இனிய ஜெயம்
ஜெயகாந்தன் வழியே இலக்கியம் சார்ந்த போதம் வந்த கணமே என்னை விட்டு இயல்பாக உதிர்ந்து போன இருவர் பாலகுமாரனும் சுஜாதாவும். சென்ற ஜூலை முழுக்க சும்மா படிக்கலாம் என்ற தினுசில் படிக்காமல் விட்ட பாலகுமாரன் சுஜாதா புனைவுகளை தேடி வாசித்தேன். பால குமாரனை பத்து பக்கம் படிப்பதற்குள்ளாகவே இனி பாடி தாங்காது எனும் கண்டிஷனுக்கு வந்து விட்டேன். மாறாக சுஜாதா இன்னும் வாசிப்புக்கு உரியவராகவே நீடிக்கிறார்.
சுஜாதாவின் முந்தைய கணேஷ் வசந்த் கதைகள் நம்பகத்தன்மை கூடியதாகவும் குறைந்த பட்ஜட்குள்ளும் நடந்தன. அதன் பயனாக தூர்தர்சன் கூட கணேஷ் வசந்த் கதைகளை தொடராக எடுக்க முடிந்தது. 2000 பின்னர்தான் நிலவரம் கலவரம். யவனிகா என்றொரு கதை. சென்னை பேட்டைக்குள் வில்லன்கள் கொத்தாக இறங்கி மெஷின் கன்னால் தட தட என சுட்டு ஆட்களை சரிக்கிறார்கள். காரில் சேஸ் (அதுவும் சென்னைக்குள் :) ) செய்து வந்து சுடுகிறார்கள். கணேஷ் வசந்த்க்கு மட்டும் ஏதும் ஆகாமல் மற்ற எல்லோருக்கும் செத்து போகிறார்கள். பசூக்காக்கள் வெடிக்க, போலீஸ் ஜீப்கள் lic பில்டிங் உயரத்துக்கு எகிறி குட்டிக் கரணம் அடிக்கின்றன. அவர் பாஷையிலேயே சொல்ல வேண்டும் என்றால் இந்த கதையில் வாத்தியார் ச்சும்மா ஸ்டாண்டிங் அன் பிளேயிங். பாலையா காரு படம் தோற்றது. இப்படித்தான் பின்னர் வந்த பல கதைகளும். எனவே சரியான நேரத்தில்தான் என்னை விட்டு சுஜாதா உதிர்ந்திருக்கிறார் என்று பட்டது.
சுஜாதா ஓடிய ரேஸ் கோர்ஸ் இன் சிக்கல் அது. கேளிக்கை, இன்னும் இன்னும் என்று கேட்டு இறுதியாக அது வாசகனின் வாழ்க்கைவெளியை விட்டு அவன் பகல்கனவின் வெளிக்குச் சென்று அதை சுரண்டும் நிலைக்கு வந்தே தீரும். அதுவே சுஜாதாவுக்கும் நிகழ்ந்திருக்குறது. இந்த நிலை நோக்கிய சரிவை சுஜாதா முன் உணர்ந்தே இருக்கிறார். இந்த நிலையை ‘திருப்பி அடிக்க’ ஆன வரை முயன்றிருக்கிறார். வெகு மக்கள் இதழ்களில் துணுக்குகள் என்ற அளவில் சிறுகதை வடிவம் சுருங்கி கொண்டிருந்த சூழலில் தொடர்ச்சியான தூண்டில்கதைகள் வழியே செவ்வியல் கதை வடிவத்தை மீட்டு அதை மீண்டும் ஸ்தாபிக்க முயன்றார். ஸ்ரீரங்கத்து தேவதைகள் தொகுப்பு வரை அவர் அந்த முயற்சியில் தொடர்ந்து இருந்தார் என்றே தெரிகிறது.
சுஜாதா இலக்கியவாதியா எனும் சர்ச்சை சுஜாதா தீவிர இலக்கிய புனைவுகள் பலவற்றை வெகுமக்கள் களத்தில் நின்று மதிப்பிட்டு ,அவற்றுக்கு விமர்சனம் எழுதத்துவங்கிய காலத்திலேயே துவங்கி விட்டது. சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்கள், கற்றதும் பெற்றதும் போன்ற முகநூல் முன்னோடி துணுக்குப் பதிவுகள் வழியே அவர் எழுதிய இலக்கிய குறிப்புகள் முக்கியமானவை. ஆனால் அவற்றின் இடம் கூட, அவர் எழுதிய இலக்கிய விமர்சனத்தின் தொகுப்பான விவாதங்கள் விமர்சனங்கள் நூலுக்கு இல்லை. காரணம் சுஜாதா கேளிக்கை தீவிரம் இரண்டு இலக்கிய வகைமையையுமே ஒரே தொழில்நுட்ப ‘மேதமேட்டிக்ஸ்’ இன் இரு வேறு ‘லாஜிக்’ என்றே புரிந்து வைத்திருக்கிரார். அதில் நின்றே இலக்கிய விமர்சனத்தையும் செய்திருக்கிறார்.அவர் எழுத்துக்கள் அளவே, வெகு மக்களுக்கு அவர் தீவிர இலக்கியத்தை ‘பரிந்துரை’ செய்த வகைமையும் தீவிர இலக்கியவாதிகளால் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றாகவே இருந்திருக்கும். சுஜாதா வழியாகவே உங்களை வாசித்து அறிந்தேன் என்று ஒரு வாசகன் சுந்தர ராமசாமி வசம் சொன்னால் அவர் உள்ளே என்ன நினைப்பார் என்று இப்போது புன்னகையுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
சுஜாதாவின் சிக்கல் எழுதும் கலையை அவர் இறுதி வரை வெறும் தொழில் நுட்பமாக, மூளை கொண்ட திறமைகளில் ஒன்றாக கண்டதுதான். இதை கடந்து தொழில் நுட்பமே எனினும் உண்மை வாழ்வின் தருணத்தை தீவிரத்தை அவ்விதமாகவே கையாண்ட ஒரு 15 கதைகள், சில நாவல்கள், சில நாடகங்களை நிச்சயம் எழுதி இருக்கிறார். இதற்கு வெளியே 90 to 95 வாக்கில் உலகமயமாக்கல் விரைவு பெற்று, கணினி யுகம் துவங்கிய நிலையில், மேல் படிப்புக்காக அப்போது எல்லோருக்கும் தெரிந்த வேலைக்கு உத்திரவாதம் சொல்லும் வழக்கமான பணிகளுக்கான படிப்பை உதறி, கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்து, இந்த படிப்பு அளிக்கும் எதிர்காலம் என்ன என்ற தெளிவே இன்றி, கணிப்பொறி படிப்புக்குள் நுழைந்த ஒரு தலைமுறைக்கு சுஜாதா நம்பிக்கை அளிக்கும் ஆதர்சமாக இருந்தார். தனது சொந்தக் கல்வி, செய்த பணி,மற்றும் செயல்பாடுகள் வழியே அதற்கு அவரே உதாரணமாகவும் இருந்தார். அப்படி எழுந்து வந்த அந்த ஒரு தலைமுறைக்கு எல்லா நிலையிலும் சுஜாதா மறுக்க இயலா ஆதர்சமே.
இந்த வரிசையில் 2010 துவங்கி ஒவ்வொரு முறை ஷங்கர் படம் வரும்போதும் சுஜாதாவின் ‘இன்மை’ தெரிவதாக முழங்கியபடி ஒரு 50+ வயசு சுஜாதா வாசக கோஷ்டி ஒன்று கிளம்பி வரும். உண்மையில் அவர்களின் ஐக்யு எந்த அளவில்தான் இருக்கிறது? சினிமா என்பது ஒட்டு மொத்தமாக 20 கிராஃப்ட்களின் சங்கமம், அதில் நானும் சம்பளம் வாங்கி கொண்டு அளிங்கும் பணி அதில் ஒரு கிராஃப்ட், என்று சுஜாதாவே எழுதிய பிறகும், (மீடியா ட்ரீம்ஸ் என்ற நிறுவனத்துக்கு எடுத்த சினிமாவில் அதன் கதை, திரைக்கதை ,வசன இலாக்கா மொத்தமும் சுஜாதா கையில். அதில் ஒரே ஒரு படம் கூட வெற்றி இல்லை) இந்த பிலாக்கணம்.
சுஜாதாவின் இருப்பு என்பது அவரை ஆதர்சமாக கொண்ட மேலே சொன்ன ஒரு தலைமுறையில் இருக்கிறது. அவர் விட்டுச்சென்ற வாழ்க்கைப் பெறுமதி கொண்ட நல்ல சில புனைவுகளில் இருக்கிறது. சினிமாவை சுஜாதா, சோம்பேறிகள் மற்றும் முட்டாள்களின் கேளிக்கை என்றே அறிவார்ந்த கணேஷ் வழியே அவ்வப்போது கூறி வந்திருக்கிறார். தமிழ் சினிமா குறித்த அவர் மதிப்பீடும் அதுதான். அந்த சோம்பேறி முட்டாள்களின் பிரதிநிதியாக நின்று இன்றைய சினிமாவில் சுஜாதாவின் இன்மையை கண்டு சொல்லும் அந்த ’நுட்டுப்பமான’ வாசகனை பார்வையாளனை, சுஜாதாவின் வசந்த் கண்டால் அவனை “இது வெறும் மூணு சர்க்கியுட் சிம்ப்பிள் போர்டு பாஸ், நம்ம ஜிம்மியே இதை டீல் பண்ணிரும்” என்றே சொல்வான்.
கடலூர் சீனு