காலசிவம்!

 

”பேஷண்ட் பேரு ஜெயமோகன்?” என்று ஒரு பெண்மணி அழைத்தார்.

என்னுடன் வந்திருந்த ’டைனமிக்’ நடராஜன் எழுந்து “ஆமாங்க…” என்றார்

நான் புன்னகத்துக்கொண்டேன். ஏற்கனவே நீதிமன்றத்தில் ஒருவர் என்னை நோக்கி “அக்யூஸ்ட் ஜெயமோகன், அக்யூஸ்ட் நேம் ஜெயமோகன்! அக்யூஸ்ட் வாங்க!” என அழைத்திருக்கிறார்.

அதற்கு முன்னால் நான் “மலையாளச்சாமி” என பண்டாரங்களாலும் “வட்டன்” என கல்லூரித்தோழர்களாலும், ”சொப்பனம்” என என் காட்டுநண்பர்களாலும் அழைக்கப்பட்டிருக்கிறேன். என் அப்பா என்னை “இவன்” என்பார். பெயரெல்லாம் சொல்லி அழைத்தால் மீண்டும் ஏதாவது நோய் எனக்கு வந்துவிடும் என அவர் அஞ்சியதாக அம்மா சொல்வதுண்டு.

அது அருண்மொழியும் நண்பர் நடராஜனும் இணைந்து எடுத்த முடிவு. அருண்மொழி நீண்டநாளாக “ஒரு மாஸ்டர் செக்கப் செய்யணும்” என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். அவள் நடராஜனிடம் சொல்ல அவர் எல்லாவற்றையும் முடிவுசெய்து விட்டிருந்தார். நீண்டகாலமாக தவிர்த்து, இறுதியில் நான் அவரிடம் என்னை ஒப்படைத்தேன்.

கோவையின் புகழ்மிக்க Kovai Medical Center and Hospital (KMCH) வளாகத்திற்கு இட்டுச்செல்லப்பட்டேன். எனக்கு மருத்துவமனைகள் என்றாலே பீதி. கே.எம்.சி.எச் என்பது ஒரு குட்டி அரசாங்கம். பல கிளைகள், பல துணைக்கிளைகள், முகங்களின் பெருக்கு. எப்போதுமே மானுடமுகங்களில் ஆழ்ந்துவிடுவது என் வழக்கம். ஒவ்வொன்றும் ஒரு கதை. ஒரு பெருநாவல்.

எழுபதுக்கும் மேல் வயதான ஓர் அம்மாள் கையில் ஒரு கைக்குழந்தையுடன் சென்றுகொண்டிருந்தாள். பின்னால் ஒரு பெரியவர் மருந்துகளுடன் சென்றார். என்ன கதை? அவர்களின் மகளா மருமகளா அங்கே படுத்திருப்பது? அதற்குள் எனக்கு அழைப்பு.

டாக்டர் நல்லா பழனிச்சாமி

ரத்தம், சிறுநீர், மலம் சோதனைக்காகக் கொடுத்தேன். என்னை படுக்கவைத்து நெஞ்சிலும் விலாவிலும் காற்றுக்கவ்விகளை பொருத்தினர். அவற்றின் குளிர்ந்த மெல்லிய கைக்குழந்தை முத்தங்கள். ஈஸிஜி முள் துள்ளித்துள்ளி ஓடி வரைந்த என் உடலில் திகழும் காலத்தின் படம்.

அதன்பின் மீண்டுமொரு கருவிக்கு முன் மல்லாந்தேன்.என் ஈரலையும் இதயத்தையும் சிறுநீரகத்தையும் கருப்பு-வெள்ளை படமாகப் பார்த்தேன். என் சிந்தனைகளுக்குத் தொடர்பே இல்லாமல் இதயம் ஒரு தாளத்திலும் நுரையீரல் இன்னொரு தாளத்திலும் இயங்க சிறுநீரகம் ஆழ்ந்த துயிலில் இருந்தது.

‘மிதிநடையன்’ ஓடையென்றாகிச் சுருளும் ஒரு சிறு சாலை. அதில் நான் உடலெங்கும் கவ்விய இணைப்புகளுடன் நடந்தேன். நடக்க நடக்க பாதையின் விசை கூடிக் கூடி வந்தது. அரைமணிநேர இறுதியில் உச்ச விசை. வியர்த்துக்கொண்ட, மூச்சுவாங்கிக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தேன். எங்கும் செல்லாத பயணம். கனவில் ஓடிக்கொண்டிருப்பது போல. என்னால் இந்தப் பயிற்சியைச் செய்யவே முடிந்ததில்லை. நட்சத்திரவிடுதிகளில் என்னால் நடை செல்ல முடியாது. ‘ஜிம்’ சென்று மிதிநடையனில் பயிற்சி செய்யலாம். ஆனால் இந்தப் பொருளின்மையை என்னால் தாங்கமுடியாது என உணந்திருக்கிறேன்.

கே.எம்.சி.எச் அமைப்பின் தலைவர் டாக்டர் நல்லா பழனிச்சாமி என் மதிப்புக்குரிய நண்பர் இயகாகோ சுப்ரமணியம் அவர்களுக்கு அணுக்கமானவர். இயகாக்கோ சுப்ரமணியம் என்னை அழைத்து நலம் விசாரித்தார். நல்லா பழனிச்சாமி அவர்களும் அழைத்து நலம் உசாவினார். டாக்டர் சற்று உடல்நலக்குறைவால் ஓய்வில் இருப்பதாகச் சொன்னார்.

சோதனைகள் முழுக்க ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் உடனிருந்தார். எல்லாவற்றையும் அவர்தான் பார்த்துக்கொண்டார். சிலசமயங்களில் மகனின் இடத்தில் எவரோ இயல்பாக வந்து பொருந்திக்கொள்கிறார்கள். நான் கைகளில் இருந்து கைகளுக்கு அளிக்கப்பட்டுக்கொண்டே இருந்தேன். ஒரு வழியாக மதியவாக்கில் எல்லாம் முடிந்து நாங்கள் தங்கியிருந்த கோவை ஃபார்ச்சூன் சூட்ஸ் அறைக்கு வந்தேன். நல்ல களைப்பு

நான் என்னை இழந்ததுபோல் உணர்ந்தேன். மருத்துவமனையில் என்னை ஓர் உடலாக நானே முன்வைத்ததன் சலிப்பு அது. எப்போதுமே அதை வெறுத்து வந்திருக்கிறேன். நான்கு வயதுக்குப்பின் இன்றுவரை எந்த தருணத்திலும் எந்தவகையான ஒப்பனைகளும் செய்துகொண்டதில்லை. ஆடைகளைக் கூட தேர்வு செய்து கொண்டதில்லை. இந்த உடல் என் ஊர்தி, என் கருவி, நான் இது அல்ல. இதைக் கூர்தீட்டி வைத்துக்கொள்ள முயன்றிருக்கிறேனே ஒழிய போற்றியதே இல்லை.ஆனால் இதுவன்றி பிறிதில்லாமலும் இருந்தாகவேண்டும் இங்கே.

தீவிரமான ஒரு கட்டுரையை எழுதினேன். அதுவும் போதாமல் ஒரு கதையை எழுதி முடித்தேன். மீண்டுவிட்டேன். என்னுடைய இந்த உடலில் இருந்து கொஞ்சம் அகன்றிருந்த ஒன்று மீண்டும் வந்து சிறகு குவித்து அமர்ந்து இயல்பாகப் பொருந்திக்கொண்டது.

மாலையில் மருத்துவமனையில் இருந்து அழைத்திருந்தார்கள். டாக்டர்கள் என்னை பார்க்க விரும்பியதாகச் சொன்னார்கள். அங்கே சென்று டாக்டரைப் பார்த்தேன். என்னுடைய சிறுநீரகம், ஈரல், நுரையீரல், கணையம் அனைத்துமே மிகச்சிறப்பாக இருப்பதாகச் சொன்னார்கள். ரத்த அழுத்தம் இல்லை. சர்க்கரைநோய் இல்லை. சர்க்கரைநோய்க்கு வாய்ப்பும் மிகக்குறைவு.

ஆனால் எல்.டி.எல் எனப்படும் குருதிக்குழாய்களில் உறையுமியல்புகொண்ட ‘கெட்ட கொழுப்பு’ 130 இருக்கிறது. அது அதிகம் என்றார் டாக்டர். அது நாற்பதுக்குள் இருப்பது உயர் இலக்கு. நூறுவரை பரவாயில்லை. மேலே சென்றால் ஆபத்துக்கான வாய்ப்பு. அத்துடன் ,நான் மிதிநடையனில் சென்றபோது இறுதிநிலையில் என் இதயத்துடிப்பில் ஐயத்திற்குரிய சிறிய மாறுபாடு இருந்தது. அதை முழுமையாகச் சோதிக்கவேண்டும் என்றார்.

அங்கிருந்து இன்னொரு காலகட்டத்திற்குள் சென்றேன். உடனே என் இதயம் முக்கியத்துவம் அடைந்துவிட்டது. இதயத்தை மையமாகக்கொண்டு என் மொத்த உடலும், மொத்த ஆளுமையும் வரையறை செய்யப்பட்டுவிட்டதுபோல. இதயமருத்துவர் என்னை படுக்கவைத்துச் சோதனை செய்தார். மூச்சுவாங்குவதுண்டா, நெஞ்சுவலி உண்டா, வேகமாக நடக்கும்போது தலைச்சுழற்சி உண்டா, அவ்வப்போது சோர்வு உண்டா என்றெல்லாம் கேள்விகள்.

எதுவுமே இல்லை என்றேன். நான் எப்போதுமே செயலூக்கநிலையில் மட்டுமே இருப்பவன், சோர்வு என எதையும் எப்போதுமே உணர்ந்ததில்லை. சென்ற நாற்பதாண்டுகளில், ஒவ்வொரு நாளிலும், உடலாலும் உள்ளத்தாலும் தீவிரமாக இல்லாத பொழுது என என ஏதும் எனக்கில்லை. நானே திட்டமிட்டு ஓய்வெடுத்த்துக் கொள்வதுதான் வழக்கம்.

’ஓர் ஆஞ்சியோ சோதனை செய்துபார்க்கலாம்’ என டாக்டர் முடிவெடுத்து என்னிடம் சொன்னார். டாக்டர் நல்லா பழனிச்சாமி என்னை அழைத்து “எந்தப் பிரச்சினையும் தெரியலீங்க… ஒண்ணுமே இருக்க வாய்ப்பில்லை. ஆனா ஒரு வாட்டி ஆஞ்சியோ பாத்திருவோம்…ஒரு திருப்திக்கு…என்ன?” என்றார். ”ஒருவேளை பிளாக் இருக்கலாம். நீங்க ஆக்டிவா இருக்கிறதனாலே சாதாரணமா தெரியாம இருக்கலாம். மாரதான் ஓடுறவங்களுக்கு இந்தமாதிரி சிலசமயம் பிளாக் தெரியாமலேயே இருக்கும்” நான் ஒத்துக் கொண்டேன்.

டாக்டர்களைக் குழப்பியது என் எல்.டி.எல் அளவு, கூடவே நடையின்போது தெரிந்த இதயத்துடிப்பின் மாறுபாடு. டாக்டர் எனக்கு கொலஸ்ட்ராலை தடுக்கும் மாத்திரை, இதயத்துடிப்பை குறைக்கும் மாத்திரை, ரத்தத்தின் அடர்த்தியைக் குறிக்கும் ஆஸ்ப்ரின் மாத்திரை, மற்றும் அமிலச்சுரப்பைக் குறைக்கும் மாத்திரை என நான்கு மாத்திரைகள் எழுதித்தந்தார்.

அருண்மொழிக்குச் செய்தி தெரிந்தால் அதிர்ச்சியடைவாள் என்று நினைத்தேன். அழுவாள் என்றுகூட தோன்றியது. எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் நடராஜனிடம் இருந்து தெரிந்துகொண்டு “நடராஜன் சொன்னார். ஒண்ணுமே இல்ல. ஜாலியா இரு” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள். அதன்பின் வேறுவிஷயங்களை பேசிக்கொண்டே சென்றாள்.

மருந்துக்களுடன் வீட்டுக்கு வந்தேன்.இதயநோய்க்கு மருந்து சாப்பிடக்கூடாது என்று கொள்கை வைத்திருக்கிறேன். எளிதான சாவு அளிப்பது இதயச்சிக்கல். அதை ஏன் தவிர்க்க வேண்டும்? மற்றநோய்களில் வதையுண்டு ஏன் சாகவேண்டும்? ஆகவே மொத்த மாத்திரையையும் அப்படியே தூக்கி கடாசினேன்.

அருண்மொழி பெரிதாக கெஞ்சி மன்றாடுவாள் என எண்ணினேன். “எங்க மாத்திரை?” என்றாள்

”இதை சாப்பிட்டால் என் சிந்தனையே மழுங்கி நான் காய்கறி மாதிரி ஆகிவிடுவேன். சரியா?” என்று கேட்டேன்.

“பிடிக்கலைன்னா வேண்டாம், விட்டிரு” என்றாள்.

என் நண்பர்கள் பதற்றமாக இருப்பதுபோல் இருந்தது. அருண்மொழிக்கு மட்டும் எந்தக் கவலையுமில்லை. வழக்கம்போல வாசிப்பு, சங்கீதம், வாட்ஸப் ஸ்டேட்டஸ் வைப்பது என வாழ்க்கை. நான் இதயம் பற்றி அடிக்கும் ‘டாட் ஜோக்ஸ்’ எல்லாவற்றுக்கும் வெடிச்சிரிப்பு.

டாக்டர்கள் என்னிடம் இதயத்திற்கு வேலை கொடுக்கவேண்டாம், வேகமாக நடப்பதை தவிர்க்கவேண்டும், ஆஞ்சியோ எடுத்தபின் முடிவுசெய்யும்வரை கவனம்தேவை என்றெல்லாம் சொன்னார்கள். அப்படி எந்தச் சிக்கலையும் நான் உணரவில்லை. ஆகவே வீடுதிரும்பியபின் முழுவேகத்தில் ஒன்றரை மணிநேரம் நடந்துபார்த்தேன். அரைமணிநேரம் ஓடினேன். இயல்பாகவே தோன்றியது. தினமும் வேகநடை என வகுத்துக்கொண்டேன்.

ஆனால் அருண்மொழி என் நண்பர் மாரிராஜிடம் சொல்லியிருந்தாள். நான் சென்னை சென்றபோது அவர் விடுதிக்கு வந்து என்னைப்  பார்த்தார். ’ஆஞ்சியோ செய்தே ஆகவேண்டும், ஒன்றுமே இல்லை என உறுதிசெய்துகொள்வதற்காக. ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது, ஆனால் பார்த்தாகவேண்டும். இந்த இதயமருந்துகள், கொலஸ்டிரால் மருந்துகள் மிக மென்மையானவை. குறிப்பிடத்தக்க பக்கவிளைவுகள் அற்றவை’ என்றார்.

 

நான் மையமாகத் தலையாட்டிக்கொண்டிருந்தேன். ஆனால் நம்மை நன்றாக அறிந்த டாக்டர்களுக்கு எங்கே தொடுவது என்று தெரியும். “எல்டிஎல் பிரச்சினைய அப்டியே விட்டிர முடியாது. ஹார்ட் அட்டாக் வந்தா பரவாயில்லை. ஸ்டிரோக் வந்தா என்ன செய்றது? யோசிக்கிறதும் பேசுறதும் பிரச்சினை ஆய்ட்டா ஆபத்தில்ல?” என்றார் மாரிராஜ். நான் மசிந்ததும் மாத்திரைகள் சாப்பிடுவேன் என வாக்குறுதி பெற்றுக்கொண்டார்.

அதற்குள் ஆஞ்சியோ செய்யும் முடிவை நடராஜன் அவரே எடுத்து அருண்மொழியிடம் பேசி உறுதிசெய்துவிட்டிருந்தார். கோவையில் மூத்த இதயநோய் மருத்துவர் ஜே.கே.பி எனப்படும் ஜே.கே.பெரியசாமி அவர்களிடம் நேரம் குறித்து என்னை கூட்டிச்சென்றார்.ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் இதற்காகவே கோவை வந்து என்னுடன் தங்கி, மருத்துவமனைக்கு வந்தார்.

எனக்கு ஜே.கே.பி. எப்படியோ தேவதேவனை நினைவூட்டினார். தன் துறைமேல் ஒருவகையான பெரும் பற்று கொண்டவர்கள் நிபுணர்கள். அவர்களிடம் ஒருவகையான கள்ளமின்மையும், எளிமையும் உருவாகிவிடுகிறது.

ஜே.கே.பி அவர்கள் இதயசிகிழ்ச்சையில் நீண்டகால அனுபவத்திற்குப் பின் இதயநோயாளிகளை மட்டுமே பார்க்கும் ஒரு மருத்துவ ஆலோசனையகம் நடத்துகிறார். ஓர் அழகிய பங்களா.  அதன் முன் வண்டியை நிறுத்தினோம். அவரிடம் நடராஜன் முன்னரே பேசியிருந்தார். இயகாகோ சுப்ரமணியமும் சொல்லியிருந்தார். ஆகவே நேரடியாக உள்ளே சென்றோம்.

டாக்டர் எனக்கு விதவிதமான சோதனைகளைச் செய்தார். ஒரு திரையில் என் இதயத்தை எனக்கு காட்டினார். தன்னைத்தானே அழுத்திவிடுவிக்கும் ஒரு கைச்சுருட்டல். அதிரும் ஒரு பெரிய வண்டு. “பாருங்க. எவ்ளவு அற்புதமான விஷயம். கர்ப்பப்பைக்குள்ளே இருந்தே துடிக்க ஆரம்பிச்சு துடிச்சுக்கிட்டே இருக்கு… எவ்ளவு பெர்ஃபெக்டான மிஷின். இத மாதிரி ஒரு அற்புதம் வேற இல்லை…”

துடிக்கும் காலம்! அந்த துடிப்புகள் முன்னரே எங்கோ எண்ணிக்கையிடப்பட்டுவிட்டனவா? அதைப் பார்க்கப்பார்க்க பீதியூட்டும் ஒரு மர்மத்தையே உணர்ந்தேன். விண்மீன்களை, பால்வழியை பார்க்கையில் உணர்வதுபோல ஒரு மாபெரும் வெறுமை. துளியென உணரும் தனிமை. இன்மையென்றே ஆகி ஒருகணத்தில் விரிந்து விரிந்து பேருருவம் கொண்டு வானென்றாவதுபோல. மெய்யாகவே ஓர் அற்புதம்தான் அது. இனி என்னால் அதை எண்ணாமல் கண்மூடி அமரமுடியுமா?

டாக்டர் ஜே.கே.பி. சொன்னார். “ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனா ஆஞ்சியோ எடுத்திட்டா உறுதிபண்ணிக்கிட்டு மேற்கொண்டு நிம்மதியா இருக்கலாம். இந்த வேரியேஷன் எதனாலேன்னு தெரிஞ்சுகிடறதுக்காக மட்டும்…”

டாக்டர் என்னை அவருடைய அமைப்பைச் சுற்றிக்காட்டினார். மேல்மாடியில் அவர் தன் அன்னை பெயரால் ஓர் இலவச யோகப்பயிற்சி மையம் நடத்துகிறார். “இதயநோய்க்கு முதல் டிரீட்மெண்டே யோகப்பயிற்சிதான். நான் முப்பது வருஷமா ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சது” அவரே இதயத்திற்கு சிறப்பாக உதவுபவை என சில யோகப்பயிற்சிகளை தனியாக அடையாளம் கண்டு வகுத்திருக்கிறார்.

அந்த பங்களாவின் முன்னால் இதயத்திற்கு ஒரு கோயில் கட்டியிருக்கிறார் டாக்டர். நவீனமான சிறு கட்டிடம். அதனுள் மையப்பீடத்தில் இதயத்தின் மாதிரிவடிவம். “ஒவ்வொரு நாளும் நாம கும்பிடவேண்டியது இதைத்தான். கடவுள் இந்த வடிவிலேதான் நமக்குள்ளே இருக்கார்..” என்றார் டாக்டர்

அந்த ஆலயத்தின் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். டாக்டர் அவர் இதயம் பற்றி எழுதிய நூல்களை எனக்கு அளித்தார். இதயநோய் பற்றிய விளக்கங்கள், இதயநோயை தவிர்ப்பதற்கான வாழ்க்கைமுறை பற்றிய ஆலோசனைகள். மிக எளிய நேரடி மொழியில் எழுதப்பட்ட நூல்கள். மிக உயர்தர அச்சில் தயாரானவை.

“எங்கிட்ட வர்ரவங்க பெரும்பாலும் இதயத்தைச் சீரழிச்சபிறகுதான் தேடிவர்ராங்க… அவங்களுக்கு இதைக்குடுக்கிறேன். பெரும்பாலானவங்க வாசிக்க மாட்டாங்க. டாக்டர் எல்லாத்தையும் சரிபண்ணணும்னு எதிர்பார்க்கிறாங்க. டாக்டர் எல்லாத்தையும் சரி பண்ண முடியாது… இதயம் அவங்களோடது…” என்றார் ஜே.கே.பி. “ஒவ்வொருத்தர்ட்டயும் நான் மன்றாடிக்கிட்டே இருக்கேன். இதயத்தைப் பாத்துக்கிடுங்க பாத்துக்கிடுங்கன்னு சொல்றேன். பாதிப்பேர் கவனிக்கிறதே இல்லை”

டாக்டரின் நூல்களை வாசித்தேன். மிக விரிவான ஒரு சித்திரத்தை தொடக்க வாசகர்களுக்காக உருவாக்கும் நூல்கள். அரைநூற்றாண்டு இதயச்சிகிழ்ச்சையில் அவரிடம் கேட்கப்பட்ட ஐயங்கள், அவர் சொல்ல விரும்பும் விஷயங்கள் அடங்கியவை. அவை எனக்கு மேலும் விரிவான ஓர் சமூகசித்திரத்தை அளித்தன. டாக்டர் ஜே.கே.பி போன்றவர்கள் எதிர்கொள்வது இன்றைய இந்தியாவின் பண்பாட்டில் உருவாகும் ஒரு புதிய சிக்கலை.

இந்த நாடு பல நூற்றாண்டுகளாக பஞ்சமும் பட்டினியும் இருந்த தேசம். “நொறுங்கத்தின்றால் நூறு வயசு” என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்ட மக்கள் நாம். “நல்லா சாப்பிடுப்பா” என்று நம் அன்னையர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அம்மாக்கள் பரிமாறினால் நாம் மிதமிஞ்சி சோறு தின்று சாக்குப்பை மாதிரித்தான் எழவேண்டும். அருண்மொழியும் அப்படித்தான் இருந்தாள். அள்ளி அள்ளி வைப்பாள். அவளை வழிக்கு கொண்டுவர எனக்குப் பல ஆண்டுகள் ஆயின. இத்தனைக்கும் முறையாக உணவுகளைப் பற்றி வேளாண்கல்லூரியில் படித்த முதன்மைமாணவி அவள்.

இப்போது கடந்த ஒரு தலைமுறைக்காலமாக இங்கே வறுமை அகன்றுள்ளது. ஆகவே உணவின்மேல் வெறிகொண்டு பாய்பவர்களாக இருக்கிறோம். உணவு என்றால் நமக்கு சுவை அல்ல, கண்மண் தெரியாமல் தின்பதுதான். இங்கே உணவு பற்றி எவர் என்ன பேசினாலும் மக்கள் கூடிவந்து கொண்டாடுவார்கள். பெரும்பலான உரையாடல்கள் தீனி பற்றியவை. தேடித்தின்று அதைப்பற்றி வலைப்பதிவும் காணொளியும்போட்டே சம்பாதிக்கமுடியும்.

இந்நிலை ஐம்பதுகளின் மாபெரும் பொருளியல் சோர்வுக்குப்பின் எழுச்சி அடைந்த எழுபதுகளில் அமெரிக்காவிலும் உருவானது. அமெரிக்காவே தின்னிப்பண்டார நாடாக மாறியது. அடுத்த முப்பதாண்டுகளில் குண்டர்களின், இதயநோயாளிகளின் தொகுப்பாக ஆகியது. அதன்பின்னர்தான் உணவுவிழிப்பு அங்கே உருவானது. அதை மருத்துவர்கள் தொடங்கிவைக்க, ஊடகங்கள் பரப்பின. இன்றைய அமெரிக்காவில் வசதியானவர்கள் குறைவாக உண்பவர்கள், ஆரோக்கியமானவர்கள். ஏழைமக்கள் மிகைத்தீனியர்கள்,பெருங்குண்டர்கள்.

நாமும் அப்படித்தான் ஆகிக்கொண்டிருக்கிறோம். உடலுழைப்பு குறைந்து பெரும்பாலானவர்கள் அமர்ந்து பணியாற்றுகிறோம். ஆனால் தின்று தள்ளுகிறோம். சென்ற முப்பதாண்டுகளில் நம் கண்முன் உணவகத் தொழில் எந்த அளவுக்குப் பெருகியுள்ளது என்று பாருங்கள். இன்று நம் கண்ணுக்குத் தெரியும் உணவகங்களை விட பத்து மடங்கு உணவு இல்லம்தேடிச் செல்கிறது. நாகர்கோயிலிலேகூட ஸ்விகி வகையறாக்களின் வண்டிகள் விரைந்துகொண்டிருக்கின்றன.

விளைவு, மிகை எடை. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், பலவகையான வலிகள், இதயநோய்கள்… இன்று உணவுசார்ந்த விழிப்புணர்வு ஒரு பக்கம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அது நம் சமூகத்தை ஆட்கொண்டிருக்கும் உணவுவெறியுடன் மோதுகிறது. “வாழுறதே சாப்பிடுறதுக்காகத்தானே? எண்சாண் உடம்பும் ஒரு சாண் வயித்துக்காகத்தானே?” என்றெல்லாம் பொதுபுத்தி அந்த விழிப்புணர்வை தோற்கடிக்கிறது.

டாக்டரின் நூலில் இருந்து நான் அறிந்தவை இவை. இன்று எல்.டி.எல் கொழுப்பின் ஆதாரமான காரணமாக இருப்பது செயற்கைநெய் (டால்டா, வனஸ்பதிபோன்றவை). அவை ஓட்டல் உணவுகளில் நிறையவே பயன்படுத்தப்படுகின்றன. பிரியாணி முதலியவற்றில் அதிகமாக. டால்கறி, சப்ஜி, பொங்கல் தொடங்கி பல்வேறு கூட்டுகளில் தாராளமாக. ஏனென்றால் அது சுவையூட்டும், உணவை கேட்டுப்போகவும் வைக்காது. இரண்டாவதாக ஆடு, பன்றி,மாடு போன்ற சிவப்பு இறைச்சி.நான் முன்றையுமே சாப்பிடுபவன் . மூன்றவதாக, பாலாடைக்கட்டி எனப்படும் சீஸ். மேலையுணவு என்றாலே அதுதான். நான்காவதாக பலமுறை கொதிக்கச்செய்யப்பட்ட எண்ணையில் பொரிக்கப்படும் தின்பண்டங்கள்.

எனக்கு எல்.டி.எல் கூடியிருப்பதற்கான காரணம் டாக்டரின் நூலிலேயே தெளிவாகத் தெரிந்தது. நான் சினிமாப்பணிக்காக உயர்தரவிடுதிகளில் ஆண்டில் பாதிநாட்கள் தங்குபவன். அங்குள்ள உணவில் செயற்கைநெய் மிகுதி. அங்கே தங்கியிருக்கையில் நான் சிவப்பு இறைச்சியை காலையுணவாக உண்பேன். அத்துடன் அண்மைக் காலமாக முட்டையின் மஞ்சளையும் உண்கிறேன். ஆகவே எல்.டி.எல் ஏறியிருப்பதில் வியப்பில்லை. தொடர்ச்சியான உணவுக்கட்டுப்பாட்டால் எடையை கட்டுக்குள் வைத்திருக்கிறேன். ஆனால் அதற்காக நல்ல கொழுப்பையும் குறைத்திருக்கிறேன்.

டாக்டர் ஜே.கே.பி. வழிநடத்த நடராஜன் என்னை ராமகிருஷ்ணா ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். அருண்மொழியும், ஜி.எஸ்.எஸ்.வி. நவீனும் வந்தார்கள். அங்கேதான் இதயநோயாளியின் ‘ரோல்’ எனக்கு அமைந்தது. நானும் தீவிரமாக நடிக்க ஆரம்பித்தேன். மேலே ஓர் அறை எனக்காகப் போடப்பட்டது. அங்கே நோயாளிகளுக்குரிய இயந்திரப்படுக்கையில் படுத்தேன். அருண்மொழிச் சிரித்துக்கொண்டு “நீ ஒண்ணும் நோயாளி இல்லை. ஓவரா நடிக்காதே” என்றாள்.

முதலில் கைகளில் மயிர் நீக்கம் செய்யப்பட்டது. என் கையை நானே பார்த்து திடுக்கிட்டேன். என் அருகே நின்றிருக்கும் அன்னியர் ஒருவரின் கை மட்டும் கண்ணுக்குத் தெரிவதுபோல. அந்த துணுக்குறல் தொடர்ச்சியாக இருந்தது.அதன்பின் மருந்துபோட்டு ஒரு குளியல். உடலே எரியும் ஒரு ரசாயனம் அது.

நீலநிறத்தில் ஒரு ஆடையை அளித்தனர். அது துணியாலானது அல்ல, கோவிட்கால முகமூடிகள் செய்யும் தாளினால் ஆனது. அதற்குள் நான் நிர்வாணமாக இருந்தேன்.  என்னை ஒரு சக்கரநாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டு சென்றனர். மின்தூக்கி வழியாக இறக்கி, இடைநாழிகள் வழியாக கொண்டுசென்று, மின்தூக்கியில் ஏற்றி, மீண்டும் இறக்கி…வழியெங்கும் ஆள்கூட்டம். முச்சந்தி வழியாகச் செல்லும் அனுபவம். ஒரு பெண் எனக்குத்தெரியாம்லேயே என்னுடன் செல்பி எடுப்பது எனக்கு தெரிந்தது.

ஆஞ்சியோ செய்யும் அறைக்குள் ஜே.கே.பியும் அவருடைய மாணவர்களும் இருந்தனர். மாணவர்கள் சோதனையைச் செய்ய ஜே.கே.பி. வழிகாட்டினார். கையில் ஊசி போட்டு அதன்வழியாக எதையோ உள்ளே செலுத்தினர். “ஜெயமோகன் இங்க பாருங்க…இதான் உங்க ரத்தத்தோட ஹைவே”

நான் அதைப் பார்த்தேன். ’ஜாம்’ ஏதும் தெரியவில்லை. டாக்டர்கள் அதை கூர்ந்து பார்த்தனர். பேசிக்கொண்டனர். “அவ்ளவுதான் முடிஞ்சிருச்சு…” என்றார் ஜே.கே.பி. நான் என் இதயத்தைப் பார்த்தேன். அதே நிதானமான பிழியல். ஒரு மௌனமான துளித்ததும்பல். சிசிபஸ்! அந்த பாறையை மலைமேல் ஏற்றி, இறக்கி, ஏற்றி, மீண்டும் இறக்கி….

டாக்டர் ஜே.கே.பி சொன்னார். “முதல் விஷயம், எந்த பிளாக்கும் இல்லை. சாதாரணமாக கொஞ்சம் பிளாக் எல்லாருக்கும் இருக்கும். அதுகூட இல்லை. ரத்தக்குழாய்லாம் பெரிசு பெரிசா இருக்கு. வருங்காலத்திலேகூட பிளாக் வர்ரதுக்கு அனேகமா வாய்ப்பு இல்லை. இதயநோய் வர்ரதுக்கு வாய்ப்பு இல்லைன்னே சொல்லலாம்”

நடராஜன் என்னைப் பார்த்து புன்னகைத்தார்.

“இந்த வேரியேஷன் எதுக்காக வருதுன்னு பாத்துட்டோம். ஒரு இடத்திலே ரத்தக்குழாய் கொஞ்சம் அகலமா இருக்கு. அங்க ரத்தம் வேகம் குறையுது. ஒரு இடத்திலே ரெண்டு மஸில் நடுவே ரத்தக்குழாய் கொஞ்சம் அமுங்கியிருக்கு. அங்க ரத்தம் வேகம் கொஞ்சம் கூடுது. அதனாலே அந்த வேரியேஷன் தெரியுது. அது ரெண்டும் பிறப்பிலேயே இருக்கிறது. அதானாலே எந்த பிரச்சினையும் இல்லை. நீங்க பெர்ஃபெக்டா இருக்கீங்க…இப்பவே கெளம்பிப் போறதானா போகலாம்”

என்னை ஸ்டிரெச்சரிலே படுக்கவைத்து மேலே கொண்டுசென்றனர். என் தலைக்குமேலே முகங்கள் சுழன்றன. கட்டிடங்கள் அகன்றுவிரிந்தன. அப்படியே மெல்ல படுக்கைக்கு நகர்ந்தேன். அந்த காகித ஆடையை கழற்றி மறுபடியும் ஜீன்ஸ், சட்டை அணிந்து ’பேஷண்ட்’ நிலையில் இருந்து ’ஜெயமோக’ நிலைக்கு மீண்டேன்.

அருண்மொழியிடம் டாக்டர் சொன்னதை விரிவாகச் சொன்னேன். “பாத்தியா, வெய்ன் விரிஞ்சிருக்கு…நான் சொன்னதைக் கேட்டு ஒழுங்கா இருந்தா இப்டி ஆயிருக்குமா?” என்று சொல்வாள் என நினைத்தேன். ஆனால் சட்டென்று முகம் கன்றிப்போனது. கண்கள் கலங்க, “இப்பதான் நிம்மதியா இருக்கு. நான் எவ்ளவு கவலைப்பட்டேன் தெரியுமா? குமாரகோயில் போயி வேண்டிக்கிட்டேன்” என்றாள். என் தலைமேல் கைவைத்து “இனிமே ஒண்ணுமில்லை…” என்றாள்.

அன்று அந்தியிலேயே திரும்பிவிட்டோம். விடுதியறைக்கு கொண்டு விட்டுவிட்டு நடராஜன் கிளம்பிப் போனார். ஜி.எஸ்.எஸ்.வி நவீனும் அருண்மொழியும் சைதன்யாவும் உணவகம் தேடிச்சென்றனர். நான் தனியாக இருந்தேன். அனைத்தில் இருந்தும் மீள விரும்பினேன். என் உள்ளத்திற்கு ஒரு குளியல் தேவைப்பட்டது. மொழியால் நீராடுதல்.

ஆழத்து அன்னை என்ற கட்டுரையை எழுதி வலையேற்றினேன். என் நண்பர்களின் படங்களை அதில் இணைத்துக்கொண்டே இருந்தேன். வேதசகாயகுமார், குமரிமைந்தன்… பலர் இன்றில்லை. ஒவ்வொரு முகமாக என் முன் எழுந்து அவர்கள் என் உடனிருப்பதைச் சொல்லிக்கொண்டிருந்தன. கட்டுரையை முடித்தபின்னரும் அகம் அடங்கவில்லை. அந்நினைவுகள் வழியாக, கடலடியுலகம் சார்ந்த பழையகனவுகளில் இருந்து ஒரு கதையையும் எழுதி முடித்தேன். இரவு பதினொன்றரை மணி.

உள்ளம் முழுமையாக அடங்கிவிட்டிருந்தது. மின்னஞ்சல்களை, செய்திகளைப் பார்த்தேன். நண்பர் அந்திமழை இளங்கோவன் மாரடைப்பால் மறைந்த செய்தி வந்திருந்தது. ஆனால் அந்தமனநிலையில் பெரிதாகத் துயரோ இழப்போ தோன்றவில்லை. “ஆம்” என எனக்கே சொல்லிக்கொண்டேன். ஓர் அஞ்சலிக்குறிப்பையும் எழுதினேன்.

கண்களை மூடிக்கொண்டு சற்றுநேரம் படுத்தேன். என் இதயத்துடிப்பு கேட்கலாயிற்று. விண்மீன்கள் மின்னும் கடுவெளிப்பெரும்பரப்பின் நடுவே மிகமெல்லச் சுழன்றபடி இருக்கும் கருந்துளையின் மையத்தில் திகழும் தாளம். காலசிவம்.

 

முந்தைய கட்டுரைதமிழ்விக்கி-தூரன் விழா: வே. பிரகாஷ் இளையராஜா
அடுத்த கட்டுரைCan I practice various yoga traditions simultaneously?