கவிஞர் இளங்கோ கிருஷ்ணனுக்கு பொன்னியின் செல்வன் பாடல்களுக்காக, சிறந்த இந்தியமொழிப் பாடலாசிரியருக்கான ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் 3 ஆகஸ்ட் 2024, சனிக் கிழமை 2024 ல் நடைபெற்ற 69வது Filmfare விருது விழாவில் அவ்விருது அளிக்கப்பட்டது. ‘அகநக’ மற்றும் ’வீரா ராஜ வீர’ ஆகிய பாடல்கள் பரிசீலனையில் இருந்து, ‘அகநக…’ பாடல் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டது.
சினிமாப்பாடல்கள் மட்டுமல்ல சினிமாக்களேகூட மிகத்தற்காலிகமானவை. அலையலையாக வந்துகொண்டே இருக்கும் அவை ஒன்றை ஒன்று மறைக்கின்றன. அவற்றின் ரசிகர்கள் மேலோட்டமான கவனம் மட்டுமே கொண்ட, உடனுக்குடன் இடம் மாறிச்செல்லும் போக்குடைய, பெருந்திரள். அதைக் கடந்து நினைவில் நீடிக்கும் ஒரு சினிமாவோ, பாடலோ அழியாவரம் பெற்றுவிட்டதென்று பொருள்.
நான் சென்ற 2,3 மற்றும்4 ஆகஸ்டில் செல்பேசித் தொடர்பு இல்லாத மலைப்பகுதியில் இருந்தேன். அங்கே இருந்த 75 பேரில் மூன்றுபேர் வீரா ராஜ வீர, ஒருவர் அககக ஆகிய பாடல்களை அழைப்புக்காக வைத்திருந்தனர். அவை கேட்டுக்கொண்டே இருந்தன. (அகநக வைத்திருந்தவர் காதலில் விழுந்தவர். திருமணமான பிறகும் வைத்திருப்பார் என நம்பலாம்). அப்போதுதான் இளங்கோ கிருஷ்ணனின் குறுஞ்செய்தி தாமதமாக வந்துசேர்ந்தது. அவருக்கு வாழ்த்து தெரிவிக்கையில் இதை குறிப்பிட்டேன்.விருது அந்த ஏற்புக்கான ஓர் அடையாள அறிவிப்பு மட்டுமே
இளங்கோவுக்கு வாழ்த்துக்கள்