நாதஸ்வரத்தை ரசிக்கும் முறை- கடிதம்

தமிழ் விக்கி- தூரன் விழா 2024 நாதஸ்வரக் கலைஞர்கள்

தமிழ்விக்கி தூரன் விழா 2024 இசைக்கப்படும் பாடல்கள

அன்புள்ள ஜெ

எனக்கு இசையார்வம் உண்டு. சினிமாப்பாடல்களாக வரும் கர்நாடக இசையை ரசிப்பேன். கே.வி.மகாதேவன், தட்சிணாமூர்த்தி இசையில் தனி ஈடுபாடு. ஆனால் நாதஸ்வர இசையை கேட்டதில்லை. அதற்குக் காரணம் அதன் ஓசைதான். திருமணமண்டபங்களில் மைக் வைத்து தவிலை உச்சத்தில் முழக்குகிறார்கள். எனக்கு ஓசை சார்ந்த சென்சிடிவிட்டி உண்டு. மிகுந்த ஓசை என்றால் குமட்டல் வரும். ஆகவே நாதஸ்வரம் என்றாலே ஓடிவிடுவேன்.

ஆனால் சென்ற தூரன் விழாவில் நாதஸ்வர இசை என்னை மயங்கவைத்தது. மைக் இல்லை என்பதுதான் முதன்மையான காரணம். அத்துடன் அமைதியாக ஒரு கூடத்தில் அமர்ந்து நாதஸ்வர இசையை நான் இது வரை கேட்டதுமில்லை. திருவிழாக்கூட்டத்தில் கேட்டதுண்டு. ஆனால் நின்று கேட்கமுடியாது. அமைதியாகக் கேட்கும்போது ஒன்று தெரிந்தது. நாதஸ்வரத்தில் வரும் குழைவை வேறெந்த வாத்தியமும் தரமுடியாது. உச்சத்தாயியில் இசை போகும்போது நாதஸ்வரம் பட்டுபோல நெளிகிறது. அற்புதமான அனுபவம்

நான் அந்த இசைநிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் உங்கள் தளத்தில் அளிக்கப்பட்டிருந்த பாடல்கள முழுமையாகக் கேட்டுவிட்டேன். பலமுறை அவற்றை கேட்டுவிட்டே வந்தேன். பாடல்கள் தெரிந்ததாக இருந்ததனால் எளிதாக நான் இசைக்குள் போய்விட்டேன். நாதஸ்வரம் என்னும் கலைவடிவை அறிமுகம் செய்துகொள்ள இதைப்போல ஒரு அற்புதமான வழி வேறில்லை.

நன்றி

எம்.குமரகுரு

முந்தைய கட்டுரைமுகயிதீன் நடுக்கண்டியில் கண்ட பஷீர்
அடுத்த கட்டுரைபித்துக்குளி முருகதாஸ்