ஆனியாடி
கணியாகுளம்,பாறையடி…
இன்றுடன் ஆடி முடிகிறது. குமரிமாவட்டத்திற்கு ஆனி,ஆடி முக்கியமான மாதம். ஆனியாடிச்சாரல் என்று சொல்வோம். இளமழை இருக்கும். வானில் முகில்கள். நாள் முழுக்க மங்கலான ஒளி. வாழைநடவுக்கு உரிய மாதம். நீரே ஊற்றவேண்டாம், அதேசமயம் மிகைமழையாகி அடி அழுகிப்போகவும் வாய்ப்பில்லை. கீரை, மரவள்ளி உட்பட பல தாவரங்களுக்கும் தொடக்கம். ஆடிப்பட்டம் தேடிவிதை என்று தமிழ்நாட்டில்கூடச் சொல்வார்கள்.
பார்வதிபுரத்திற்கு ஆடி கூடுதலாக முக்கியமானது. ஆடியில் பொதுவாகவே காற்று சுழன்றடிக்கும். பார்வதிபுரம் இரண்டு மலைகளின் நடுவே இருக்கும் இடைவெளியில் அமைந்துள்ளது. ஆகவே விஸ்வரூப வாய் ஒன்று காற்றை ஊதுவதுபோல் காற்று வீசும். நடப்பவர்களை காற்று பிடித்து தள்ளிவிடும். ஒற்றைக்காலில் நின்று பார்ப்பேன். விழச்செய்துவிடும்.
பார்வதிபுரத்திற்கு குடிவந்து கால்நூற்றாண்டு ஆகப்போகிறது. என் குழந்தைகள் தொடக்கப்பள்ளியில் படித்த நாட்களில் அவர்களுடன் பாறையடி, கணியாகுளம் பகுதிகளில் ஆனியாடியில் நீண்ட நடைபயணம் மேற்கொள்ளும் வழக்கமிருந்தது. காற்றில் செல்வது கடலில் நீந்திச்செல்வதற்கு நிகராக இருக்கும். காற்றலைகள். காற்றுநுரை. காற்றின் பெரும்சுழி. காற்றின் கொந்தளிப்பு.
இந்த ஆடியில் பெரும்பாலும் நான் நாகர்கோயிலில் இல்லை. ஜூலை 18 அன்று கிளம்பியவன் ஆகஸ்ட் 5 ஆம் தேதிதான் வந்தேன். ஆடி அதற்குள் இறுதியை எட்டிவிட்டிருந்தது. என் நினைவுகள் பரவிய கணியாகுளம் நிலக்காட்சி இன்றில்லை. மாபெரும் ஆறுவழிச்சாலை வந்துகொண்டிருக்கிறது. ஏரிகள் நிரப்பப்பட்டுவிட்டன. வயல்களின் மேல் சாலை மண்குன்றின்மேல் என செல்கிறது
ஆனால் எங்கும் வானம் அப்படித்தான் இருக்கும். அதுபோதும் என்று தோன்றியது. ஆகவே கிளம்பி தனியாக ஒரு மாலைநடை சென்றேன். கருமுகில்வானம் குளிர்ந்து விரைத்த தோல்பரப்புபோல் இருந்தது. நான் சுவிட்சர்லாந்தில் மேயும் மாடுகளைப் பார்த்த நினைவு வந்தது. பெரிய மாடுகள். அவற்றின் கழுத்தில் மிகப்பெரிய மரத்தாலான மணிகள். அவற்றின் உடலில் மென்மையான அடர்ந்த மயிர்ப்பரப்பு காற்றில் புல்வெளிபோல் அலையடித்தது. வானத்தில் முகில்கள் அப்படி அலைபாய்ந்தன. கழுத்துமணி போல மலைகள்.
தலையில் என் எஞ்சிய மயிர் படபடத்துப் பறந்தது. என் நெற்றிமேல் ஒரு துள்ளும் தழல் போல. குளிர்ந்த தழல். என் ஆடைகள் என்னை உதறிவிட்டு எழுந்து பறந்துவிடுவனபோல் துடிதுடித்தன. இருபதாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை நான் என் சட்டைப்பித்தானை கழற்றிவிட்டு கைகளை தூக்கினேன். கழற்றிக்கொண்டுசென்றுவிட்டது காற்று.
சிக்கந்தர் ஷா அவர்களின் தர்கா பசும்புல் நடுவே அப்படியே இருந்தது. எங்கிருந்தோ மலைகளையே கரைத்துக்கொண்டுவந்து கொட்டியதுபோல் மாபெரும் சாலைமேடு. எவருமில்லை. இந்தக் குளிர்காற்றில் இங்கு வர ஒரு பித்து தேவை. தன்னந்தனியாக மலைகளுடன் நின்றிருந்தேன். நுரையீரலை நிறைத்து விம்மச்செய்துகொண்டிருந்தது ஆடி.
அன்றெல்லாம் என் குழந்தைகளுடன் நடை வருவேன். செல்பேசி சிறியது. நோக்கியா. மழைவந்தால் அதை பூவரச இலையில் பொதிந்து பைக்குள் வைத்துக்கொண்டு குளிரக்குளிர நடப்போம். நான் அவர்களுடன் பேசிய சொற்களெல்லாம் எழுந்தெழுந்து வந்தன. அவை நினைவென என்னுடன் எஞ்சியிருக்கும்.
பார்வதிபுரம் கால்வாயில் குளிர்ந்த கரிய நீர் ஓடிக்கொண்டிருந்தது. அந்தியின் அணையும் ஒளியில் மரங்கள் நிழலுருக்களாக அதில் அசைந்துகொண்டிருந்தன. இன்னொரு நாள், இன்னொரு காற்றின் அலை.