ஈரோட்டில் என் நூல்கள்

அன்புள்ள ஜெ

ஈரோடு புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது. உங்கள் புத்தகங்கள் வாங்குவதற்காக நான் கோபியில் இருந்து சென்றிருந்தேன். கொற்றவை, விஷ்ணுபுரம் வாங்க நினைத்தேன்.  பெரும்பாலும் எல்லா ஸ்டால்களுக்கும் சென்றேன். எங்குமே உங்கள் புத்தகங்கள் இல்லை. ஒரு படம்கூட இல்லை.

கடைகளில் விற்பனையாளரிடம் விசாரித்தேன். ஒருவருக்கு உங்கள் பெயர் தெரியவில்லை. இரண்டு கடைகளில் எரிச்சலுடன் கையை வீசி விலக்கினார்கள்.

கிழக்கு பதிப்பகத்தின் அடுக்குகளில் உங்கள் பழைய நூல்கள் சில இருந்தன. சாயம் மங்கியவை. அவற்றை வாங்கிக்கொண்டேன். ஒரு புத்தகக் கண்காட்சியில் எப்படி உங்கள் நூல்கள் கிடைக்காமல் இருக்கின்றன? விஷ்ணுபுரம் பதிப்பகம் அங்கே கடைபோடவில்லையா?

ரவி சக்திவேல்

அன்புள்ள ரவி

ஈரோடு புத்தகவிழாவில் விஷ்ணுபுரம் கடை இல்லை. அங்கே குறைவாகவே விற்பனை ஆகும். வாடகைக்குக் கடை எடுத்து, ஒருவர் சென்று தங்கி, விற்கும் செலவுக்கு விற்பனை லாபம் இருக்காது.

விஷ்ணுபுரம் என்பது வணிகநிறுவனம், ஆகவே நண்பர்களை அதற்குப் பயன்படுத்திக்கொள்வதில்லை. இதனால் தமிழகத்தின் எந்த புத்தகக் கண்காட்சிகளிலும் எங்கள் கடை இருக்காது. இப்போதைக்கு கோவை, சென்னை மட்டுமே.

தமிழகம் எங்கும் வேறு புத்தக வணிகர்கள் எங்கள் நூல்களை வாங்கி வைக்கிறார்கள். புத்தகவிழாக்களில் என் நூல்கள் அவர்களிடம் கிடைக்கும். ஆனால் அதிகமாக விற்பனையாகும் வணிக எழுத்து, அரசியல் மற்றும் மதநூல்கள் மீதே முதன்மை ஆர்வம். ஆகவே நூல்களை ’டிஸ்ப்ளே’ வைக்க மாட்டார்கள். குவியலாக அடுக்கப்பட்டிருக்கும் நூல்களில் என் நூல்கள் இருக்கக்கூடும். தேடி எடுக்கவேண்டும்.

நான் சென்ற ஆண்டு ஈரோடு புத்தகவிழாவுக்குச் சென்றேன். என் நூல்களுக்காகத் தேடினேன். எங்குமே கண்ணுக்குப் படவில்லை. அதன்பிறகு எங்கள் பதிப்பகத்திற்கு தொலைபேசியி அழைத்து எவரெல்லாம் விற்பனைக்காக வாங்கினார்கள் என்று கேட்டேன். அவர்கள் சொன்ன கடைகளுக்குச் சென்று கேட்டுப் பார்த்தேன். அடுக்க்கட்டிருந்த நூல்களில் ஓரிரு நூல்கள் கண்ணுக்குப் பட்டன.

ஈரோட்டின் பொதுவான மனநிலை, அங்குள்ள பொதுநிகழ்வுகள் சார்ந்தது. அது புகழ்பெற்ற பேச்சாளர்களை ஒட்டியது. அந்தவகையான நூல்களுக்கான இடம் அது.  எனக்கான வாசகர்கள் அங்கே மிகக் குறைவு. மொத்தமாக அப்பகுதியிலேயே ஐம்பது பேருக்குள் இருக்க வாய்ப்பு.

ஈரோடு புத்தகவிழாவில் எல்லா நூல்களையும் விற்கும் சில கடைகளில் என் நூல்கள் இருக்கும். அந்த கடைகள் எல்லா பதிப்பகங்களிலும் இருந்து ஏராளமான நூல்களை வாங்கி குறைவான இடத்தில் அடுக்கி வைத்து விற்பவர்கள். நூல்களை அடுக்கும் முறையும் அவர்களுக்கு தெரியாது. ஆகவே நூல்கள் அங்கே குவிக்கப்பட்டதுபோல் இருக்கும்.

அங்கே நீங்கள் முகப்பட்டைகளை நினைவில் வைத்து தேடியிருப்பீர்கள். அடுக்கப் பட்டிருக்கும் நூல்களில் தேடியிருக்கவேண்டும். அல்லது விற்பனையாளர்களிடம் கேட்டிருக்கவேண்டும். ஒருவேளை சிலருக்கு என் பெயர் தெரிந்திருக்கலாம். நூல்களுக்காகத் தேடுவதில் பிழை இல்லை. அது சுவாரசியமான ஓர் அனுபவம்தானே?

ஏன் நூல்கள் முக்கால்பங்கு நேரடியாக என் வாசகர்களாலேயே வாங்கப்படுகின்றன. என் நிகழ்வுகளிலேயே புத்தகக் கண்காட்சிகள் அளவுக்கே விற்கின்றன. சொற்பொழிவு நிகழ்வுகளிலேயே அரைலட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பதுண்டு. ஆகவே புத்தகவிழாக்களை பெரிதாகக் கருதுவதில்லை.

வரும் ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் ஈரோட்டில் தமிழ்விக்கி -தூரன் விருதுவிழா நிகழ்கிறது. அதில் என் நூல்கள் எல்லாமே கிடைக்கும். அது ஒரு சிறு புத்தகக் கண்காட்சியாகவே இருக்கும். அங்கே அனைத்தையும் நிதானமாகப் பார்த்து வாங்கிக்கொள்ளலாம்

ஜெ

 

பிறவிப்பெருக்குக் குமிழிகள்.

உடையாள்

’வன ஜ்யோத்ஸ்ன’

’வன ஜ்யோத்ஸ்ன’

ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை வான்நெசவு முன்னுரை மலைபூத்தபோது முன்னுரை
ஐந்து நெருப்பு முன்னுரை தேவி – முன்னுரை பொலிவதும் கலைவதும் முன்னுரை
குமரித்துறைவி முன்னுரை எழுகதிர் முன்னுரை முதுநாவல் முன்னுரை
ஆனையில்லா! முன்னுரை தங்கப்புத்தகம் முன்னுரை அந்த முகில் இந்த முகில் முன்னுரை
பத்துலட்சம் காலடிகள் முன்னுரை இருகலைஞர்கள் முன்னுரை உடையாள் முன்னுரை
முந்தைய கட்டுரைVipassana and Renunciation
அடுத்த கட்டுரைகணப்பொழுதில் நிகழ்ந்தவை.