விண்திகழ்க!

  1. மானஸாவின் காலடியிலிருந்து…
  2. மழைப்பாடகர்கள்
  3. எஞ்சும் நிலங்கள்
  4. தெய்வத்தளிர்
  5. பெண்பேராற்றல்
  6. முகிலில் எழுதல்!
  7. எண்முக அருமணி
  8. வில்துணை வழிகள்
  9. அளித்துத் தீராதவன்
  10. களம் அமைதல்

  11. படைக்கலமேந்திய மெய்ஞானம்
  12. காட்டின் இருள்
  13. முடிவிலி விரியும் மலர்
  14. மயங்கியறியும் மெய்மை
  15. தளிர் எழுகை
  16. அன்னைவிழிநீர்
  17. அறிகணம்
  18. ஊழ்நிகழ் நிலம்
  19. எங்குமுளப் பெருங்களம்
  20. மைவெளி
  21. ஊழின் விழிமணி
  22. அனைத்தறிவோன்
  23. விழிநீரின் சுடர்
  24. மதத்தலை எழுதல்
  25. கனவின் நுரை

முதலாவிண் என்னும் இந்நாவலுடன் வெண்முரசு நாவல்நிரை முடிவடைகிறது. 2014ல் இந்நாவலை எழுதத் தொடங்கிய இடத்தில் இருந்து அறிவாலும், அதைக்கடந்த அகப்பயணத்தாலும் நெடுந்தொலைவு வந்துவிட்டேன். இன்று நான் உணரும் பெருமிதமும் பெரும்பணிவும் ஒன்றே என்று தோன்றுகிறது. இங்கு வந்துசேர நேர்ந்தது குருவருளே.

இந்நாவல்நிரையின் தொடக்கத்தில் இந்நாவலை நான் எழுதிமுடித்தால் எதை அடையக்கூடும் என கற்பனை செய்திருக்கிறேன், அதை வியாசரின் பெருநிலை என எழுதியிருக்கிறேன். செல்லுமிடத்தை முன்னரே கற்பனையால் செல்லமுடிந்திருக்கிறது. இன்று நான் உணர்வது தனிமையும் ஒன்றென்றிருத்தலும் கலந்த ஒரு நிலை.

‘மூவாமுதலா உலகம்’ என  சீவகசிந்தாமணி தொடங்குகிறது.  வளராத, முதலென இல்லாத உலகம். நான் விண்ணை தொடக்கமற்றது என எண்ணுகிறேன். முடிவற்றது என்பதைவிட அது நெஞ்சை உறையவைக்கும் ஒரு கருத்து. ஆகவே இத்தலைப்பு, முதலாவிண்.

பாண்டவர்களின் விண்புகுதலுடன் இந்நாவல் முடிகிறது. உண்மையில் இந்நாவல் இதுவரை வந்த பிறநாவல்களின் தொகுப்புக்கூற்று மட்டுமே. மூலமகாபாரதத்தில் இருந்து இது வேறுபடுவது ஒன்றிலேயே. அதிலுள்ளது புராணக்கதை. இதிலுள்ளது வேதாந்த மெய்மை. ஒவ்வொருவருக்கும் அவரவருக்குரிய கைவல்யநிலை, முழுமுதல்தூய்மைநிலை, உண்டு என்பது அது.

வெண்முரசின் நாவல்நிரை ஒவ்வொன்றும் ஒவ்வொரு படி. நான் ஒவ்வொன்றினூடாகவும் ஏறி ஏறி வந்துசேர்ந்திருக்கிறேன். பெரும் அலைக்கழிப்புகள் வழியாக, கசப்புகள் சோர்வுகள் வழியாக, கண்டடைதலின் பெருந்தருணங்கள் வழியாக. இது ஒரு ஊழ்கப்பயணம். ஊழ்கத்தில் இறுதிப்படி என்பதுகூட பிறிதொன்றுக்கு ஏறிச்செல்லும் படிதான்.

இத்தருணத்தில் உணரும் சொல்லின்மையை கடந்துவந்தே இச்சில சொற்களைச் சொல்கிறேன். இது என் நிலத்தில் முடிவுற்றதில் ஓர் நிறைவுணர்வு எழுகிறது. எப்போதும் அவ்வண்ணமே நிகழ்கிறது எனக்கு. இனி இதிலிருந்து நான் மீண்டு வேறெங்கேனும் செல்லவேண்டும். விலகியபின்னரே இதை என்னால் பார்க்கமுடியும்.

இந்நாவலை என் பிரியத்துக்கும் மதிப்பிற்கும் உரிய ஸ்ரீனிவாசன் –  சுதா  இருவருக்கும் உரித்தாக்குகிறேன். இந்த நீண்ட அல்லல்மிக்க பயணத்தில் அவர்கள் என்னுடன் இருந்தனர். தங்களை முழுதளித்தனர். இதெல்லாம் ஒருபிறவியில் நிகழ்ந்து முடிவதல்ல.

அனைவருக்கும் நன்றி, ஆசிரியர்களுக்கு வணக்கம்.

ஜெ

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : [email protected] 
Phone 9080283887)

‘முதலாவிண்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

முந்தைய கட்டுரைஎஸ். இஸ்மாலிஹா
அடுத்த கட்டுரைLet’s start from here.