விழிநீரின் சுடர்

  1. மானஸாவின் காலடியிலிருந்து…
  2. மழைப்பாடகர்கள்
  3. எஞ்சும் நிலங்கள்
  4. தெய்வத்தளிர்
  5. பெண்பேராற்றல்
  6. முகிலில் எழுதல்!
  7. எண்முக அருமணி
  8. வில்துணை வழிகள்
  9. அளித்துத் தீராதவன்
  10. களம் அமைதல்

  11. படைக்கலமேந்திய மெய்ஞானம்
  12. காட்டின் இருள்
  13. முடிவிலி விரியும் மலர்
  14. மயங்கியறியும் மெய்மை
  15. தளிர் எழுகை
  16. அன்னைவிழிநீர்
  17. அறிகணம்
  18. ஊழ்நிகழ் நிலம்
  19. எங்குமுளப் பெருங்களம்
  20. மைவெளி
  21. ஊழின் விழிமணி
  22. அனைத்தறிவோன் 

வெண்முரசின் இந்நாவலைத்தான் நான் எழுத எழுதக் கண்ணீர்விட்டபடி நிகழ்த்தினேன். இந்தக் கதைமாந்தர்கள் எவரும் என் ஆக்கங்கள் அல்ல. அவர்கள் தொன்ம மாந்தர்கள், அல்லது வரலாற்று மாந்தர்கள். நான் மறுஆக்கமே செய்தேன். ஆனாலும் அவர்கள் என் கைகளினூடாக நிகழ்ந்தனர். மானுடத்தன்மையை நான் அவர்களுக்கு அளித்தேன்.அவர்களின் சாவும் என் கைகளினூடாக நிகழ்ந்தது. இந்நாவலில் நீர்க்கடனும் அவ்வாறே நிகழ்கிறது.

நீர்க்கடன்கள் ஏன் உருவாகி வந்தன? எரியூட்டியபின் எஞ்சுவன நீருக்கு அளிக்கப்பட்டன. எரி அனைத்தையும் ஐந்துபருப்பொருட்களில் கரைக்கிறது. எஞ்சுவன நீருக்குரியவை. எனில் நினைவுகளும் கனவுகளும் கூட நீருக்குரியவைதான். நீரிலேயே அவை கரையமுடியும். இந்தியாவின் பெருநதிகளில் பல்லாயிரமாண்டுகளாக நீத்தோர் கரைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவை இந்நிலமெனும் முகம் வழியாக ஒழுகும் கண்ணீர்க்கோடுகள். ஒவ்வொரு நதிக்கரையிலும் நான் நீர்க்கடன்களைப் பார்த்ததுண்டு. அம்முகங்கள் துயரத்தால் மேன்மைகொண்டிருப்பவை என்று நினைத்ததுண்டு. துயரம் ஒரு நோன்பு. துயரம்  வழியாக மானுடர் விடுதலைபெறுகின்றனர்

பேரழிவுக்குப் பிந்தைய பெருந்துயரை எழுதுகையில் அது தழல்விட்டெரியவில்லை. மாறாக குளிர்ந்து உறைந்து அசைவற்று நின்றது. அந்த நாட்களில் நான் இருந்த நிலையை இப்போது நெஞ்சுநடுக்குடன் நினைவுகூர்கிறேன். எப்போதும் என் உடலுக்குள் மிகு எடைகொண்ட ஓர் உலோக உருளை இருந்துகொண்டிருப்பதுபோல. என் கால்கள் அந்த எடையால் உடையுமளவுக்கு அழுத்தம் கொள்வதுபோல. உயிர்வாழ்வதே பெருமுயற்சியுடன் நிகழ்த்திக்கொள்ளவேண்டிய ஒன்றென ஆகியிருந்தது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் சாவு உடனிருந்தது. அன்றெல்லாம் நான் மையச்சாலைகளில் நடைசெல்வதில்லை. வண்டிகளுக்கு முன்னால் பாய்ந்துவிடுவேன் என அஞ்சினேன். நூறுமுறையேனும் பாய்ந்துவிடும் தருணத்தை கடந்து மீண்டிருக்கிறேன்.

இந்நாவலை எழுதும் நாட்களில் என் நினைவிலிருந்து மூத்தார் எழுந்து வந்துகொண்டே இருந்தனர். அவர்களெல்லாம் என் இளமை நிகழ்ந்த அந்நிலத்தில் வாழ்வதாகவே எண்ணிக்கொண்டிருந்தேன். அவர்களைப் பற்றிய என் நினைவுகளெல்லாமே அரைநூற்றாண்டுக்கு முந்தையவை. அவர்கள் மண்மறைந்திருப்பார்கள். ஆனால் வாழ்ந்துகொண்டும் இருந்தனர். அவர்களில் ஒருவராக, அவர்களுடன் வாழ்ந்தவராக, என்னுள் என் அப்பா வயக்கவீட்டு பாகுலேயன் பிள்ளை அவர்களும் இருந்தார். இந்நாவல் எழுதும் காலம் முழுக்க அவர் என்னுடன் இருந்தார். நான் சாவுக்குத் தவித்தபோதெல்லாம் கண்காணா வெளியில் இருந்து அவர் என்னை பதைப்புடன் உந்தி திரும்ப வாழ்க்கைக்கு தள்ளிவிட்டார்

அவர்மேல் நான் கொண்டிருந்த எல்லா கசப்புகளையும் இந்நாவல் அழித்தது. மெய்யாகவே இதுதான் அவரை நான் நீரில் மூழ்கி நினைப்பொழிந்த தருணம். பின்னர் காசிக்குச் சென்று அச்சடங்கை முழுமையாக்கிக் கொண்டேன். இந்நாவலுக்குப் பின் அப்பா என்னில் முற்றிலும் புதியவராகப் பிறந்தெழுந்தார். இந்நாவல் நிரை முடியும் தருவாயில் நான் எழுதிய 136 கதைகளில் அப்பா அன்புக்குரிய மனிதராக, எளிய இனிய ஆளுமையாக மீண்டு வந்தார். என் வாழ்க்கையில் நான் அடைந்த பெரும் பேறுகளிலொன்று அவ்வருகை. இந்த வாழ்க்கையில் எனக்கிருந்த மாபெரும் உளக்குறை அவரை நான் அறியாமலேயே போனது. அது நீங்கியது, நான் விடுதலைபெற்றவனானேன்.

எரிகடனும் நீர்க்கடனும் மானுடர்க்கு உள்ளது. நீர்க்கடனுக்குப் பின் அந்நீரில் மூழ்கி தூயவராக எழவும் முடிகிறது. இந்நாவல் அவ்வகையில் என் அகநீராட்டும்கூட

ஜெ

 

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : [email protected] 
Phone 9080283887)

 

எரிநீர்

நீர்ச்சுடர் வருகை

‘நீர்ச்சுடர்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

நீர்ச்சுடர் – அவல நகைச்சுவை

முந்தைய கட்டுரைதுமிலன்
அடுத்த கட்டுரைசுற்றம் இன்றியமையாததா?