2024 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கி- தூரன் விருதுவிழா இன்று தொடங்குகிறது. இன்று மதியமே நண்பர்கள் கவுண்டச்சிப்பாளையம் (ஈரோடு) ராஜ்மகால் அரங்குக்கு வந்துவிடுவார்கள். மாலை ஐந்து மணிக்கு உரையாடல் அமர்வு தொடங்கும். மாலை அங்கேயே மண்டபத்தில் தங்குவோம். மறுநாள் காலை 10 மணிக்கு நிகழ்வு தொடங்கும்.
தமிழ் விக்கி என்னும் கலைக்களஞ்சியத்தை தொடங்கும் எண்ணம் வந்தது 2021ல். தமிழ் விக்கிப்பீடியாவில் எவர் வேண்டுமென்றாலும் பதிவுகளை எப்படி வேண்டுமென்றாலும் திருத்தலாம் என்னும் நிலை உருவாக்கிய குளறுபடிகளுக்கு மாற்றாக தமிழ்விக்கியை உருவாக்கினோம். பண்பாடு- இலக்கியம் மட்டுமே இப்போதைக்கு எங்கள் களம். அதில் முழுமையான விரிவான பதிவுகளைப் போடுவதே நோக்கம்.
தமிழ்விக்கி 7 மேஎ 2022 காலையில் அமெரிக்காவில் வாஷிங்டன் டிசி, பிராம்பிள்டன் நடுநிலைப் பள்ளி ஆஷ்பர்ன் நகரில் நிகழ்ந்த விழாவில் வெளியிடப்பட்டது.தமிழக நாட்டுப்புறவியல் முன்னோடி பிரெண்டா பெக் திருக்குறளை மொழிபெயர்த்த தாமஸ் ஹிட்டொஷி புரூக்ஸ்மா தமிழ் அறிவியல் எழுத்தை நவீனத்தமிழுக்குக் கொண்டு வந்தவர்களில் முன்னோடியாகிய பேரா வெங்கட்ரமணன் மற்றும் அமெரிக்க நூலகத்தலைவர் சங் லியு ஆகியோர் இதில் கலந்துகொண்டார்கள்.
தமிழ் விக்கியில் தொடக்கத்திலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்ட விரிவான பதிவுகள் இருந்தன. தேர்ந்த அறிஞர்களின் ஆசிரியர்க்குழுவும், தொடர்ச்சியாகப் பணியாற்றும் பயிற்சி பெற்ற பங்களிப்பாளர் அணியும், சிறந்த தொழில்நுட்ப அணியும் கொண்ட அமைப்பு இது.
(இந்த கலைக்களஞ்சியம் முற்றிலும் இலவசப்பங்களிப்பால் நடைபெறுவது. நான் அறிந்தவரை இலவசப்பங்களிப்பாக நிகழும் அமைப்புகளே செயல்திறன் மிக்கவை. தமிழ்விக்கியின் தொழில்நுட்ப அணியினர் இந்தியாவிலேயே முதல்நிலை வகிப்பவர்கள். அவர்களுக்கு பணம் அளிக்கவேண்டும் என்றால் லட்சங்கள் தேவைப்படும்)
இந்தக் கலைக்களஞ்சியம் தொடங்கப்பட்டபோது பலவகையான எதிர்ப்புகள், வசைகள், ஏளனங்கள் வந்து குவிந்தன. தமிழ்ச்சூழலின் பொதுவான நோய்க்கூறு அது. எச்செயலுக்கும் இங்கே எதிர்ப்பே எழும். நேர்நிலை நோக்கமும், உண்மையான தீவிரமும் கொண்ட செயல்கள் சாமானியர்களின் பெருந்திரளுக்கு ஓர் அச்சத்தை அளிக்கின்றன. அவர்களின் சிறிய வாழ்க்கை, சிறிய கனவுகளை அவை மேலும் சிறிதாக்குகின்றன என்பதே காரணம்
தமிழ்விக்கிக்கு எதிராக அரசியல் அணிசேரல்கள், முத்திரைகுத்தல்கள், சதிக்கொள்கைகள்,அறிவுஜீவித்தனமான பாவனைகளில் எழுதப்பட்ட அவதூறுகள், போலி அறச்சீற்றங்கள், நடுநிலை பாவனையின் பசப்பல்கள் என பல சிறுமைகள் அன்று பதிவாயின. முகநூலில் மட்டும் ஆயிரம் பதிவுகளுக்குமேல் எழுதப்பட்டுள்ளன. எங்கள் தொடக்கவிழாவே திட்டமிட்டுச் சீர்குலைக்கப்பட்டது. அதை கொண்டாடி மகிழ்ந்தனர். நாங்கள் அதை அறைகூவலாகக்கொண்டு நடத்தி முடித்தோம்.
நம் நண்பர்கள் அன்று கொதித்தனர், வருந்தினர். தேவையான வினாக்களுக்கு மட்டும் நான் அல்லது ஆசிரியர்க்குழு பதில்சொன்னால்போதும், பிறர் எங்கும் எப்பதிலும் சொல்லக்கூடாது என்றும் முடிவெடுத்தோம். நம் செயல் இங்கு நிற்கும், அது நம்மைக் காட்டும் என்றேன். வெண்முரசு எழுதத் தொடங்கும்போதும் நான் வசைபாடப்பட்டேன், இன்று அது கோபுரம் என நிலைகொள்கிறது. சிறுமதியர்களின் குரல்களை அவர்களே இன்று நினைவுகூரமாட்டார்கள் என்றேன்.
இது மூன்றாமாண்டு. தமிழ் விக்கியின் இடம், பங்களிப்பு பற்றி இன்று அறிவியக்க அறிமுகம் கொண்ட எவரும் ஒரு சொல் எதிராகக் கூறிவிட முடியாது. அதன் பக்கங்களே சான்று. அது தமிழ் அறிவுச்சூழலில், தமிழ் கல்விச்சூழலில் தன்னை அழுத்தமாக நிறுவிக்கொண்டுவிட்டிருக்கிறது. அதனுடன் தொடர்புடைய ஒவ்வொரு நண்பருக்கும் இன்று கொண்டாட, பெருமிதம்கொள்ள, தருக்கி நிமிர உரிமை இருக்கிறது.
அந்த ஆண்டே தூரன் விருதை அறிவித்தோம். தமிழ்விக்கிக்காக ஒரு நிகழ்வு என்னும் எண்ணம் இருந்தது. அப்போது நண்பர் வாசு சுவாமி ஒரு தொகை அளிப்பதாகச் சொன்னார். அதை ஆய்வாளர்களுக்கான விருதாக அளிக்கலாமென முடிவு செய்தோம். பெரியசாமித் தூரன் தமிழ்க் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய மேதை. பெருஞ்செயல் ஆற்றிய எந்த தமிழரையும் போல இழிவுசெய்யப்பட்டு, அவதூறு செய்யப்பட்டு, கௌரவிக்கப்படாமல் மறைந்தவர். அவர் பெயரை நிலைநிறுத்த இந்த விருது உதவட்டும் என முடிவெடுத்தோம். தமிழ்விக்கி தூரன் விருது என இந்த விருது அமைந்தது
முதல் விருது ஆய்வாளர் கரசூர் பத்மபாரதி அவர்களுக்கு. இரண்டாம் ஆண்டுக்கு இரு விருதுகள். மு. இளங்கோவனுக்கு ஆய்வாளருக்கான விருது. இளம் ஆய்வாளருக்கான விருது எஸ்.ஜே.சிவசங்கருக்கு. 2024 ஆம் ஆண்டுக்கான விருது ஆய்வாளர் மோ.கோ. கோவைமணி அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
தமிழ் விக்கி விழா – புகைப்படங்கள்
தமிழ் விக்கி, வாசகர்கள் என்ன செய்யலாம்?