பெண்ணெழுத்து, பாலியல்,நீலி

நீலி- இதழ் ஆகஸ்ட்

அன்புள்ள ஜெ

நீலி ஆகஸ்ட் இதழ் பற்றி நீங்கள் வாட்ஸப்பில் அனுப்பிய செய்தியை வாசித்தேன். நான் அந்த இதழை தொடர்ச்சியாக வாசிக்கிறேன். நீங்கள் சொன்னதுபோல இந்த இதழ் எல்லா வகையிலும் முக்கியமானது. மிக விரிவான கட்டுரைகள் உள்ளன. 

நீலி இதழின் சாதனை என்பது மறைந்துபோன பல தமிழ்ப்பெண் படைப்பாளிகளை முன்வைத்தது என நினைக்கிறேன். அசலான புனைகதைப்படைப்புக்கள் இல்லை என்பதை நீலி இதழின் குறையாகச் சொல்வேன். அத்தகைய எழுத்துக்களும் தொடர்ச்சியாக வெளிவரும் என்றால் மிகுந்த மகிழ்ச்சி.  மிக முக்கியமான ஓர் இதழ். எதிர்காலத்தில் இதன் இடம் மிகவும் மதிப்பிடப்படும். 

அண்மையில் முகநூலில் ஒரு விவாதம் நிகழ்ந்தது . வணிகக்கேளிக்கை எழுத்துக்களை எழுத முற்படும் ஒரு பெண் எழுத்தாளரின் சிறுகதை நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்று அங்கே அவை இலக்கியத்தரமாக இல்லை என்று உங்கள் நண்பர் செல்வேந்திரன் பேசினார். அவர் அங்கே சென்றிருக்கக்கூடாது என்பதே என் எண்ணம். ஒரு நூலின் வெளியீட்டுவிழாவிலேயே அதை முழுமையாக நிராகரித்துப் பேசுவது அழகல்ல. ஆனால் மிகவும் பதமாகவே தன் கருத்தை தெரிவித்துள்ளார்

நான் சொல்லவருவது அந்த வகையான ‘Soft porn- Mills and Boon’ வகையான எழுத்து தேவையில்லை என்றல்ல. அந்த வகையான எழுத்தின் தேவை உள்ளது, ஆகவே எழுதப்படுகிறது. ஆனால் அவர்களிடமிருக்கும் அந்த பிடிவாதம் ஆச்சரியமளிப்பது. எதையுமே படிக்க மாட்டோம், எந்தவகையிலும் எதையும் தெரிந்துகொள்ள மாட்டோம், அதுவே எங்கள் தகுதி என்னும் அந்த பிரகடனம் கடுமையான சோர்வை அளிப்பது. நீலி இதழையே செல்வேந்திரன் அந்த உரையில் குறிப்பிட்டார். இத்தனை ஊக்கத்துடன் அந்த இதழ் வெளிவருகிறது. இணையத்தில் சச்சரவிடும் பெண்களில் பத்து சதவீதம்பேர் அதை வாசித்தாலே மிகப்பெரிய மாற்றம் வந்துவிடும். இணையத்தில் Soft porn எழுதும்வாசிக்கும் பெண்களில் ஒரு சதவீதம் பேர் வாசித்தாலே அந்த இதழ் முக்கியமானதாக ஆகிவிடும். அந்த எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை.

சக்தி

அன்புள்ள சக்தி,

நான் புதியதாக எழுதவரும் படைப்பாளிகள் பற்றி கடுமையாக எதிர்க்கருத்து சொல்வதில்லை. ஏனென்றால் அது அவர்களை நான் எண்ணியிராதபடி பாதிக்கும். பிடித்திருந்தால் கருத்துரைப்பது, இல்லையேல் பேசாமலிருந்துவிடுவது மட்டுமே என் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ஆனால் இது என் ஐம்பது வயதுக்குமேல் உருவான வழக்கம். ஆனால் அதற்கு முன் கடுமையாகக் கருத்துக்கள் சொல்லிக்கொண்டிருந்தேன்.

ஆனால் ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்கள் கடுமையாக மதிப்பிட்டு கருத்துச் சொல்லி, விவாதிக்கவேண்டும் என விரும்புகிறேன். கொஞ்சம் அடிதடி அக்கப்போர் ஆனாலும் பரவாயில்லை. நாங்கள் இளவயதினராக இருந்தபோது அப்படித்தான் விமர்சித்து சண்டைபோட்டோம். என் தலைமுறையினரான கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், பாவண்ணன், சுரேஷ்குமார இந்திரஜித் அனைவரிடமும் அப்படி விமர்சனப் பூசல் எனக்கிருந்தது. இன்றைக்கு ஒருவரை ஒருவர் பார்த்து அவற்றை எல்லாம் எண்ணிச் சிரித்துக்கொள்கிறோம்.

‘எழுதவந்ததும் ஊக்கப்படுத்தவேண்டும்’ என்பது ஓர் அபத்தமான கூற்று. அதிலும் ‘பெண்கள் இப்போதுதான் எழுதவந்துள்ளனர்’ என்பதைப்போல அசட்டுத்தனம் வேறில்லை. தமிழில் நவீன இலக்கியம் உருவானபோதே பெண்கள் எழுத வந்துவிட்டனர், ஆண்களை விட அவர்களே எண்ணிக்கையில் மிகுதி. இப்போது எழுதுபவர்கள் ஐந்தாம் தலைமுறைப் பெண்எழுத்தாளர்கள். இலக்கியத்தில் அப்படியெல்லாம் சலுகைகள் இல்லை. ஒருவர் தன் சொந்த அழகியல் மதிப்பீட்டை, கருத்தை நேரடியாக முன்வைப்பதே முறையானது.

அதிலும் இலக்கியத்தின் அடிப்படைகளில் சமரசம் செய்துகொள்ளலாகாது. ஆனால் ஓர் எழுத்தை விமர்சனம் செய்வதாக இருந்தால் அதற்குச் சில நிபந்தனைகள் உள்ளன.

  • ஓர் எழுத்து  இலக்கிய முயற்சி என்னும் எண்ணம் நமக்கு இருக்கவேண்டும். விமர்சனத்திற்கு அது தகுதிபெறுவது அவ்வாறுதான். அம்முயற்சி மேலும் கூர்மைகொள்ளவே நாம் விமர்சிக்கிறோம். நம் விமர்சனம் இலக்கியம் என்னும் பொதுவான அறிவியக்கத்தை முன்னெடுப்பதாகவே அமையவேண்டும்.
  • நம்மையறியாமல் சிலசமயம் தனிநபர்த்தாக்குதல் வரலாம். சிலசமயம் போலித்தனங்களைச் சுட்டிக்காட்டுகையில் நாம் எல்லை மீறலாம். சீற்றமோ எள்ளலோ எண்ணியதைவிட அதிகமாக வெளிப்படலாம். நாமெல்லாம் இலக்கியவாதிகள், மிகையுணர்ச்சி நம் சிக்கல். ஆனால் நமக்கே நம் மீது ஒரு விமர்சனப்பார்வை இருக்கவேண்டும்.
  • இலக்கிய முயற்சியிலுள்ள தோல்விகளை நாம் கடுமையாகத் தாக்கக்கூடாது. ஏனென்றால் இலக்கிய ஆக்கங்களில் தோல்விகள் எப்போதும் எவருக்கும் நிகழும். அது எழுதுபவனின் கட்டுப்பாட்டில் இல்லை. தோல்விகளை மதிப்பிடவும், காரணங்களைக் கண்டறியவுமே முயலவேண்டும்
  • இலக்கியம் அல்லாத எழுத்துதான் பெரும்பகுதி இங்குள்ளது. அதன் நோக்கம், அது செயல்படும் தளமும் வேறு. ஓர் எழுத்து இலக்கிய முயற்சியே அல்ல, வெறும் கேளிக்கைஎழுத்து அல்லது வணிக எழுத்து என்றால் பொருட்படுத்தலாகாது.

செல்வேந்திரன் அந்நூல்வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருக்கலாகாது என நான் அவரிடம் சொன்னேன். ஆனால் வழக்கமாக நிகழ்வதுதான் அப்போதும் நிகழ்ந்தது என்று அவர் சொன்னார். அவரை அழைத்தவர் நண்பர். ஆகவே செல்ல ஒப்புக்கொண்டார். ஆனால் காரில் கிளம்பிச்செல்லும்போதுதான் நூலை வாசித்தார். கடுமையான ஏமாற்றம். ஆனால் செல்வதைத் தவிர்க்க முடியாது. மென்மையாக தன் ஒவ்வாமையைச் சொல்லிவிடலாம் என எண்ணினார். அப்படித்தான் ஆரம்பித்தார். ஆனால் அத்தகைய ஒரு எழுத்தை அங்கு வந்திருந்த இலக்கியவாதிகள் கொண்டாடியது அகத்தில் எரிச்சலை ஊட்டிக்கொண்டே இருந்தது.  மெல்ல மெல்ல பேச்சில் உத்தேசிக்காத கடுமை உருவாகிவிட்டது. அதை தடுக்கமுடியாது. இத்தகைய நிகழ்வுகள் இலக்கியத்தில் எப்போதுமே நிகழ்கின்றன. இந்த தன்னியல்புத் தன்மைதான் இலக்கியச்செயல்பாட்டை உயிருடன் வைத்துள்ளது.

தொடர்ந்து நிகழ்ந்தது முகநூல் விவாதம். இலக்கியவிவாதம் அல்ல. முகநூல் விவாதங்கள் முகநூலை விட்டு வெளியே செல்வதே இல்லை. அவை எவ்வாறு நிகழவேண்டும் என்பதை முகநூலின் அமைப்புதான் முடிவெடுக்கிறது. முகநூலுக்கு வெளியே உள்ள சுட்டிகளைக்கூட அங்கே விவாதிப்பவர்கள் பார்ப்பதில்லை. எதை விவாதிக்கிறார்களோ அதைக்கூட வாசிப்பதில்லை, அதைப்பற்றிய முகநூல் ஒற்றைவரிகளில் இருந்தே மேலே பேசுகிறார்கள். பெரும்பாலும் தனிநபர் தாக்குதல்கள். சான்று, செல்வேந்திரனின் அந்த உரை. அத்தனை ஆயிரம்பேர் பேசி, கருத்திட்ட அந்த உரைக்கு ஐந்தாயிரம் ‘ஹிட்’ கூட தேறவில்லை.

அந்த நூல் பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. இரண்டுகதைகளை மட்டும் படித்துப் பார்த்தேன், மென்பாலியல். ஆனால் அந்தக்கதைகளிலுள்ள பாலியல் சித்தரிப்பு மிக மென்மையானது, தமிழின் வழக்கமான அளவை விடவும் குறைவானது என்பதே என் எண்ணம். அந்தவகையான எழுத்துக்கு இங்கே தேவை இருக்கலாம், எழுதப்படலாம். அதில் பிழை இல்லை. ஆனால் அது இலக்கியம் அல்ல, வணிக எழுத்து என்பதே நான் சொல்ல வருவது.

ஓர் இலக்கிய ஆக்கத்திலுள்ள பாலியல் சித்தரிப்புக்கும் இதைப்போன்ற மென்பாலியல் எழுத்துக்கும் பெரிய வேறுபாடுண்டு. இலக்கியத்திலுள்ள பாலியல் சித்தரிப்பு வாழ்க்கையின் ஓர் அரிய தருணத்தையோ நுணுக்கமான உளநிலையையோ சொல்வதற்காக அளிக்கப்பட்டிருக்கும். அதன்மேல் ஆசிரியரின் மிதமிஞ்சிய கிளர்ச்சி இருக்காது. அதுவும் வாழ்க்கையே என்னும் பார்வை இருக்கும். இலக்கியப்படைப்பில் உள்ள பாலியல் சித்தரிப்பு என்பது அதிலிருந்து வாசகனை மேலும் ஆழமான வாழ்க்கைப்பிரச்சினைகளை நோக்கிக் கொண்டுசெல்வதாக இருக்கும். 

மென்பாலியல் எழுத்திலுள்ள பாலியல்சித்தரிப்பு என்பதுடெம்ப்ளேட்தன்மை கொண்டிருக்கும். ஆண் பெண்ணையோ, பெண் ஆணையோ வெல்வது, நுகர்வது, ஏமாற்றுவது ஆகியவற்றில் மனிதர்களின் வழக்கமான பாலியல் சார்ந்த பகற்கனவுகளில் ஒரு மாறாதபேட்டர்ன்இருக்கும். அதைத்தான் எல்லாவகையான போர்ன் கதைகளும் காட்டுகின்றன. அவற்றால் அந்த எல்லையை மீறவே முடியாது. ஆசிரியர் அந்தப் பாலியல் சித்தரிப்பை கிளர்ச்சியூட்டும் நோக்குடன் பயன்படுத்தியிருப்பார். அதை வாழ்க்கையின் மையம் என முன்வைத்திருப்பார். அந்த பாலியல் சித்தரிப்பு அந்தக் கிளர்ச்சியை ஊட்டுவதற்கு அப்பால் நகர்வதில்லை

பாலியல் கதைகள் உடலை மட்டுமே முன்வைக்கும். மானுட உடல் என்பது ஒருபோதும் உடல் மட்டும் அல்ல. அது உள்ளத்தின் புறவடிவம். உடலை உள்ளமாக்கிக்கொள்ளும் செயலை மானுடன் பிறந்து, பிரக்ஞை உருவான கணம் முதல் செய்துகொண்டிருக்கிறான். உடல் பண்பாட்டில், மொழியில், உள்ளத்தில், நனவிலியில், கூட்டுநனவிலியில் திகழும் ஒன்று. அதை அப்படியன்றி பார்க்க முடியாது. அதை அவற்றில் இருந்து விடுவித்து உடல்மட்டுமாக பார்ப்பதென்பது ஒரு தத்துவார்த்தமான முயற்சி மட்டுமே. அதை தீவிர இலக்கியத்தில் சிலர் செய்கிறார்கள்உதாரணமாக, ரமேஷ் பிரேதன். பாலியல்மென்பாலியல் கதைகள் வெறும் கிளர்ச்சிக்காக அதைச் செய்கின்றன. இரண்டும் வேறுவேறு.

உண்மையில் பாலியலில் ஒரு புதிய விஷயத்தை எழுதிக்காட்டுவதென்பது மிகமிகப் பெரிய அறைகூவல். மிக அரிதாகவே கலைஞர்கள் அதில் வெல்கிறார்கள். பாலியலை இலக்கியவாதிகள் எழுதுவதற்கு மிகவும் அஞ்சுவார்கள். அது ஓவியத்தில் பளீரிடும் வண்ணங்களை பயன்படுத்துவதுபோல. ஒரு திரைப்பரப்பின் வண்ணச்சமநிலையை குலைத்துவிடும். தேவையென்றால், வடிவ ஒருமை குலையாமல், அதை பயன்படுத்தலாம்.  அதற்கு கலைப்பயிற்சியும், புரிதலும் தேவை.

பெண்கள் பாலியலை எழுதுவது என் நோக்கில் வரவேற்புக்குரியதுதான். அது இரு வகையில் அமையலாம். ஒன்று, மீறலாகவும் அறைகூவலாகவும். என் மதிப்பீட்டில் சுகிர்தராணி, லீனா மணிமேகலை போன்றவர்கள் அவ்வாறு நல்ல கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். வாழ்க்கையின் தருணங்களையோ உளநுட்பங்களையோ முன்வைபப்பதற்கான பாலியல் சித்தரிப்பு கமலா தாஸ் (மாதவிக்குட்டி) கதைகளில் அற்புதமாக வெளிப்படுகிறது. தமிழில் அம்பையின் அரிதான சில கதைகளைச் சொல்லலாம். 

வெறுமே பாலியலை எழுதும் பெண்கள் பெரும்பாலும் அதை விரும்பும் பெண்களுக்காக எழுதுகிறார்கள். அவை பல லட்சம் பிரதிகள் விற்கின்றன. அவ்வாறு எழுதுவதையே  அவர்கள் தனியாக இருக்கையிலும் உளக்கிளர்ச்சிக்காக பேசிக்கொள்வார்கள் என அறிந்திருக்கிறேன். அது எழுதப்படுகையில் ஆண்களுக்கு பெண்களின் அந்த உலகுக்குள் எட்டிப்பார்க்கும் கிளர்ச்சி கிடைக்கிறது. ஆகவே அதை சபலக்கார ஆண்கள் ஊக்கப்படுத்துகிறார்கள். அதை கலை என்றும் இலக்கியமென்றும் சொல்லிதட்டிக்கொடுக்கிறார்கள்’. உண்மையில் அந்தப் பெண்கள் இந்த சூட்சிக்கார ஆண்களால் ஏமாற்றப்படுகிறார்கள். நுட்பமாகப் பயன்படுத்தப்படுகிறார்கள். பெண்கள் முதலில் எதிர்க்கவேண்டியது அவர்களை ஆண்கள் வழிநடத்துவதையும், பயன்படுத்திக்கொள்வதையும்தான். 

நீலி இதழுக்கே வருகிறேன். பெண்களின் ஆற்றல் என்பது அவர்கள் ஆண்களின் ஏற்பை பெறுவதில் இல்லை. ஆண்கள், நான் உட்பட, எங்களுடைய இயல்பான அழகியல் மதிப்பீட்டையோ, சமூகப்பார்வையையோ முன்வைத்துக்கொண்டு செல்லலாம். பெண்கள் அவற்றை பரிசீலிக்கலாம். நிராகரிக்கவும் செய்யலாம். கருத்தில் கொள்ளாமல் இருந்தாலும் ஒன்றும் பெரிய இழப்பு இல்லை. நான் பெண்கள் பற்றி எதுவும் சொல்வதில்லை. பெண் என்னும் பரிவோ சலுகையோ என் பார்வையில் இல்லை. எனக்கு எல்லாமே இலக்கியம்தான், எழுத்துதான். என் கருத்துக்களின் ஒட்டுமொத்தம் இங்கே இருக்கும், ஓர் அறிவுத்தரப்பாக. அதுமட்டுமே என் நோக்கம்.

எவரானாலும்  இலக்கியச் செயல்பாட்டுக்கு  தங்களை அறிவார்ந்து தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்கு தீவிரமான, தொடர்ச்சியான படிப்பு மட்டுமே ஒரே வழி. நீலி போன்ற ஓர் இதழ் அதற்குரியது. ஆனால் இங்கே மிகமிகக் குறைவான பெண்களே அதை வாசிக்கிறார்கள். ஓர் இதழுக்கு ஐநூறு வருகைகள்கூட இல்லை என அறிகிறேன். பொதுவாக நம்மவர் விரும்பும் மென்பாலியல் புனைவுகள் அதில் இல்லை என்பதே ஒரே காரணம்.

விடுதலையும் விடுதலைக்கான தகுதியும் அறிவார்ந்து தங்களை பயிற்றுவித்துக்கொள்வதன் வழியாகவே அமையும். 

ஜெ

முந்தைய கட்டுரைபித்துக்குளி முருகதாஸ்
அடுத்த கட்டுரைபெங்களூர் புக்பிரம்மா விழா,நெம்மிநீலம் வெளியீடு