தூரன் விருது, நிகழ்வும் தங்குமிடமும்

நாலைந்து மின்னஞ்சல்கள் தமிழ் விக்கி தூரன் விருதுவிழாவில் தங்குவதைப் பற்றி வந்தன. அவர்களுக்கு நிகழ்ச்சி தொடங்குவது, தங்குவது பற்றிய குழப்பங்கள் இருப்பதை கண்டேன். ஆகவே இந்த பொதுப்பதில்

ராஜ் மகால் கல்யாணமண்டபம் (சென்னிமலைச் சாலை, ஈரோடு) நிகழ்வுக்கான வளாகம். அதுதான் அரங்கு. தங்குமிடமும் அதுவே. அனைவரும் அங்கேயே தங்குவோம்.

விஷ்ணுபுரம் விழாக்கள் நாங்கள் ஒன்றாகக்கூடுவதற்கான தருணங்களும்கூட. அதை நான் தவறவிடுவதில்லை. மூத்த நண்பர்கள் ஒரு சிலர் இப்போது பல நிகழ்வுகளை தவறவிடுகிறார்கள், நீண்டகாலச் சலிப்பு. இந்த விழாக்கள் தொடங்கி 15 ஆண்டுகளாகப் போகின்றன. ஆனால் புதியவர்கள் அவர்களின் இடத்திற்கு வந்துள்ளனர். என்னைப் பொறுத்தவரை அனைவரையும் பார்க்கவும் பேசவுமான வாய்ப்பு

இந்த விழாக்களை நாங்கள் கூடுமானவரை குறைந்த செலவில், மாற்றியக்கமாகவே நடத்துகிறோம். ஆகவே வசதிகள் பெரிதாக இருக்காது. ராஜ் மகால் திருமண மண்டபத்தில் சில அறைகளும் பெரிய கூடமும் உண்டு (ஏஸி செய்யப்பட்டது) அங்கே அறைகள் பெரும்பாலும் பெண்களுக்கு. வாடகைக்கு எடுக்கப்பட்ட படுக்கைகளில் ஆண்கள் தங்கவேண்டும். நிகழ்வில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்களுக்கு ஈரோடு விடுதிகளில் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான் எப்போதும் மண்டபத்திலேயே தங்குவேன்.

14 ஆகஸ்ட் அன்று இரண்டு நிகழ்வுகள் இருக்கும். அதன்பின் அங்கேயே தங்குவோம். இரவு உரையாடல்கள் தன்னியல்பாக நிகழும். மறுநாள் காலை 10 மணி முதல் அமர்வுகள். மதியம் இசை நிகழ்வு. மாலை விருது வழங்கும் விழா. பெரும்பாலானவர்கள் அன்றே கிளம்பிவிடுவார்கள். நான் அடுத்தநாள் கிளம்பி நாகர்கோயில் மீள்வேன்.

இந்நிகழ்வில் முதன்மையானதாக நான் எண்ணுவது எழுதுபவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கவும் பேசவும் வாய்ப்பமைகிறது என்பதுதான். ஆகவேதான் இரவு ஒரே தங்குமிடம் என்னும் திட்டம். இயல்பான அந்த உரையாடல்கள் வழியாக நிகழும் இலக்கிய அறிமுகம் முக்கியமான ஒன்று. தூரன் விழாவைப் பொறுத்தவரை இது பண்பாட்டாய்வுக்கான களம்.

பங்கெடுப்பவர்கள் முன்னரே பதிவுசெய்யவேண்டும். அது உணவு, படுக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்ய எங்களுக்கு உதவிகரமானது.

தமிழ்விக்கி- தூரன் விருதுவிழா, தங்குமிடம் முன்பதிவு

முந்தைய கட்டுரைகனவின் ஆழம்- கடிதம்
அடுத்த கட்டுரைதமிழ்விக்கி-தூரன் விழா: சின்னமனூர் ஏ. விஜய் கார்த்திகேயன்