இப்போது தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் இணைய இதழ்களில் நீலி, குருகு இரண்டும் எல்லாவகையிலும் முதன்மையானவை என்பது என் மதிப்பீடு. இவற்றின் ஒவ்வொரு இதழும் பிரமிக்கச் செய்கின்றன. அவற்றுக்குப் பின்னாலுள்ள உழைப்பும், தீவிரமும் தமிழ்ச்சூழலில் மிக அரிதானவை. இவற்றின் விளைவை எதிர்காலம் சொல்லும். (குருகு இணைய இதழ்)
ஓர் இணைய இதழுக்குப்பின்னால் ஒரு சிறு சிந்தனைக்குழு இருக்கவேண்டும். அவர்கள் பண்பாடு மற்றும் இலக்கியம் மீதான தங்கள் செயல்பாட்டை தீவிரமாக முன்வைக்கவேண்டும். அப்போதுதான் அதற்கு உள்ளடக்கப் பஞ்சம் வராது. அந்த இதழை ஒருவர் முன்னின்று நடத்தவும் வேண்டும். இல்லையேல் அது காலப்போக்கில் வீச்சு இழந்து போகும். குருகு இதழின் அனங்கன், நீலி இதழின் ரம்யா இருவருமே தீவிரமானவர்கள்.
இந்த இதழில் பெண்ணெழுத்தின் வரலாறு (லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி பேட்டி) சமகால பெண்ணெழுத்துக்கள் பற்றிய வாசிப்புகள் ( சுசித்ரா, தீபு ஹரி, அம்பை படைப்புகள் மீதான விமர்சனங்கள்) சர்வதேசப் பெண் எழுத்தாளர்கள் மீதான வாசிப்புகள் (எலிசபெத் ஆன்ஸ்கம், விர்ஜீனியா வுல்ஃப்) என முழுமையான ஒரு தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மாதகால வாசிப்புக்கான உள்ளடக்கம் உள்ளது.
ஆசிரியர் ரம்யாவுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.