- மானஸாவின் காலடியிலிருந்து…
- மழைப்பாடகர்கள்
- எஞ்சும் நிலங்கள்
- தெய்வத்தளிர்
- பெண்பேராற்றல்
- முகிலில் எழுதல்!
- எண்முக அருமணி
- வில்துணை வழிகள்
- அளித்துத் தீராதவன்
- படைக்கலமேந்திய மெய்ஞானம்
- காட்டின் இருள்
- முடிவிலி விரியும் மலர்
- மயங்கியறியும் மெய்மை
- தளிர் எழுகை
- அன்னைவிழிநீர்
- அறிகணம்
- ஊழ்நிகழ் நிலம்
- எங்குமுளப் பெருங்களம்
- மைவெளி
- ஊழின் விழிமணி
- அனைத்தறிவோன்
- விழிநீரின் சுடர்
- மதத்தலை எழுதல்
களிற்றியானைநிரையில் அஸ்தினபுரி மீண்டெழுதலை எழுதிய உடனே அடுத்த நாவலாகிய இதில் துவாரகையின் பேரழிவை எழுத நேர்ந்தது. இந்த அடுக்குகள் விந்தையானவை. இவை நமக்குள் எவ்வகையிலேயோ இவ்வாறெல்லாம் அமைந்துள்ளன. உண்மையிலேயே இந்திரப்பிரஸ்தம் (டெல்லி) இன்றுமுள்ளது- ஒருவேளை அதன் வரலாற்றிலேயே ஆற்றலுடன் இப்போதுதான் திகழ்கிறது. ஆனால் துவாரகை நீருள் உறைகிறது.
துவாரகை வேர், இந்திரப்பிரஸ்தம் மரம் என்று சொல்லலாமா? அது ஆழ்ந்திருக்கவேண்டும் என்று கொள்ளலாமா? துவாரகை ஆழுளம் இந்திரப்பிரஸ்தம் நினைப்புளம் என்று எண்ணலாமா? துவாரகை நீரில் மூழ்குவதை எழுதும் தயக்கம் எனக்கிருந்தது. ஏனென்றால் நான் களிற்றியானைநிரை வழியாக மீண்டு வந்திருந்தேன். ஆனால் எழுத எழுத கட்டற்ற மூர்க்கத்துடன் நான் அதை நிகழ்த்தினேன்.
இந்நாவலை எழுதும்போதுதான் மிகமிகத் தொடக்கத்திலேயே நான் கிருஷ்ணனின் மறைவுக்கணத்தை எனக்குள் நிகழ்த்திக்கொண்டிருந்தேன் என உணர்ந்தேன். அதை நோக்கி இம்மி இம்மியாக நகர்ந்துகொண்டிருந்தேன். அது ஓரு பேராலமரம் வீழ்வது மட்டும் அல்ல. அது பல்லாயிரம் முளைகளாக எழுந்து புதியகாடென பெருகுவதும்கூடத்தான். மானுடனாக மடிந்து தெய்வமாக கிருஷ்ணன் எழுவதுதான் அந்நிகழ்வு. ஆகவே துவாரகையின் அழிவு எனக்கு துயரளிக்கவில்லை. அவன் உடல்போல ஒரு சிற்பப் பேருடல் அது. அவன் உடல்நீத்தால் அதுவும் அழியவேண்டும். அது அவன் காட்டிய மாயை. மாயாவி சென்றபின் அது நீடிக்க முடியாது. உண்மையில் அவன் பிறந்ததைச் சொல்லும் நீலம் முதல் இக்குறிப்பு நுணுக்கமாக வந்துகொண்டே இருக்கிறது.
இந்நாவல் கிருஷ்ணனின் மைந்தரை விரிவாக சித்தரிக்கிறது. அவர்கள் ஹரிவம்சம் உட்பட எந்தப்புராணத்திலும் விரிவாகச் சித்தரிக்கப்பட்டவர்கள் அல்ல. அவர்களின் சில வாழ்க்கைச் செயல்கள் மட்டுமே அவற்றிலுள்ளன. நான் முன்பு விரிவாக துவாரகையை உருவாக்கியிருந்தேன். வாசகர்களுக்கும் அதன் மொத்தச் சிற்ப அமைப்பு நன்கு தெரிந்திருக்கும். அதன் சுழல்வழிப்பாதைகள், மேலே அமைந்த கிருஷ்ணனின் பளிங்குமாளிகை, அங்கிருந்து பார்த்தால் தெரியும் அலைகடல், அந்நகரின் மாபெரும் நுழைவாயில். கடல் நாவுநீட்டி நகரை உண்கிறது இந்நாவலில், ஒரு சிறு முட்டையை விழுங்கும் மாநாகம்.
இந்த அழிவின் நாடகம் ஏன் தேவையாகிறது ? ஏன் அவனை தெய்வமென கொண்டாடும் புராணங்கள்கூட இக்கதைகளைப் பேணுகின்றன. முடிவின்மை, முன்பின்மை வெளிப்படுவது காலப்பெருவெளியில் மட்டும் அல்ல. மானுடரின் குணங்களிலும்கூடத்தான். அதனூடாகவே இங்கே வாழ்க்கை அலையலையாக தன்னை நிகழ்த்திக்கொள்கிறது. துவாரகையின் அழிவினூடாக கிருஷ்ணன் தன் பேருருவான நாராயணனை கண்டடைந்தான் என்று சொல்லலாம்.
இந்நாவலை எந்த உணர்வுக்கொந்தளிப்பும் இல்லாமல் ஒரு சீட்டை அடுக்கி விரித்து அடுக்கி விளையாட்டுக்காட்டும் மாயவன் போல் எழுதி முடித்தேன். அப்போது நான் கிருஷ்ணனுக்கு மிக அணுக்கமானவனாக இருந்தேன்
ஜெ
(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : [email protected]
Phone 9080283887)