர் ஒரு பெரிய கப்பல் முதலாளி. மொரார்ஜி தேசாய்க்கும் இவருக்கும் எந்த உறவும் இல்லை.”
“எப்போது நீங்கள் காங்கிரஸில் இணைந்தீர்கள்?”
“யார்? நானா? நான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததே இல்லை.”
சென்னை தேனாம்பேட்டையில் எஸ்.ஐ.இ.டி பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பின் சோஃபாவில் சாய்ந்து கொண்டு பெரிதாக சிரித்தார் கல்யாணம்.
“நான் அரசியல்வாதியாக இருந்ததே இல்லை.”
“பின் எப்படி நீங்கள் சென்ற நூற்றாண்டின் மிகப் பெரிய தேசியத் தலைவருடைய தனிச் செயலராக உங்களது வாழ்க்கையைக் கழித்தீர்கள்?”
“நீங்கள் காந்தியடிகளின் தனிச் செயலாளர்களாய் எல்லோரும் அறிந்த மகாதேவ் தேசாய், ப்யாரேலால் ஆகியோரின் வரிசையில் என்னையும் உட்படுத்தாதீர்கள். அவர்கள் மிகப்பெரிய ஆளுமைகள். பல விஷயங்களிலும் காந்தியடிகளுக்கு பல்வேறு கருத்துக்களைத் தெரிவிப்பவர்கள். மொழியை வளமையாக பயன்படுத்துவது போன்ற பல விஷயங்களிலும் காந்திக்கு ஆலோசனை கூறுபவர்கள். அவர்கள் வரலாற்றையும் அரசியலையும் அறிந்தவர்கள். 1944 ற்கு பின்னர் காந்தியடிகளின் செயலாளராக அவரின் தட்டச்சு செய்பவராக எழுத்தராகவே இருந்த ஒரு சாதாரண மனிதன்தான் நான்.
கல்யாணத்தின் உடல் மொழியிலும் சைகையிலும் வெளிப்பட்ட அவரது எளிமை, அவர் தன்னை அறிமுகப் படுத்திய விதத்தில் தெளிவானது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் வார்தா மாவட்டத்தில் சேவாகிரமில் நான் ஒரு பணியாளனாக சேர்வதற்காகத்தான் அங்கே சென்றிருந்தேன். எனக்கு தட்டச்சு செய்யத் தெரியும் என்று அறிந்து கொண்ட காந்தியடிகள் என்னை தவறாகப் பயன்படுத்திக் கொண்டார். அந்த நேரத்திலும் நான் ஏதாவது சேவைப் பணிகள் செய்தால் நன்றாக இருக்குமென்பது எனது எண்ணம்.
காந்தியடிகள் இறந்து 11 வருடங்கள் கழிந்த பின்புதான் கல்யாணம் தன்னை இல்லறத்திற்கு தகுதியாக்கினார். அதாவது அவர் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு அப்போது 37 வயது முடிந்து விட்டது. 1959 ல் அவரது திருமணம் நடந்தது. அவரது மனைவியின் பெயர் சரஸ்வதி. கல்யாணத்தை விடஎட்டு வயது இளையவரான அவரும் ஒரு தமிழ்ப் பெண். 1988ல் உயிர் நீத்தார். அவருக்கு இரண்டு மகள்கள். கல்யாணம் இங்கே மூத்த மகள் மாலினியுடன் வசித்து வருகிறார். அவரது இளைய மகள் கேளம்பாக்கத்தில் வசிக்கிறார்.
மாலினிக்கு ஒரு மகன். நளினிக்கு இரண்டு மகள்கள். சத்ய சாய்பாபாவின் பக்தையான மூத்த மகள் பெரும்பாலும் பாபாவின் அமைப்பு சார்ந்த சேவைப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
பிரிட்டிஷ் அரசாங்கத்தில் ஒழுக்கமும் அபிமானமும் கொண்டிருந்த ஒரு எழுத்தராக இருந்த கல்யாணம், காந்தியடிகளின் செயலாளராக மாறிய கதை மிகவும் வேடிக்கையானது.
1942 ல் வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். அருகிலிருந்த அண்டை அயலார் கூறிய ஒரு வேலையை கல்யாணம் மிகச் சரியாகச் செய்தார். அந்தச் சிறிய பகுதியிலுள்ள ஒவ்வொரு வீட்டின் முன்கதவின் அடியிலுள்ள சிறு இடைவெளி வழியாக ஒரு துண்டு பிரசுரத்தை யாரும் பார்த்து விடாத அளவில் போட வேண்டும். துண்டு பிரசுரத்தில் என்ன எழுதி இருக்கிறதென்று கல்யாணம் அறிந்திருக்கவில்லை. ஏற்றுக் கொண்ட அந்தப் பணியை செவ்வனே செய்து முடித்தார். மூன்றாவது நாள் அவ்வாறு துண்டுப் பிரசுரத்தை ஒரு வீட்டில் போட்டுக் கொண்டிருந்த போது காவல் துறையினர் கையோடு கல்யாணத்தை பிடித்தனர். அப்போதுதான் அரசாங்கத்திற்கு எதிரான செய்தியைக் கொண்டது அது என்றும், சுதந்திரப் போராட்டத்தில் காந்தியடிகளை ஆதரிக்க வேண்டிய விண்ணப்பத்துடனான துண்டு பிரசுரம் அது என்பதையும் கல்யாணம் தெரிந்து கொண்டார்.
சுதந்திர போராட்ட வீரர் என்ற அளவில் கல்யாணம் கைது செய்யப் பட்டார். முதலில் கன்னாட் பிளேஸிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டார். பின் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப் பட்டு 9 மாத கடுங்காவல் தண்டனை அவருக்கு விதிக்கப் பட்டது. ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களுடன் ரயில் மூலமாக லாகூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கல்யாணம் நினைவு கூர்ந்தார்.
“உண்மையாகச் சொல்லப் போனால் சுதந்திரப் போராட்டம் என்றால் என்னவென்றோ எங்கே எதற்காக நடக்கிறதென்ற எந்த விபரமும் அப்போது நான் அறிந்திருக்கவில்லை. சிறையில் எனக்கு எந்த மோசமான அனுபவங்கள் ஏதும் நிகழ்ந்து விடவும் இல்லை. என் மீது விதிக்கப்பட்டக் குற்றச்சாட்டில் எந்த விதமான அக்கிரமமான குற்றம் ஏதுமில்லை. பிரிட்டிஷ்காரர்கள் ஒழுக்கமானவர்கள். அன்று போலவே இன்றும் அவர்களின் கண்ணியத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
ஆனால் அந்த நிகழ்வினைத் தொடர்ந்து நான் செய்து வந்த வேலை போய் விட்டது. குடும்பப் பொறுப்புக்கள் ஏதுமில்லாது இருந்ததால் அதனால் எனக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. பணிப் போதையானது எப்போதும் என் ரத்தத்தில் ஊறி இருந்ததால் சும்மா இருப்பதென்பது எனக்கு மிகவும் கடினமானது. ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் வேலை கிட்டியது. சேவை சார்ந்த பணிகள் செய்ய எனக்கு மனதில் மிகவும் விருப்பமாக இருந்தது. அந்த நேரத்தில் என்னுடைய தந்தையின் நண்பர் எம்.ஆர்.கோதண்டராமன் என்னை காந்தியின் புதல்வரான தேவதாஸ் காந்தியிடம் அறிமுகம் செய்தார். அப்போது தேவதாஸ் காந்தி டெல்லியில் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் ஆசிரியராக இருந்தார். தேவதாஸ் காந்தியின் கடிதத்தோடுதான் நான் சேவாகிரம் சென்று அந்த ஆஸ்ரமத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். ஆஸ்ரமத்தில் எனது முதல் அனுபவம் விசித்திரமானது. அங்கே வாசலில் ஒரு பூரானைக் கண்டதும் நான் காலணியால் அதை அடித்துக் கொன்றேன். அதைப் பார்த்த ஒரு ஆஸ்ரமவாசி கொதித்துப் போனார்.
“என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்றார்.
“எனக்கொன்றும் புரியவில்லை. விஷப் பாம்பாக இருந்தாலும் அதை அடிப்பதோ கொல்வதோ கூடாதென்பதே ஆஸ்ரம வாழ்க்கையில் தீவிரமாக கடைப் பிடிக்கப்படும் அகிம்சை விதி” என்றும் அவர் விளக்கினார்.
அதுதான் அகிம்சை குறித்து நான் கற்றுக் கொண்ட முதற் பாடம்.
“அன்றிலிருந்துதான் நீங்கள் ஒரு காந்தியவாதியாக மாறினீர்களா?”
இந்த கேள்வியில் கல்யாணம் ஒரு கணம் அதிர்ந்து போனார்.
“நான் காந்தியவாதி அல்ல. நான் காந்தியவாதியாக எப்போதுமே இருந்ததில்லை. நான் காந்தியை பின்பற்றுகிற ஒருவன், அவரை பின்பற்றுவராக காந்தியடிகளுடன் நெருங்கிப் பணியாற்றும் பாக்கியம் பெற்றவராக இருந்தேன். காந்தியை பின்பற்றுபவர் என்பதும் காந்தியவாதி என்பதும் ஒன்றல்ல.”
“என்ன வித்தியாசம்?”
“காந்தியை பின்பற்றுகிறவர் என்றால் அவரது கொள்கையை மதித்து அதை பின்பற்ற முயற்சிப்பவர் என்றாகும். காந்தியவாதி என்றால் காந்தியின் கொள்கைகளோடும் சித்தாத்தங்களோடும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதை குறிக்கும். ஒரு காந்தியவாதியாவதென்பது கடினம். இல்லை. நான் காந்தியவாதி இல்லை.”
“அதற்கு உங்களிடம் என்ன குறை கண்டீர்கள்?”
“நான் ஒரு சைவம். புகை பிடித்ததில்லை. மது அருந்தியதில்லை. பணத்திற்கான பேராசை என்னிடம் இல்லை. காந்தி எனக்கு தருவதாக நிர்ணயித்திருந்த மாத சம்பளம் அறுபது ரூபாய். நான் அதை வாங்கவே இல்லை. உணவு, உடை, தங்குமிடம், மருத்துவ சிகிச்சை, பயணமென எல்லாவற்றையும் ஆஸ்ரமமே கவனித்துக் கொண்டது. பின் எதற்காக எனக்கு பணத்தின் தேவை இருக்கிறது? என்னுடைய வாழ்க்கை ஒரு எளிமையான வாழ்க்கை. இவையெல்லாம் இருந்தாலும் நான் ஒரு காந்தியவாதி அல்ல.”
கருப்பான பெரிய ஃப்ரேமுள்ள கண்ணாடியை கண்ணாடியை முகத்தில் சரியாக மாட்டிக் கொண்டு கல்யாணம் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தார்.
“நான் விபரமாகச் சொல்கிறேன். ஒருவர் வந்து என்னை அடிக்கிறாரென்று வைத்துக் கொள்ளுங்கள். அகிம்சையில் நம்பிக்கை கொண்டவன் என்றாலும். நான் திருப்பி அடிக்க மாட்டேன் என்று உறுதி கூற இயலாது. நான் ஒரு சாதாரண மனிதன், காந்தி கோபப்பட்டு நான் பார்த்ததில்லை. கோபப்படுவதும் வன்முறை என்பார் காந்தி. கோபப்படுவதில்லை என்பதை நம்மால் உறுதியாக ஏற்றுக் கொள்ள இயலுமா? சுவையை மட்டும் கருத்தில் கொண்டு காந்தி உணவு உண்பதில்லை. கொடுத்த வாக்கினைக் காப்பாற்றுவதற்காக காந்தி உப்பை உபயோகிக்காமல் நிராகரித்தார். உப்பை உபயோகிக்காமல் இருப்பதென்பது அத்தகைய ஒரு எளிய காரியமா? வயிற்றிற்கு எவ்வளவோ தேவையோ அதையே காந்தி உட்கொள்வார்.
பசியைத் தணிப்பதற்காகத்தான் உணவு. எனக்கு ஐஸ் கிரீம் வேண்டும். சாக்லெட் வேண்டும். இப்படி எத்தனையோ எனக்கு பிடித்தமானவைகள் இருக்கின்றன. காந்தியவாதியாக இருப்பதென்பது எளிதான காரியமல்ல. நீங்கள் உங்களுக்கு நேர்மையானவராக இருந்தால் உங்களால் உங்களை ஒரு காந்தியவாதியாக கூற இயலாது”
நான் ஆலோசித்துக் கொண்டிருந்தேன்.
சந்ததியை உருவாக்குவதற்கு அல்லாது தாம்பத்ய உறவு கொள்வதை பாவமாக காந்தி விதித்ததைப் பற்றியும், 37 வது வயதில் அவர் பிரம்மச்சரியம் கடைப் பிடித்ததையும், மாணவப் பருவத்தில் நண்பர்களோடு ஆட்டிறைச்சி உண்டதினால் இரவில் வயிற்றிற்குள்ளிருந்து ஆடு கத்தியதாய் அவர் கண்ட கனவைப் பற்றியும், ஏன் நீங்கள் ரயிலில் மூன்றாம் வகுப்பிலேயே யாத்திரை செய்கிறீர்கள்?” என்று கேட்ட போது “நான்காம் வகுப்பு இல்லாததினால்தான்” என்ற அவரது நகைச்சுவை உணர்வு மிகுந்த பதிலினைப் பற்றியும் சிந்தித்து கொண்டிருந்தேன்.
***